உணவு பெறுவது மக்களின் உரிமை. உணவு வழங்குவது அரசின் கடமை இதன் அடிப்படையில் ரேஷன் மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை, இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் அரிசி அரசியல் ஆக்கப்பட்டு மக்கள் கேலி பொருளாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் இலவச அரிசி வழங்குவோமென ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரசும் வழங்கவில்லை- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக வழங்குவோம் என்ற முதல்வர் நாராயணசாமியும் வழங்கவில்லை. அரிசி கேட்டால் அரிசி போடாதற்கு கவர்னர் உத்தரவுதரவில்லை என அரசும், அரசின் மீது கவர்னர் பழி சுமத்தியும் ரேஷன் அரிசியை ஒழித்துவிட்டார்கள். இருவரும் அரசியல் நாடகம் ஆடி மக்களுக்கு அரிசி கிடைக்காமல் செய்வதில் ஒற்றுமையாக உள்ளனர்.
இதன் உச்ச கட்டமாக, கவர்னர் ”எந்த கிராமம் சுத்தமாக இல்லையோ அக்கிராம மக்களுக்கு அரிசி இல்லை” என உத்தரவு போடுகிறார். கடுமையான எதிர்ப்பு மாநிலத்திலும் அகில இந்திய அளவிலும் வந்தபின் இரவோடு இரவாக கவர்னர் தன் சனாதன உத்தரவை ரத்துசெய்கிறார். ஏற்கனவே பழங்குடி மக்களை திருடர்கள் என சொன்னவர்தற்போது மக்களிடம் அரிசி வேண்டுமா பணம் வேண்டுமா என கருத்து கேட்கபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை புதுச்சேரி மக்களுக்கு அரிசி கிடைக்கவில்லை. கவர்னர் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு இடையிலான போலி நாடகத்தால் புதுச்சேரி பொதுவிநியோக திட்டமே முற்றிலும் முடங்கிபோய்யுள்ளது. ரேஷன் அரிசி மட்டுமல்லாது குழந்தைகள் பெண்களின் ஊட்டச்சத்துக் குறையைப்போக்கும் திட்டமும் கேள்விக்குறியாகி விட்டது. ஏற்கனவே 70 சதம் பெண்கள் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியின் எதிர்காலம் இன்னும் கேள்விகுரியதாகவே மாறும்.
புதுச்சேரியிலுள்ள 13 லட்சம் மக்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 3.36 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 1.80லட்சம் ரேஷன் கார்டுகள் ஏழை மக்களுக்கான சிவப்பு நிற ரேஷன் கார்டுகளாகும். 380 ரேஷன் கடைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் இதுவரை நியாய விலையில் மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில், சர்க்கரை மற்றும் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இலவச அரிசி மட்டுமே வழங்கப்பட்டு, அதுவும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அவசியப்பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் உணவுப் பாதுகாப்பை வழங்கவும் வகுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையின் ஓர் அங்கம்தான் பொது விநியோக அமைப்பு (Public Distribution System). தட்டுப்பாடில்லாமல் அத்தியாவசியமான உணவு தானியங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து பற்றாக்குறை காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டதுதான் பொது விநியோக திட்டம்(PDS).
சாகுபடியாளர்களுக்கு லாபமும் நுகர்வோர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையும் ஒருசேரக் கிட்டும் வசதி சந்தையில் இல்லை என்பதால் அரசின் தலையீட்டால் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. இதற்காகவே 1965-ஆம் ஆண்டு “இந்திய உணவு கார்ப்பரேஷன்”(FCI) என்ற பொதுத்துறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கும். இதை மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் அல்லது விலையில்லாமல் மக்களுக்கு வழங்கும். இதன் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் சந்தையில் இஷ்டத்திற்கு உயர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் படிப்படியாக உணவுப்பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவது என்று ஆரம்பித்து தற்போது மத்திய பிஜேபி அரசில் பெரும்பான்மை மக்களை பொது விநியோக திட்டத்தில் இருந்து விலக்கிவிடுவது என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு 2017 ஜுலை மாதம்31ந்தேதி பிரதமர் மோடி தனது உரையில் ஹரியானா மற்றும் புதுச்சேரியில் முழுமையான பொது விநியோகத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏழைகள் நேரடியாக மானியத் தொகையினை வங்கிக் கணக்கில் பெற்று வருவதாகவும் இதே முறையினைப் பிற இந்திய மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தது என்பது இந்தியாவின் உணவு பாதுகாப்பையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைப்பதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்தும் செயலாகும்.
வியாதியைக் கொல்வதற்கான சிறந்த வழி, வியாதியஸ்தர்களைக் கொல்வதுதான்! இதுதான் பொது விநியோகத் திட்டத்தைப் பொறுத்தவரை (ரேஷன் கடை நிர்வாகம்) மத்திய அரசின் அணுகுமுறை என்று தோன்றுகிறது. பொது விநியோக முறை(PDS) திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்குப் பதிலாக, திட்டத்தையே முடக்குவதற்கான பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று தற்போது பயனாளிகளை இலக்குவைத்து அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திவிடுவது அல்லது பயனை நேரடியாக தந்துவிடுவது என்ற திட்டமாக முடிவுக்கு வர இருக்கிறது.
இது வெறும் ரேஷன்கடைகளோடு நிற்கப்போவது இல்லை ஏற்கனவே விவசாயிகளுக்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் செலுத்துவதற்கான பணிகள் சில மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமும் உணவுப் பொருட்களைத் தருவதற்குப் பதிலாக மூன்று வயதிற்குக் குறைவான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பணத்தை ஜன்தன் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிடுவதற்கான திட்டத்தை முன்மொழிந்து உள்ளது. பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது என்பது மத்திய மாநில அரசாங்கங்களின் வறுமை ஒழிப்பு திட்டங்கங்களையே படிப்படியாகக் கைவிடும் உத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார், செல்பேசி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது செய்யப்படும். பணத்தை வங்கிக்கணக்கிற்கு செலுத்துவது என்ற திட்டத்தின் காரணமாக பொது விநியோக முறையின் மூலம் சுமார் 67% மக்கள் உணவு தானியங்களை மானிய விலையில் பெறுகின்ற முதலில் பாதிக்கப்படபோகிறார்கள்.
புதுவையில் 14 அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் பல ஆண்டுகளாக தரப்படுவது இல்லை. தற்போது இலவச அரிசியும் சரியான முறையில் வழங்கவில்லை என்பதால் ரேஷன் கடைகள் காட்சிப்பொருட்களாகிவிட்டன, இதுகுறித்து பொதுமக்களுக்கு எதுவும் தெரியாததால் அவர்கள் தம்மை சூழ இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளனர். இடதுசாரி கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகள் இவ்விவகாரத்தில் பாராமுகமாகவே உள்ளனர். பொது விநியோக முறைக்கு பதிலாக பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று யூனியன் பிரதேசங்களிலும் பணம் பயனாளிகளை நிச்சயமாக சென்றடைகிறது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நிதி ஆயோக்கின் கீழ் 2017ல் நடந்த பொருளாதாரக் கணிப்பில் பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையில் சுமார் 35% பேரை பணம் சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே உணவுக்கு பதில் பணம் என்பது விநியோகத்தை மேம்படுத்தவில்லை, கசிவு என்பது பணமாகத் தருவதிலும் நடக்கிறது மேலும் பெரும்பகுதி மக்களை இத்திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கமும் எதிர்காலத்தில் ழுழுமையாக இத்தகைய தேசப் பாதுகாப்புத்திட்டத்தையே கைவிடும் மோசடி இருக்கிறது.
மேலும் பொது விநியோக முறைக்கு அதிக மானியம் தேவைப்படுவதால் மக்களுடைய வரிப்பணம் வீணாகிறது, எனவே மானியங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அரசு கூறுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் பதுக்கல், கொள்ளை லாபத்தை ஒழிக்கவும், பட்டினிச் சாவுகளைத் தடுக்கவும்தான் பொது விநியோகமே கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உதவும் மானியத்தை, “நிதிச்சுமையாக” அரசு கருதுவது சரியே அல்ல. எந்த மாநிலத்தில் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் தரப்படுவதில்லையோ அங்குதான் முறைகேடுகளும் ஊழல்களும் பொது விநியோகத்துக்கான பொருள்கள் கடத்தப்படுவதும் அதிகமாக இருக்கின்றன என்பதோடு தற்கொலை, மற்றும் சமூக குற்றங்கள் அதிகமாக உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வழங்கினால் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள்தான் பலன் பெறுவார்கள் என்ற வாதமும் சரியல்ல. பணக்காரர்கள் தங்களுடைய வருவாயில் உணவு தானியங்களுக்காகச் செலவிடுவது மிகமிகக் குறைவு; அதே சமயம், ஏழைகள் தங்களுடைய வருவாயின் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிடுகிறார்கள். எனவே பணக்காரர்களும் ரேஷனில் அரிசி, கோதுமை வாங்குவதால் ஏழைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற வாதமே தவறானது.”அனைவருக்கும் உணவு” என்பது அடிப்படை உரிமை என்றான பிறகு, “உணவுப் பாதுகாப்பை அளிப்பதே அரசின் லட்சியம்” என்று அறிவித்த பிறகு, எல்லோருக்கும் தரமான உணவு தானியம் வழங்குவதற்கான வழியைத்தான் அரசு யோசிக்க வேண்டும் உணவையே உண்ண முடியும், பணத்தை அல்ல என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.
இந்நிலையில் மத்திய அரசு புதிய உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.833 வருமானமுள்ள குடும்பங்களுக்கு ரேஷனில் பொருட்கள் இல்லை என்று முடிவு எடுத்துள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. இது பெரும் வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை தங்கள் இஷ்டத்திற்கு விலையேற்றி விற்க உதவியாக இருக்கும்.புதுச்சேரி காங்கிரஸ் அரசு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 30 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மாதந்தோறும் வழங்கப்படும், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் எனவும் தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மத்திய அரசின்மக்கள் விரோத திட்டங்களை புதுச்சேரியில் அமல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு பொது விநியோக திட்டத்தை படிப்படியாக கைகழுவி இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை மூடுவதற்கு முன்னோட்டமாக புதுச்சேரி மாநிலத்தை சோதனை எலியாக மாற்றி பொது விநியோக முறைக்கு நிரந்தர மூடுவிழா நடத்த முயற்சிகிறது.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் ஏழைகளின் பசியறியா – நாடாளும் மன்னவர்களின் மோசடிகளை அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தடுத்து நிறுத்தவேண்டும்.
மேலும் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாத்தல், இந்தியாவின் உணவுபாதுகாப்பை உறுதி செய்தல், பொது சந்தையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குதல் பொது விநியோக முறை பாதுகாத்தல் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான உணவை பாதுகாத்தல், நாம் போராடி பெற்ற உணவு உரிமையை பாதுகாத்திடும் போராட்ட களத்தில் அனைவரும் கரம்கோர்ப்போம்.
கி.விஜயமூர்த்தி,புதுச்சேரி