மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதம்
உங்களுக்கு நன்றி, அமீர்கான், ஷாருக்கான்!
தன்னை விமர்சிப்பவர்களுக்கு ‘இந்தியா ஒரு சகிப்புத்தன்மைமிக்க நாடு’ என்று சொற்பொழி வாற்ற வேண்டியது அவசியம் என பாஜக ஏன் கருதுகிறது?’என்ன சொல்லப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.’ அல்லது ’இந்துத்துவா பரிவாரங்கள்-பற்றிய விமர்சனங்களை அவர்கள் இந்தியாபற்றிய விமர்சனங்களாக சமப்படுத்தும் அவர்களது ஆணவத்தால்’ மேலும், இந்தியாவில் வளர்ந்துவரும் சகிப்பின்மை பற்றிய கவலைகளை அவர்கள் ‘தேச விரோதச் செயல்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தியாவை குறை கூற அல்ல
நாட்டின் குடிமக்கள், ’சகிப்பின்மை வளர்ந்துவரும் சூழல்’ பற்றிக் கவலை தெரிவிப்பது இந்தியாவைக் குறைகூறுவதற்காக அல்ல. இந்தியரின் ஒவ்வொரு நரம்பணுவையும் சகிப்புத்தன்மையற்ற, சர்வாதிகார, மதச்சார்புநாடாக மாற்றமுயலும் சக்திகளிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்காக.இந்தியாவின் சிந்தனைப்போக்கு எவ்வாறு உள்ளது என்பதற்கும், சிலர் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திப்பதற்கும் இடையே உள்ளுணர்வுகளில் ஒருவிரிந்த வேறுபாடு உள்ளது. இந்தியாவின் சிந்தனை மரபு என்பது பல்வேறு கலாச்சாரங்கள், பகிர்ந்துகொண்ட வரலாறுகள், வெவ்வேறு மொழிகள், வாழ்க்கைமுறைகள், உணவுமுறைகள், ஆடைஅணிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட சகிப்புத்தன்மை கொண்டது. இந்த உண்மையான இலக்குகள் வலிமையான, மதச்சார்பற்ற, சமத்துவ அரசியலுக்கு அடிப்படையாகும்.இந்தச் சிந்தனை ஒட்டுமொத்தமாக நடைமுறையில் உள்ளதா என்பதை இன்னும் நாம் பார்க்க வேண்டும். இந்தச் சிந்தனைப்போக்குகளுக்குத்தான், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும், பிரிட்டிஷ் பத்திரிகைகளிலும் பேசியபோது பிரதமர் உரிமைகொண்டாடி, ‘இந்தியா சகிப்புத்தன்மை கொண்டது’ என்று சொன்னார்.
வெறுப்பை விதைப்பவர்கள்
ஆம். பிரதமர் அவர்களே, இந்தியா சகிப்புத்தன்மை மிக்கது. ஆனால், நீங்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்றதிலிருந்து இந்துத்துவாவின் பெயரில் செயல்படும் பரிவாரங்களும், ஆட்சி அதிகாரத்தின் ஆதரவைப் பெற்றுள்ளவர்களும், ஒவ்வொரு நாளும் வெறுப்பை விதைப்பவர்களும் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் அல்ல.இந்துத்துவா பரிவாரங்களின் மிக அண்மைக்கால தாக்குதல் இலக்காக அமீர்கான் உள்ளார். தனது மற்றும் தனக்கு இணையான ஆற்றல்கொண்ட வாழ்க்கைத்துணைவி கிரண் ராவ் ஆகிய இருவரின் இதயத்தைத் திறந்து பேசினார். அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களா என்பது அவர்களது தனிப்பட்ட விஷயம். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பது பொதுவெளியில் ஒருவரைஒருவர் காதலிப்பதையும், திருமணம் செய்துகொண்டதையும் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அமீர்கான் அளவுக்கு வெற்றிபெற்ற ஒருவர் தனது கவலைகளை, சந்தேகங்களை, தனது குழந்தையின் எதிர்காலம் பற்றிய அச்சங்களை வெளிப்படுத்தும்போது, அதைத் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், அரசு சார்பில் பேசுகிறவர்கள் அதை, ’வீண்பீதியை உண்டாக்குதல்’ அல்லது, ‘ தனது ரசிகர்களுக்கு நன்றியின்மை’ என குறிப்பிடுகிறார்கள்.அரசின், ஆளும்கட்சியின் பேச்சாளர்களின் புறக்கணிக்கப்பட வேண்டிய இந்த முரட்டுத்தனம் அவர்களுடைய தள்ளுவண்டிகளால் ஆதரிக்கப்பட்டு, ஊடகங்களில் விஷமத்தனமாக வெளிப் படுகிறது. இது புகழ்பெற்ற இந்தியக்குடிமக்கள் சகிப்புத்தன்மையற்ற போக்குகள் வளர்ந்து வருவதுபற்றி எச்சரிக்கத்துவங்கியதிலிருந்தே அவர்களின் தனிப்பண்புகளாக, தரக்குறியீடுகளாக ஆகியுள்ளன.
யார் சில்லரைகள்?
நயன்தாரா சேகல் எதிர்த்தபோது அவர் ‘பாரம்பரியம்’ என்று புறம்தள்ளப்பட்டார். மிகவும் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தபோது அவர்கள் ‘பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டார்கள். மிகவும் ஆற்றல்மிக்க 107 விஞ்ஞானிகள் அரசுக்கு ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியபோது அவர்கள் மீது வசைமாரி பொழிந்தார்கள். வரலாற்றாளர்கள் தங்கள் குரலை எழுப்பியபோது அவர்கள் ‘கம்யூனிஸ்டுகள்’ என அழைக்கப்பட்டார்கள். வேறுவார்த்தைகளில் சொன்னால், அரசும், ஆளும்கட்சியும் இந்த அறிவுஜீவிகளுக்கு எதிராக அணிதிரளும்போது, அவர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண மறுத்துவிடுகிறார்கள்.இன்று இது ஒரு உண்மையான பிரச்சனையாக உள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பும் இளம் இணைகளில் ஒருவர் இந்துவாகவும், இன்னொருவர் முஸ்லிம் ஆகவும் இருந்தால் ‘லவ்ஜிகாத்’ என்ற பெயரில் வெறுப்பைப் பரப்புபவர்களால் கூட்டுக்கொலை செய்யப்படும் அச்சத்தில் உள்ளனர். அனுபம் கெர் போன்ற அரசின் ஆதரவாளர்களும், மற்றவர்களும் இத்தகையவர்களை ‘சில்லரைகள்’ என்று கூறுகின்றனர். இத்தகைய உறவுகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும், மிகவும் எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடும் அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘சில்லரைகள்’ அல்லர். ஆளும்கட்சியிலும், அரசிலும் முக்கியப் பொறுப்புக்களை வகிக்கும் அவர்கள்தான் மையமானவர்கள்.
தயார் செய்யப்பட்ட வதந்தியின் பேரில்
ஒரு பசுவை வதைத்ததாகவும், தனது வீட்டில் மாட்டிறைச்சியை வைத்திருந்ததாகவும் ‘தயார் செய்யப்பட்ட வதந்தியின் பேரில்’ கூட்டுக்கொலை செய்யப்பட்டது ஒரு உண்மையான பிரச்சனை. ஆனால், பீகார் தேர்தலுக்கு முன்தினம் மாலையில் எல்லாநாளேடுகளிலும் பா.ஜ.க. விளம்பரப்படுத்திய செய்தி என்ன? ‘இந்துக்களின் பெருமையாக மதிக்கும் பசுவை அவமதிக்கலாமா?- இது தெரியாமல் செய்ததல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு வாக்குகளை உறுதிப்படுத்துவதற்காகச் செய்தது. பசுவதைக்கு எதிரான பிரச்சாரங்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து மிகவும் மோசமான முறையில் தொடர்கின்றன.அறிவுஜீவிகள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எழுதியபோது இந்துத்துவா பரிவாரங்களால் குறிவைக்கப்பட்டார்கள். இது ஒரு உண்மையான பிரச்சனை. தோழர் பன்சாரே காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டபோது, கல்புர்கி கோழைத்தனமாகக் கொலை செய்யப்பட்டபோது, பெருமாள்முருகன் குறிவைக்கப் பட்டபோது, திப்பு சுல்தான் வரலாற்றில் ஒரு வித்தியாசமான பார்வையை வெளிப்படுத்தியதற்காக கிரீஷ் கர்நாட் அச்சுறுத்தப்பட்டபோது – அவை உண்மையான பிரச்சனைகள் இன்னும் பிரச்சனைகளாக உள்ளன.தேவைப்படுவதெல்லாம் ஆட்சியிலும்,தனது கட்சியிலும் பிரதமர் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி மேலிருந்து நடவடிக்கைகளை எடுத்து சங்பரிவாரங்களோடு தொடர்புகொண்டுள்ளவர்களின் அச்சுறுத்தல்களையும், வசைபாடல்களையும், வன்முறைகளையும் தடுத்து நிறுத்துவதுதான்.இதற்கிடையில் தங்களுடைய சொந்த இழப்புக்களைப்பற்றிக் கருதாமல் உண்மைகளைப் பேசிய அமீர்கான் -அதற்கு முன்னதாக ஷாருக்கான் ஆகியோருக்கு மரியாதை செலுத்துவோம்.
தமிழில்: செ.நடேசன்