இந்து மதத்திற்குத்தான் ஏகபோக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தியாவுக்கும் தாங்களே என்று அறிவிக்கின்றனர் போலும்! ஷாருக்கானை பாகிஸ்தான் போ என்றனர். இப்போது அமீர் கான் குடும்பத்திற்கு உத்தரவு போடுகின்றனர். குலாம் அலி கான் கச்சேரியை ரத்து செய்ய வைத்தவர்கள், சகிப்புத்தன்மை பற்றிப் பேசினால் சகிக்க மாட்டாமல் சத்தம் போடுகின்றனர். எங்களைஏன் மிரட்டுகிறாய் என்று கேட்டால், உங்களை எல்லாம் போனால் போகிறது என்று விட்டு வைத்ததுதப்பாகப் போயிற்று என்று மேலும் உரக்க மிரட்டுகின்றனர். விஷப் பாம்புக்கு பால் வார்த்துவிட்டோம் என்கின்றனர். ஷாருக்கானோ, அமீர்கானோ தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால், திறமையால் முன்னுக்கு வரவில்லை;
தங்களது சகிப்புத்தன்மையால் தான் பாலிவுட் உலகில் கொடி கட்டிப்பறக்கின்றனர் என்று வெளிப்படையாக அவமதிப்பு செய்கின்றனர். அமீர்கான் உண்மையில் எந்த நேர்காணலும் வழங்கி இருக்கவில்லை. அவர் பேசியது ஒரு சொற்பொழிவுமில்லை. சகிப்புத் தன்மை குறித்து தனக்குஇருக்கும் ஐயம் குறித்து அவர் தாமாக எந்த பத்திரிகையாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டிருக்கவுமில்லை. எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்திய பத்திரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில்சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருந்தார். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆனந்த் கோயங்கா மிகச் சுருக்கமான ஓர் உரையாடலை அமீர்கானுடன் நிகழ்த்துகிறார். பிரபல பத்திரிகையாளர்கள், முக்கியமானவர்கள் பலரும் அமர்ந்திருக்கின்றனர். வெளிப்படையாகத் தமது நிலைபாடுகளை பல்வேறு அரசியல், சமூக விஷயங்களின்பால் அமீர்கான் எடுப்பது குறித்து கோயங்கா முதல்கேள்வியை எழுப்புகிறார். அப்படிச் சொல்வதுஅவருக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையா என்று கேட்கிறார். ஒரு குடிமகன் என்றமுறையில் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லவேண்டுவது அவசியம் என்று தான்கருதுவதாக அமீர் சொல்கிறார். மிக இயல்பாகப் பேசுகிறார். தமது உள்ளுணர்வு சொல்வதை, தாம் அன்றாடம் வாசிப்பதை, அறிய வருவதை இந்த தேசத்தின்பால் அக்கறையோடு கவனிக்கும் ஒரு குடிமகனாகத் தமக்கு ஏற்படும் பதற்றத்தை வெளிப்படுத்த நேர்வதை மிகவும் அற்புதமான உள்ளார்ந்த மொழியில், யாரும் வண்ணம் பூசிவிட முடியாத தளத்தில் நேர்ப்படப் பேசுகிறார். எழுத்தாளர்கள், படைப்பாளிகள் விருதுகளைத் திருப்பித் தருவது பற்றிய கேள்விகளின் அடுக்குகளில் ஒரு கட்டத்தில் சகிப்புத்தன்மை பற்றிப் பேசுகிறார் அமீர்.
தங்களுக்குச் சரி என்றுதோன்றும் விதத்தில் தங்களது கருத்தை படைப்பாளிகள் தெரிவிக்கின்றனர் என்கிறார். அப்படியானால் அவர்களது கருத்தோடு தாங்கள் உடன்படுகிறீர்களா என்று ஆனந்த் கோயங்கா கேள்வியை முன் வைக்கிறார். கடந்த ஆறேழு மாதங்களாக நாட்டின் நடப்பு தம்மையும் அதிரவைக்கிறது என்கிறார்அமீர். முந்தைய காலங்களையும் விடவா என்கிறார் கேள்வியாளர். அந்தக் கேள்வியை எதிர்பார்த்த மாதிரியே பதிலைத் தொடங்கும் அமீர், “முந்தைய காலங்களிலும் வன்முறை இருந்தது. கேட்டால் 1984ஐப் பற்றிப் பேசுகின்றனர் (இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக தலைநகரில் தூண்டப்பட்ட கலகங்கள்). முந்தைய வன்முறையைக் கொண்டு இப்போதைய வன்முறையை நியாயப்படுத்துவது எப்படி சரியாகும்“ என்று கேட்கிறார் அமீர். 1984ல் நிகழ்ந்தது ஒரு மிக மோசமான, கோரமான வன்முறை. ஒவ்வொரு காலத்திலும் நாம் பார்க்கும் எந்த வன்முறையும் கண்டிக்கத்தக்கது என்கிறார். அடுத்த கேள்விக்கு ஆனந்த் கோயங்கா நகருகையில், அவரை நிறுத்தி, உங்கள் முந்தைய வினாவுக்கு என் விடையை நான் இன்னும் முடிக்கவில்லை என்று சொல்லும் அமீர், அப்போதுதான் இப்போது அவரை வம்புக்கு இழுக்கும் சிலர் குறிப்பிடும் செய்தியைச் சொல்கிறார்:“…அண்மையில் என் மனைவி கிரண் என்னிடம் நாம் வேறேதாவது நாட்டுக்குப் பெயர்ந்து சென்றுவிட வேண்டுமா என்று கேட்டார்.
இத்தகைய அதிர்ச்சியான கேள்வியை அவர் என்னிடம் இதுவரை கேட்டதில்லை…அதற்கு என்னபொருள்….அண்மைக்கால நடப்புகளால் அவர் மிகவும் பயந்து போயிருக்கிறார். அன்றாடம் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கவே அச்சமுறுகிறார். எங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கலவரமடைந்து போகிறார்…..”ஆனால் உரையாடல் இந்தப் புள்ளியில் நிறைவடைந்து விடவில்லை…வன்முறையாளர் எந்த மதத்தின் பெயரில் ஈடுபட்டாலும் அவரைஅந்தக் குறிப்பிட்ட மதத்தவராக அடையாளப்படுத்துவதை தாம் ஏற்கவில்லை என்கிறார் அமீர். ஒரு கிறித்துவ தீவிரவாதி, இந்து தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லவேண்டாம். எந்த மதமும் யாரையும் பணிப்பதில்லை. எனவே மதஅடையாளத்தைக் கழற்றிவிட்டு தீவிரவாதி, பயங்கரவாதி என்று சொல்வதே சரியாகும் என்றும் சொல்லிச் செல்கிறார் அமீர். அதுமட்டுமல்ல, அண்மையில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு நடத்தி இருக்கும் பயங்கரவாதச் செயலைக் குறிப்பிட்டு மூத்த பத்திரிகையாளர் தவ்லீன் சிங், “உங்கள் கருத்துக்களோடு நான்முரண்படுகிறேன் அமீர், பாரீசில் அந்தத் தீவிரவாதச் செயலைச் செய்தவர்கள் கையில் குரானை வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் பெயரில் தான் அதைச் செய்தனர்.
இதற்கு என்ன சொல்கிறீர்கள்” என்று நேரடியாகக் கேள்வியை வைக்கிறார். இதற்குப் பதில் சொல்லும் அமீர்,”அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒரு இஸ்லாமியனாக நான் சொல்வது, அவர்களை என்னால் இஸ்லாமியராக ஏற்க முடியாது. கையில் குரான் ஏந்தி இருப்பதாலேயே அவர்கள் முகம்மதியர் ஆகிவிட முடியாது” என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். உரையாடலின் முக்கிய அம்சமாக இன்னொன்றையும் சொல்கிறார் அமீர். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உறுதி செய்யவேண்டும். இதுதான் மக்களுக்கு உணர்வுப்பூர்வமான பாதுகாப்பை வழங்கும். அவர்கள் அதைச்செய்யத் தவறுகையில், மக்கள் பாதுகாப்பின்மையை உணர்வார்கள்.
இப்போது அதுதான் நடக்கிறது என்கிறார் அமீர். இந்த ஒட்டுமொத்த உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் தங்களுக்கு வசதிப்பட்ட மாதிரி திரித்துமதவெறியர்கள் தங்களது சகிப்பற்ற போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி சிற்றூரில் முகமத் இக்லாக், மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி அவரை அடித்தே கொன்றதை தனியொரு நிகழ்வு என்றும், அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துவதாகவும் சொன்னவர்கள் இவர்கள். நாயைஅடித்துக் கொன்றால் அதற்கெல்லாம் பிரதமர் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்று திமிரோடு கேட்டவர் ஓர் பாஜக அமைச்சர். அதுவும் ராணுவத் தலைமை பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவரான வி.கே.சிங். ஒன்று எங்களோடு இருங்கள், அல்லது நீங்கள்பயங்கரவாதிகளோடு நிற்கிறீர்கள் என்று பொருள் என்று சொன்ன அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் நிலைபாட்டுக்கும், இவர்களுக்கும் என்னவேறுபாடு? உணவு, உடை, நம்பிக்கை இவற்றைக்கடந்து என்ன பேசுவது, என்ன எழுதுவது, என்னபகிர்ந்து கொள்வது என்பதிலும் அத்து மீறிய தலையீட்டை நிகழ்த்தும் செயலுக்கு வேறென்ன பெயரைச் சூட்டுவது?
இதைத்தானே அமீர் குறிப்பிட்டார். இதைத் தானே ஷாருக்கான் பேசினார். இதைத் தானே கிரீஷ் கர்னாட் சுட்டிக் காட்டினார். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகிய அறிஞர்கள் இந்த சகிப்புத்தன்மையற்றோர் தூண்டிவிடும் வெறுப்புணர்விலிருந்து சுடப்பட்ட குண்டுகளுக்குத் தானே தம்முயிரைப் பறிகொடுத்தனர்?வளர்ச்சி, வல்லரசு என்றெல்லாம் பெரிதாக எழுப்பப்படும் பாசாங்கு ஆரவாரக் கூச்சல்களுக்கிடையே இந்த வெடிச் சத்தங்கள் அமிழ்ந்துபோய்விடும் என்று நினைக்கின்றனரா ஆட்சியாளர்கள்? பகைமை உணர்வு ஊட்டப்படும் இளைய தலைமுறையினர் எப்படி வலிவு பொருந்திய எதிர்கால இந்தியாவை உருவாக்க முடியும்? கோட்சேவைக் கொண்டாடும் தத்துவத்தின் பின்புலத்தில் காந்தியைச் சுட்டதே நியாயம் தான் என்று மெல்ல மெல்ல திணிக்கப்படும் நச்சு, நம் காலத்தில் வேட்டையாடப்படும் நேர்மையான அறிவுஜீவிகளின் படுகொலைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே செல்லத் தூண்டிவிடாதா? எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது, இதெல்லாம் தேவையற்ற விவாதம் என்று நினைப்பவர்களுக்கு அந்த உரிமை உண்டு. அடுத்த வீடுபற்றி எரியும்போது வேடிக்கை பார்க்கும் உரிமைஅது. தங்கள் வீடு அடுத்துப் பற்றத் தொடங்குகையில் ஆதரவுக்கு ஆள் வராவிட்டாலும் கவலை இல்லை என்று சொல்லிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
எஸ்.வி.வேணுகோபாலன்
நன்றி தீக்கதிர்