புதுச்சேரி அரசியல் நிலைமை

pondicherry16வது மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து புதுச்சேரி தொகுதியில் வெற்றிபெற்றது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றம் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசின் நெருக்கடியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் அரசு விடுபட்டுள்ளது. அதே சமயம் மத்திய பாஜகவின் உதவியோடு மாநில நிதி நெருக்கடியை தீர்க்கவும், தேர்தல் கால வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசின் எதிர்பார்ப்பில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில அரசின் பழைய கடன் ரூ.6 ஆயிரம் கோடி ரத்து, கூடுதல் நிதி, மாநில அந்தஸ்து, துணைநிலை ஆளுநர் மாற்றம் ஆகியவை தொடர்பாக மாநில முதல்வர் திரு.என்.ரங்கசாமி பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மாநில பாஜக தலைமையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். துணைநிலை ஆளுநரும் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தியதோடு மாநில அரசின் முறையற்ற நிதி மேலாண்மை குறித்த புகாரை அளித்துள்ளார். இந்த்ப் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரி மாநில நிதிநிலைமைகள் குறித்து ஆராயவும், நிதி மேலாண்மையை கண்காணிக்கவும், உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய பாஜக அரசின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள், மாநில அரசின் நிதிச்சுமையை தீர்க்க உதவாது என்ற சூழ்நிலையே உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு மக்கள் மீது திணிக்கப்பட்டன. வீடு கட்டும் மானியம், மாணவர்களுக்கு ரொட்டிப் பால் திட்டம், ஒற்றை அவியல் அரிசி, ஆகியத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கால வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள் சிறுமிகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு, தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை, மின்தடை, ஆலை மூடல், வேலையின்மை, கிராமப்புற வேலைத் திட்டம் அமுலாக்கமின்மை, குடிமனைப்பட்டா ஆகிய பிரச்சனைகள் மக்க்ள் மத்தியில் மாநில அரசு மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அரசு சார்பு தன்னாட்சி நிறுவனங்கள் சில கூட்டுறவு ஸ்தாபனங்களில் ஊழியர்களுக்கு பலமாதம் சம்பளம் வழங்கப்படாத நிலைமை தொடர்கிறது.

இந்தப் பின்னணியில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அரசியல் சாகசங்களை செய்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியானவுடன் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மத்திய கல்வித் திட்டத்தை (சிபிஎஸ்சி) நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்த அறிவித்துள்ளது. மத்தியத் தர வர்க்கத்தினரை கவர்வதற்காக இத்தகைய கல்வித் திட்டம் அமுல்படுத்தியுள்ளது. மேலும் துணைநிலை ஆளுநர் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் கோப்புகளை நிறுத்திவைப்பதாக பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்து மாநில அரசுக்கு ஆதரவான அமைப்புகள் போராடி வருகின்றன. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இவ்வாறு மாநில அரசு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்காமல் திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் பின்னணியில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிபிஐ 2016 சட்டப்பேரவை தேர்தலை முன்னிறுத்தி மாநில மக்களின் கோரிக்கைகள் மீது சிபிஐஎம்-சிபிஐ இணைந்து போராடுவது என்ற அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. நமது கட்சியின் ஆலோசனைகளை கோரி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தோல்வியிலிருந்து மீளவில்லை. அதிமுக மாநிலம் முழுவதும் கட்சியை பலப்படுத்த பல்வேறு அரசியல் பிரமுகர்களை கட்சிக்கு இழுக்க முயற்சிக்கிறது. திமுக குழுவாத போக்கில் சிக்கியுள்ளது. விசிக தாய்மொழிவழிகல்வி, குடிபெயர்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு ஆகிய பிரச்சனைகளில் நம்முடன் இணைந்து போராட ஆர்வம் காட்டி வருகிறது. தேர்தலுக்குப் பிறகு பாமக மாநில அரசுக்கு எதிராக அறிக்கை விடுவது என்ற தன்மையில் செயல்பாடு உள்ளது. பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலத்தில் காலூன்ற முயற்சிக்கிறது.

04.07.2014

Leave a Reply