உலகை குலுக்கிய புத்தகம் -1
ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனும், ஒரு இருபத்தேழு வயது இளைஞனும் சேர்ந்து ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்கள். அது உலகையே புரட்டிப்போட்டது ! அந்த இளைஞர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ். அந்தப் புத்தகம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை. சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் 1848ஆம் ஆண்டில் இதை அவர்கள்வெளியிட்டார்கள். அன்று பாட்டாளி வர்க்கம் பட்ட பாட்டைக் கண்டு பலர் கண்ணீர் விட்டார்கள். அவர்களது இனிய வாழ்க்கைபற்றிக் கனவு கண்டார்கள்.ஆனால் மார்க்சும், எங்கெல்சும் கனவுக்குப் பதிலாக அறிவியலை முன்வைத்தார்கள் என்றார் லெனின்.
கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சியை முன்வைத்தார்கள் என்றும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். அறிவியல் அடிப்படையிலான கம்யூனிச சித்தாந்தத்- தையும், உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியவர்கள் அவர்களே. அந்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாட்டுக்கு மட்டும் உரியதல்ல, உலகத் தொழிலாளர்களின் பொது அமைப்பாகவே அது உருவாக்கப்பட்டது.
அந்தக் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம், நடைமுறைத்திட்டம் ஆகியவையே இந்த அறிக்கை. ஐரோப்பாவை ஒரு பேய்பிடித்து ஆட்டுகிறது கம்யூனிசம் என்ற பேய் என்று கிண்டலும் கேலியுமாகத் தொடங்குகிறது அறிக்கை. அதுவரை, வரலாறு என்றாலே மன்னர்களின் வரலாறுதான் என்று இருந்து வந்த கண்ணோட்டத்தை மாற்றி, வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று இயக்கவியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வரலாற்றை அது விளக்குகிறது.
முதலாளித்துவம் தோன்றியது எவ்வாறு? அதன் விளைவுகள் என்ன? பாட்டாளி வர்க்கத்தின் தன்மை என்ன? தன்னெழுச்சியான போராட்டம், தொழிற்சங்கம், அரசியல் கட்சி என்று பாட்டாளி வர்க்கம் வளர்ந்து வந்தது எவ்வாறு? என்பவையெல்லாம் அறிக்கையின் முதல் பகுதியில் விளக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், கம்யூனிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சாட்டையடி பதில்கள் சரமாரியாக அளிக்கப்படுகின்றன. மூன்றாம் பகுதியில், சோஷலிசம் பேசும் வேஷதாரிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படுகின்றன. நான்காம் பகுதியில், மற்ற புரட்சிகர இயக்கங்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு அறிவிக்கப்படுகிறது. இதன் இறுதியில்தான் ஆயுதம் ஏந்திய புரட்சிக்கான அறைகூவல், எந்தக் கவிதையையும் விஞ்சும் கம்பீரத்துடன் வெளியாகிறது:
கம்யூனிசப் புரட்சியைக் கண்டு
ஆளும் வர்க்கங்கள்
நடுநடுங்கட்டும்!
பாட்டாளிகள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை,
இல்லை,
அடிமைச் சங்கிலியைத்
தவிர;வென்று
அடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது!
அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே,
ஒன்று சேருங்கள்!
இந்தப் புத்தகம் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் பிறகு _ 1872ஆம் ஆண்டில் _ மார்க்சும், எங்கெல்சும் இதற்கு ஒரு முன்னுரை எழுதினார்கள். அதில் அவர்கள்கூறியுள்ள ஓர் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ளத் தவறிவிடக் கூடாது.
இந்த அறிக்கையின் பொதுவான கொள்கைகள் இன்றும் சரியானவையே.
எனினும் இந்தக் கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்துவது என்பது, அவ்வப்போது உள்ள வரலாற்று நிலைமைகளைச் சார்ந்தே இருக்கும் என்று அவர்கள்தெளிவாக்கினார்கள். மேலும் அறிக்கையிலேயே அவர்கள்குறிப்பிட்டுள்ள தைப் போல இந்த நடவடிக்கைகள்வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறாக இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கேற்ப, அன்று முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்தியாவில், தமிழ்நாட்டின் தனித்தன்மைகள் போன்றவற்றையும் மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் கற்க வேண்டும்; ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். இதற்கான அருமையான தொடக்கமாக அமையும் மகத்தான புத்தகமே கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.
இரா. ஜவஹர்