அமைதிப்பூங்கா, ஆன்மிக பூமி என்று வர்ணிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அமைதி இழந்து “கொலை நகரமாக’ மாறி வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் மாநில மக்கள் பீதியில் உள்ளனர். குறிப்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்., ஆட்சி அமைந்த பிறகு கொலைகள் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் இதுவரை மொத்தம் 22 கொலைகள் நடந்துள்ளன. மாதத்திற்கு சராசரியாக நான்கு முதல் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு கொலையும் முன் கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்டவை. பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி கொலை செய்தல்; வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்தல்; தெருவில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்றவை தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
மூன்று தினங்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு அருகே என்.ஆர். காங்., கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். முதல்வர் வீட்டிற்கு அருகிலேயே கொலை நடந்துள்ளதால், மக்கள் பீதியுடன் உள்ளனர். கடந்த காங்., ஆட்சியின் போது குண்டர் தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. குண்டர் சட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற போலீஸ் உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் கிராமத்தில் ஒரு கொலை நடந்துவிட்டால் கூட புதுச்சேரி முழுவதும் பரபரப்பாக பேசப்படும். அந்த கொலையும் குடும்பத் தகராறு, சொத்து பிரச்னையின் காரணமாக நடந்து இருக்கும். ஆனால் தற்போது, நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், பட்டப்பகலில் கொலைகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் டாப் 10 ரவுடிகள்”லிஸ்ட்’ உள்ளது. அவர்களை போலீசார் கண்காணிப்பது கிடையாது.
ரவுடிகளை கண்காணிக்க எஸ்.டி.எப்., (சிறப்பு அதிரடிப்படை) பிரிவு ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் கொலை உள்ளிட்ட குற்றங்களைப் பார்த்தால், அந்த பிரிவு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு ரவுடி ஊருக்குள் வருவதற்குத் தடை விதித்து, கலெக்டர் உத்தரவிடுகிறார். ஆனால் அந்த ரவுடி சாதாரணமாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடமாடுகிறார். இதை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. தினந்தோறும் ரவுடிகளுக்கிடையே மோதல், வெடிகுண்டு வீச்சு, கொலைகள் நடப்பதை போலீசார் சர்வ சாதாரணமாக கருதுகின்றனர். உள்ளூர் போலீசார் சிலர், ரவுடிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அடிக்கடி நடக்கும் கொலைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
சிறையில் உள்ள “பவர்புல் கைதிகள்’ மொபைல்போன் மூலம் வெளியில் இருக்கும் கூலிப்படையை ஏவி கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைக்குள் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சிறையில் மொபைல் போன் எப்படி செயல்படுகிறது, கைதிகளுக்கு எவ்வாறு மொபைல் போன் கிடைக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஜாமர் கருவி வேலை செய்கிறதா… இல்லையா என்பது, சிறை அதிகாரிகளுக்கே வெளிச்சம். சிறை கைதிகளுக்கு மொபைல் போன் கிடைக்க, சிறை வார்டன்கள் சிலர் உறுதுணையாக இருக்கின்றனர்.
பெயரளவில் போலீஸ் ரோந்து
கடந்த காலங்களில், “கிரைம் டீம்’ எனப்படும் குற்றங்களை கண்டுபிடிக்கும் குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் உடனக்குடன் குற்றங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் இன்று போலீஸ் ரோந்து பணி என்பது பெயரளவில் தான் உள்ளது.
வாகன ரோந்து பிரிவு போலீசாரை காண்பது அரிதாக உள்ளது. இவர்களில் பலர் ரோந்து செல்லாமல் துறைமுகம், தாவரவியல் பூங்கா என மறைவான இடங்களில் ஓய்வெடுத்து வருகின்றனர். வாகன ரோந்து என்பது சம்பிரதாயமாக உள்ளது. போலீசாரின் ரோந்து பணிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் போலீஸ் உயரதிகளின் வீட்டு எடுபிடி வேலைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ரோந்து சென்றாலும் கலெக்ஷனில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். நள்ளிரவில் சந்தேகப்படும்படியாக நபர்கள் நடமாடினால் அழைத்து விசாரிப்பதில்லை. பல போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசாருக்கும் குற்றவாளிக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. கொள்ளையில் பங்கு போடுவதால், போலீஸ் மீது குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது. குற்றம் நடந்தவுடன் வாகன சோதனை, ரோந்து என பரபரப்பு காட்டுவதை விடுத்து, புதுச்சேரி மாநில எல்லைகளில் நிரந்தரமாக சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தி, வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
போலீஸ் உயரதிகாரிகளுக்குள் ஈகோ பிரச்னையும், கோஷ்டியும் உள்ளது. இதனால், பவர்புல் பதவிகளை குறிவைத்து அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் போன்ற தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றுகின்றனர். ஈகோவை ஒதுக்கிவிட்டு, மக்களின் பாதுகாப்பிற்காக போலீஸ் உயரதிகாரிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். கொலை நடந்தபிறகு, சம்பிரதாயத்திற்காக ஆலோசனை கூட்டம் நடத்துவதோடும், வாகன தணிக்கை செய்வதோடும் தங்கள் கடமை முடிந்து விட்டதாக காவல் துறை கருதுகிறது. சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வரும், போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது கிடையாது. அரசாங்கம் இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்தால்தான் கொலைகளின் எண்ணிக்கை குறையும். அடுத்தடுத்து குற்றங்கள் நடக்கும்போது, போலீஸ் துறையை கவனிக்கும் அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்துவது வழக்கம். கூட்டத்தில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதல்வரோ, அமைச்சரோ பிறப்பிக்கும்போது, போலீசார் தங்கள் பணிகளில் வேகம் காட்டுவர். கடும் நடவடிக்கைக்கு பயந்து குற்றவாளிகளும் தப்பி ஓடுவது வாடிக்கை.
புதுச்சேரியில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் உச்சகட்டத்தை எட்டியபோதும், போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் மருந்துக்குகூட இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு உறுதியான முடிவு எடுக்காததால், கொலைகாரர்களும், ரவுடிகள், குண்டர்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அப்பாவி மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இனியும் காலம் கடத்தாமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மக்கள் உயிருக்கு பாதுகாப்பு தேடி அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அடாவடி கும்பலால் அரங்கேறும் கொலைகள் :
ஏதாவது ஒரு வீடு, அலுவலகம், கட்டுமானப் பணி நடக்கும் இடம் போன்ற எந்த இடத்திலாவது லாரி உள்ளிட்ட சுமை ஏற்றும் வாகனங்கள் வந்து நின்றால் போதும். அடுத்த கணமே, சுமை தூக்குவோர் என்ற பெயரில் ஒரு அடாவடி கும்பல் அங்கு வந்து விடுகிறது. நாங்கள் தான் இறக்குவோம், ஏற்றுவோம் எனக் கூறி, அட்டூழியம் செய்கின்றனர். பொருட்களுக்கு உடையவர், “நாங்களே பார்த்துக் கொள்கிறோம்; எங்களிடம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு சுமையை ஏற்றிக் கொள்கிறோம்’ என்று கூறினாலும், அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமலேயே வலுக்கட்டாயமாக, பொருட்களை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றனர். இது ஒரு புறமிருக்க, “சுமை அரை பணம், சுமை கூலி முக்கால் பணம்’ என்ற கதையாக, ஏற்றி இறக்குவதற்கு அவர்கள் கேட்கும் கூலியைக் கேட்டு, மயக்கமே வந்து விடுகிறது.
அப்படியும் இல்லாவிட்டால், பொருட்களை நீங்களே ஏற்றி, இறக்கிக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து விடுங்கள், பிரச்னை செய்யாமல் போய் விடுகிறோம் எனக் கூறி, சிறிய அளவிலான பொருட்களைக் கையாள்வதற்குக் கூட ரூ. 5000, 10 ஆயிரம் என பெருந் தொகையைக் கேட்டு, அடாவடி செய்து வருகின்றனர். பணபலம் உள்ளவர்கள், நமக்கு எதற்கு வம்பு என, அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு, சுமையை ஏற்றி இறக்கிக் கொள்கின்றனர். பணம் இல்லாதவர்களின் பாடு, திண்டாட்டமாகி விடுகிறது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனையே கடித்த கதையாக, இக் கும்பல் அரசு நிறுவனத்தின் மீதே கைவைத்த அவலமும் அரங்கேறியது. சில மாதங்களுக்கு முன் பாப்ஸ்கோ மது பானக் கடைக்கு லாரியில் ஏற்றி வந்த சரக்குகளை, நாங்கள் தான் இறக்குவோம் எனக் கூறி, அடாவடி செய்தனர். அதன்பிறகு, போலீசாரும் அதிகாரிகளும் தலையிட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்ற போர்வையில் செயல்படுவோரின் செயல்பாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைவிட மோசமானதாக உள்ளது. பல தொழிற்சாலைகளில் சுமைகளைக் கையாள்வதற்கு தனியாக தொழிலாளர்கள் உள்ளனர். இருந்தபோதிலும், அத்தகைய தொழிற்சாலைகளுக்கும் சென்று, சுமை தூக்குவோர் சங்கம் என்ற பெயரில் நிர்வாகத்தை மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டு வருகிறது. மேலும், நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களை மிரட்டி, மாதாமாதம் பணம் வசூலித்தும் வருகின்றனர்.
இப்படியாக இவர்களின் அட்டூழியத்தால், ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வீடு மாறும் சாதாரண குடிமக்கள் முதல், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள், பெரிய தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உழைப்பில்லாமலேயே தினமும் கணிசமான பணம் புரள்வதால், இத் தொழிலில் ஈடுபட பல இளைஞர்கள் முன் வருகின்றனர். ஒரே பகுதியில் பலர் இத் தொழிலில் ஈடுபடுவதால், கோஷ்டிகள் உருவாகிறது. இதனால் ஏற்படும் விரோதம் காரணமாக அடிதடியில் துவங்கி, கொலையில் முடிகிறது.
சட்டம் ஒழுங்கு நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரோ, இப் பிரச்னையில் நாங்கள் ஏதும் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கம்போல தங்களின் “மாமூல்’ பணிகளைக் கவனித்துக் கொண்டுள்ளனர்.
காங்கிரசார் நடத்திய “திடீர்’ மறியல் :
அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள இந்திராவின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக, ஆளும் என்.ஆர்.காங்., கட்சியின் அமைச்சர்களும், எதிர்க் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட காங்கிரசாரும் திரண்டிருந்தனர். காலை 10 மணிக்கு, இந்திரா சிலை வளாகத்திற்கு முதல்வர் ரங்கசாமி காரில் வந்திறங்கினார். அப்போது, திடீரென காங்கிரசார் இந்திரா சிலை ரவுண்டானா பகுதியில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அரசு மற்றும் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், முதல்வர் ரங்கசாமி எதையும் கண்டுகொள்ளாமல், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, சர்வ மத பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.அதுவரை, 10 நிமிடங்களுக்கு மேலாக, காங்கிரசாரின் மறியல் தொடர்ந்தது. பின், காங்கிரசார் மறியலைக் கைவிட்டு, இந்திரா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
“பாசிக்’ விஷயத்தில் அரசின் நிலை என்ன :
பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்கக் கோரி பாசிக் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சம்பளம் வழங்கப்படும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சம்பளம் வழங்கப்படவில்லை. ஏமாற்றம் அடைந்த ஊழியர்கள், தினந்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி கொண்டுள்ளனர். சம்பளம் வழங்காததால் மனஉளைச்சலில் ஊழியர் இறந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாசிக் விஷயத்திலும் அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. பாசிக் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வெளியாகவில்லை. சம்பளம் வழங்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது.
பாசிக் நஷ்டத்தில் இயங்குவதற்கு ஊழியர்கள் மட்டும் காரணமல்ல. தவறான நிர்வாகம் செய்த அதிகாரிகளுக்கும் பங்குண்டு. ஆனால், அதிகாரிகளுக்கு மட்டும் சம்பளம் வழங்கி விட்டு, ஊழியர்களை தவிக்க விடுவது சரியல்ல. ஊழியர்களுக்கு சம்பளத்தை அரசு வழங்குவதுடன், பாசிக் நிறுவனத்தை லாபகரமாக நடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக உழைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை பெற வேண்டும். லாபத்தில் நடத்த முடியாவிட்டால், பாசிக் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய “செட்டில்மென்ட்’ வழங்கிவிட வேண்டும்.
முதல்வரிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன :
முதல்வராக ரங்கசாமி பதவியேற்றவுடன், சிகப்பு ரேஷன் கார்டுக்கு இலவச அரிசியை 25 கிலோவாகவும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு இலவச அரிசியை 15 கிலோவாகவும் உயர்த்தி அறிவித்தார். தீபாவளியை முன்னிட்டு அனைவருக்கும் 2 கிலோ இலவச சர்க்கரையை வாரி வழங்கினார். இதுபோன்ற சூழ்நிலையில், முதல்வர் அறிவிக்கப் போகும் அடுத்த “இலவசம்’ என்ன என்பது குறித்து “பெட்’ கட்டி விளையாடும் அளவிற்கு நிலைமை கேலிக் கூத்தாகி விட்டது. மழை நிவாரணமாக 1000 ரூபாய் அறிவிப்பாரா அல்லது கடந்த ஆட்சியை மிஞ்சும்வகையில் 2000 ரூபாய் அறிவிப்பாரா என்பதுதான் தற்போது உச்சகட்ட “பெட்’ ஆக உள்ளது. மக்களுக்கு இலவசங்களை வழங்குவது மட்டுமே முதல்வரின் வேலை அல்ல.
குற்றவாளிகளை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவதும்தான் முதல்வரின் தலையாய கடமையாகும். சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வந்தாலும் முதல்வர், எந்த கவலையும்படாமல் அமைதி காத்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இனிமேலும், அமைதி காக்காமல் முதல்வர் களமிறங்க வேண்டும். ஏழை மக்களுக்கு தேவையான இலவச உதவிகளை வழங்க வேண்டிய சமுதாய கடமை அரசுக்கு உண்டு. அதேசமயம், மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட வேண்டும். முதல்வரிடம் இருந்து புதுச்சேரி பொதுமக்கள் எதிர்பார்ப்பது இதுதான்.