பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத் கலவரம்: பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள்  தண்டனை உறுதி! | Bilkis Bano case: Bombay HC upholds life for 11, convicts 5  Gujarat cops, 2 doctors ...குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க மும்பையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், முஸ்லீம் மதவெறிக்கு எதிராக மிகவும் கொடூரமாக நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்கள் தொடர்பான ஒரு சில வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதில் ஒரு வழக்குதான் பில்கிஸ் பானோ என்பவர் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர்தம் குடும்பத்தார் அவர் கண்முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட வழக்குமாகும். அந்த வழக்கில்தான் தற்சமயம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பன்னிரண்டு பேர்களில் பதினோரு பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், இம்மாபாதகக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புரைத்திருக்கிறது. குஜராத்தில் 2002இல் நடைபெற்ற மனிதாபிமானமற்ற மாபாதக அட்டூழியங்கள் பலவற்றில் ஒன்றுதான், கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, மாபாதகர்களால் கூட்டாக வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதும், அவர் குழந்தை அவர் கண்முன்னாலேயே தரையில் நசுக்கிக் கொல்லப்பட்டதுமாகும். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பதினான்கு பேர்கள், (இவர்களில் 6 பேர் பெண்கள், நான்கு பேர் குழந்தைகள்) கலவரத்திற்குட்பட்ட கிராமத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, படுகொலை செய்யப்பட்டார்கள். அசாத்திய மனவலிமையும், உறுதியும் காட்டிய பில்கிஸ் பானோ, கயவர்களுடன் இணைந்து நின்று, குஜராத் மாநில காவல்துறையானது சாட்சிகளைக் களைத்திடவும், அச்சறுத்தவும் உடந்தையாக இருந்து செயல்படுகிறது என்றும் நீதித்துறை முன் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அவரது வழக்கை குஜராத்திலிருந்து மகாராஷ்ட்ரத்திற்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கில் பில்கிஸ் பானோவுக்கு எதிராக குஜராத் போலீசால் விடுக்கப்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களையும் துணிவுடன் எதிர்கொண்டு, விடாப்பிடியாக நின்று, வழக்கை நடத்திய பில்கிஸ் பானோ அனைத்துப் பாராட்டுக்களுக்கும், ஆதரவுக்கும் உரியவராவார்.இவ்வழக்கில் சம்பவம் நடந்து மிகவும் கொடுமையான முறையிலும் கடும் மனவேதனையுடனும் ஆறு ஆண்டுகள் கழிந்துபின்பு தீர்ப்பு வந்திருந்தாலும், கடைசியாக நீதி எப்படியோ வழங்கப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில், பல விஷயங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.
The 2002 Gujarat riots cases and their statuses so far - The Hinduமுஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை சம்பந்தமாக பலநூறு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து வருகின்றன. நம் நாட்டில் நீதி வழங்கும் முறையில் ஏற்படும் காலதாமதம், குறிப்பாக இதுபோன்ற மதக்கலவரங்கள் தொடர்பான வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து அனைவரும் அறிந்ததே. எனவே இனியாவது காலதாமதம் ஏதுமின்றி இவ்வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு, அட்டூழியம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதுதான் நவீன நாகரிக சமுதாயத்தின் உண்மையான அடிப்படை நெறிமுறையாகும். மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது அப்போதுதான் நம்பிக்கை ஏற்படும். நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தால், அது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு இருந்து வரும் நம்பிக்கையையும் குறைத்திட வழிவகுத்திடும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்த வழக்கின் தீர்ப்பானது, முஸ்லீம் மக்களுக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளில், அம்மாநிலத்திலேயே நீதி கிடைத்திடாது என்பதை, மீண்டும் ஒருமுறை மெய்ப்பித் திருக்கிறது. குஜராத் மாநில அரசாங்கம் ஏற்கனவே, சாட்சியம் இல்லையென்று கூறி 1600க்கும் மேற்பட்ட வழக்குகளை மூடிவிட்டது.
2004இல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாகத்தான், இந்த வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்றம், மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்காக அனுப்பிய ஆறு குறிப்பிட்ட வழக்குகளில், பில்கிஸ் பானோ வழக்கும் ஒன்று. மற்றொன்று, பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்காகும். நரோடா படாயா வழக்கு போன்ற மற்ற படுகொலை வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது எப்போது என்று இன்னும் தெரியாமல், வழக்குகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஈசான் ஜாஃப்ரியினுடைய மனைவியும் அவர் தம் குடும்பத்தாரும் நீதி கோரி, நீதிமன்றத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஈசான் ஜாஃப்ரி அவர்களின் உடல், மதவெறியர்களால் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டுக் கொளுத்தப்பட்டதை, வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க. இந்த வழக்குகளில் தீர்ப்பு கிடைப்பது இருக்கட்டும், இன்னும் ஏராளமான வழக்குகளில் விசாரணையே தொடங்கப்படவில்லை. நீதிமன்றங்களில் விசாரணை எதுவும் தொடங்கப்படாமலேயே நிலுவையில் உள்ள வழக்குகள்தான் அதிகம். அதே சமயத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிணை மறுக்கப்பட்டு, இன்னமும் காவலடைப்பில் உழன்று வரும் அவலம் தொடர்கிறது.
இவர்கள் மீது ‘பொடா’ சட்டமும் பாய்ந்திருக்கிறது. இவர்கள் மீது ‘பொடா’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டிய தேவையில்லை என்று ‘பொடா’ சட்டம் குறித்த மத்திய மறு ஆய்வுக்குழு ஆய்வு செய்து, தீர்ப்பு வழங்கியபின்பும், இவர்கள் மீது சுமத்தப்பட்ட ‘பொடா’ பிரிவுகளின்கீழான குற்றங்கள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எதிரிகளைப் பிணையில் விடுவது தொடர்பாக நீதிமன்றங்கள் இன்னமும் தீர்மானிக்க இயலாமல் இருந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக, 2007 பிப்ரவரியில்தான், உச்சநீதிமன்றமானது இவ்வழக்குகளில் பிணை விண்ணப்பங்கள் தாக்கல் செய்திடலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆயினும், இன்றைய தேதி வரையில், இவற்றின் மீது எவ்வித பிணை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.இவை விரைவுபடுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ள அதே சமயத்தில், நீதித்துறைக்கு முன் உள்ள உண்மையான சவால் என்னவெனில் – உண்மையில் இந்திய ஜனநாயக அமைப்பு முறைக்கு முன் உள்ள சவால் என்னவெனில் – நீதித்துறையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் நீதி வழங்கும் முறை (justice delivery system) குறித்ததாகும். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை சம்பந்தமாக இன்னும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து நீதித்துறை செயல்படும் விதத்திலேயே இது முழுமையாக அடங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை இவ்வழக்குகளில் புலனாய்வை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குஜராத் மாநில அரசாங்கமும், குஜராத் காவல்துறையும் இந்திய ஜனநாயகத்தையே எள்ளிநகையாடக்கூடிய வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பான வழக்கில் நடந்து வருகின்றன. குஜராத் காவல்துறை படுகொலையில் ஈடுபட்ட கயவர்களுக்கு உடந்தையாக இருந்து வருவது பலமுறை மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், பாஜக-வானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ‘நாங்கள் குஜராத்’தாக மாற்றப் போகிறோம் என்கிற பழைய பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் எதிர்கால பிரதமரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதனைக் கூறி வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் டில்லியிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன், குஜராத் மதவெறிப் படுகொலைகளை மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டு, தாங்கள்தான் ‘இந்து தர்மத்தை’ உயர்த்திப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் மதவெறித் தேரை நாடு முழுதும் மீண்டும் ஒருமுறை இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. தங்களுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக வரவிருக்கும் காலங்களில் மதவெறித் தீயை விசிறிவிட முனையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதவெறியர்களின் நோக்கத்தை, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சவாலை, நீதித்துறையின் விரைவான செயல்பாடுகளுடன் இணைந்து நின்று முறியடித்திட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்-
தமிழில்: ச. வீரமணி

Leave a Reply