உலகிலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018-2019 கல்வி ஆண்டில் இத்திட்டத்திற்கு 10, 500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட்டுள்ளது. 97 மில்லியன் மாணவர்கள் பயனாளிகளாக உள்ளனர். குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டமான மதிய உணவு கார்ப்ரேட் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தும் மிகப்பெரும் நிறுவனமாக இஸ்கான் அமைப்பு உருவெடுத்துள்ளது. அதன் விளைவாக உணவு திட்டத்தின் தன்மை குணம், நிறம், சுவை மாறுகிறது. இந்தியாவின் பன்முக உணவு கலாச்சாரம் மெல்ல மெல்ல அழியவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கும் திட்டத்தின் நோக்கம் சீரழியும்.
முன்னோடி மாநிலங்கள்
——————————————
தமிழ்நாடு, புதுச்சேரி மதிய உணவு திட்டத்தின் முன்னோடி மாநிலங்களாகும். தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்திலும் மதிய உணவு திட்டங்கள் இருந்துள்ளன. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகம் புதுச்சேரியில் பள்ளிக்கூடங்களும், மதிய உணவுத் திட்டமும் விரிவடைந்தன. கல்வி கற்க ஏழ்மை தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் பட்டன. மதிய உணவில் வாரத்தில் 2 முட்டைகள், பலவகை காய்கறி, பொரியல்கள் சேர்த்து சத்துணவாக மேம்படுத்தப்பட்டன. பள்ளிகள் மட்டத்தில் உணவு தயாரிப்பு, உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, உள்ளூர் மட்டத்தில் பொருட்கள் கொள்முதல், உள்ளூர் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்ற சூடான உணவு வழங்கல் என்ற தன்மையில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மதிய உணவுத் திட்டம்
————————————–
இந்தியாவில் மதிய உணவுத் திட்டம், 1995-ம் ஆண்டில் 2408 தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் முன்னோட்ட திட்டமாக துவங்கப்பட்டது. குழந்தைகள் ஊட்டச்சத்தை உயர்த்துவது, பள்ளி இடை நிற்றலை தவிர்ப்பது ஆகியவற்றின் வழியாக சமூக பாரபட்சங்களை களைவது திட்டத்தின் நோக்கமாக இருந்தது. 2001-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாடு தழுவிய முன்னுரிமை திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் 2013 பள்ளி குழந்தைகளுக்கு சூடான உணவு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வழிவகை செய்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவு மற்றும் தரம் தரத்தில் வழங்கவும் உறுதிப்படுத்தியது, தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 450 கிலோரி வரை மற்றும் 12 கிராம் புரோட்டீன் சத்துள்ள உணவும், மேல்நிலை தொடக்கப்பள்ளியில் 700 கலோரி மற்றும் 20 கிராம் புரோட்டீன் சத்துள்ள உணவு வழங்கிட வலியுறுத்துகிறது. ஒவ்வொரு கிராம பள்ளிகளிலும் சமையல் கூட வசதி, குடிநீர் வசதி, கழிவுகளை சேகரிப்பதற்கான வசதிகளை செய்யவும் நகரப்பகுதிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்தது.
தனியார்மயமாதல்
——————————–
நவீன தாராளமயக் கொள்கை அனைத்து மட்டத்திலும் பரவியுள்ள சூழலில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் என்ற அணுகுமுறை தனியார் மயத்திற்கு வழிவகுத்தது. சுத்தமான சுவையான உணவு என்பதை முன்னிறுத்தி கார்ப்பரேட்டுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்திற்குள் நுழைந்துள்ளன. இஸ்கான் அமைப்பின் பிரிவான அக்க்ஷய பாத்திரா அறக்கட்டளை 12 மாநிலங்களில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் நிதி வழங்கிவருகிறது. ஆனால் அக்க்ஷய பாத்திரா அறக்கட்டளை குழந்தைகள் இலவச உணவுக்கு என்ற பெயரில் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் பெருமளவில் நன்கொடைகள் பெறுகிறது. மேலும் இலவச நோக்கம் என்று சொல்லிக்கொண்டு வருமானவரி சட்டத்திலிருந்து விலக்கும் பெற்றுள்ளது.
புதுச்சேரியில் அக்ட்சய பாத்திரா
——————————————————
புதுச்சேரியில் பள்ளிகள் மட்டத்தில் இயங்கி வந்த சமையல் கூடங்கள் படிப்படியாக மத்திய சமையல் கூடங்களாக மாற்றப்பட்டன. 2012 முதல் மாநிலம் தழுவிய மத்திய சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றன. புதுச்சேரியில் 12ம், காரைக்காலில் இரண்டும் மாகே, ஏனாம் பிராந்தியங்களில் தலா 1 என 16 மத்திய சமையல் கூடங்கள் உள்ளன. இவைகள் ஏழு கிலோ மீட்டர் எல்லைக்குட்பட்ட பள்ளிக்கு மதிய உணவு வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டன. தரமான, சூடான, சுவையான உணவு பரிமாறப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாள் முட்டை, காய்கறி பொறியல் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 5.19 கோடியும், மாநில அரசு 2.36 கோடியும் செலவிட்டுள்ளன.
கேரள மாநில கல்வி அமைச்சராக M.A.பேபி இருந்தபோது அவரது தலைமையிலான குழுவினர் மத்திய சமையல் கூடங்களை ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் மதிய உணவு திட்ட செயல்பாட்டை பாராட்டியதோடு, கேரளத்தில் அமலாக்குவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய பிஜேபி அரசின் அழுத்தத்தால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அக்க்ஷய பாத்திரா அறக்கட்டளையுடன் 12-6-2018 ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி பெற்றுக் கொண்டு மாநில அரசின் நிதி உதவியை அக்ட்சய பாத்திரா விட்டுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களிடம் தாராளமாக நிதி திரட்டி கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் வழியாக இலாபம், சாத்வீக உணவு கலாச்சாரத்தை திணிப்பு என இரட்டை ஆதாயமடைகிறது. அக்ட்ச்ய பாத்திரா செயல்படும் மாநிலங்களின் அனுபவத்தை மாநில காங்கிரஸ் அரசு கவனத்தில் கொள்ள தவறியது.
புதுச்சேரியில் 12 மதிய சமையல் கூடங்களுக்கு மாற்றாக ஒரே ஒரு மையத்தில் இருந்து மதிய உணவு தயாரிக்கப்பட உள்ளது. ஜெர்மன் தொழில் நுட்பத்தில் சமையல் எந்திரம் இறக்குமதி செய்ய உள்ளது. சப்பாத்தி உட்பட அனைத்து உணவுகளையும் இயந்திரமே செய்ய உள்ளன. மனித உழைப்பிற்கு இடமில்லை. பல மணி நேரத்திற்கு முன்பாகவே சமைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும். உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்படாது முட்டையும் வழங்க முடியாது என அக்ட்சய பாத்திரா அறக்கட்டளை உறுதிபடுத்தி விட்டது. ஒரு ஒப்பந்ததாரரின் நிபந்தனைக்கு மாநில அரசு அடிபணிவது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் நுழைய முயற்சி
————————————————-
தமிழகத்தில் 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 50 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறுகிறார்கள். சுத்தமான உணவு வழங்கிட தமிழகத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்ட ஊழியர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்ள நகம்வெட்டி, சோப்பு கட்டிகள் வழங்கப்படுகின்றன. சமையல் கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சமைத்த உணவு அரை கிலோ அளவு ஆய்வுக்காக கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும் அறிவுறுத்த பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்க கூடியது. என்றாலும் இது தனியார் மயத்திற்கான நகர்வாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இத்திட்டம் அரசின் நேரடி பொறுப்பில் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தமிழக அனுபவம் அவ்வாறு இல்லை. 27.2.2019 காலை உணவுத் திட்டத்தை துவங்கி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் மதிய உணவு திட்டத்தை அக்ட்சய பாத்திரா அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை கவணத்தில் கொள்வது அவசியம்.
அக்ட்சய பாத்திரா அறக்கட்டளை மீதான சர்ச்சை
——————————————————————-
மதிய உணவு திட்டம் நல்ல முறையில் செயல்படுத்திய மாநிலங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்தும், பள்ளி வருகையும் நல்ல பலனை அளித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மட்ட உணவு தயாரிப்பு மையப்படுத்திய சமையல் கூடமாக மாறிய நிலையில் திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டன. மதிய சமையல் கூடத்தில் பல மணி நேரங்களுக்கு முன்பாக உணவு தயாரிப்பதால் உணவின் தரம் மற்றும் ஊட்டச்சத்து குறைந்துவிடும் என்பது ஊட்டசத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்திய கணக்கு தணிக்கை குழு 2015-ல் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கை பல மோசடிகளை அம்பலபடுத்தியுள்ளன. அக்ட்சய பாத்திரா தயாரித்த உணவின் 187 மாதிரிகளை ஆய்வு செய்ததில் உணவு தரமாக இல்லை. உணவு தானியம் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை என 75 சதவீத மாணவர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சாகர் நகரில் உள்ள இஸ்கான் அலுவலக வளாகத்தில் இருந்து அரிசி கடத்தப்பட்டது அம்பலமானது. குழந்தைகள் உணவுக்காக அரசு வழங்கிய அரிசியில் 18.8 டன் அரிசி 50 கிலோ வீதம் 350 பைகளில் நிரப்பப்பட்டு காக்கிநாடாவுக்கு எடுத்து செல்ல லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் 17.6.2019 நேரில் ஆய்வு செய்து அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் உணவு கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்செய்தி 19.6.2019-ல் முன்னணி நாளிதழில் வெளியாகியுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் அனுபவம் விசித்திரமானது. அக்ட்சய பாத்திரா தயாரிக்கும் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதில்லை. ஊட்டச்சத்து நிறைந்த முட்டையும் வழங்க மறுத்து வருகிறது. மாணவர்கள் விரும்பி சாப்பிட உணவில் வெங்காயம் பூண்டு சேர்த்திட மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கர்நாடக மாநிலத்தின் மதிய உணவுத் திட்ட இணை இயக்குனர் திரு. மாருதி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வாரத்தில் ஒரு நாளாவது உணவில் வெங்காயம் பூண்டு சேர்த்திட கேட்டுக்கொண்டார். ஆனால் பழைய படியாக அக்ட்ச பாத்திரா அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டது. மத நம்பிக்கை சார்ந்த சாத்வீக உணவை மட்டுமே வழங்க முடியும். நாங்கள் தயாரிக்கும் உணவு மத்திய மனிதவள துறை வரையறுத்துள்ள விதிப்படி தரமான உணவு வழங்குவதாக சாதிக்கிறது.
தேசிய ஊட்டச்சத்து நிறுவன (NIN) உணவு விகித அட்டவணை முட்டையில் (94%) புரோட்டின் உள்ளதாக குறிப்பிடுகிறது. பாசிப்பயிர் (76%), சோயா பீன்ஸ் (54%) ஆகியவற்றைவிட முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. வைட்டமின் ‘சி’ தவிர ஏராளமான வைட்டமின்கள் முட்டையில் உள்ளது. எளிதில் செரிமானம் ஆகும் உணவு. குழந்தை நிபுணர்கள், ஊட்டசத்து வல்லுனர்கள் மதம், சாதி, சமூக அந்தஸ்து பார்க்காமல் சரிவிகித ஊட்டச்சத்து உணவை பரிந்துரைக்கிறார்கள். இவ்வாறான சூழலில் பொதுத்திட்டத்தின் நோக்கை கெடுத்து சைவமும் இல்லாத, அசைவமும் இல்லாத சாத்வீக உணவு வழங்கல் முறை அராஜகமானது. அரே ராமா, அரே கிருஷ்ணா தன் மடத்தில் உள்ள சீடர்கள், பக்தர்களுக்கு சாத்வீக உணவை வழங்குவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தின் குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் கைவைப்பது கொடிய செயலாகும்.
இந்தியாவின் ஊட்டச்சத்து நிலைமை
—————————————————————
இந்தியா வளங்கள் நிறைந்த நாடாக இருந்தபோதிலும் ஏழைகள் அதிகம் வாழும் நாடு என்ற முரண்பாடு தொடர்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவருக்குமாக மாறாததன் விளைவாக சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் அதன் தொடர் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
நாடு விடுதலை பெறும் போது அவல நிலையில் இருந்த ஊட்டச்சத்து குறியீடுகள் கடந்த 65 ஆண்டுகளில் பெரிதும் முன்னேறியுள்ளன. ஆனால் உலக நாடுகளோடு ஒப்பிடுகிற போது இந்தியாவில் ஊட்டசத்து நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகள் எடை குறைவு 43%. வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 48%. பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவை தவிர பிற நாடுகளில் இக்கொடிய நிலைமை இல்லை. தென் மேற்கு ஆப்பிரிக்கா (20%), வளர்ச்சி குறைந்த நாடுகள் (25%) விட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் அதிகம் வாழும் நாடாக இந்தியா தனித்து நிற்கிறது (யுனிசெப் அறிக்கை 2012). இவ்வாறான சூழலில் மத்திய மாநில அரசுகள் குழந்தைகள் ஊட்டச்சத்து விவகாரத்தில் சமரசம் செய்து கொள்வது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
பொருளாதார அறிஞர்களின் வாக்குமூலம்
————————————————–
புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற டாக்டர் அமர்த்தியா சென், டாக்டர் ஜீன் டிரீஸ் ஆகியோர் மதிய உணவு திட்டம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்.
”பொதுநல நோக்கோடு தொடங்கப்பட்ட இத்திட்டம் மதிய உணவு மட்டுமல்ல பல்வேறு பயன்களை வழங்குகிறது. குழந்தைகளின் பள்ளி வருகையை முன்னேற்றுவதில், ஊட்டச்சத்து மேம்படுத்துவதில், குழந்தைகள் பராமரிப்பு காலத்தை உயர்த்துவதில், சமூகத்தில் பின்தள்ளப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதில், வகுப்பறை செயல்பாடுகளை மேம்படுத்துவதில், ஒன்று சேர்ந்து உணவு அருந்துவதன் மூலம் குழந்தைகளின் சாதிய உணர்வுகளை மட்டுப் படுத்துவதில் என்று பல்வேறு வகைகளில் மதிய உணவு திட்டம் பயனளிக்கிறது. வெறும் உணவு வழங்கும் செயல்பாடு மட்டும் என்றிருக்குமானால் இதனை திறம்பட செய்வதில் தனியாரிடம் விட்டு விடலாம். ஆனால் இத் திட்டத்தோடு இணைந்திருக்கின்ற இத்தகைய நோக்கங்களை வணிக செயல்பாடுகளால் நிறைவேற்ற இயலாது. பொது சுகாதாரம், ஊட்டசத்து சேர்ப்பு, பொதுக்கல்வி ஆகியவற்றுக்கும் இவ்விளக்கம் பொருந்தும் என அழுத்தமாக தங்களது கருத்தை தெரிவிக்கிறார்கள்”.
பாரம்பரியங்கள் மீதான தாக்குதல்
மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சாத்வீக உணவு முறையை திணிப்பது, முட்டை வழங்க மறுப்பது உணவு கலாச்சாரத்திற்கு எதிரான நவீன தாக்குதலாகும். இந்திய சமூகம் உலக நாடுகளில் இருந்து மாறுபட்ட தன்மை கொண்டது. மாறுபட்ட கலாச்சாரம், பண்பாடு, சமூக பழக்கவழக்கங்கள் கொண்ட தேசத்தில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என பலமுனைகளில் இந்துத்துவ சித்தாந்தத்தை திணிக்க முயலுகிறார்கள். இது சாத்தியமற்ற ஒன்று. என்றாலும் இந்தியவின் பன்முகத்தன்மை கொண்ட பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.
மனிதவளக்குறியீடு சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகமுக்கிய அளவீடாகும். வேலையின்மை, வறுமை, விலை உயர்வு, ஆகியவற்றால் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டசத்தை ஈடுசெய்யும் நிலையில் இல்லை. இவ்வாறான சூழலில் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டசத்தை உறுதிப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் மதிய உணவு திட்டத்தை அரசுப் பொறுப்பில் கொள்வது அவசியமாகும்.
——————-
வெ. பெருமாள்,
தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
புதுச்சேரி-தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > போராட்டங்கள் > சாதி > சாதிய உணவாக மாறும் மதிய உணவு திட்டம் – வெ. பெருமாள்
சாதிய உணவாக மாறும் மதிய உணவு திட்டம் – வெ. பெருமாள்
posted on
You Might Also Like
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
October 4, 2024