சாதியும் நீதியும்

மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சி கிராமத்தில் கடந்த 2006 செப்டம்பர் 29 ஆம் நாள் பையாலால் போட்மாங்கே என்ற புத்தமதத்தை தழுவிய தலித்தின் குடும்பத்தினர் மீது அக்கிராமத்தைச் சார்ந்த குன்னாடி மற்றும் காலர் என்ற பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினரின் கொலைவெறிக் கும்பல் கடும்தாக்குதலை நடத்தியது. போட்மாங்கே (வயது 40) அப்போது வீட்டில் இல்லை. அவரின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா (17) மகன்கள் ரோசன்(21) மற்றும் சுதிர் (19) ஆகியோர் தாக்கப்பட்டனர். அவர்களின் உடலிலிருந்து துணிகளை உருவி நிர்வாணப்படுத்தி தாக்கியவாறு அந்த கும்பல் இழுத்துச் சென்றது. இந்த நிகழ்வுகளை தூரத்தில் கண்ணுற்ற ஒரு சாட்சியாக நின்றிருந்தார் போட்மாங்கே. அடுத்தநாள் இழுத்துச் செல்லப்பட்ட போட்மாங்கே குடும்பத்தினரின் உயிரற்ற உடல்கள் கிராமத்துப் பாசன கால்வாயில் கண்டெடுக்கப்பட்டன.

அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மோஹந்தி நகர மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதை கண்ட போட்மாங்கே தன் மகள் பிரியங்கா ஒட்டுத்துணிகூட இன்றி நிர்வாணமாய் கிடந்ததையும், அதேபோன்று நிர்வாணமாய் தன்மகன் ரோஷனின் சடலத்தையும், மனைவி சுரேகாவின் உள்ளாடைகள் கிழிக்கப்பட்டிருந் ததையும் கொஞ்சம் துணிகள் மட்டும் மகன் சுதிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்ததையும் கண்டார்.

ஆதிக்கசாதியினரின் கொடுமைகளை சகித்துக்கொள்ளா மல் சுயமரியாதையுடன் வாழ போராடியதற்காகவும், கிராமத்தில் 4.74 ஏக்கர் நிலத்துடன் இருந்ததற்காகவும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு போட்மாங்கே குடும்பம் உள்ளானது. இக்கொலைகள் நடந்தவுடன் புலனாய்வை முடுக்கிவிடவேண்டிய மகாராஷ்டிரா காவல்துறை குற்ற வாளிகளை கைதுசெய்ய கால தாமதம் செய்யத் துவங்கியதால் தலித்துகள் மற்றும் சனநாயக சக்திகளின் எழுச்சிமிக்க போராட்டத்தை அது சந்திக்க வேண்டியி ருந்தது. கடும் போராட்டத்தின் விளைவாக இவ்வழக்கு மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) விசாரணைக்கு நவம்பர் 2006ல் உட்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக ஆதிக்கசாதியினர் 34 பேர் கைது செய்யப்பட்டு 11 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டது. போட்மாங்கே யின் கடுமையான சட்டப் போராட்டத்திற்குப் பின் வழக்கு விசாரணை முடிந்து செப் 24, 2008ல் பந்தரா மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஆறுபேருக்கு மரணதண்டனையையும் இருவருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்தது. மற்ற மூவர் விடுதலை செய்யப்பட்டனர். தலித் உரிமைகளுக்காக கரிசனப்படும் பலர் இத்தீர்ப்பை வரவேற்றனர். ஆனால் மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.தாஸ் தனது தீர்ப்பில் இது சாதிய அடக்குமுறையால் நிகழ்ந்த வன்கொடுமையல்ல என தீர்மானித்திருந்தார். இது ஒரு கொலை வழக்கு என்று மட்டுமே அவர் முடிவு செய்திருந்தார். போட் மாங்கே ஆதிக்கசாதியினர் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்ததால் காழ்ப்புணர்வுற்று இக்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை உபயோகிக்க மறுத்துவிட்டார். மேலும் இறந்துபோன போட்மாங்கேயின் மனைவி சுரேகாவும் மகள் பிரியங்காவும் கடும் பாலியல் வன் முறைக்கு உள்ளாகியிருந்ததையும் பாலுறுப்புகள் சேத மடைந்திருந்த போதிலும் பாலியல் வன்முறையோ பெண்மையை இழிவுபடுத்திய நிகழ்வோ இக்கொலை யில் நடந்திருக்கவில்லை என்றும் தீர்மானித்திருந்தார். இவ்வழக்கில் கொலையாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாகப் பலர் பாராட்டியபோது இவ்வழக்கை நடத்திய அரசு சிறப்பு வழக்குரைஞர் உஜ்வால் நிகம், ஒரு தலித்திய பார்வையில் இத்தீர்ப்பு ஒரு பெருத்த பின்னடைவு, சாதிய ஆதிக்கவெறியின் காரணமாய் நிகழ்ந்த இக்கொடிய சதியை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றார்.

ஒரு தாழ்த்தப்பட்டவர், பிற சமுதாயத்தவர்க்கு இணையாக வாழவேண்டும் என்ற சுயமரி யாதை உணர்விலேயே ஆதிக்க வெறித்தனத்திற்கு அடிமை யாகாது எதிர்த்து நிற்கின்றார். இந்த சுயமரியாதை உணர்வு ஒரு தலித் பெறுவதை ஆதிக்க சாதியம் பெரும் குற்றமாகவே பார்க்கிறது. நல்ல உடை உடுத்துவது, நல்ல உணவை உண்பது, நிலம் வைத்து விவசாயம் செய்வது அனைத்தும் மநுநீதியால் தலித்துக்கு விதிக்கப்பட்ட சமூகப்பணியல்ல என்பதால் அதனை செய்ய முற்படும் ஒரு தலித்தை கொடுங்குற்றம் புரிந்த வனாகவே கருதி ஆதிக்கம் தண்டிக்கிறது. இவ்விதமான தண்டனையைத்தான் போட்மாங்கே குடும்பம் எதிர் நோக்கியது. ஆனால் இதனை வெறும் கொலை என்று மட்டுமே பார்க்கும் நீதிமன்றத்தின் நீதிசார் பாராமுகம் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளில் புதிதல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக முருகேசன் தொடர்ந்து ஆதிக்கசாதி வெறியர்களால் அச்சுறுத்தப் பட்டு வந்தார். பலநாட்கள் பஞ்சாயத்து தலைவரின் அறையைப் பூட்டி வைத்திருந்தனர். தலித்துகளின் வீடு களுக்குத் தீ வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எரிந்து சாம்பலான வீடுகளுக்கு இழப்பீடு கோரிவிட்டு முருகேசன் திரும்பிய பேருந்தை மேலவளவுக்கு அருகில் கல்லுக்கடை மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் வழிமறித்தது. பேருந்தில் வந்த முருகேசன், அவருடன் வந்த ராஜா, செல்லதுரை, சேவக மூர்த்தி, மூக்கன், பூபதி ஆகியோரும் ஓடஓட வெட்டி கொல்லப்பட்டு அவர்களின் உடலுறுப்புகள்கூட அறுத்து வீசப்பட்டன. காவல்துறை ஆதிக்கசாதியினர் 40 பேரை கைது செய்தது. கைதுசெய்த சிலநாட்களிலேயே குற்ற வாளிகள் பிணையில் வெளியே வந்தனர். ஒருபுறம் மிரட்டியும் மறுபுறம் தலித்துகளிடம் பாசம் காட்டுவது போல நடித்து பேரம் பேசியும் சாட்சிகளை கலைக்க முயன்றனர். வேறுவழியின்றி வழக்கு விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பே சில சாட்சிகள் ஆதிக்கசாதியினரின் தாக்குதலுக்கு பயந்த ஓடி ஒளிந்து கொண்டார்கள். நீதி மன்றத்தில் விசாரணையின்போது சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். முதல்நாளில் காலையில் துவங்கிய முதல் சாட்சி விசாரணை மதியம் உணவு இடைவேளையின் போதும் முடிவடையவில்லை. மதிய உணவுக்காக நீதிபதி இறங்கிச் சென்ற பின் பாதி விசாரித்த நிலையிலும் அந்த சாட்சியை மாற்ற முயன்றனர். அவர் ஓடி ஒளிந்த போது அந்த சாட்சியின் குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாட்சி சொல்ல வேண்டாம் என்று நிர்ப்பந்தித்தனர். ஆனால் சாட்சி ஒருவழியாக சுதாரித்து குற்றவாளிகளைப் பற்றி சாட்சியமளித்து முடித்தார்.

இவ்வாறு அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் சிலநாட் களில் விசாரிக்கப்பட்டப் பின்பு குற்றவாளிகள் தமது ஊருக்குப் போக நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். குற்றவாளிகள் கிராமத்திற்கு சென்றால் மீண்டும் சாட்சி களை அச்சுறுத்துவார்கள் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் கடுமையாக ஆட்சேபித்தும் நீதிமன்றம் குற்ற வாளிகளை கிராமத்திற்கு செல்ல அனுமதித்தது. சாட்சிகள் கிராமத்திற்கு செல்ல முடியாது தடுமாறினர். அச்சத்தோடு தமது குடும்பத்தினரைக் காண கிராமத்திற்கு சென்றபோது அவர்கள் குற்றவாளிகளை எதிர் கொள்ள நேர்ந்தது. அடுத்த வாய்தாவில், குற்றவாளிகள் தம்மை அப்பாவிகள் என நிரூபிக்க அவர்கள் தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டிய சமயம் வந்தபோது, அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட அதே சாட்சிகள் இம் முறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக சாட்சியமளிக்க வந்திருந்தனர். பீதியடைந்த கண்களுடன், உதறல் எடுக்கும் கைகளால் கும்பிட்டபடியே, குற்றவாளிகளை தான் பார்க்கவில்லை என்றனர். குற்றவாளிகள் தமக்குள் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டார்கள். நீதிமன்றத்தில் மாட்டப்பட்ட நிலையில் காந்தியும்கூட புகைப் படத்தில் சிரித்துக்கொண்டே இருந்தார்.

மனித உரிமை மீது அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் முயற்சிக்குப் பின் சேலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகளில் 17 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 23பேர் விடுதலையாயினர். ஆனால் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்நிகழ்வு சாதிய வன்கொடுமையால் நிகழ்ந்த கொலை யல்ல, வெறும் தேர்தல் போட்டியில் ஏற்பட்ட கொலை என்று கூறியது. தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகூட செய்ய மறுத்து விட்டது. பாதிக்கப்பட்ட தலித்துகளின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் பெரும் போராட்டத் திற்கு பின் உயர்நீதிமன்றம் இது வன்கொடுமையால் நிகழ்ந்த கொலை என்பதை உறுதி செய்தது. மேலும் இவ்வழக்கில் விடுதலையான 23 நபர்களும் குற்ற வாளிகள் தான் என்றும், தமிழக அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டை மட்டும் வைத்து விடுதலையானவர்களை தண்டிக்க இயலாத நிலையில் உயர்நீதிமன்றம் உள்ள தாகக் கூறியது. வழக்கு தற்போது குற்றவாளிகளால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது. ஆனால் உயிரிழந்த தலித்துகளின் சாவுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் தமிழக அரசு அதன் தொடர் அலட்சியம் மற்றும் அக்கறையின்மையை வெளிப்படுத்தி ஆதிக்க சாதியின் பிரதிநிதியாக தன்னை நிலை நிறுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில் கருப்பையா என்ற தலித் தனது தங்கை பானுமதிக்கு அரசு தொகுப்பு வீடு பெற தொடர்ந்து முயற்சித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக அப்பகுதி பஞ்சாயத்து தலைவி ராஜ லட்சுமி, தொகுப்புவீடு தர ரூ.2000 கையூட்டு கேட்டு பெற்றுள்ளார். ஆனால் தொகுப்புவீடு கிடைக்க வில்லை. ஏமாற்றமடைந்த கருப்பையா பலமுறை கேட்டும் கையூட்டு பணம் திரும்ப தரப்படாததால் தனது உறவினர்கள் முருகேசன், ராமசாமி ஆகியோருடன் பணத்தை திரும்ப தரக்கோரி துடும்பு அடித்தபடியே சென்றுள்ளார். அதன்பின் பஞ்சாயத்து தலைவி ராஜ லட்சுமி மற்றும் அவரின் உறவினர்கள் கூடி 20-05-2002ல் காய்ந்த மனித மலத்தைத் தின்னுமாறு இந்த மூன்று தலித்துகளையும் நிர்பந்தப்படுத்தி சூடுபோட்டு அனுப்பி யுள்ளார்கள். இக்கொடிய வன்கொடுமை வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் 10-9-2007ல் வழங்கிய தீர்ப்பில் சாட்சிகள் நம்பும்படி இல்லை என்று அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்தது.

நாடு முழுவதும் தலித்துகளின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் நிலவும் பாதகப்பார்வை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் 2004ம் ஆண்டு வெளியிட்ட ஓபட்டியல் சாதியினர்மீது தொடரும் வன்கொடுமை குறித்த ஆய்வு” அறிக்கையில், நீதித்துறையில் வன் கொடுமை வழக்குகளில் பாகுபாட்டுத் தன்மைகள் உள்ளதை வெளிப்படுத்தியது.

1)நீதிமன்றங்களில் பட்டியல்சாதியினர் மீதான வன் கொடுமை வழக்குகளில், வழக்கின் உண்மைத் தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதைவிட அவ்வழக்கில் காவல்துறை கையாண்ட நடைமுறைகள் அதிலுள்ள சின்னச்சின்ன குறைபாடுகள் ஆகியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வழக்கை தள்ளு படி செய்யும் நடைமுறை உள்ளது. இது நீதிபதிகளின் மனங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள முடிவு களுக்கு வலுசேர்க்கும் வகையில் நடைமுறை குறைபாடுகள் பெரிதாக்கப்படுகிறது.

2)வன்கொடுமை வழக்குகளில் அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்கவில்லை என தள்ளுபடி செய்யப்படுவதுடன் நடந்த குற்றம் பெண்மையை சிதைப்பதாக இருந்தால் அதற்கு பாலியல் என்றும், கற்பழிப்பு குற்றத்துக்கு தகாத உறவு எனவும், கொலை கொடுங்காயத்தை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்வு, பகை என்றும் காரணம் காட்டப்படுகிறதேயன்றி சாதிய ஆதிக்க வன்கொடுமையைப் பேச மறுக்கிறது.

3)வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் தாழ்த்தப் பட்டவரல்லாத பிறரின் சாட்சியங்களை மட்டுமே வழக்கை உறுதிப்படுத்த சாட்சியமாக எதிர்பார்க்கும் மனப்பான்மை உள்ளது. தேசிய மனித உரிமை ஆணை யம் தலித்துகள் மீதான வன்கொடுமை பற்றிய பலதரப் பட்ட 50 வழக்கின் தீர்ப்புகளை ஆய்வு செய்தபோது பெரும்பாலும் அனைத்து நீதிபதிகளுமே பாதிக்கப்பட்ட தலித்துக்காக சாட்சியமளித்த பிற தலித்துகளின் சாட்சி யங்களை ‘விருப்ப சாட்சிகள்’ (Interest Witnesses) என நிராகரித்ததைக் கண்டது. தலித்துகள் மீது சமூக காழ்ப்புணர்வு தொடர்ந்து நிலவுவதே வன்கொடு மைக்கு அடிப்படையாகும். இந்த தப்பிதத்தின் வெளிப் பாடாகவே நீதிமன்றம் பிறசாதியினரின் சாட்சியத்தை தன் தீர்ப்பின் நம்பகத்தன்மைக்கு ஏற்புடையதாக அதிகம் எதிர்பார்க்கிறது. இது ஒரு முரணாகும். ஒருவேளை தலித் துகளுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல தலித்தல்லாத பிற சாதியினர் வரும் சூழல் உண்மையிலேயே இருந்திருக்கு மேயானால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அவசியம் சமூகத்தில் இருந்திருக்காது.

4)நீதிபதி வழக்கின் சாட்சியங்களை நம்புவதும் நிராகரிப்பதும் அவர் தமக்குள் வைத்துள்ள மதிப்பீடுகளைப் பொறுத்து மாறுபடும். ஆனால் இம்மதிப்பீடுகள் சமூக விருப்புவெறுப்புகளால் முடிவு செய்யப்படுவதாகும். ஒரு நீதிபதி வழக்கின் சாட்சியத்தை மதிப்பீடு செய்வதில் சாதி மற்றும் பாலின பாகுபாடு பெரும் பங்காற்றுகிறது. இது நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் எதிரொ லிக்கிறது. ஒரு தலித் பெண் வல்லாங்குக்கு ஆளான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தார். “கற்பழிப்புக் குற்றங்களில் பொதுவாக இளம் வயதினர்தான் ஈடுபடுகின்றனர். இவ்வழக்கின் குற்றவாளி நடுத்தர வயதுடையவர். எனவே அவர் இக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். ஒரு உயர்சாதி மனிதர் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை கற்பழித்து தன்னை இழிவுபடுத்திக் கொள்ளமாட்டார்” பாதிக்கப் பட்டவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலும் பெண் என்பதாலும் இரட்டிப்பு பாதக நிலைபாட்டை அந்த நீதிபதி எடுத்துள்ளார். (Report on prevention of atrocities against scheduled castes. NHRS page 121)

தற்போது உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஒரு நீதிபதி மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்தபோது தன்னிடம் வரும் எல்லா கொலை வழக்குகளிலும் பாரபட்சமின்றி தண்டித்துவிடுவார். அதேபோன்று அவரிடம் வரும் வன் கொடுமை தடுப்பு வழக்குகளில் என்னதான் சாட்சிய மிருந்தாலும் அதனை விடுதலை செய்துவிடுவார். அவரிடமிருந்த சாதியத்தின் வெளிப்பாடு இது.

வன்கொடுமை பாதிப்புக்குள்ளாகும் எந்தவொரு தலித்தும் ஆதிக்கசாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய மிகக் கடுமையான போராட்டத்தை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் நடத்த வேண்டியுள்ளது. காவல்துறையினர் பொதுவாக பாதிக்கப்பட்ட தலித்துகள் தாக்கல் செய்யும் புகார்களை பெற்றுக் கொள்ள மறுப்பார்கள். வழக்கு பதிவு செய்யமாட்டார் கள். ஒருவேளை நிர்ப்பந்தத்தால் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டிவந்தால் குற்றவாளியுடன் சமாதானமாகப் போகச் சொல்லி நிர்ப்பந்திப்பார்கள். அது நடக்காதபோது குற்றவாளி தரப்பிலிருந்து ஒரு புகாரைப் பெற்று பாதிக்கப்பட்ட தலித்தையே வேறொரு புகாரில் குற்றவாளியாக சித்தரித்துவிடுவார்கள். குற்றவாளியை கைதுசெய்ய நிர்பந்தித்தால் பாதிக்கப்பட்ட தலித்தை யும் கைதுசெய்ய வேண்டிவரும் என்ற நிலையை உருவாக்குவர். மேலும் வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவுகளிலுள்ள உரிய பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யமாட்டார்கள். எல்லா வழக்குகளுக்கும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக மட்டும் வழக்கு தாக்கல் செய்வார்கள். குற்றவாளியை கைது செய்யமாட்டார்கள். பலசமயம் பாதிக்கப்பட்டவர் மீதும் வன்கொடுமை குற்றவாளி மீதும் வழக்கு தாக்கல் செய்யும்போது வன் கொடுமை வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு ஆதிக்க சாதி கொடுத்த வழக்கில் நீதிமன்றத்திற்கு பாதிக்கப் பட்டவரைகுற்றவாளியாக அலைக்கழிப்பார்கள்.

வன்கொடுமை வழக்கு விசாரணையை உதவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (D.S.P) தகுதிக்கு மேல் உள்ளவர் மட்டுமே விசாரிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் தலைமைக்காவலர் நிலையிலுள்ளவர் சாட்சியங்களை விசாரித்து முடித்தபின் சடங்குக்கு உதவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கையொப்பம் இட்டு வைப்பார். வழக்கைப் புலனாய்வு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதத்தை ஏற்படுத்து வார்கள். வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் முன் ஜாமீன் பெறமுடியாது என்ற சட்டநிலை இருந்தபோதும் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி அன்றே ஜாமீனில் செல்லு மாறு உத்திரவுகளை உயர்நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிக்கொண்டுள்ளன. எனவே முன்ஜாமீன் என்ற பெயர் இல்லாத முன் ஜாமீன், இவ்வழக்குகளில் குற்ற வாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

வன்கொடுமை வழக்குகளை நேரிடையாக மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலை இருந்து வந்தது. ஆனால் 2003ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிற செசன்ஸ் வழக்குகளைபோல மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் இது தொகுக்கப்பட்டு விசாரணைக்கு மட்டும்தான் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என உத்திர விட்டது. எனவே இது வழக்கு விசாரணையை கால தாமதப்படுத்த காரணமாக அமைகிறது. பாராளு மன்றத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய சட்டதிருத்தம் கொண்டு வந்து பழைய நிலையை திரும்ப கொண்டுவர அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையின்படி காவல் துறையிலும் வன்கொடுமை வழக்கை கையாளும்போது சாதிரீதியான பாதகப் பார்வை மேலோங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது. காவல்துறை, வருவாய்த்துறையின் பெரும்பாலான உயரதிகாரிகள் ஆதிக்க சாதி பின்புலத் திலிருந்து வருபவர்களாக இருப்பது, தலித்துகள் மீது பாதகமான பார்வை மேலோங்கிட வழிவகுக்கிறது. காவல்துறையில் தலித் அதிகாரிகள் ஒருசிலர் இருந்த போதும் அவர்கள் மேலதிகாரிகளுக்கு பணிந்து அவர்கள் விரும்புவதை செய்யவேண்டிய நிலையே உள்ளது. காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளை கையாளுமளவு விழிப்புணர்வு இல்லாத நிலையிலே உள்ளனர். மேலும் இச்சட்டம் குறித்த சட்டப் பார்வையும் அவர்களிடம் இல்லை.

வன்கொடுமை தடுப்புப் பிரிவில் பணியாற்ற அமர்த்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் தண்டனைக் காக மட்டுமே அமர்த்தப்படுகின்றனர். எனவே பணியில் அவர்கள் ஆர்வம் காட்டுவது குறைவாகவே உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது காவல்துறை கடமை என்பதால் குற்றவழக்குகளை குறைத்து காட்டினால் தான் அந்த காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக கடமை புரிவதாக உயர்அதிகாரிகள் கருதுவார்கள் என்பதால் வன் கொடுமை வழக்குகளை பதிவு செய்ய மறுக்கின்றனர். காவல்துறையில் உள்ளவர்கள் பலர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சமூக அமைதியை கெடுக்கும் என்றும் இச்சட்டத்தால் தலித்துகள் அதிக பலசாலிகளாக மாறி யுள்ளதாகவும் அது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நினைக்கின்றனர். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பணத்திற்காக இச்சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

இச்சட்டத்தில் புகார் தருபவர், தாழ்த்தப்பட்ட சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அத்துடன் ஒரு கெட்ட வார்த்தை இணைத்து புகாரில் எழுதினால்தான் வன்கொடுமை புகாராகவே காவல்துறையினர் எடுத்துக்கொள்கின்றனர். உண்மையில் சாதிப்பெயரை இழிவுபடுத்தும் பிரிவைத் தவிர மற்றவற்றிற்கு இவ்விதமான விபரம் அவசியமான தல்ல. சென்னை உயர் நீதிமன்றமும் 1999 மேலவளவு வழக்கு தொடர்புடைய ஒரு தீர்ப்பில் இதனை உறுதி செய்தது. பாதிக்கப்படும் ஒருவர் தலித் என்பதை பாதிப்பை ஏற்படுத்தியவர் அறிந்திருந்தார் என்றாலே போதுமானதாகும். உச்ச நீதிமன்றத்தில் 1994ம் ஆண்டு நீதியரசர் கே.ராமசாமி வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் தாழ்த்தப்பட்டவர் மீது ஒருவர் குற்றம் புரிய தனியாக ஒரு காரணம் தேவையில்லை. ஒருவர் தாழ்த்தப் பட்டவராக இருப்பதே அக்குற்றம் அவர்மீது நிகழ காரணமானதாக கருத வேண்டும் என்றார்.

வன்கொடுமை பாதிப்பு வழக்குகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினரின் அலட்சிய மும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வன் கொடுமை வழக்கு விதிகளின்படி நிகழ்ந்த பாதிப்பு களுக்கு தக்கவாறு இடைக்கால இழப்பீடும் வழக்கு தண்டனையடைந்த பின்பு முழுமையான இழப்பீடும் வழங்க வழிவகை உள்ளது. ஆனால் இவ்விதமான இழப் பீடுகள் வழங்க உரிய விசாரணைகள் மேற்கொள்வது வருவாய்த்துறையினர் வசம் உள்ளது. இவ்விசாரணைகள் சிலசமயம் நடைபெறுவது கிடையாது. பலசமயம் இழப்பீடு வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்துகின் றனர். வழக்குக்கு சாட்சியமளிக்க வரும் சாட்சிகளுக்கு உரிய பணம் தரப்படுவதில்லை. மேலும் வன்கொடுமை வழக்குகளில் புகார் கொடுத்தவர் மற்றும் சாட்சிகள் அவர்களின் உறவினர்களுக்கு கிராமங்களில் ஆதிக்க சாதியினர் வழக்கமாக மளிகைப் பொருட்களை விற் பனை செய்ய மறுப்பது, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விற்பதை தடுப்பது, கிராமத்து விவசாயக் கூலி வேலைகளை மறுப்பது போன்ற சமூகப் புறக் கணிப்புகளை மேற்கொள்ளும்போது இப்பாதிப்பு களிலிருந்து தலித் மக்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகளை எடுப்பது கிடையாது. சமூக புறக் கணிப்பின் பாதிப்புகளால் சாட்சிகள் ஆதிக்கசாதிகளின் ஆதிக்கத்திற்கு தமது வழக்குகளை கைவிடக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

மறுபுறம் மெத்தப் படித்த மருத்துவமனையில் வன் கொடுமையால் காயம்பட்டு வரும் தலித்தின் உடற் காயங்களை சிலசமயம் குறைத்து எழுதித் தருவது, உள் நோயாளியாக சேர்க்கவே தயங்கி காவல்துறையினரிடம் குறிப்பாணை(மெமோ) வாங்கி வரச்சொல்லி திருப்பி விடுவது, வல்லாங்கு (Rape) வழக்குகளில் குற்றவாளி களை காப்பாற்ற மருத்துவச் சான்றுகளை முழுமையாக பதியாமல் விடுவது, வன்கொடுமையால் இறந்தவரின் பிரேதப் பரிசோதனையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக சில திருத்தங்கள் செய்வது ஆகியவற்றை தேசிய மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. பெரும் பாலான வேளைகளில் தலித் மற்றும் சனநாயக அரசியல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டவருக்காக போராட முன் வரும்போதுதான் கொடுத்த புகாரே வழக்காக பதியப் படும் நிலை உள்ளது.

ஆனால் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கசாதி சங்கங்கள் ஆங்காங்கே வன்கொடுமை ஒழிப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதை நீக்கவேண்டும் என்றும் மாநாடுகளையும் ஊர்வலங்களையும் நடத்தத் துவங்கியுள்ளன. வன்கொடுமை குற்றம் செய்த ஆதிக்க சாதி சக்திகளுக்கு ஆதரவாக அவை காவல் நிலையத்தை முற்றுகையிடுவது, உயர் அதிகாரிகளை நிர்ப்பந்திப்பது போன்ற முறைகளில் பாதிக்கப்பட்ட தலித்மீது பொய் வழக்கை பதியச் செய்தும், வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகவும் செய்விக்கின்றன.

எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதைக்கான சட்டரீதியான போராட்டம் சட்டம், நிகழ்வு, சாட்சியம் என்ற வடிவங்களைத் தாண்டி சமூக மதிப்பீடுகள், சாதிப் பாகுபாடு என்ற பல தடையரண்களைக் கொண்டதாக உள்ளது.

கயர்லாஞ்சி கொடுமையாயினும், வேறு கொடிய நிகழ் வாயினும் மரணதண்டனை என்ற வடிவம் தீர்வாக இருக்க முடியாது. இதை ஒரு தண்டனை வடிவமாகவே கூட கருதமுடியாது. இச்சமூகத்தின் உயர்நிலை நீதி பரி பாலன அமைப்பு இத்தண்டனையை ரத்து செய்கிறதா அல்லது உறுதிபடுத்துகிறதா என்பதை எதிர்காலம் வெளிப்படுத்தும். ஆனால் நமது உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிபடுத்திய பலவழக்குகளில் குற்ற வாளிகள் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான். வன்கொடுமை கோரத் தாண்டவமாடிய கயர்லாஞ்சி நிகழ்வில் வன் கொடுமையே நடைபெறவில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது இவ்வழக்கின் அடிப்படைக்கே எதிரானது. இது, சாதியச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெற இன்னும் வெகுதூரம் தமது போராட்டத்தை பலதளங்களில் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும் என்பதையே அறிவிக்கிறது.

கட்டுரையாளர் ச.பாலமுருகன், புதுவிசை , 2009

உதவிய நூல்கள்:

1. Report on prevention of atrocities against scheduled castes, NHRC 2004.
2. Human Rights Watch, Broken People
3. Criminal Law Journal 1993 page1029

Leave a Reply