பொருள் முதல்வாதம் ஓர் அன்னிய நாட்டுச் சரக்கு. அது மேற்கத்திய நாடுகளிலிருந்து பிற்காலத்தில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டது. தொன்று தொட்டுக் கருத்து முதல்வாதம்தான் நமது நாட்டில் இருந்தது. இந்து மதத்தில் காணும் அடிப்படை தத்துவங்கள்தாம் இந்திய தத்துவ ஞானம்; இந்த இந்து மதத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள், ஆத்மா, பரமாத்மா, ஊழ்வினை, மோட்சம். துவைதம், அத்வைதம் மறுபிறப்பு போன்ற ‘சிறந்த’ கோட்பாடுகள்! ஆரியர்கள்தாம் தத்துவ ஞானத்தின் முன்னோடிகளாக இருந்து வந்தவர்கள்; இவ்வாறு தத்துவ ஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் ஓயாமல் கூறி வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் விருப்பு வெறுப்பின்றி இந்தியாவின் தத்துவஞான வரலாற்றை ஆராய்வோமானால் மேலே கூறிய கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது என்பதைக் காண முடியும்.இந்திய தத்துவ ஞானத்தின் அடிப்படை நூலாக புகழ்ந்து பேசப்படும் ரிக் வேதத்தில் மோட்சம். ஊழ்வினை. துவைதம் மறு பிறப்பு போன்ற எந்தக் கருத்துக்களையும் எங்கும் பார்க்கவே முடியாது. இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் சாஸ்வத உண்மையையும், மோட்சத்தையும் ஆராய்ந்தவர்கள் அல்ல என்பதை ருக்வேத பாடல்கள் நிரூபிக்கின்றன. அம்பையும். வில்லையும். யுத்தத்தையும் பாடிப்புகழ்ந்து பார்லி உணவும், மதுவும் அருந்தி சில சந்தர்ப்பங்களில் மாட்டு இறைச்சியைத் தின்று வாழ்ந்துவந்த அவர்களின் வாழ்க்கையைத் தான் அந்தப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகளின் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ருக்வேத ஆரியர்களும், அவர்களைப் பின்பற்றிய ஆரியர்களும் அநாகரீகமானவர்கள் என்றே கூற வேண்டும்.
மோகஞ்சோதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் புதைபொருள் ஆராய்ச்சியினரால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துச் சமவெளி நாகரீகத்தின் மிச்சசொச்சங்கள் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறது. உழவுக் கருவிகள். ஆயுதங்கள். நகைகள், பித்தளைப் பாத்திரங்கள். எடைபோடும் கருவிகள். செங்கல்லினால் கட்டப்பட்ட கட்டிடங்கள். சாலைகள் சாக்கடை அமைப்புகள். நீர்த்தேக்கங்கள் போன்றவைகள் இந்த நாகரீகத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. அக்காலத்திய ஆரியர்களுக்கு இதனைத்தும் விந்தையாகவே இருந்தது. அணைக் கட்டைப் பார்த்ததும் கருப்பு மனிதன் வருணபகவானைக் கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிறானே என்று அழுகுரலை எழுப்பியிருக்கும் வேதப்பாடல்களை நாம் பார்க்கிறோம். தத்துவஞான கோட்பாடுகளைப் பற்றி எடுத்துக்கூறும் நாகரிகமோ, சமுதாய வளர்ச்சியோ அந்த ஆரியர்களுக்கு அன்று இருந்ததில்லை. புதைபொருள் ஆராய்ச்சி இதை மறுக்க முடியாத அளவுக்கு நிரூபித்திருக்கிறது.
பண்டைக் காலத்தில் பொருள் முதல்வாதச் செல்வாக்கு
இந்நிலையில் கருத்து முதல்வாதம்தான் இந்தியாவின் ஆரம்பத் தத்துவ ஞானம் என்றும் ருக்வேதமும் இந்துமதக் கோட்பாடுகளும் அதை எடுத்துக் காட்டுகின்றன என்றும் கூறுவது வேண்டுமென்றே கூறும் பொய் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், மனிதனின் உணர்வுகளைப் பற்றியும் உள்ள பிரச்சனைகளை பண்டைக்கால இந்தியாவில் பல முறைகளில் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரிய வருகிறது. உயிரும், உணர்வுமற்ற பொருள்களின் இயற்கையான நீண்டகால மாற்றத்திற்குப் பிறகுதான் உயிர் தோற்றம் ஏற்படுகிறது என்று அக்காலத்தில் வாதாடினவர்கள் உண்டு. இந்தப் பொருள் முதல்வாதிகளில் தலைசிறந்து நின்றவர்கள் லோகாயதவாதிகள் ஆவர். அவர்கள் இயற்றிய நூல்களும், விளக்க உரைகளும் இன்று கிடைக்கவில்லை. கருத்து முதல்வாதிகளால் அவை அனைத்தும் பிற்காலத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் லோகாயதவாதிகளின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் முறையில் கருத்து முதல்வாதிகளின் நூல்களில் காணப்படும் மேற்கொள்ளும் விளக்கங்களும் லோகாயதவாதத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவியளிக்கிறது. மேலும் பண்டைக்கால தத்துவஞான பிரிவுகளில் சிறப்புமிக்கவை என்று எண்ணப்படும் மீமாம்சம். சாங்கியம் போன்றவைகளில் பொருள்முதல்வாதக் கருத்துக்களின் செல்வாக்கைக் காண்பதிலிருந்தும், பௌத்தம் சமணம் போன்ற பண்டைக்கால தத்துவஞான கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்க்கும்போதும் அக்காலத்தில் பொருள்முதல்வாதம் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தது என்பதை நன்கு உணரலாம்.
கருத்து முதல்வாதத்தின் விதைகள் ஆனால் கருத்து முதல்வாதத்தின் ஆரம்ப விதைகள் உபநிஷத்துக் களிலும், பிற்காலத்தில் வியாசர் இயற்றிய ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூலிலும் விரிவாக காணக்கிடக்கின்றன. ‘பிரம்ம சூத்திரம்’ இயற்றப்பட்டதோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான். இந்த நூலுக்கு ஆதிசங்கர் கி.பி. 8ம் நூற்றாண்டில் விளக்க உரை எழுதினார். பிரம்மசூத்திரத்திலும் சங்கரரின் விளக்க உரையிலும் பெரும்பகுதி பொருள்முதல்வாதத்தைத் தாக்குவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தும் அக்காலத்தில் பொருள்முதல்வாதத்திற்கு எவ்வளவு செல்வாக்கு இருந்ததென்பதைப் புரிந்துகொள்ள முடியும் சங்கரருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், கி.மு.நாலாம் நூற்றாண்டில் ‘கௌடில்யன்’ இயற்றிய ‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலில் கற்றறிய வேண்டிய தத்துவஞானத்தில் ஒன்று லோகாயதம் என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால் பொருள்முதல்வாதத்திற்கும் கருத்து முதல்வாதத்திற்கும் நடைபெற்ற போராட்டம் தீவிர தன்மையை அடைந்த சட்டத்தில் லோகாயதத்தை கற்றறிவது சட்டவிரோதமாக்கப்பட்டது.லோகாயவாதிகள், பௌத்தர்கள், சமணர்கள் போன்றோர்களை கருத்து முதல்வாதிகள் அழிக்கவும் அவர்களுடைய நூல்களை எரிக்கவும் செய்தனர்.
பொருள் முதல்வாத்தைப் பற்றிய கருத்துக்கள்
கருத்து முதல்வாதிகளின் நூல்களில் அக்காலப் பொருள்முதல்வாத்தைப் பற்றி கூறும் கருத்துக்களை இனி ஆராய்வோம். இந்த உலகத்தைத் தவிர வேறு எதையும் லோகாயதவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இவர்கள் லோகாயதவாதிகள் மீது சீற்றம்கொள்கிறார்கள். பாமர மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களென்றும். ஊழ்வினை,மறுபிறப்பு போன்ற கருத்துக்கள் பாமரமக்களை ஏமாற்றுவதற்காகவே உண்டாக்கப்பட்ட கருத்துக்களென்றும், மக்களிடம் திறமையாகப் பிரச்சாரம் செய்து வந்தனர் இவர்கள் என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐம்புலன்களைத் தவிர அறிவுக்கு வேறு தோற்றுவாய் இல்லையென்றும், கடவுள், ஆத்மா என்று கூறுவதெல்லாம். பொய் என்றும் பொருள் முதல்வாதிகள் பிரச்சாரம் செய்வதாக இந்த நூல்களில் நாம் காண்கிறோம்.எல்லாம் இயற்கையைச் சார்ந்தது. இந்த இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்றும் இவர்கள் கூறியதாக நாம் பார்க்கிறோம். இயற்கையிலிருந்து அனைத்தும் தோன்றுகிறது. என்ற இவர்களின் கருத்து உபநிஷத்துகளுக்கு எதிரான கருத்து என்றும், இவர்களுக்கு எவ்வித ஆதரவும் கொடுக்கக்கூடாதென்றும் இந்த நூல்களில் அவர்கள் எச்சரித்திருப்பதையும் நாம் காண்கிறோம்.
இந்த நூல்களிலிருந்து லோகாயதவாதிகளின் கருத்துக்களை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. உணர்வு என்பது பொதுவாக உடலின் இயற்கையான ஒரு குணம் என்றும் குறிப்பாக அது உடலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியான மூளையின் வேலை என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். உடல் அழியும்போது இந்த உணர்வும் அழியும். மரணத்திற்குப் பின்னரும் அழியாத்தன்மை கொண்ட உணர்வு அல்லது ஆத்மா என்ற ஒரு பொருளுக்கு இடமேயில்லை என்று லோகாயதவாதிகள் வாதாடினார்கள்.
தத்துவஞான உலகத்தில் கருத்து முதல்வாதத்திற்கும், பொருள் முதல்வாதத்திற்கும் இடையே நடைபெறும் மிகப்பெரும் போராட்டத்தின் உயிரான ஒரு பகுதி இதில் அடங்கியுள்ளது. உயிரின் தோற்றத்தைப் பற்றியும் எவ்வாறு சூடும். வெளிச்சமும் நெருப்பின் பிரிக்க முடியாத குணமாக அமைந்திருக்கிறதோ அதைப் போல் உணர்வு என்பது உடலின் ஒரு சிறந்த குணமாகும். பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் நவீன விஞ்ஞானம் மறுக்க முடியாத அளவுக்கு இன்று எடுத்துக் காட்டும் இந்த உண்மையை இந்தியப் பொருள் முதல்வாதிகள் அன்றே கூறியுள்ளனரென்பது பெருமைக்குரியதே.
பூதவாதம்
லோகாயதவாதிகளின் ‘பூதவாதம்’ என்னும் கருத்தை ஆராய்வதும் நமக்குப் பயனளிக்கும். பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களைக் கொண்டது இந்த உலகமென்று லோகாயதவாதிகள் கூறுகிறார்கள். சங்கரர் கூ இந்தக் கருத்தை மேற்கோள்காட்டுவதைப் பார்ப்போம்.
“நான்கு பூதங்கள்தான் அடிப்படைப் பொருள்கள். தனித்தனியாகப் பார்த்தால் பொருள்களுக்குச் சிந்தனாசக்தி கிடையாது. ஆனால் உடல் என்னும் அமைப்பில் குறிப்பிட்ட அளவுக்கு அந்தப் பொருள்கள் சேரும்பொழுது உணர்வு தோன்றுகிறது. உதாரணமாக அரிசிக்கு போதை குணம் இல்லை. அவ்வாறு போதை குணம் இல்லாத ஏனைய சில பொருள்களையும், அரிசியையும் சேர்த்து ஊறப்போட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் பக்குவப்படுத்தும் பொழுது சாராயம் உருவாகிறது. தனித்தனியாக இருக்கும் பொழுது அப்பொருள்களில் இல்லாத ஒரு குணம் இப்பொழுது தோன்றியிருக்கிறது. இவ்வாறே உடலில் தோன்றியுள்ளது” உயிரின் தோற்றம் பற்றிய லோகாயதவாதிகளின் கருத்தை மேற்கோள்காட்டிய பிறகு அதைத்திரித்துக் கூறவும், மறுக்கவும் சங்கரர் எழுதியுள்ளதை இங்கு குறிப்பிட அவசியமில்லை. எண்ணத்திற்கும் பொருளுக்கும் உள்ள உறவை விளக்குவதே தத்துவ ஞானத்தின் அடிப்படையான பிரச்சனை. பொருளா? அல்லது கருத்தா? எது முதன்மையானது? தத்துவஞான உலகில் பெரும்போர் நடைபெற்ற இந்த முதன்மையான பிரச்சனையில் தெளிவாக லோகாயதவாதிகளின் மேற்கூறிய கருத்துக்ககள் அவர்கள் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
உயிரற்ற பொருள்களின் நீண்டகால மாற்றங்களுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியுள்ளது என்று லோகாயதவாதிகள் கூறினார்கள்.பூத உடலின் ஒரு விசேஷ குணம் தான் உயிர் என்றும், உடலின் அழிவிற்குப் பிறகு உயிர் என்பது தனியாக இல்லை என்றும் அவர்கள் தெளிவாக விளக்கம் கூறினார்கள். இக்கருத்துக்கள் லோகாயதவாதம் என்பது பொருள் முதல்வாதத்துவ ஞானம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இயற்கையின் தோற்றம்
புத்தரின் வரலாற்றை எழுதிய ‘அசுவகோஷ்’ என்பவர் லோகாயதவாதிகளின் ‘எல்லாம் இயற்கையின் தோற்றமே’ என்ற கருத்தைக் கொண்ட பாட்டை மேற்கொள் காட்டுகிறார்.
‘கூர்மையை முள்ளுக்கு கொடுத்தவர் யார். பறவைகளையும், மிருகங்களையும் பலப் பலவிதமாய் படைத்தவர் யார்? கரும்பு இனிப்பதும் யாராலே, வேம்பு கசப்பதும் யாராலே,
எல்லாம் அவற்றின்
இயற்கையால் ஏற்பட்டதே!
இதிலிருந்து பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையானதே. என்னும் கருத்தை லோகாயதவாதிகள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
‘சுபாவ வாதம்’எனும் இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளெல்லாம் இயற்கையானதென்றும். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி செயல்படவில்லையென்றும் அவர்கள் வாதாடினார்கள். இயற்கையில் தோன்றும் மாற்றங்களை தற்செயலான நிகழ்ச்சிகள் என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தோற்றமும்,மாற்றமும், அழியும் அனைத்தும், பொருள்களின் இயற்கையான குணங்களிலிருந்து தோன்றுபவையென்றனர் லோகாயதவாதிகள்.
பண்டைக்கால பொருள் முதல்வாதிகளில் தலைசிறந்து விளங்கியவர்கள் லோகாயதவாதிகளே, இவர்களை சார்வாகர்கள் என்றும் அழைப்பதுண்டு. உபநிஷத்துக்கள். பாரதம், அர்த்த சாஸ்திரம், மனுநீதி நூல், பிரம்ம சூத்திரம், புத்த நூல்கள் போன்ற பல நூல்களில் இவர்களுடைய கருத்துக்களைப் பார்க்கலாம் பண்டைக்கால இந்தியாவில் பொருள் முதல்வாதத்திற்கு இருந்த செல்வாக்கை மீமாம்சம் எனும் தத்துவ ஞானத்தில் பார்க்கலாம். பிரபஞ்சத்தின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய, பிரபஞ்சத்திற்கப்பாற்பட்ட ஓர் சக்தி இல்லையென்று இவர்கள் வாதாடினார்கள். பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது. இதை அழிக்கவும் கடவுளால் முடியுமென்ற கருத்தை அவர்கள் நிராகரித்தார்கள். தோற்றமும், அழிவும் கொண்ட நிகழ்ச்சிகளின் தொடர் இந்த உலகம் என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள். கி.பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலர் என்பவர் உபநிஷத்து. ஊழ்வினை, மறுபிறப்பு, கடவுள்போன்ற கருத்துக்களை திறமையாக அம்பலப்படுத்தினார். இதிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்தக் கருத்துக்கள் பெரிய அளவுக்கு பிரச்சாரத்தில் இருந்தன என்பது தெளிவாகிறது. மீமாம்ச தத்துவஞானிகளான குமரிலரும். பிரபாகரரும் உபநிஷத்துக்களிலும், பிரம்ம சூத்திரத்திலும் காணப்படும் கருத்து முதல்வாதத்தை திறமையாக அம்பலப்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
மீமாம்சம்
பொருள் முதல்வாத தத்துவ ஞானத்தில் இடம்பெறும் தகுதியைப் பெற்ற ஒரு தத்துவ ஞானமாக மீமாம்சத்தை எண்ண இயலாது என்பது உண்மையே. மந்திரங்களின் திறமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைதான் இது. ஆனால் ஆரம்பகாலத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள் அதிகமாக இருந்ததால் யக்ஞ வல்கியர், வியாசர், சங்கரர் போன்ற கருத்து முதல்வாதிகள் இதை கடுமையாகத் தாக்கியிருப்பதைப் பார்க்கலாம். பிற்காலத்தில் இதை பலமுறைகளிலும் திருத்தி எழுதினார்கள். மூல நூல்களை அழித்துவிட்டார்கள். கடவுளை அடிப்படையாகக் கொண்ட மீமாம்சம் என்று ஒரு நூலையும் பிற்காலத்தில் எழுதினார்கள். கடுமையான தாக்குதலுக்கும். பலமுறைகளில் திருத்தி எழுதுவதற்கும் இலக்கானதிலிருந்து இதன் ஆரம்பப்போக்கு எப்படியிருந்ததென்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சாங்கியம்
சாங்கியம் எனும் தத்துவஞான பிரிவிலும் இதேபோக்குகளைப் பார்க்கலாம். கருத்து முதல்வாதிகளால் பன்முறை திருத்தி எழுதப்பெற்ற நூல்கள்தான் இன்று நமக்குகிடைத்திருக்கின்றன. இந்த சாங்கியத்தையும் சங்கரர் போன்ற கருத்து முதல்வாதிகள் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். சாங்கியம் கடவுளை நிராகரிக்கிறது. பொருள்களில் நிரந்தரமான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவத்தை அடைந்து கொண்டிருக்கின்றன என்றும் சாங்கியவாதிகள் வாதாடினார்கள். ‘அசேதன காரண வாதம்’ என்ற இந்தக் கொள்கைப்படி இந்த மாற்றங்களின் காரணம் பொருளே தான், கடவுளல்ல. பரிணாம வாதத்தின் நிழலை இந்தக் கோட்பாட்டில் காணலாம். ஆகவேதான் கருத்து முதல்வாதிகள் இதை கடுமையாக எதிர்த்தனர். இந்தக் கருத்திற்கெதிராக அவர்கள் “பிரம்மகாரணவாதம்” என்ற கொள்கையை உருவாக்கினார்கள். உயிரற்ற பொருளல்ல. பரம்பொருளான பிரம்மம் தான் அனைத்தையும் படைத்ததும். அசைவை உண்டாக்கிக் கொண்டிருப்பதும் என்பதே இந்தக் கருத்தின் பொருள். மூலகாரணமான பிரம்மம்தான் உண்மையானது. உண்மையானதல்ல; அவை அழியக்கூடியது என்ற இந்தக் கருத்தை சாங்கியவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இயற்கையின் முதன்மையைப் பற்றி விரிவாக விளக்கம் கூறியபோதிலும் இந்த சாங்கிய தத்துவ ஞானத்திலும் பல்வேறு கருத்து முதல்வாத எண்ணங்களைப் பார்க்கலாம்.
இருப்பினும் அக்காலத்தில் செல்வாக்காக இருந்த பொருள் முதல்வாத்தின் பிரதிபலிப்புகளை இந்த தத்துவஞானத்தில் காணலாம். பௌத்தம், சமணம், நியாயம், வைசேஷிகம் போன்ற பல்வேறு தத்துவ ஞானங்களிலும் பொருள் முதல் வாதக் கருத்துக்களை தெளிவாகக் காணலாம். நியாயமும். வைசேஷிகமும் விளக்கிக் கூறிய அணுசித்தாந்தமும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் நியாயமும். வைசேஷிகமும் ஊழ்வினையை ஒத்துக்கொள்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பௌத்த தத்துவ ஞானம்
பௌத்த தத்துவஞானம் அக்காலத்தில் கருத்து முதல்வாதத்திற்கெதிரான ஒரு போராட்டமாகவே விளங்கியது. பிரார்த்தனை கடவுள், பலி. ஜாதி போன்ற கருத்துக்களை பௌத்தம் கடுமையாக தாக்கியது. உபநிஷத்துக்களை சாடியது. பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும். அழிவைப் பற்றியும் சிந்தித்து நேரத்தை வீணாக்காதீர்களென்று புத்தர் மக்களுக்கு உபதேசம் செய்தார். இந்தப் பிரபஞ்சமானது “ஆம்” என்றும் “இல்லை” என்றும் உள்ள இரண்டு தன்மையைக் கொண்டது என்று அவர் என்று கூறினார்.நீரோட்டம் போல என்றும் மாறிக் கொண்டிருப்பது இதன் இயல்பு.தானாகவே தோன்றி தானாகவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்றது இந்த உலகம் என்றார்.
கிரேக்க நாட்டின் தலைசிறந்த பொருள் முதல்வாதி ஹெராக்ளிடஸ் பிரபஞ்சத்தைப் பற்றி கூறியதைப் போல் இங்கு புத்தரும் கூறுகிறார். பௌத்த தத்துவ ஞானத்தின் இப்பகுதிகள் உண்மையில் மிகச்சிறப்பானதாகும்.
அவதூறுப் பிரச்சாரம்
இதிலிருந்து நாம் என்ன பார்க்கிறோம்? பிரபஞ்சத்தை அறிய நம்முடைய மூதாதையர்கள் முயன்ற பொழுது. இயற்கையை ஒட்டி நிற்கும் பொருள் முதல்வாத எண்ணங்களைத்தான் அவர்கள் ஆரம்பத்தில் பிரதிபலிக்க முடிந்தது. உலகவரலாற்றில் மனித நாகரிகம் தோன்றிய நாடுகளுடைய அனுபவமும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. விஞ்ஞான வளர்ச்சியோ இயந்திர நுட்பங்களோ இல்லாத அக்காலத்தின் பொருள் முதல்வாதத்திற்கு இயல்பான. தவிர்க்க முடியாத சில பலவீனங்களும் இருந்தன என்பது உண்மையே. முதன்மையானது பொருள்தான் என்றும் பிறகுதான் உயிர் தோன்றியது என்றும் தெளிவாகக் கூறிய லோகாயதவாதிகள் கூட. முழுமையான ஓர் பொருள் முதல்வாத தத்துவத்தை உருவாக்க முடியவில்லை. பொருள்களின் மாற்றத்தைப் பற்றியும். சமுதாய அமைப்பின் அடிப்படை நியதிகளைப் பற்றியும் அவர்களால் தெளிவாக எதுவும் கூறமுடியவில்லை. வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளும் இதற்கு ஒரு பிரதான காரணமாக விளங்கியது. லோகாயதவாதிகளைத் தவிர மற்ற தத்துவஞானிகள் பல்வேறு பிரச்சனைகளில் மூடப்பழக்கவழக்கத்தின் கொடூரமான பிடிப்பிலிருந்து சனைகளில் தப்ப முடியவில்லையென்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை இருப்பினும் தத்துவ ஞானத்தின் அடிப்படை பிரச்ச பொருள் முதல்வாதக் கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொருளா அல்லது எண்ணமா? எது முதன்மையானது? பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எது? இத்தகைய பிரச்சனைகளில் ஓரளவுக்கு தெளிவான கருத்துக்களை அவர்களால் வெளியிட முடிந்தது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றி உடல் உழைப்புக்கும். மூளை உழைப்புக்கும் வேறுபாடு ஏற்பட்டதின் விளைவாகத்தான் பிற்காலத்தில் கருத்து முதல்வாதம் உருவெடுத்தது. உபநிஷத்துக்களில் இதன் விதையைப் பார்க்கலாம். யக்ஞவல்கியரும். வியாசரும் இதற்கு உருவம் கொடுத்தனர். பொருள் முதல்வாதத்திற்கெதிரான போராட்டமும் தீவிரமடைந்தது. தத்துவஞானப் பள்ளிகள் பல அழிக்கப்பெற்றன. பொருள் முதல்வாதக் கருத்துக்களை பின்பற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். சிற்றின்ப வாழ்க்கையை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட கீழ்த்தரமான விலங்குத்தன்மை கொண்ட ஓர் கருத்துதான் பொருள் முதல்வாதம் என்று அவதூறுப் பிரச்சாரமும் செய்தனர்.
இவ்வாறு அவதூறுகள் கூறுவது வரலாற்றில் புதியதல்ல. ஏங்கல்ஸ் கூறுவதை பார்ப்போம்.
“பொருள் முதல்வாதம் என்ற வார்த்தை மூலம் பெருந்தீனி தின்னல். குடிவெறி, பெண்ணாசை, உடல் ஆசை, திமிர், காமவெறி, பிறர் பொருளை அபகரித்தல், பணப்பேராசை, கொள்ளை லாபமடித்தல், பங்குமார்க்கெட்டில் கொள்ளை அடித்தல் என்று பத்தாம்பசலி புரிந்துகொள்கின்றான் – சுருங்கச் அவன் தனிப்பட்ட வாழ்க்கையில் தானே அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல அசிங்கமான கெட்ட பழக்க வழக்கங்களையும் பொருள் முதல்வாதமென்று புரிந்துகொள்கிறான்.”
இது கருத்துமுதல் வாதிகளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.
வரலாற்று உண்மை
புதிய விஞ்ஞான உண்மைகளை எடுத்துரைத்ததாலும், மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்ததற்காகவும், பொருள் முதல்வாத கருத்துக்களை கூறியதற்காகவும் பலர் புரோகிதக் கூட்டத்தாலும், பிற்போக்குப் பிண்டங்களாலும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தையும், சமுதாய மாற்றங்களையும் இத்தகைய கொடுங்கோன்மைகளால் தடுத்துவிட முடியாது என்பதே உலக வரலாறு கூறும் உண்மையாகும்.
இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பிரபஞ்சம் ஓர் மாயை, இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் முன்பிறவியின் வினையே.கடவுளை நம்பி. மோட்சம் அடைய எடுக்கும் நடவடிக்கை ஒன்றுதான் ஞான மார்க்கம். கர்ம மார்க்கம் வீணானது என்றெல்லாம் பித்தலாட்டம் செய்யும் இந்திய கருத்து முதல்வாதம் உண்மையில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக நின்றது. இது தகர்த்தெறியப்பட வேண்டும். பொருள் முதல்வாதம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது. உலக வரலாற்றில் நடைபெற்ற எல்லா முன்னேற்றத்திற்கும். விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருந்ததும் பொருள் முதல்வாதமே.
சமுதாய வளர்ச்சியில் கருத்து முதல்வாதம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு தூக்கியெறியப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆதி பொருள்முதல்வாதத்திற்கு பல பலவீனங்கள் இருந்தது உண்மையே; இருப்பினும் ஏங்கல்ஸ் குறிப்பிடுவது போல் அதன் சிறப்பு ஆதிபொருள் முதல்வாதிகளின் அடிப்படையை ஆதாரமாக்கிக் கொண்டு சிறந்த விஞ்ஞான ரீதியான ஓர் பொருள் முதல்வாதத்தை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இயற்கையைப் பற்றி மனிதன் மென்மேலும் அறியும்போது மனதுக்கும் பொருளுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையே முரண்பாடு என்ற இயற்கைக்குப் புறம்பான மடமையான கருத்து மறையும் என்று ஏங்கல்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க பொருள் முதல்வாதம்
இது சதா தோன்றியும் மறைந்தும் கொண்டிருக்கும் நிகழ்ச்சிக்கு உள்ளடங்குவனவாகும். முடிவற்ற மாற்றத்தில் உள்ளவையாகும். ஓய்வற்றஇயக்கத்தில் இருப்பவையாகும்.சதா மாறிக் கொண்டேயிருப்பவையாகும். ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் கிரேக்கத் தத்துவ ஞானிகளின் மனதில்பட்ட ஒரு கருத்து நம்மைப் பொருத்தவரை அது திட்டவட்டமான ஆராய்ச்சியின் விளைவாகும்.
நமது அனுபவத்துக்குப் பொருத்தமுடையதாக அதன் காரணமாக துல்லியமாக தெளிவான உருவமாக உள்ளது என்பதேயாகும்.
ஏங்கல்ஸ் இங்கே புராதன கிரேக்க பொருள் முதல்வாத தத்துவ ஞானிகளைப் பற்றி கூறியுள்ளார். இது நமது புராதன பொருள் முதல்வாத தத்துவஞானிகளுக்கும் முற்றிலும் பொருந்தும், உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்கும் உள்ள வோறுபாடுகள் ஒழிக்கப்படும்போது கருத்து முதல்வாதத்தின் அடிப்படையும் தகர்க்கப்படும்.
இவ்வாறு ‘கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகளின் சிந்தனைப் போக்குக்கு நாம் மீண்டும் திரும்புகிறோம். இயற்கை முழுவதுமே மிகக்சிறு பொருளிலிருந்து மிகப்பெரும் பொருள் வரையிலும் மணலின் சிறு துளியிலிருந்து சூரியன் வரையும், உயிரின் மூலக்கூறிலிருந்து மனிதன் வரையிலும் சமுதாய வளர்ச்சியில் புராதன கம்யூனிசத்தின் வரலாறு முக்கியம் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தத்துவஞான உலகில் ஆதிபொருள் முதல்வாதத்திற்கும் உண்டு.
இறுதி வெற்றி
உடல் உழைப்புக்கும், மூளை உழைப்பிற்கும் உள்ள வேற்றுமையைப் போக்கும் வல்லமை உடைய ஒரு வர்க்கம் – தொழிலாளி வர்க்கம் இன்று உதயமாகியுள்ளது. இந்த வர்க்கத்தின் தோற்றமும். அது நடத்தியுள்ள எண்ணற்ற போராட்டங்களும் பலவீனமான ஆதிபொருள் முதல்வாதத்தை இன்று நிறைவுபெற்ற ஓர் பொருள்முதல்வாத தத்துவ ஞானமாக உருவாக்கியுள்ளது. அதுவே மார்க்ஸ் – ஏங்கல்ஸ் அளித்துள்ள தர்க்க இயல் பொருள் முதல் வாதம். முதலாளித்துவத்தின் அழிவும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியும் எவ்வாறு தவிர்க்க முடியாததோ அவ்வாறே பொருள் முதல்வாதத்தின் இறுதிவெற்றியும் நிச்சயம்.