புதுச்சேரி விடுதலை நாள் Pondicherry’s Liberation Day

pondicherryஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில் தங்கியிருந்து இந்திய விடுதலை வேட்கையைத் தூண்டினார்கள். அரவிந்தர்,  பாரதிதாசன் முதல் இன்றைய மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் சோமசேகர், விஞ்ஞானி கணபதி தணிகைமொனி வரை புதுச்சேரியின் அடையாளங்கள் பல.

பிரஞ்சு ஆட்சி

பிரஞ்சு மொழியில் புதுச்சேரி என்பதற்கு ‘புதிய உடன்பாடு’ என்று அர்த்தம். கிபி முதல் நூற்றாண்டில் இருந்து புதுச்சேரியின் வரலாறு தொடங்குகிறது. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமானியர்களின் வணிகத் தளமாக புதுச்சேரி விளங்கியிது. கிபி 4-ம் நூற்றாண்டில் காஞ்சி பல்லவர்கள், 10-ம் நூற்றாண்டில் தஞ்சை சோழர்கள், 13-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் அதன் பிறகு, வட பகுதி முஸ்லிம்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, 1638-ல் செஞ்சியை ஆண்ட பிஜப்பூர் சுல்தான்கள் எனப் பலரையும் கண்டது புதுச்சேரி.

இதனிடையே 1497-ல் போர்த்து கீசியர்கள் புதுச்சேரி வந்தனர். பிறகு டச்சுக்காரர்களும் வந்து வியாபாரங்களைப் பெருக்கினர். இவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் செய்ய பிரஞ்சுக்காரர்களை புதுச்சேரிக்கு அழைத்தது அப்போதைய செஞ்சி அரசு.

இதன்படி, 1673 பிப்ரவரி 4-ல் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி பெல்லாங்கர் புதுச்சேரி வந்தார். பிரஞ்சு ஆதிக்கத்துக்கான முதல் அடி அப்போதுதான் எடுத்து வைக்கப்பட்டது. 1738-ல் காரைக்காலையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் மெட்ராஸ் பட்டணமும் பிரெஞ்சு கைக்குச் சென்றது. ஆனால் ராபர்ட் கிளைவ் இந்தியா வந்த பிறகு புதுச்சேரியை ஆங்கிலேய அரசு கைப்பற்றி பிரெஞ்சு ஆட்சியை ஒழிக்க நகரத்தை நிர்மூலமாக்கியது. இதனால் தென் இந்தியாவில் தங்களுக்கு இருந்த பிடியை இழந்தது பிரான்ஸ்.

பின்னர் 1765-ல் இங்கிலாந்தில் இரு தரப்புக்கும் உடன்படிக்கை கையெழுத்தாகி புதுச்சேரி வந்தார் பிரெஞ்சு ஆளுநர் லா டி லாரிஸ்டன். அவர் புத்துச்சேரியை மறுநிர்மாணம் செய்தார். அடுத்த 50 ஆண்டுக்குப் பிறகு 1816-களில் பிரெஞ்சின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி மீண்டும் வந்தது. அதன் பிறகு 138 ஆண்டுகளுக்கு புதுச்சேரி மண்ணில் பிரெஞ்சு நிலைத்து நின்றது.

புதுச்சேரி விடுதலை தினம் 

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்த பகுதிகள் மட்டுமே விடுதலை அடைந்தன. பிரெஞ்சியர் வசம் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், சந்திரநாகூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை பெறும்போதே புதுச்சேரிக்கும் பிரெஞ்சியரிடம் இருந்து விடுதலை பெற கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வ.சுப்பையா போன்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் அப்போது பலனளிக்கவில்லை.

இதனால், ஆங்கிலேயரிடம் இருந்த இந்திய பகுதிகளுக்கு விடுதலை கிடைத்த பிறகு, பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் விடுதலை போராட்டங்கள் தலை தூக்கின. ஆனால், தங்களுடைய காலனி ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவோ அல்லது இந்தியாவில் இருந்து வெளியேறவோ பிரெஞ்சியருக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் தான், இந்திய சுதந்திரத்துக்கு பிறகும் கூட, 1948ம் ஆண்டு அக்டோபரில் வழக்கம்போல பஞ்சாயத்து தேர்தலை பிரான்ஸ் அரசு நடத்தியது.

இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, ‘பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுடன் முதலில் இணைந்த பகுதி சந்திர நாகூர். தற்போது, மேற்கு வங்காளத்தில் ஒரு மாநகராட்சியாக அந்த நகரம் உள்ளது. சந்திர நாகூரில், 1949 ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுடன் 1951ல் அந்த நகரம் இணைந்தது.

அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடுதலை போராட்டம் வலுவடையத் தொடங்கியது. உண்மையில் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தான் புதுச்சேரியில் வலிமையான சுதந்திர போராட்டம் நடைபெற்றது. அதை திலகர் வழியில் நடத்தியவர் வ.சுப்பையா. அதிகார வர்க்கத்துடன் பேச்சு நடத்தி முன்னெடுத்து சென்றவர், குபேர் போன்றோர்.

அந்த சுதந்திரப் போராட்டத்தை அடக்க பல வழிகளிலும் பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டியது. வ.சுப்பையா நாடு கடத்தப்பட்டார். அதாவது, புதுச்சேரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், தமிழக எல்லையான காலாப்பட்டில் இருந்த படி போராட்டத்தை தீவிரமாக நடத்தினார். இதற்கிடையே, தனது ஆளுகையில் இருந்த இந்தோசீனா (வியட்நாம்) பகுதியில் இருந்து ராணுவத்தை பிரான்ஸ் வரவழைத்தது. ஆனால், புதுச்சேரி மக்களின் விருப்பத்தை அறிந்திருந்த சுதந்திர இந்தியாவும், தனது ராணுவத்தை புதுச்சேரியை சுற்றி நிறுத்தியது. மேலும், புதுச்சேரி பகுதியை சுற்றிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தியது.

இந்த காலகட்டத்தில், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்வதற்கு தனியாக பாஸ்போர்ட் முறையும் அமலில் இருந்திருக்கிறது. இந்தியாவுக்குள் சிதறிக் கிடந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கப்பரப்புக்குள் செல்ல அந்த பாஸ்போர்ட் தேவை. அது இருந்தால் தான் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாகே, ஏனாம் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.

இவ்வளவு கெடுபிடிகளுக்கு பிறகு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஏற்கனவே தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இணைவது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர், அப்போது இந்திய அரசின் பிரதிநிதியாக புதுச்சேரியில் இருந்த கேவல்சிங். தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழுர் என்ற இடத்தை வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்தனர்.

1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கு 170 பேர் ஆதரவு தெரிவித்தனர். 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி வரலாற்றின் போக்கை மாற்றிய இந்த வாக்குப்பதிவை நினைவு கூறும் வகையில் கீழுர் பகுதியில் இன்றும் கூட அதற்காக நினைவிடம் அமைந்துள்ளது. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

கீழுர் வாக்கெடுப்பு முடிந்ததும் பெரும்பான்மை கருத்து அடிப்படையில், விடுதலை ஒப்பந்தம் தயாரானது. டெல்லியில், புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு ஆதிக்க பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் புதுச்சேரிக்கு விடுதலை அளிக்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது. அதன்படி, புதுச்சேரியின் விடுதலை வைரவிழா ஆண்டு இது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே புதுச்சேரிக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவும் இல்லை. முழுமையாக இந்தியாவுடன் இணையவும் இல்லை. பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பிரெஞ்சு சட்டங்கள், இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேற கால அவகாசம், பிரெஞ்சு மொழியில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பது என பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண அவகாசம் கேட்டது, பிரான்ஸ். இதனால், அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) கையெழுத்தாகவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 1956ம் ஆண்டு மே மாதத்தில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு, அந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற 6 ஆண்டு காலம் பிடித்தது. இறுதியாக, 1962ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிறைவேறியது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆட்சி பரப்பு அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De Jure transfer) முழுமையாக அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தான், இந்தியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி வந்தது. பிரெஞ்சு சட்டங்கள் நீக்கப்பட்டு இந்திய சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஏற்கெனவே, கேரளா பகுதியில் உள்ள மாகே, ஆந்திரா பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பிராந்தியங்களும் புதுச்சேரி, காரைக்கால் போலவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவுடன் இணைய தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. எனவே, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இந்தியா உருவாக்கியது. அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கழித்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த போதிலும், அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்தே ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைந்தது. பின்னர், பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு தனிச்சட்டம் இயற்றப்பட்டு 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரியில் முதல் சட்டப்பேரவை அமைந்தது.

மக்கள் தலைவர்

ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய இந்தியர்கள் பலருக்கு பிரெஞ்சு அரசு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்தது. ஆனால் சொந்த நாட்டுக்குள் விடுதலைக்கு எதிரான போராட்டங்களை பிரெஞ்சு அரசு ஒடுக்கியது. இந்திய சுதந்திர போராட்டம் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடைபெற்றது என்றால் புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையில்தான் நடைபெற்றது. சுதந்திரம் பெருவதற்கு சில நாட்களுக்கு முன்தான் காங்கிரஸ் கட்சியும் புதுச்சேரி விடுதலைக்கு குரல் கொடுத்தது. இதில் கம்யூனிஸ்ட்டாகக் களத்தில் நின்று பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவர்களில் முதன்மையானவர் வ.சுப்பையா.

ஆசிய கண்டத்திலேயே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை பெற்றுத்தந்தவர் அவர். சுப்பையாவுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் இடதுசாரி இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

புதுச்சேரி விடுதலை பெற்ற அன்றைய தினத்தில் சுப்பையாவைத் தேரில் அமர வைத்து கோட்டைகுப்பம் முஸ்லிம் மக்கள் நடத்திய பிரம்மாண்ட ஊர்வலத்தை 1954 ஜனசக்தி நவம்பர் புரட்சி தின மலரில் தத்ரூபமாக விவரித்தவர் தியாகி ஐ.மாயாண்டி பாரதி. பிரெஞ்சு அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்று தலையங்கம் தீட்டியது

எந்த நாள்?

அதே நேரத்தில் புதுச்சேரியின் விடுதலை தினம் எது? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரி அரசை பொறுத்தவரை ஆகஸ்ட் 16ம் தேதியை அதிகார மாற்ற ஒப்பந்த தினம் (De Jure transfer day) என அறிவித்து அரசு விடுமுறையும் அளித்து வருகிறது. அன்றைய தினத்தையே சுதந்திர தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், கீழுர் வாக்கெடுப்பை தொடர்ந்து, விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தான 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி அன்றே புதுச்சேரிக்கு பிரெஞ்சியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து விட்டதால் அந்த தினத்தையே புதுச்சேரி விடுதலை தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே புதுச்சேரியில் ஒலித்து வருகிறது.  நவம்பர் 1-தான் புத்துசேரியின் சுதந்திர தினம் எனவும் ஆகஸ்ட் 16-தான் புதுச்சேரிக்கான குடியரசு தினம் எனவும் ஒரு சாரரின் வாதமாக இன்றளவும் நீடிக்கிறது.

புதுச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் கோபர்ட் முதல் முதலமைச்சராக 1963 ஜூலை 1-ல் பதவி ஏற்றார். தொடக்கத்தில் பிரெஞ்சு ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா, 1954, 1963-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் 1969-ல் கூட்டணி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இப்படியாக இந்திய ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது புதுச்சேரி.

பிரஞ்சுகாரர்களாகவே வாழ்பவர்கள்

தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகள் புதுச்சேரியில் புழக்கத்தில் உள்ளன. தமிழ், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள். மக்கள் தொகை 6.54 லட்சம். படிப்பறிவு 81.24 சதவீதம். பிரெஞ்சுக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இன்னமும் இங்கு வசிக்கின்றனர்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் 45 சதவீதம் பேர் வேளாண்மையைச் சார்ந்திருக்கின்றனர். தாது வளம் இல்லாத பிரதேசம் இது. காரைக்காலில் மட்டும் சிறிய அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகின்றன. புதுச்சேரி மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல். 27 கடலோர மீன்பிடி கிராமங்களும், 23 உள்நாட்டு மீன்பிடி கிராமங்களும் உள்ளன.

Leave a Reply