சிறுபான்மை மக்களின் உரிமைதான் முக்கியமா?

minorities-in-indiaபெரும்பான்மை சமூகத்தினரின் உரிமைகளைவிட இசுலாமியர்களின் உரிமைகள் குறித்துதான் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள் அதிகமாக கவலைப்படுகின்றனர் என்பதுதானே உண்மை? குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு இது மிகவும் பொருந்தும் அல்லவா?- கியான் சங்கர்/மும்பை.

நமது தேசத்தில் எப்பொழுது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதோ அப்பொழுதிலிருந்தே இக்கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியக் குடியரசின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடந்துகொண்டிருந்த பொழுது அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.

(இந்தியா- பாகிஸ்தான்) பிரிவினை அப்பொழுதுதான் நிகழ்ந்திருந்தது. இசுலாமியர்களின் தாய் நாடு பாகிஸ்தான் என முஸ்லிம்லீக் கோரிக்கை எழுப்பியிருந்ததாலும் பாகிஸ்தான் தன்னை “இசுலாமிய அரசு” என அறிவித்துக்கொண்டதாலும் இந்தியா தன்னை “இந்து தேசமாக” அறிவித்துக்கொள்ள வேண்டும் என பலர் எண்ணினர். அதன் அடிப்படையில் அனைத்து இசுலாமியர்களும் பாகிஸ்தானுக்கும் அனைத்து இந்துக்களும் இந்தியாவிற்கும் “இட மாற்றல்” செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபா போன்ற மதவெறி அமைப்புகள் இக்கருத்திற்கு ஊக்கம் அளித்தது மட்டுமல்ல; அவற்றை பிரச்சாரமும் செய்தனர்.தற்சமயத்தில் இத்தகைய வாதம் மென்மேலும் முன்வைக்கப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இந்த வாதம் நியாயம்தானே என்று தோன்றும். எத்தகைய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என சமூகத்தின் அனைத்து மக்களும் சட்டமேதைகளும் விவாதித்துக்கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில்தான் திசைதிருப்பும் சூழ்ச்சி கொண்ட இந்த வாதம் முன்வைக்கப்பட்டது.

ஜனநாயகத்தை வலுவாக்கிடவும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் உண்மையான வளர்ச்சியை அளித்திடவும் எத்தகைய சமூகம் தேவை எனும் விவாதத்தை திசை திருப்பிடும் வாதம் இது. கல்வி தேர்வு உரிமை, திருமண தேர்வு உரிமை, வேலை உரிமை ஆகியவை பற்றிய விவாதங்களையும் மேற்கண்ட இந்த வாதம் திசைதிருப்பும் தன்மை கொண்டது. மக்களின் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவை பற்றிய பிரச்சனைகளையும் “இந்தியா இந்து நாடாக இருப்பதில் என்ன தவறு?” எனும் வாதம் திசைதிருப்பும் ஆபத்து கொண்டது. இவையெல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்த பிறகு, உண்மையான ஜனநாயகம் தழைக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் காணவும் மதச்சார்பின்மைதான் அவசியத் தேவை எனும் முடிவு எடுக்கப்பட்டது.நியாயமும் நீதியும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதில் மதச்சார்பின்மையின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கும் பொழுது, இரு கேள்விகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டிற்கு எதிராக உள்ள சக்திகள் எவை? மதச்சார்பின்மைக்கு மாற்றாக அவர்கள் முன்வைக்கும் கோட்பாடு என்ன?1950ஆம் ஆண்டில் ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற தன்மை கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபொழுது அதில் பாலினம், சமூகம், மதம் தொடர்பான சமத்துவக் கோட்பாடுகள் உள்ளடங்கியிருந்தன. இந்த அரசியல் சட்டம் விசேட பாதுகாப்பு தந்தது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல; பல நூற்றாண்டுகளாக சமூக பாரபட்சங்களையும் கொடுமைகளையும் சந்தித்த தலித் மக்களுக்கும் விசேட பாதுகாப்பை அளித்தது.ஆர்.எஸ்.எஸ்சின் கோல்வால்கர்தான் இந்த அரசியல் சட்டம் குறித்து புகார் வாசித்தார். அவர் கூறினார்: “நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் தொன்மையான பாரதத்தில் உருவான தனிச்சிறப்பு கொண்ட அரசியல் சட்டமான மனுவின் சட்டங்கள் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

மனுஸ்மிருதியில் விரிவாக கூறப்பட்டுள்ள சட்டங்கள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன. அவை பயபக்தியுடன் பின்பற்றப்படுகின்றன. ஆனால் நமது அரசியல் சட்ட பண்டிதர்கள் இதனை (மனுவின் சட்டங்களை) ஒன்றுமே இல்லை என்று எண்ணுகின்றனர்.” கோல்வால்கரின் கூற்று ஒன்றை தெளிவாக்குகிறது. மதச்சார்பின்மை எனும் பெயரால் நமது அரசியல் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு விசேட பாதுகாப்பு தருவதால்தான் அதனை எதிர்க்கிறோம் என அன்று ஆர்.எஸ்.எஸ். கூறியது. இன்றும் அவ்வாறுதான் கூறுகிறது. ஆனால், ஒரு மதச்சார்பின்மை இந்திய குடியரசுக்கு பதிலாக அவர்கள் உருவாக்க விரும்பும் “இந்து தேசம்” என்பது மிகப் பழமையான மற்றும் மதத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையும் பாலின சமத்துவமின்மையும் கொண்ட சமுதாயம் ஆகும். சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த தாக்குதலைத்தான் ஆர்.எஸ்.எஸ். தனது பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக அன்றும் இன்றும் முன்வைக்கிறது.

அதே நேரத்தில் அவர்கள் நிலைநாட்ட விரும்பும் தேசத்தில் இந்துக்களே கூட (சூத்திரர்கள், தலித் மக்கள், பெண்கள்) தமது உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சட்டம் எந்த உரிமைகளை (சூத்திரர்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோருக்கு) உத்தரவாதம் அளிக்கிறதோ அவை ஆர்.எஸ்.எஸ். கூறும் “இந்து தேசத்தில்” இருக்காது. இத்தகைய இந்து தேசம் குறித்து வெளிப்படையாக பேசினால் அது இந்துக்களாலேயே நிராகரிக்கப்படும் என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நன்றாகவே அறிந்துவைத்துள்ளனர்.இன்று நம் தேசத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ சக்திகள் மிக அதிகமாக வலுவடைந்துள்ளன. சங்பரிவாரம் அதன் அரசியல் முகமூடியாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் விசுவ இந்து பரிஷத், பஜரங்தள், துர்காவாகினி எனப் பல அமைப்புகள் மூலம் செயல்படுகிறது.

மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் அதிகபட்ச கடமை உணர்வுடன் கம்யூனிஸ்டுகள் செயல்படுகின்றனர். மேலும் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படுவது என்பது கம்யூனிஸ்டுகளுக்கு தேவையாகவும் உள்ளது. வர்க்க அடிப்படையில் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை வலுவாக்கவும் அந்த ஒற்றுமையை ஆழப்படுத்தவும் அவர்களின் வர்க்க நலன்களை பாதுகாக்கவும் மதச்சார்பின்மை தேவை! ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவு மக்களின் போராட்டங்களை நடத்திக்கொண்டே மதச்சார்பின்மையை பாதுகாக்கும் பணியையும் கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல; பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை உள்ளிட்ட அனைத்துவகை மதவாத சக்திகளை எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது. ஒரு மதவாதத்தின் செயல்பாடு மற்றொரு மதவாதத்தை வலுவாக்குவதாகவே அமைகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.ஷாபானு சர்ச்சையின் பொழுது இசுலாமிய பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டால் ஜீவனாம்சம் பெறும் சட்ட உரிமையிலிருந்து அவர்கள் நீக்கப்படக்கூடாது என கோட்பாடு ரீதியான நிலைப்பாடு எடுத்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். இசுலாமிய பெண்களின் உரிமையை பறிக்க இசுலாமிய மதவாதம் முயலும்பொழுதெல்லாம் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துவந்துள்ளது. மதவாத சக்திகள் இந்த அளவிற்கு வலுவடைந்து இருப்பது என்பது சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமை மீதும் அவர்களது போராட்டங்களுக்கு எதிராகவும் எத்தகைய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றாக அறிந்துள்ளது. இதே காலகட்டத்தில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை அதிகப்படுத்துவது என்ற பெயரில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து ஏழை மக்கள் மீதும் அசுரத்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு எதிராக அதிகரிக்கும் தீவிரத்தன்மையுடன் எதிர்தாக்குதலை தொடுக்க முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒற்றுமை பலவீனப்பட்டுள்ளது என்பதுதான்.

இந்த பலவீனத்திற்கு முக்கியக் காரணி மதவாத பிரச்சாரம்தான்! இந்த மதவாதப்பிரச்சாரம் பெரும்பாலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செலுத்தப்படுகிறது.இந்து மதவெறி சக்திகளின் பிரச்சாரமும் வளர்ச்சியும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆபத்து மட்டுமல்ல; தலித் மக்கள், ஆதிவாசிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு எதிரானதும் கூட! மேலும் மதவெறி சக்திகளின் எதேச்சதிகாரத்தையும் சகிப்பின்மையையும் எதிர்க்கின்ற அனைவருக்கும் இது ஆபத்தானது ஆகும்.

தங்கள் கொள்கைகளின் இந்த அம்சங்கள் மக்களின் பெரும் பகுதியினருக்கு தெரியாமல் மறைந்திருப்பதை உத்தரவாதப்படுத்திட சங்பரிவாரம் இருமுனை தந்திரத்தை பயன்படுத்துகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக வஞ்சகம் நிறைந்த பிரச்சாரம் மற்றும் வன்முறை என்பது ஒரு முனை. இந்த பிரச்சாரமும் வன்முறையும் பெரும்பான்மை மதத்தைச்சார்ந்த ஒரு பிரிவினரிடம் ஒற்றுமைக்கு பாதகமான அதிர்வலையை விளைவிக்கிறது. இன்னொரு தந்திர முனை என்பது தனது கொள்கைகளையும் நோக்கங்களையும் எதிர்ப்பவர்கள் அனைவரையும் “இந்து விரோதி” என சித்தரிப்பது. எனவே இந்துராஷ்ட்ராவை முன்வைப்போரிடமிருந்து சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் சந்திக்கும் ஆபத்துகளை அம்பலப்படுத்திட நமது பணியை இரட்டிப்பாக்க வேண்டும்.

இதற்காக கடுமையான பிரச்சாரத்தை மிகச்சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும். தலித் மற்றும் ஆதிவாசி மக்கள், பெண்கள் மற்றும் போராடும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் கொடுமைகளுக்கு எதிராகவும் வலுவாக தலையிட வேண்டும்.இன்று, தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. வேலையின்மையும் விலைவாசி உயர்வும் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் சங்பரிவாருக்கு எதிரான போராட்டத்தையும் இந்து ராஷ்ட்ரா எனும் அதன் குறிக்கோளும் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சங்பரிவாரத்தின் கொள்கைகள் காரணமாக இன்னல்படுவோர் அனைவரும் இப்போராட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில் : அ.அன்வர் உசேன்

Leave a Reply