பதில் : மோடி அரசாங்கம் ஆதார்(நிதி மற்றும் ஏனைய மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தருதல்) மசோதா வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.இது ஆதார் மசோதாவாக இருந்தாலும் இந்த மசோதாவை நிதி மசோதா என அறிமுகம் செய்ய அரசாங்கம் மக்களவை சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்தது. இதன் அடிப்படையில் சபாநாயகர் இதனை நிதி மசோதா என அறிமுகம் செய்ய அனுமதித்தார். நமது அரசியல் சட்டத்தின்படி நிதி மசோதாவை திருத்தம் செய்யவோ அல்லது மாற்றவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் கிடையாது.
மக்களவைக்கு தனது பரிந்துரையை மட்டுமே மாநிலங்களவை தர முடியும். இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மக்களவைக்கு மட்டுமே உண்டு.அரசியல் சட்டப்பிரிவு 110(3) பிரிவின் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களவை சபா நாயகர் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக அறிவித் தார். அரசியல் சட்டப்பிரிவின் படி சபாநாயகரின் இந்த முடிவு தவறானது.ஒரு மசோதாவை எதன் அடிப் படையில் நிதி மசோதாவாக முன்மொழிய முடியும் என்பதை சட்டப்பிரிவு 110(1) விளக்குகிறது. ஒரு மசோதா வெறுமனே வருவாய் வசூலை அதிகரிப்பது அல்லது பணத்தை விநியோகிப்பது அல்லது சேவையை அளிப்பது மட்டுமே நோக்கம் எனில் அதனை நிதி மசோதாவாக அறிவிக்க இயலாது என சட்டப்பிரிவு 110(2)தெளிவு படுத்துகிறது. சட்டப்பிரிவு 110(1)மற்றும் 110(2) படி ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக அறிவிக்க முடியாது.
இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை சபாநாயகர் பயன்படுத்தி உள்ளார்.இந்த மசோதா குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு உரிமை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது. குடிமக்கள் பற்றிய தரவுகள் மற்றும் பயோமெட்ரிக் எனப்படும் உயிரியளவு தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் எனும் கவலை தோன்றியுள்ளது. குடிமக்களின் உரிமைகள் குறித்து ஆதார் மசோதா பல கவலைகளை எழுப்புவதால் இதனை நிதி மசோதாவாக அறிவித்தது முற்றிலும் தவறானது ஆகும்.ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன் மொழியப்பட்டதற்கு ஒரே வஞ்சக நோக்கம் மாநிலங்களவையை முற்றிலும் உதாசீனப்படுத்துவது என்பதே ஆகும். ஏனெனில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
சில நாட்களுக்கு முன்பு “மக்களவைக்குதான்முழு அதிகாரம் உண்டு. மக்களவை உருவாக்கும் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாநிலங்களவைக்கு இல்லை” என அருண்ஜெட்லி கூறியிருந்தார். இந்த வாதம் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு முற்றிலும் முரண்பட்டது ஆகும். இரண்டு அவைகளின் அதிகாரம் என்ன மற்றும் பொறுப்பு என்ன என்பதை அரசியல் சட்டம் வரையறுத்துள்ளது.ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன்மொழி யப்படுவது அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும். இந்த நயவஞ்சக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக எதிர்க்கிறது. சபாநாயாகரின் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்திட உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு போதுமான முகாந்திரங்கள் உள்ளன.
நன்றி: சேர்ந்து சிந்திப்போம்! திக்கதிர்
CPIM Puducherry