1964,அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது.
ஒன்றாக இருந்த இந்திய கம்யூனிச இயக்கத்தில் விடுதலைக்கான போராட்டத்திலும் விடுதலைக்குப் பிறகு அதிகாரத்திற்கு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டு வந்த கம்யூனிச இயக்க முன்னோடிகள் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். அந்த முன்னோடிகளில் “ஏகேஜி” என்று பல்லாயிரம் தோழர்களின் அன்புக்குப் பத்திரமான, தோழர் ஏ.கே.கோபாலனும் ஒருவர்.அன்றைய மாநாட்டு நிறைவு நிகழ்வினை உணர்வு ததும்ப அவரது “நான் என்றும்மக்கள் ஊழியனே “என்ற நூலில் விவரிக்கிறார்.
“கட்சியில் ஓர் புது அத்தியாயம்” என்ற தலைப்பிட்ட அவரது வரிகளிவை:
“1964 நவம்பர் மாதம் 7ஆம் தேதி கம்யூனிஸ்டு கட்சியின் சரித்திரத்தில் ஓர் புது அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. அன்று கல்கத்தாவில் கட்சியின் 7-வது காங்கிரஸ் நடைபெற்றது.
மானுமெண்ட் மைதானத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் குழுமியிருந்தார்கள். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். இவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் தோழர் பசவபுன்னையா உரத்த குரலில் “நாங்கள்தான் கம்யூனிஸ்டு கட்சி! உண்மையான கம்யூனிஸ்டு கட்சி” என்று அறிவித்தார். 25 வருட காலம் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாயிற்றே என்ற சோர்வு என்னைப் பல சந்தர்ப்பங்களில் துன்புறுத்திக் கொண்டிருந்தது. ஆயினும் ஓர் புதிய உற்சாகமும் ஆவேசமும் உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது. உண்மையானதோர் புரட்சிக் கட்சியைக் கட்டி வளர்க்க வேண்டும் அதை வழி நடத்திச் செல்லத் தகுதி படைத்த அருமையான ஊழியர்களை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கடமை என்று உணர்ந்தேன்.”
நம்பிக்கை வறட்சியின் சாட்சியாக நேரு
நாட்டின் 1960-ஆம் ஆண்டுக் கால சூழல் மிக வித்தியாசமானது.நாடு விடுதலை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி ஏதும் புலப்படவில்லை. விடுதலைப் போராட்டத்தின் போது, புதிய நம்பிக்கைகளின் சின்னமாக விளங்கிய அன்றைய பிரதமர் நேரு, நம்பிக்கை வறட்சியின் சாட்சியாக மாறிப் போனார்.
ஏனென்றால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலையை சாதித்த மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் கொள்கைகள் அமலாகி வந்தன.
இங்கிலாந்து மட்டுமல்லாது,அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து அந்நிய மூலதன சுரண்டலுக்கு களமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி விட்டனர். அதே காலங்களில், சோஷலிசப் பாதையில் சோவியத் யூனியனும் சீனக் கம்யூனிஸ்ட்டுகளும் பயணப்பட்டு வந்தனர். அங்கு பிரச்சனைகள் முற்றாக தீர்க்கப்படவில்லை. என்றாலும், சுரண்டலற்ற சமூகச் சூழல் அங்கு உருவாக்கப்பட்ட நிலையில், மனித மேம்பாட்டுக்கான திட்டங்களும்,மக்களின் சோசலிசத்தின் மீதான திடமான உறுதிப்பாடும். நாட்டை புதிய தடத்தில் பயணிக்கச் செய்தன.இந்நிலையில், ரஷியா சீனபுரட்சிகளின் பாரம்பர்யம், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிச இலட்சியங்களின் உருவகமாக மார்க்சிஸ்ட் கட்சி தோன்றியது.இது ஏதோ ஒரு புதிய கட்சி உருவான நிகழ்வு அல்ல; ஒரு புதிய தேசத்திற்கான இலட்சியப் பார்வையுடன் உருவான ஒரு புரட்சி இயக்கத்தின் தோற்றம் ஆகும்.
புதிய புரட்சி இயக்கம்
கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஏழாவது அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும் உருவெடுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)என்ற பெயரில் 1964-ஆம் ஆண்டு உருவான காலத்திலிருந்து,கட்சி, அந்நிய மூலதன சுரண்டல் எதிர்ப்பு,முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு எனும் அக்கினிப் பொறிகளோடுதான், செயல்பட்டு வந்துள்ளது.
இந்த சக்திகளால் காலம் காலமாக சுரண்டப்பட்டு வந்துள்ள உழைக்கும் வர்க்கங்கள் தான், மார்க்சிஸ்ட் கட்சியின் இதயத்துடிப்பும், சுவாசமுமாகும்.அந்த வர்க்கங்களின் நலன் காக்கும் தியாகப் பயணம்தான்,இந்த அரைநூற்றாண்டுகளுக்கும் மேலான மார்க்சிஸ்ட் கட்சியின் பயணம்.ஆசியாவில் நீண்ட வரலாற்றுப் பாரம்பர்யம் கொண்ட மூத்த இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம். வீரஞ்செறிந்த,தியாக வரலாறு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. நாட்டு விடுதலைக்காக, எவ்வித சுயநல எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி, சிறைவாசம், தூக்குமேடை என பல இன்னல்களை எதிர்கொண்ட இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். விடுதலைக்குப் பிறகும் கூட சுரண்டலற்ற சோசலிச சமூகம் இந்தியாவில் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தியாகப் போராட்டத்தை தொடர்ந்த இயக்கம்.
இது சந்தித்தது போன்று இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் கடும் அடக்குமுறைகளை சந்தித்ததில்லை.ஒன்றாக போராடி வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பிளவு நிகழ்ந்து,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரு முக்கிய கட்சிகளாக 1964 ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்பட்டு வருகின்றது. கட்சித் திட்ட நிர்ணயிப்புக்களில் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச இலக்கு, வகுப்பு வாத எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக செயல்பட்டு வருகின்றனர்.இந்திய விடுதலை இயக்கம் அந்நிய மூலதன ஆதிக்கத்தை எதிர்த்து உருவான மக்கள் இயக்கம்.ஆனால்,அடுத்தடுத்து வந்த ஆளும் கூட்டம்,ஏகாதிபத்தியங்களோடு சமரசம் செய்துவந்துள்ளனர். இந்திய ஆளுகிற வர்க்கங்களின் சமரசமும் துரோகமும் பவனி வந்த நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பினை உறுதியாக பற்றி நின்ற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.கட்சியின் திட்டத்தில், இந்திய சோசலிசத்திற்கான பாதை, மக்கள் ஜனநாயக அரசு என்ற பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘‘ கட்சி திட்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், ….” 2.9 ஏகாதிபத்தியத்தையும், அதன் சுரண்டல் முறையையும் எதிர்த்து அயராத போராட்டத்தினை நடத்திட உழைக்கும் வர்க்கமும், அதன் கட்சிகளும் தத்துவார்த்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இன்றைய அநீதியான உலக முறையைப் பாதுகாத்து நிலைநிறுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று முறியடிக்க இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் உலகளாவிய ஒற்றுமையை உருவாக்குவது அவசியமாகும்.பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட உறுதி பூண்டுள்ளதோடு, ஏகாதிபத்தியம் திணிக்கும் உலகமயமாக்கல் பொருளாதார முறையை எதிர்த்தும், சமாதானம், ஜனநாயகம், சோசலிசத்திற்காகவும் போராடும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து சக்திகளுடனும் ஒருமைப்பாடு தெரிவிக்கிறது….” என்று அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு
இன்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்காமல், மக்கள் ஜனநாயக அரசு சாத்தியமாகாது. இந்த தளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பாரம்பர்ய வரலாறு கொண்டது.அண்மைக்கால வரலாற்றிலும் கூட இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்த பேரத்தில் இறங்கி, இந்திய இறையாண்மையை அடகு வைக்க முனைந்தபோது, உறுதியாக எதிர்த்த கட்சி. இந்த கட்டத்தில், பல அதிதீவிர இடது சாரி குழுக்களும் கூட மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர். அன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் ரோம் சாம்ஸ்கி கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிமைப்படுகிறதே என கவலையும் வருத்தமும் வெளிப்படுத்தினார்.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தளராது போராடியது. இன்றும் மோடி அரசு அமெரிக்காவுடன் சரணாகதி அடைகிற ஒவ்வொரு அசைவையும் வலுவாக எதிர்த்து இயக்கம் கண்டு வரும் கட்சி.இந்தியாவில் துவக்க காலத்திலிருந்தே, ஏகாதிபத்திய சுரண்டல் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும், இது நடந்துள்ளது. அந்நிய மூலதன அரசியல்,பொருளாதார, ஆதிக்கம் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்ற க ருத்தியல் பிரச்சாரம் ஒரு தத்துவமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.மூன்றாவது உலக நாடுகளையும், காலனி நாடுகளையும், “நாகரிகப்படுத்தவே’’ (Civilizing mission)ஏகாதிபத்தியம் காலனி ஆக்கிரமிப்பு செய்கிறது என்ற ஆங்கிலேயரின் பிரச்சாரத்திற்கு பல சக்திகள் இரையானார்கள் தமிழகத்தில் பஞ்சமும்,பட்டினியும்,வேலையின்மையும் காலனியக் காலத்தில் தலைவிரித்தாடியது என்பது ஆதாரப்பூர்வமாக நிறுவைப்பட்டாலும் கூட இன்றும் அந்தக் கருத்துக்கள் உலா வருகின்றன.
இன்று இளைய தலைமுறையிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு குறைவாக இருப்பதற்கு இது முக்கிய காரணம்.விடுதலை இயக்க வரலாறும்,அதிலும்,குறிப்பாக, கம்யூனிஸ்ட்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாறும் இன்றைய தலைமுறை அறியச் செய்திட வேண்டும்.அந்நிய மூலதன ஆதிக்கமும்,சுரண்டலும்,வெறும்பொருளாதாரத் தளத்தில் மட்டும் நிற்பதில்லை.சிந்தனைகளை கடத்திச் செல்லும் திறன் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உண்டு.இன்றைய மோடி,டிரம்ப் காலத்தில் அது வலதுசாரி கருத்தியலாக உருவெடுத்துள்ளது. இதிலிருந்து மக்கள் சிந்தனையை மீட்க வேண்டும். ஏகாதிபத்தியம்,ஏகபோக முதலாளித்துவம்,நிலப்பிரபுத்துவம் எனும் மூன்றையும் எதிர்த்து வீழ்த்த உறுதியேற்றுப் போராடி வரும் கட்சி.எனினும் இவற்றை மக்களின் உணர்வாக எழுச்சி பெறச் செய்வது முக்கிய கடமை. இதில், உழைக்கும் வர்க்கங்களையும் சமரசமில்லாத போராளி வர்க்கங்களாக உயர்த்திட வேண்டும்.இந்த வரலாற்றுக் கடமை ஆற்றுவதுதான், கட்சி தோற்றமெடுத்த இந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிப்பாடாக அமைந்துள்ளது.
என்.குணசேகரன்