நான் ஒரு கம்யூனிஸ்ட்- தோழர் ம.சிங்காரவேலர்

“ம. சிங்காரவேலர் – போர்க்குணமிகுந்த செயல் முன்னோடிப் பொது உடமைக்கு ஏகுக அவர் பின்னாடி” – என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

  • சென்னையில் ஒரு வசதியான மீனவக் குடும்பத்தில் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தவர் சிங்காரவேலர்.
  • இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ம. சிங்காரவேலர் ஆவார்.
  • இந்தியா, ஏகாதிபத்திய இரும்புப் பிடியிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன்னணி வீரர் வீரர்களில் ம. சிங்காரவேலர், முதல் வீரர்.
  • பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.
  • பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வெ.ரா.வுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர்.
  • தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி.
  • சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராசருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
  • உழைப்பாளர் தினமான மே தினத்தை இந்தியாவிலேயே – ஏன் ஆசியாவிலேயே – முதன்முறையாகக் கொண்டாடி, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
  • உடன் உழைக்கும் இயக்கத்தவர்களை தோழர் என்று முதன்முதலாக அழைத்தவர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் ம. சிங்காரவேலர்.
  • தமிழகத்தையே உலுக்கிய நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னின்று நடத்தியவர்.
  • இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தமாகவும் படித்தப் புரிந்துகொண்டு, அந்த அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன் வரிசையில் அவருக்கே முதலிடம் அளித்தாக வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது அதனைத் துவக்கி வைத்தார். கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் பங்குகொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சியாக மதிக்கப்படுகிறது. அவர் உரைநிகழ்த்தும்போது கூட்டத்தினரை ‘‘காம்ரேட்ஸ்’’ என்று அவர் அழைத்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர் காங்கிரஸ்காரர்களால் ‘காம்ரேட்’ என்றே அழைக்கப்பட்டார். மரியாதையும் முக்கியத்துவமும் நிறைந்த தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்விடுமோ என்றும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று இளம் தலைமுறையினரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் தன்னை மிகவும் துணிச்சலுடன் ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்ட துணிச்சலை அங்கு வியந்து பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று 1923இல் வேன்கார்டு இதழில் எம்.என்.ராய் பதிவு செய்திருக்கிறார்.
  • தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெறவேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர்.
  • மிகுந்த போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.
  • 1917இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர், இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாட வைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார்.
  • 1918இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சிங்காரவேலர்.
  • ‘போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு சாப்பிடுவதுபோல’ என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் வெறியாட்டத்தைக் கண்டித்து, அவர் தமிழகத்தில் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக்கடைக்காரர்களும், இறைச்சிக் கடைக்காரர்களும்கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக்கோட்டினை தெருவில் எரித்தார். அதன்பின் அவர் வழக்கறிஞர் தொழிலையே கைவிட்டுவிட்டார்.
உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்னும் ஊரில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பேரணியில் வந்தோர் காவல்துறையினரைத் திருப்பித்தாக்கி, காவல்நிலையத்திற்குத் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு சென்னையில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் காரணமாக வைத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார். அதனைக் கண்டித்து சிங்காரவேலர் மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளிதழுக்கு எழுதினார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது சிங்காரவேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ‘‘நான் இன்று எனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டேன். நாட்டின் மக்களுக்காக உங்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று எழுதியிருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி முடித்தபோது அதனைக் கண்டித்தும் காந்திக்கு சிங்காரவேலர் கடிதம் எழுதினார்.
தமிழகத்தில் முதன்முறையாக தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் தோளோடு தோள் நின்று இவருக்குத் துணை புரிந்தனர். சென்னை தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் யூனியன், கோவை நகரத் தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம் போன்று பல்வேறு தொழிற்சங்கங்களை தொடங்கினார்.
  • ஒவ்வோராண்டும் ஏப்ரல் 6 – 13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இறுதி நாளான ஏப்ரல் 13 அன்று சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெறும்.
  • 1923-ம் ஆண்டு மே தினம் அன்று `இந்துஸ்தான் லேபர் கிஸான்’ கட்சியைத் தொடங்கினார். அதோடு, லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், `தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார்.
  • 1925ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 13வது வட்டம் யானைக்கவுனி பகுதியிலிருந்து அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும் அவரே, சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்தபோது அதைக் கொண்டு வந்தார் சிங்காரவேலர்.
  • 1928-ம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார் சிங்காரவேலர். அதற்காக அவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார்.
  • ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் தமிழிலேயே பேசினார். அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தார். அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி முதலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
  • சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். சவஊர்வலத்தில் சென்ற சிங்காரவேலரை குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன்மார்பை நிமிர்த்துக்காட்டித் தன்னைச் சுடுமாறு சிங்காரவேலர் சொன்னார். இச்சவஊர்வலம் குறித்து குடியரசு இதழில் அவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றது.
  • தேசியத்தின் பேரால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை ம.சிங்காரவேலருக்கே உண்டு. கான்பூரில் பொதுவுடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். தோழர் சிங்காரவேலுவையும், மௌலானா அசரத் மோகானியையும்தான் முதன் முதல் கைது செய்தது.
  • முதலாளிகட்கும். தொழிலாளிகட்கும் உண்மையில் துரோகிகளாக உள்ள வாய்சவடால் போலித் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலைய வேண்டுமென்று எண்ணினார் அதனால்தான் அவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியே வந்தார்.
  • 1931 முதல் 1936 வரை அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருடைய இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சமதர்ம சுயமரியாதை இயக்கத்தை நடத்திய போது நாடே அதிர்ந்தது. சர்க்காரும் கடுங்கிற்று என்று கூறலாம். காசிக்கு போனால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பி சிக்கிக்கிடந்த மக்களை அவர்கள் கைபிடித்து தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த மாஸ்கோவுவின் சொர்க்கத்திற்கு அழைத்தனர்.
  • 1943ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதில் தள்ளாதவயதிலும் சிங்காரவேலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார். சென்னையில் நாத்திகர் மாாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்களைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி ? பசுவைப் புலி பிடித்துத் தின்னவும். தேரையை பாம்பு பிடித்து தின்னவும் யார் கட்டளையிட்டார் ? நோய், வறுமை, பஞ்சம் புயல் வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பவங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுளை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத் பாந்தவன், அன்பன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடியுமா? சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ? கிருஸ்தவரும், முஸ்லீமும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனை கோயில்கள் கட்டிடங்கள் இடிந்தன, எத்தனை நாடுகள், நகரங்கள் நாசமாயின? இவ்விதமாக எதிரி திணரும்படியான கேள்வி களைப் பச்சை பச்சையாகக் கேட்பார் ம.சிங்காரவேலர்.

1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும். அந்தக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினார். சிங்காரவேலர் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி இம்மண்ணை விட்டுப் பிரிந்தார்.
அவரும் அவருடைய முன்னோர்களும் ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு அந்நாளிலேயே சுமார் 200 கோடியாகும். அந்த திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதிவரை ஏழைத் தொழிலாளர்களுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார். மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப்பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Leave a Reply