புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கைகைகளை அப்படியே பின்பற்றிவருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவே, முந்தைய ஆட்சியில் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவே இல்லை. கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை. நடப்பில் உள்ள வீடு கட்டும் மானியத் திட்டம், உயர்கல்விக்கான கல்வி உதவி நிதி, பள்ளி மாணவர்களுக்கான ரொட்டிப்பால் திட்டம், இலவச அரிசித்திட்டம் .. என பல நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன.
மாநில அரசு நிதிநெருக்கடியை காரணம் காட்டி நலத்திட்டங்களை செயல்படுத்த வில்லை. மாறாக பால்விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மதிப்புக்கூட்டிய வரி உயர்வு, இரண்டு மடங்கு மின்கட்டண உயர்வு என மக்கள் மீது வரியுயர்வு, விலை உயர்வுகளை திணித்துவருகிறது. மேலும் உணவுப் பொருட்கள், காய்கனிகள், மின்சாதனப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட பல பொருள்களின் விலை தமிழகத்தை விட புதுச்சேரியில் கூடுதலாக உள்ளது. மறுபுறத்தில் சிக்கனம் பேசும் மாநில அரசு 23 வாரியத் தலைவர்கள் நியமனம், கொள்ளைப்புற வாசல் வழியாக வேலைத்திணிப்பு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஆளும் கட்சியினருக்கு நிவாரணம் என ஆளும் கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசுப் பணத்தை விரயம் செய்கிறது.
முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக 4000 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் நீதிமன்ற உத்தரவைக் காட்டி 4000 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மறுபுறத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு கொல்லைப்புற வழியாக பணிதிணிப்பை செய்துவருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் விவசாயம், தொழில்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துவருகின்றன. 42000 ஹெக்டேராக இருந்த விளைநிலம் வெகுவாக குறைந்துவிட்டது. 18000 ஹெக்டேர் அளவில் விவசாயம் நடைபெறுவதாக அரசுப்புள்ளி விவரம் கூறுகிறது. உண்மை நிலவரம் இதைவிடவும் மிகக்குறைவாகும். மேலும் மாநில மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 4.5% ஆகும். புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தில் துவங்கப்படவில்லை. 2011 அரசு புள்ளிவிவரப்படி 12,44,000 மக்கள் தொகையில் 2.35 இலட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவுசெய்துள்ளனர். நகர்ப்புற, கிராமப்புறங்களில் வேலையின்மையும், வறுமைமேலும் அதிகரித்து வருகிறது. 2004-2005 ஆண்டுக்கான மத்தியத் திட்டக்குழு மதிப்பீட்டின்படி புதுச்சேரியில் 22.4% மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளதாக குறிப்பிடுகிறது. ஆனால் வறுமையின் மதிப்பீடு மேலும் கூடுதலாகும்.
மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தை உயர்த்த மாநில அரசு முயற்சிக்கவில்லை. மத்திய அரசும், புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு மாறாக மாற்றுக் கட்சி ஆட்சி என்ற தன்மையில் செயல்படுகிறது. மாநில அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளாகியும் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. நடப்பு ஆண்டிற்கு ரூ.2000 கோடி அளவில் திட்டச் செலவுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இது முந்தைய ஆண்டு திட்டச் செலவான ரூ.3000கோடிக்கு குறைவாகும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி மேலும் பாதித்துள்ளது.
கிராமப்புற வேலைத்திட்டம் ஆண்டிற்கு சராசரி 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. சட்டக்கூலிக்கு மாறாக ரூ. 70, ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது. முறைசாரா நலச்சங்கத்திற்கு போதிய நிதி தொடர்ந்து ஒதுக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகள் மருத்துவர், செவிலியர், ஊழியர் பற்றாக்குறை, போதிய மருந்துகள் இன்மை, என தொடர் சீர்கேடு கண்டிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் நன்கொடை, கட்டண கொள்ளை, கட்டுப்படுத்தப்படவில்லை. பெண்கள் மீதான குற்றங்களும், சமூகக் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரி அரசு செயல்படுவதால் மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் மாநிலத்தில் அப்படியே பின்பற்றப்படுகிறது. ”உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திவருகிறது. மேலும், மத்திய காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்கீட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசின் தவறான நடைமுறையும் மாநில மக்களை கடுமையாகப் பாதித்து வருகிறது.
மாநில அரசின் தவறான கொள்கைக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தான் மாநிலத்தின் நலன் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே பின்பற்றிய போதிலும் மாநில அந்தஸ்து மற்றும் மின் துறையை தனியார்மயமாக்கும் முந்தைய காங்கிரஸ் அரசின் பரிந்துரையை ரத்து செய்தது, கூடுதல் நிதி ஒதுக்க கோருவது, என்ற தன்மையில் மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறது.
மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் க்ட்சி தொடர்ந்து போராடி வருகிறது. மேலும் மத்திய காங்கிரஸ் அரசின் தாராளமயக் கொள்கைகளை எதிர்த்தும், பாஜகவின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தியும், போராட்டங்களை தொடர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மாநில மக்களின் நலன் என்ற பொதுத்தன்மையில் மாநில அந்தஸ்துக்கான போராட்டத்தை மாநில அரசோடும் மற்ற ஜனநாயக, மதசார்பற்ற கட்சிகளோடும் இணைந்து செயல்படவேண்டியுள்ளது.
அரசியல் கட்சிகளின் நிலைமை :
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 7 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. காங்கிரஸில் ஏற்பட்ட பிளவால் அது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மாநில அரசின் மீதான் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
திமுக மாநில அமைப்பாளர் மாற்றத்திற்கு பிறகு தொகுதிவாரி அமைப்பு கூட்டங்கள் நடத்திவருகிறது. மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவ்வப்போது பத்திரிகை செய்திகள் மட்டுமே வெளியிட்டு வருகிறது. இதில் இரண்டு குழுவாக செயல்படுகிறது.
அதிமுக கடந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிமுகவிற்கு இடம் தரவில்லை. இதனால் தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளுக்கு இடையில் நிர்வாக ரீதியாக சில பிரச்சனைகள் நீடித்தது. தற்போது அந்தத் தன்மை மட்டுப்பட்ட போதிலும் புதுச்சேரி அதிமுக மாநில அரசுக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தி வருகிறது.
பாஜக சமீபமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தொடர் இயக்கம் நடத்திவருகிறது. மாநிலத்தின் சிறப்புக்கூறு திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு திருப்புவதை எதிர்த்து இயக்கம் நடத்திவருகிறது.
சிபிஐ மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. முன்னுக்கு வருகிற மக்கள் பிரச்சனை மீதும், மேல்கமிட்டி முடிவுகளையொட்டியும், நம்முடன் இணைந்து போராடி வருகிறது.
பாமகவின் செயல்பாடுகள் தமிழகத்தையொட்டியே இருக்கிறது. மக்கள் பிரச்சனை மீது இயக்கம் நடத்துவதில்லை. தலித்துகளுக்கு எதிராக மற்ற சமுதாயத்தினரை திரட்டுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பிண்ணணியில் மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதோடு நவீன தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிற காங்கிரஸையும், மதவெறி பாஜகவையும் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்திட வலுவான போராட்டங்களை நடத்தவேண்டியுள்ளது. மக்கள் பிரச்சனைகள் மீது தனித்த இயக்கத்தையும், குறிப்பிட்ட பிரச்சனைகள் மீது இடதுசாரிகளோடும், மதசார்பற்ற ஜனநாயக சக்திகளோடும் இணைந்து போராடவேண்டியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > புதுச்சேரி அரசியல் நிலைமை
புதுச்சேரி அரசியல் நிலைமை
posted on