பத்திரிக்கைச் செய்தி – 30.01.2016
புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
2009 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புகொண்டு ஆணையின்படி புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் கொல்லைப்புற நியமனங்கள் கூடாது என விதிமுறைகள் உள்ளது. இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு காரணமே திரு.ரங்கசாமி மற்றும் திரு.வைத்தியலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் கொல்லைப்புற வேலைக்கு பணி அமர்த்தியது தான். அப்படி வேலைக்கு அமர்த்திய பல ஆயிரம் நபர்களில் பெரும் பகுதியினர் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என அன்றைய தலைமை செயலர், அன்றைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான நாராயணசாமிக்கு கொடுத்த தகவல்களினால் வெளியானது.
இதன் அடிப்படையில் சில தனி நபர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர கொல்லைபுறமாக வேலைக்கு வைத்தவர்களை காப்பாற்றுவதற்கே மேற்குறிப்பிட்டுள்ள 2009 ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.
மேற்கண்ட 2009 ஆணையை மீறி நியமனம் செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொல்லை புறமாக நியமனம் பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை அந்த அதிகாரிகளுடைய ஓய்வூதிய பலன்களில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு கூறியது. ஆனால் இந்த ஆணையை பிறப்பித்த திரு.வைத்தியலிங்கம் அரசாங்கமே 2011ஆம் ஆண்டில் ஆட்சி முடிவடையும் தருவாயில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை பல லட்ச ரூபாய்கள் லஞ்சம் பெற்று கொண்டு பொதுப்பணித்துறை, பாசிக், பாண்லே, பாப்ஸ்கோ, கேவிகே போன்ற துறைகளில் பணி அமர்த்தினர். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திரு.ரங்கசாமி ஆட்சிக்கு வந்தவுடன் பணி அமர்த்தப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்தார்.
வேலையிழந்த நபர்கள் காங்கிரஸ் கட்சி தலைமையின் கீழ் போராட்டங்களை நடத்திய போது காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தப்பட்டது. மேலும் ரங்கசாமி அவர்களிடம் காங்கிரஸ் கட்சியை விட்டு வந்தால் மீண்டும் பணியில் அமர்த்துவோம் என்று சொல்லியதின் அடிப்படையில் அதில் பெரும்பாலானோர் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறினர். அவ்வாறு மாறியவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் இதரத் துறைகளில் மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர்.
2009ஆம் ஆண்டிற்கு பிறகு இவ்வாறாக கொல்லைப்புற நியமனம் பெற்றவர்களிடம் பல துறைகளிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசி ரூ.1லட்சம் முதல் 2லட்சம் வரை பெற்று கொண்டு சட்டவிரோதமாக பணி நிரந்தரம் செய்துள்ளனர்.
மேற்கூறிய நடவடிக்கைகளால் நஷ்டம் அடைந்து, மூடுவிழாவை நோக்கி தள்ளப்பட்டுள்ள பல நிறுவனங்களிலும் தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி மீண்டும் புதியதாக கொல்லைப்புற நியமனங்களை திரு.என்.ரங்கசாமி செய்து கொண்டு இருக்கிறார். கடந்த ஒரு வாரத்தில் அமுதசுரபி, சாராய ஆலை, பாண்லே, கேவிகே, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மதர்தெரசா ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் லஞ்சம் பெற்று கொண்டு ஆயிரம் பேர்களுக்கு மேல் கொல்லைப்புற வாயிலாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் வேலை வாய்ப்பகத்தில் முறையாக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
அரசாங்கமே சட்டவிரோதமாக பணி அமர்த்தப்படுவதற்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, பொதுநலன்கருதி வேலையில்லா இளைஞர்களை அழைத்துகொண்டு கொல்லைப்புற நியமனம் செய்த நிறுவனங்களுக்குள் சென்று அவர்களையும் வேலையில் அமர்த்தகோரி போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு முடிவு செய்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு என்.ரங்கசாமி மற்றும் அவருடைய வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் கொல்லைப்புற நியமனங்களை செய்திட்ட அதிகாரிகளுமே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.
இவண்,
ஆர்.ராஜாங்கம்,செயலாளர்,
புதுச்சேரிபிரதேசக்குழு, சிபிஎம்.