தேசத் துரோகச் சட்டத்தை சிபிஎம் கட்சி எதிர்ப்பது ஏன் ?

கேள்வி : தேசத் துரோகச் சட்டம் ஏன் ஆட்சேபணைக் குரியது? பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இச்சட்டத்தை நமது கட்சி எதிர்ப்பது ஏன்?
-ராஜ்குமார்/சண்டிகர்.

பதில் : தேசத் துரோக சட்டப்பிரிவு இந்திய குற்றவியல் பிரிவு 124ஹன் கீழ் உள்ளது. பிரிட்டஷ் காலனியதிக்க ஆட்சியாளர்கள் இந்திய குற்றவியல் பிரிவில் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தினர். தமது ஆட்சிக்கு எதிரான விமர்சன கருத்துக்களை முன்வைப்போரை நசுக்கும் நோக்கத்தில் காலனியாதிக்க ஆட்சியாளர்கள் இச்சட்டத்தை கொண்டுவந்தனர். தேசத்துரோகம் எனில் அரசு அல்லது மன்னர்/இராணியின் ஆட்சியின் அதிகாரத்திற்கு எதிராக மக்களைத் தூண்டுவது என பொருள்படும். இந்த மிகமோசமான சட்டம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிராக பிரிட்டஷ் ஆட்சியாளர்களால் மிகப்பரவலாக பயன்படுத்தப்பட்டது.

திலகர், காந்திஜி மற்றும் பலர் இந்தச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டனர். பல ஆண்டுகள் கொண்ட நீண்டநாள் சிறைத்தண்டனையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. எனவேதான் காந்திஜி அவர்கள் “குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்கிட உருவாக்கப்பட்ட இந்திய குற்றவியல் சட்ட அரசியல் பிரிவுகளின் இளவரசன் தேசத்துரோகச் சட்டம்தான்” என ஒரு முறை கூறினார்.எனினும் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசு இக்கொடூரமான சட்டத்தை இந்திய குற்றவியல் பிரிவில் தக்கவைத்துக்கொண்டது. “மேன்மை தாங்கிய மகாராணியாரின் அரசாங்கம்” என்பதற்கு பதிலாக “இந்திய அரசாங்கம்” எனும் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 1951ம் ஆண்டு நாடாளுமன்ற விவாதத்தில் “என்னைப் பொறுத்தவரை இப்பிரிவு மிகவும் ஆட்சேபணைக்குரியது. வெறுக்கத்தக்கது. நாம் நிறைவேற்றும் எந்த சட்டத்திலும் இப்பிரிவு இடம் பெறக்கூடாது,” என்று கூறினார். நேரு இப்படி கூறினாலும் கூட இச்சட்டம் தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.

இந்த காலனியாதிக்கச் சட்டத்திற்கு ஒரு வெறுக்கத்தக்க வரலாறு இருந்தும் கூட இச்சட்டம் இந்திய குற்றவியல் பிரிவில் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது என்பது அவமானகரமானது. விடுதலைக்குப் பின்னர் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பதும் வெட்கக்கேடான ஒன்று!. காங்கிரஸ் ஆட்சியாளர்களும் சரி அல்லது அவர்களுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்தவர்களும் சரி இந்த வெறுக்கத்தக்க பிரிவை இந்திய குற்றவியல் சட்டத்திலிருந்து நீக்கிட எதுவுமே செய்யவில்லை.இந்திய குற்றவியல் பிரிவு 124 ஹ ஒரு கொடுமையான சட்டப்பிரிவு ஆகும்.தேசத்துரோகம் என்பதை இப்பிரிவு கீழ்கண்டவாறு வரையறுக்கிறது:“சட்டப்பூர்வமான அரசாங்கத்திற்கு எதிராக பேசப்படும் அல்லது எழுதப்படும் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ அல்லது கண்ணுக்கு தெரிகின்ற எந்தவொரு செய்கை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ வெறுப்பை அல்லது இழிவை விளைவிப்பதோ அல்லது அவ்வாறு விளைவிக்க முயல்வதோ அல்லது அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை உருவாக்குவது அல்லது உருவாக்க முயல்வது” தேசத்துரோகம் என இப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.இப்பிரிவு “அரசுக்கு எதிராக அதிருப்தி” என்று குறிப்பிடவில்லை.

“அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தி” என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனம் அல்லது எதிர்ப்பைக் கூட தேசத் துரோகம் என பட்டியலிட முடியும். எனவே இப்பிரிவு ஜனநாயக விரோதத்தன்மை கொண்டது. பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளுக்கு இப்பிரிவு எதிரானது.பல தருணங்களில் இப்பிரிவு பகிரங்கமாக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கரில் ஏழை மக்களுக்கு பணியாற்றிய பினாயக் சென் எனும் மருத்துவருக்கு மாவட்ட நீதிமன்றத்தால் தேசத்துரோக குற்றச்சாட்டில் ஆயுட்கால தண்டனை அளிக்கப்பட்டது. இறுதியில் அவர் உச்சநீதிமன்றத்தில் பிணை பெற்றார். அவர்மீது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேசத்துரோகம் குற்றத்திற்கு வன்முறையை தூண்டியதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என 1962ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் அரசாங்கமும் காவல்துறையும் இந்தப்பிரிவை தவறாக பயன்படுத்துவதை தொடர்ந்துவருகின்றன. அரசியல் மாற்று கருத்து அல்லது விமர்சனம் முன்வைப்பவர்கள் மீது இச்சட்டம் தவறாக பாய்கிறது. சமீப காலங்களில் மாணவர்கள், கேலிச்சித்திரம் வரைபவர்கள், அரசியல் ஊழியர்கள், சமூக ஊழியர்கள் ஆகியோர்மீது தேசத்துரோக சட்டம் சுமத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அசிம் திரிவேதி எனும் மும்பையைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஊழலுக்கு எதிரான கேலிச் சித்திரங்களை சுற்றுக்குவிட்டார் என்பதற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டனர். 2014ஆம் ஆண்டு மீரட்டில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த 67 காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை பாராட்டியதற்காக தேசத்துரோக சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டனர். அதே ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு திரைப்பட அரங்கில் ஏழு இளைஞர்கள் தேசிய கீதத்தின் பொழுது எழுந்து நிற்கவில்லை என தேசத் துரோக சட்டம் சுமத்தப்பட்டனர்.மோடி அரசாங்கம் பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சியினரும் மாற்று கருத்து முன்வைப் போரும் தேச விரோதிகள் எனவும் பின்னர் தேசத் துரோகிகள் எனவும் முத்திரை குத்தப்படுகின்றனர்.

மிகவும் வலுவான முறையில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணம் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் மற்றும் சில மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகும். நேரு பல்கலைக்கழக மாணவர்களை ஆதரித்து அவர்களின் கைது தவறு என்று கூறியவர்கள் மீதும் தேசத் துரோக குற்றம்சுமத்தப்பட்டது. இவ்வாறுதான் சீத்தாராம் யெச்சூரி மற்றும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஹைதராபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்க இக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் பிரிவில் இச்சட்டம் இருக்கும்வரை காவல்துறையும் கீழமை நீதிமன்றங்களும் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மற்றும் ஏனையோரை கைது செய்ய இப்பிரிவை (தவறாக)பயன்படுத்துவது என்பது தொடரவே செய்யும். இச்சட்டமே அத்தகைய கொடூரமான முறையில் கைது செய்ய வழிவகுப்பதாய் உள்ளது. எனவேதான் தேசத் துரோகச்சட்டம் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.பிரிவினைவாத நடவடிக்கைகளை முறியடித்திட வேறு சில பிரிவுகள் சட்டத்தில் உள்ளன.

Leave a Reply