உடலும் உள்ளமும் சில்லென்று குளிர அவர் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். சர்வதேச எல்லைகளை அதன் இராட்சத இறக்கைகள் கடந்து கொண்டிருந்தன. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல்நிலையத்தில் ஒரு புழுக்கமான செல் அறையில் ஆடைகள் அகற்றப்பட்டு ட்ரவுசருடன் மற்றொருவர் உதைபட்டுக் கொண்டிருந்தார். முதலாம் நபர் இரண்டாம் நபர் பாலன். முதலாம் நபர் கிங்பிஷர், மது உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்பவர். இரண்டாம் நபர் வயிற்றுக்கு அன்னம் தயாரிக்கும் விவசாயி. முதலாம் நபர் 18 வங்கிகளிடம், 9 ஆயிரம் கோடி கடன்பட்டிருந்தார். பாலன் ஒரே ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தார். அசல் ரூ.3,80,438யை 2011ல் கடனாக பெற்றார். ரூ.4,11,200ஐ வட்டியுடன் செலுத்தியது போக ஒற்றை இலக்க இலட்சத்தில் மட்டும் வட்டி பாக்கி வைத்திருந்தார். இதேபோல் அரியலூரில் ஜப்தி கெடுபிடியால் அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனத்திற்கு டிராக்டர் கடனில் ரூ.2லட்சம் பாக்கி வைத்திருந்தார்.
9 ஆயிரம் கோடி எங்கே? ரூ.2 இலட்சம் எங்கே? சமுத்திரத் திருடர்கள் தப்பி விடுகின்றனர். டம்ளர் தண்ணீரை கடனாக பெற்றவர்களின் கால்களை ஒடிக்கிறார்கள்.பாலன் ஒரு சிறு விவசாயி. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சோழகன் குடிக்காட்டில் சுமார் 2 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை கிராம நிர்வாக அலுவலரின் சிட்டா அடங்கலில் கண்டுபிடித்துவிடலாம். விஜய்மல்லையா சொத்தையோ சமூகவலைதளத்தில்தான் கண்டுபிடிக்க முடிந்ததாம். அனேகமாக அவர் இலண்டனில் இருக்கலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகில் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் யூகமாக சொன்னார்.8 தவணை பாக்கியில் 6 தவணை பாக்கியை பாலன் முடித்திருந்தார். அறுவடை முடிந்ததும் மீதத்தைக் கொடுத்து விடுவதாக கோடக் மஹேந்திரா கம்பெனியின் வசூல் ஏஜெண்டுகளிடம் சொல்லிவிட்டார். 4.3.2016 முற்பகல் சுமார் 11.30 மணிக்கு பாலன் அறுவடையில் ஈடுபட்டிருந்தார். தனியார் நிதி நிறுவனத்தின் சுமார் 10 குண்டர்களும் பாப்பாநாடு காவல்நிலையத்தின் ஆய்வாளர் குமரவேல் தலைமையில் 5க்கும் மேற்பட்ட காவலர்களும் டிராக்டரில் இருந்த பாலனை சுற்றி வளைத்தனர். இழிவார்த்தைகளால் திட்டி பாலனின் கால்களைப் பிடித்து இழுத்து அடித்தனர். ஒரு கிரிமினல் குற்றவாளியாக பாலன் பாப்பாநாடு காவல்நிலையம் இழுத்து செல்லப்பட்டார். அவரின் துணிகளை அவிழ்த்து ஜட்டியுடன் விட்டு லாக் அப்பில் தள்ளி அடித்துத் துவைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை உடன் தனியார் நிறுவனத்தில் ஒப்படைத்த போலீசார் பாலனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு லாக்கப்பில் இருந்து விடுவித்தனர். அசலுடன் வட்டியும் செலுத்திவிட்டு டிராக்டரையும் இழந்து மன உளைச்சலுடன் பாலன் வீடு திரும்பினார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வாட்ஸ் அப் செய்தி மூலம் பாலனின் கதை வெளிச்சத்திற்கு வந்தது.கையில் மது புட்டியுடனும் சுற்றி ஐந்து வாலிபப் பெண்களுடனும் உள்ள விஜய் மல்லையாவை வணங்கி அனுப்பும் காவல்துறையின் செங்கோல், ஒரு அப்பாவி விவசாயியை ரவுண்டு கட்டியது.நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்டமும் விவசாயிகளிடம் இத்தகைய வசூல் நடவடிக்கை நடத்தக்கூடாது என்று தான் கூறுகின்றன. விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணச் சட்டம் 2008, விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. 2012-13 ஆண்டுகளில் தனித்தனியான தீர்ப்புகளில் நீதிபதி வேணுகோபாலன் அவர்களும் நீதிபதி ஜெயசூர்யா அவர்களும் இதனை சுட்டிக் காட்டுகின்றனர்.
விவசாயிகளிடம் பாக்கி வசூலிப்பது குறித்து மென்மையான பல தீர்ப்புகள் உள்ளன. கடன் வசூல் பணிகளில் கடனாளி ஒருவரின் படத்தைக் கூட ஒட்டி விளம்பரம் செய்யக்கூடாது என்று கேரளா, மும்பை நீதிமன்றங்கள் கூறியுள்ளன. அவ்வாறு அவமானப்படுத்த சட்ட அடிப்படை கிடையாது என்றும் புகைப்படம் என்பது ஒருவரின் அந்தரங்க உரிமை என்றும் நீதிமன்றங்கள் கூறுகின்றன. இதனைப் போலவே கடன் வசூலிப்பு பணிகளில் குண்டர்களையும் கூலிப் படைகளையும் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பாப்பாநாட்டிலே குண்டர் படையுடன் காக்கிச்சட்டை படையும் கரம் கோர்த்தது. சுற்றிலும் சங்கிலி அறுப்பு நடக்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை நடக்கிறது. நடவடிக்கை எடுக்க கையாலாகாத பாப்பாநாடு காவல்துறையோ சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற பாலனிடம் வீரம் காட்டியது. சொல்லப்போனால் தனியார் நிறுவனங்கள்தான் கூடுதலாக சட்டத்தை மீறுகின்றன. அசலையும் வட்டியையும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்து விடுகின்றன. மேலும் வட்டி பாக்கி இருப்பதாக விவசாயிகளை ஏமாற்றுகின்றன. கடனாக வாங்கிய டிராக்டர் முதலிய பொருட்களை எடுத்துச் சென்று அவற்றின் சக்கரத்தை மாற்றி வண்ணம் தீட்டி அதே டிராக்டரை புதிதாக கடன் வழங்குகின்றன.
கடன் நிவாரணச் சட்டப்படி வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களின் கிளை அலுவலகங்களிலும் வங்கிக்கு வருபவர்களின் குறைகளை களைய குறைதீர்க்கும் அதிகாரிகள் இருக்க வேண்டும். பெரும்பாலும் எங்கேயும் இது நடைமுறையில் இல்லை. மேலும் கடன் கோரும் விண்ணப்பதாரரிடம் ஆங்கிலம் அல்லது அந்த பகுதியின் வட்டார மொழியில் கடன் விவரத்தை விளக்கிச் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்டவரிடம் ஒரு கையெழுத்தும் பெற வேண்டும். பாலனிடம் தமிழ்மொழியில் விளக்கி கையெழுத்து வாங்கவில்லை. இந்த மீறல்கள் பற்றி காவல்துறை கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.3 வகையான சாகுபடி கடன்கள் வங்கிகளில் கொடுக்கப்படுகின்றன. அவை நேரடி விவசாயக் கடன், குறுகிய கால கடன் மற்றும் முதலீட்டுக் கடன் ஆகும். பாலன் வாங்கியது முதலீட்டு கடன் தான். அரியலூர் விவசாயி அழகர் வாங்கியதும் முதலீட்டுக் கடன் வகையைச் சேர்ந்ததுதான்.விவசாயிகளின் கடன் குறித்த ஆய்வினை கூஹகூஹ ஐளேவவைரவந டிக ளுடிஉயைட ளுஉinஉந அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ராம்குமார் நடத்தினார். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் கடன் பெறுவோர் எண்ணிக்கையில் இப்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாறாக 10 கோடிக்கு மேல் கடன் பெறுவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவின் முப்பெரும் கோடீஸ்வரன் முகேஷ் அம்பானி காய்கறிகளை வைக்க ஒரு குளிர் பதன கிடங்குக்கு என்று கடன் கேட்கிறார். அவருக்கு 4 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கிறது. காய்கறிகளை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அப்படி கடன் கொடுப்பதில்லை. ஒரு மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காருக்கு 7 சதவீத வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. உழவு டிராக்டருக்கோ 14 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவது, விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பது இவைதான் மத்திய அரசின் கொள்கை. இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 2035 விவசாயிகள், விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.ஜப்தி செய்வது, அவமானப்படுத்துவது, தற்கொலைக்கு தூண்டுவது என்றும் விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டப்படுகின்றனர்.
1995-2010 கால இடைவெளியில் 2,84,694. விவசாயிகளின் தற்கொலைகள் நடந்தன. அதாவது சராசரியாக 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை என்ற பெயரில் மடிந்து போகிறார்.தற்கொலை செய்து கொண்ட 850 குடும்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். காரணம் கடன், கடன், கடன் சுமைதான்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு பெரும்பாலும் கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்களோ கொள்ளை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. மணி வட்டி, மீட்டர் வட்டி என்று விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அரசன் திருதராஷ்டிரன் துரியோதனன் பக்கம் இருந்தது போல அரசாங்கம் தனியார் கடன் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது.விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் இரு பரிந்துரைகளை செய்திருந்தது.
குறைந்த வட்டியில் கடன், இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட பகுதியில் வட்டி இல்லா கடன் ஆகிய இவற்றைக் கூட அரசாங்கம் அமல்படுத்தவில்லை.பணத்தொந்தி விழுந்தவர்களுக்கு பொது நிதியை எடுத்து அள்ளி அள்ளி வழங்கும் மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு கிள்ளிக்கூட தருவதில்லை. விவசாயிகளுக்கு தடையற்ற சாகுபடிக் கடன் வழங்கப்பட வேண்டும். வட்டி என்ற பெயரில் குரல் வளையை நெறிப்பது நிறுத்தப்பட வேண்டும். குண்டர்களை பயன்படுத்தி ரௌடித்தனம் செய்யும் நிதி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். அவற்றின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் காவல்துறையினர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். பொது வெளியில் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் விவசாயிகளுக்காக கண்ணீர் வடிக்கலாம். அவர்களின் செய்கைகள் விவசாயத்தின் கல்லறைக்கு ஆணிகளை ஓங்கி அடிக்கின்றன. வரலாற்றுக்கும் இரண்டும் பக்கங்கள் உண்டு என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். சாம்ராஜ்யங்களை அஸ்தமிக்க வைக்கும் வல்லமை விஜய்மல்லைய்யாவின் கள்ளச் சிரிப்புக்கு அல்ல, விவசாயிகளின் கண்ணீருக்கு உண்டு.