(சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கி கையால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், 1928 டிசம்பர் 18 அன்று லாகூரில் பதுங்குமிடம் ஒன்றில் இருந்து எழுதப்பட்டு, 18 மற்றும் 19 தேதிகளுக்கு இடையில் இரவில் லாகூரின் சுவர்களில் ஒட்டப்பட்டன. பகத்சிங் கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி ஒன்று, லாகூர் சதி வழக்கின்போது நீதிமன்றத்தில் சான்றாவணமாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கண்டுள்ள வாசகங்கள் வருமாறு:)
ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இராணுவம்அறிவிப்பு ஜே.பி. சாண்டர்ஸ் இறந்தான், லாலா லஜபதிராய் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி தீர்த்துக்கொள்ளப்பட்டது. மிகவும் கீழ்த்தரமான, கொடூரமான ஜே.பி சாண்டர்ஸ் எனும் ஒரு சாதாரண போலீஸ்காரனால், 30 கோடி இந்திய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும் பெருமதிப்பிற்குரியவருமான வயதில் முதிர்ந்த லாலா லஜபதிராயை தாக்கி அவருக்கு மரணத்தையும் ஏற்படுத்த முடிகிறதென்றால், அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்திய தேசிய உணர்வின் தலையில் விழுந்த இந்த அடியின் மூலம் இந்தியாவின் இளமைக்கும் ஆண்மைக்கும் சவால் விடப்பட்டுள்ளது. இந்தியா இன்னமும் உயிர்ப்புடனிருக்கிறது என்பதை உலகம் அறியட்டும். இந்திய இளைஞர்களின் ரத்தம் முழுவதும் உறைந்து போய்விடவில்லை. அவர்களது தேசத்தின் தன்மானத்திற்கு ஓர் இழுக்கென்றால் உயிரைப் பணயம் வைக்கவும் அவர்கள் துணிவார்கள் என்பதை இந்த உலகம் உணரட்டும்.
இன்று அது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. தங்களின் கொள்கை மாறுபாடு காரணமாக தமது சொந்த நாட்டினராலேயே இடர்ப்பாடுகளுக்கு ஆளாகி வெறுத்து ஒதுக்கப்பட்டு பழிச் சொல்லுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டவர்களால் செய்யப்பட்ட இச் செயலின் மூலம் அது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.
எச்சரிக்கை, அடக்குமுறையாளர்களே எச்சரிக்கைஅடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான நாடுகளின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள். அத்தகைய மிகக் கொடூரமான செயலைச் செய்யத் துணியுமுன் ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள். ஆயுதச்சட்டத்திற்கும் ஆயுதக் கடத்தலுக்கும் எதிராக கடுமையான கெடுபிடிகள் இருந்தாலும், துப்பாக்கிகள் எப்பொழுதும் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக உள்ளே வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவிற் கொள்ளுங்கள். தற்சமயம் அது ஓர் ஆயுத எழுச்சிக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் தேசிய அவமரியாதைகளுக்கு பழிதீர்த்துக் கொள்ள அவை போதுமானவைகளாகும்.
தங்களது சொந்த மக்களின் கண்டனங்கள் – பழி தூற்றல்களையும், அந்நிய அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை- ஒடுக்குமுறைகளையும் தாண்டி, இளைஞர்களின் கட்சியானது இறுமாப்புற்றிருக்கும் ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு என்றென்றும் நீடித்திருக்கும். அவர்கள், எதிர்ப்பும் அடக்குமுறையுமாய் சுழன்றடிக்கும் சூறாவளிக்கு நடுவிலும் கூட, ஏன் தூக்குமேடையின் மீதும் கூட “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக!)’’ என முழக்கமிடும் நெஞ்சுரம் கொண்டவர்கள்.
ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக் கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாக செயல்பட்ட இவன் இறந்துவிட்டான்.
ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால், அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்கக் கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாதவையே. இன்குலாப் ஜிந்தாபாத்புரட்சி நீடூழி வாழ்க !
(ஒ.எம்) பலராஜ் தலைமைப் படைத் தளபதி. நாள்: 18 டிசம்பர் 1928