உட்டோப்பியன் என்பது யாது?
புனித தாமஸ் மூர் என்பவர் எழுதிய நூலுக்கு லத்தின் மொழியில் “உட்டோப்பியா” எனப் பெயர் சூட்டியிருப்பார். அந்நூல் ஒருவகையான சோசலிசத்தைக் கற்பனை செய்திருக்கும். அதனை ’உட்டோப்பியன் சோசலிசம்’ என்பார் மார்க்சும் எங்கெல்சும். அதிலிருந்தே ’உட்டோப்பியன்’ எனும் சொல் புழங்கலாயிற்று.
“கற்பனைத்தீவு” எனும் நூல் தாமஸ் மூரால் தீட்டப்பட்டு 1516-இல் லத்தீன் மொழியில் வெளிவந்தது.
அந்நூல் மூன்று பேரின் உரையாடலாய் விரியும். தம் நண்பர் ஏகியஸோடு நடத்தும் உரையாடலில் போர்ச்சுக்கீசிய மாலுமியான ராபேல் ஹாத்லோட்டேய் என்னும் கற்பனைப் பாத்திரத்தையும் இணைத்திருப்பார். அவர்மூலம் கற்பனைத் தீவு ஒன்றைப் படைத்துக் காட்டுவார்.
அவரின் கற்பனைத் தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கைகால்களைப் பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன. அந்தத் தீவில் நிலம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமாக இருக்காது. அனைவரும் தினசரி ஆறு மணிநேரம் உழைக்க வேண்டும். அனைவரும் உண்ண வேண்டும். அந்தத் தீவில் அடிமைகளும் கிரிமினல்களும்கூட இருந்தனர். அவர்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்த நாவலைத் தொடர்ந்து 1517-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு நிலச் சீர்திருத்த இயக்கம் தோன்றியது. அதில் வன்முறை தலைதூக்கியது. தாமஸ் மூர் வன்முறையைக் காரணம் காட்டி அதனை ஏற்க மறுத்தார்.
இந்தத் தாமஸ் மூர் 1478-இல் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதகுருவின் உதவியாளராய் இருந்தார். தந்தையின் விருப்பத்தை மீறிச் சட்டம் பயின்றார். தன் வருவாயை ஏழைகளுகே செலவிட்டார். இவர் எப்போதும் ஆடம்பரத்தை எதிர்ப்பவராகவும் மனித நேயராகவும் இருந்தார்.
இவருடைய நண்பர் எராஸ்மஸ். அவர், இவர் வீட்டில் தங்கி இருந்தபோதே “பொய்மையின் விலை” எனும் நூலை எழுதினார். டச்சு மனிதாபிமானி பீட்டர் ஏகிடியஸ் நட்பும் கிடைத்தது. இவ்விருவர் ஊட்டிய மனிதநேயமும் கனவுமே இவரை “கற்பனைத் தீவு” நாவலைப் படைக்கத் தூண்டியது. அந்நாவல்கூட நண்பர் ஏகிடியாஸோடு விவாதிப்பதாகவே நீளும்.
28 வயதில் காமன் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இளவரசர் ஆர்தரின் கேளிக்கைக்கு அதிக நிதி கோரும் தீர்மானத்தை எதிர்த்ததால் பதவி இழந்தார். மன்னர் மரணத்துக்குப் பின் மீண்டும் காமன் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கவிதையாகத் தீட்டிய ரிச்சர்ட் மன்னரின் வரலாறு, இளவரசர் முடிசூட்டு விழாவையொட்டித் தீட்டிய கட்டுரை அனைத்துமே இவரின் கற்பனைத் தீவின் நீட்சியாக மனிதம் பேசின. மன்னருக்கு வரும் மனுக்களைப் படித்து அரசரின் உரிய கவனத்துக்கு கொண்டு போகும் பணியைத் திறம்படச் செய்தார். 1529-இல் லார்டு சான்சலர் எனும் பதவியும் பெற்றார்.
இளவரசரோ ஸ்பெயின் நாட்டு இளவரசியை மணமுடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டுப் பின்னர் அதை ரத்து செய்து, வேறொரு அழகிய பெண்ணை மணமுடிக்கப் போப்பிடம் அனுமதி கேட்டார். போப் அனுமதி மறுத்தார். இளவரசர் வெகுண்டார். போப்போடும் வாடிகனோடும் உள்ள உறவைத் துண்டித்து இங்கிலந்தில் உள்ள கத்தோலிக்கப் பிரிவை ’ஆங்கிலேயன் கத்தோலிக்கப்’ பிரிவாகத் தனியாக மாற்றினார். இன்றுவரை இங்கிலந்து கிறித்துவம் போப்புக்குக் கட்டுபடாத தனிப்பிரிவே!
தாமஸ் மூர் கத்தோலிக்க ஆதரவு நிலை எடுத்தார். ஆடம்பரத் திருமணத்தை எதிர்த்தார். ஆகவே தாமஸ் மூரைச் சித்திரவதை செய்து கொல்ல மன்னர் ஆணை பிறப்பித்தார். ஆயினும் மன்னரோடு உள்ள நெடுநாள் நட்புக் கருதி சித்திரவதை செய்யாமல் சிரச்சேதம் செய்து கொல்ல ஆணையிட்டார்.
லெனின் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்களின் பட்டியலில் இவரையும் சேர்த்திருப்பார்.
தாமஸ் மூர் ‘உட்டோப்பியா’ நூலில் வரைந்து காட்டிய கற்பனாவாத சோசலிசம் அவரோடு முடியவில்லை. கனவும் கற்பனையும் தொடர்ந்தன