புதுமை இல்லாத புதுவை பட்ஜெட் வி.பெருமாள்

வி.பெருமாள்
V.Perumal

  ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின் கூற்றாகும். மாநிலத்தின் சமூகப் பொருளாதாரம் வேலைவாய்ப்புகளுடன் இணைந்த வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதும், அனைவருக்கும் தரமானகல்வி, மருத்துவம் அளிப்பதும் சமூகப் பொறுப்புள்ள அரசின் பிரதான கடமையாகும். இத்தகைய அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பட்ஜெட் (2016-17) அமையவில்லை. மாறாக வழக்கமான வார்த்தை ஜாலங்களும், மேம்போக்கான அறிவிப்புகளும் கொண்ட பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.

புதிய ஆட்சி – கொள்கையில் மாற்றமில்லை

2016 தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு நாராயணசாமி தலைமையில் புதிய காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 100 நாள் ஆட்சியும் முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் பிரதிபலிப்பாகவே உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சரியான நிதிக்கொள்கையும், துல்லியமான வருவாய் மற்றும் செலவின மதிப்பீடும் அவசியமாகும். அத்தகைய தன்மையில் பட்ஜெட் அமையவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளுக்கு மிகக்குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ரூ.6665 கோடி பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.4100 கோடி திட்டம் சாரா நிதியாகவும், ரூ.2565கோடி திட்டம் சார்ந்த நிதியாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி மிக குறைவாகும். உண்மை தன்மையில் திட்ட ஒதுக்கீடான ரூ.2565 கோடியில் பெரும்பகுதி மின்சார கொள்முதல் வட்டி மற்றும் அசல் செலுத்துவது, மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இருப்பதால் வளர்ச்சித்திட்டங்களுக்கு எஞ்சிய நிதியே பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. அதாவது, மொத்த வரவு-செலவு திட்டத்தில்சம்பளங்கள் மற்றும் ஊதியங்களுக்கு – 25 சதவீதம், ஓய்வூதியம் – 10 சதவீதம், மின்சாரம்கொள்முதல்-17 சதவீதம், வட்டி மற்றும்அசல் திருப்பி செலுத்த – 12சதவீதம், மானிய உதவி – 11சதவீதம் செலவிடப்படுகிறது. 75 சதவீதம் உறுதி செய்யப்பட்ட செலவினமாகவும், 25சதவீதம் வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டமற்ற செயல்பாடுகளுக்காகவும் செய்யப்படுகிறது. இத்தகைய வரவு-செலவு திட்டம் மாநில வளர்ச்சிக்கு உதவி செய்யாது. மாநிலத்தின் கடன் ரூ.6651 கோடியாக வளர்ந்துள்ளது என்றும், ஆண்டுக்கு ரூ.700,கோடிக்கு மேல் அசல், வட்டி செலுத்தப்படுவதாகவும், ஏற்கெனவே வாங்கிய வெளிக்கடனுக்கான முதிர்வு காலம் அடுத்த ஆண்டு (2017-2018) துவங்குவதால் கூடுதலாக ரூ.500 கோடிவரையில் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வளர்ச்சித் திட்டங்களையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும், 7வது ஊதியக் குழு பரிந்துரையும் மாநிலத்தின் உள்வள ஆதாரங்களை பயன்படுத்தி நிதி வருவாயை திரட்டிய பிறகுதான் செயல்படுத்த முடியும் என்ற தனது இயலாமையை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் பொருத்தமான திட்டமிடல் இல்லை. மாறாக, மூடப்படும் சாராயக் கடை எண்ணிக்கைக்கு நிகராக புதிய அந்நிய மதுபானக் கடைகள் திறக்க தனியாருக்கு உரிமம் வழங்குவது, நிலத்தின் விலை மதிப்புகுறைக்கப்படுவது என அரசு உத்தேசித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தை சீரழிவுக்கு இட்டுச்செல்லவும், கறுப்புப்பண பதுக்கலுக்கும் வழிவகுக்க கூடியதாகும்

கடன் வலையில் புதுச்சேரி

2016-2017 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டநிதியாக ரூ.7665 கோடிக்கு மாநில திட்டக்குழு பரிந்துரை செய்தது. அதில் மத்திய அரசிடம் கோரிய கூடுதல் நிதி உதவி ரூ.1000 கோடி விஷயத்தில் மத்திய அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்கிறது என்ற நம்பிக்கையோடு நடப்பு பட்ஜெட் மதிப்பீடு ரூ.6665 கோடி எனதிட்டமிடப்பட்டுள்ளது. 2016 மார்ச் 31வரையிலான மாநிலத்தின் கடன் தொகை ரூ.6651 கோடி. நடப்பு பட்ஜெட் மற்றும் மொத்த கடனுக்கும் உள்ள இடைவெளி ரூ.14கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் கடனுக்கான அசல்மற்றும் வட்டியாக ரூ.720 கோடி செலவிடப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2017-18) வெளிக்கடனுக்கான முதிர்வு காலம் தொடங்குவதால் மேலும் சுமார் 500 கோடி வரையில் செலுத்த வேண்டியிருக்கும். மொத்தத்தில் ஆண்டுக்கு சுமார் 1200 கோடி அசல் வட்டியாக செலுத்த வேண்டிவரும். ஒவ்வொரு ஆண்டும் கடன் பெறாமல் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது என்ற நிலைக்கு புதுச்சேரி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 2007-2016 வரையிலான 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.500 கோடி வீதம் ரூ.4474 கோடி கடன் அதிகரித்துள்ளது.

நிதி ஒதுக்கீடுகள்

நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள்அனைத்து துறைகளுக்கும் குறிப்பிடப்படவில்லை. மிக முக்கிய துறைகளான கல்விக்குரூ.17 கோடி, விவசாயத்திற்கு ரூ.73.27 கோடி எனமிக குறைந்த அளவே நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடந்த பட்ஜெட்டில் (2015-2016) கல்விக்கு ரூ.200 கோடி, விவசாயத்திற்கு ரூ.113 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை விடமிகக் குறைவாகும். சுகாதாரத்திற்கு நிதிஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை. அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க திட்டவட்டமான போதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி மற்றும் புதிய உபகரணங்கள், மருத்துவ உதவி நிதி 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சம் உயர்வு, ஆரம்ப சுகாதார மையங்களில் ஒப்பந்த முறையில் மருத்துவர் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் உதவியுடன் வெளிப்புற சிகிச்சை சேவை செயல்படுத்தப்படும் என்பது மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை பின்பற்றி பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பயில முந்தைய காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் அரசு முயற்சிக்கவில்லை. தற்போதைய காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டிலும் குறிப்பிடப்படவில்லை. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவது, தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது, தனியார்மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசுஒதுக்கீட்டை பெறுவது, கிராமப்புற அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்குவது குறித்து அரசு கவலைப்படவில்லை.

விவசாயம்

விவசாயத்திற்கு ரூ.73.27 கோடி மட்டுமேநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட 40 கோடி ரூபாய் குறைவாகும்.பசுமை புரட்சியின் பொன்விழா ஆண்டும், அதற்கு வித்திட்ட தலைவர்களும் நினைவு கூறப்பட்டுள்ளன. ஆனால் விவசாயத்தை மேம்படுத்தவும், விளைநிலங்களை பாதுகாக்கவும் திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதும்இல்லை.மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விவசாயம் சீரழிந்து வருகிறது. மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 5 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் குறைந்துள்ளன. புதுச்சேரி மாநிலமும் இதில் விதிவிலக்கல்ல.

தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சியின் பயனாக நேரடிமற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும், அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய இலக்கை எட்டுவதற்கு பொருத்தமான தொழில் கொள்கை மற்றும் தொழிலாளர் கொள்கை உருவாக்குவதும், செயல்படுத்துவதும் அவசியமாகும். ஆனால் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட தொழில் கொள்கையிலும் முதலாளிகள் சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தாராளமான சலுகைகள், திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. புதுச்சேரி தொழில் மேம்பாட்டு கழகம்(ஞஐஞனுஐஊ) 1970 முதல் தொழில் துவங்ககுறைந்தவாடகையில் நிலம் மற்றும் கடன் வழங்கிவருகின்றன. பிஐ பிடிஐசி தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால், அந்தஇடத்தில் புதிய முதலீட்டாளர் தொழில் துவங்கஅனுமதிக்கப்படுகிறது. மேலும் இடவாடகை, பராமரிப்பு, குடிநீர் விநியோகம் ஆகியவை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3 கோடி பிப்டிக் நிறுவனத்திற்கு வருவாய் வருகிறது. இதனால் தொழில்கள் வளரவும், புதிய முதலீடுகளுக்கு துணைபுரிவதும் நடைபெறுகிறது. இந்த நோக்கத்தை சீரழிக்கும் வகையில் முதலாளிகள் கேட்டுக்கொண்டதால் பிஐபிடிஐசி இடத்தை முதலீட்டாளர்களுக்கே சொந்த மனைகளாக மாற்றுவது என அரசு அறிவித்துள்ளது இது பிப்டிக் நிறுவனத்தின் அழிவிற்கும், தொழில் அபிவிருத்திக்கும் எதிரானதாகும். இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றிய ரோடியர்-சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இயக்குவது குறித்து பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.லாபத்தில் இயங்கிய கூட்டுறவு நூற்பாலைகள் மற்றும் சர்க்கரை ஆலை ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவது என்ற அறிவிப்பு மாநில நலன்களுக்கு எதிரானதாகும்.

வேலையின்மை

புதுச்சேரியில் 2.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளனர். வளர்ந்து வரும் வேலையின்மை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. படித்த இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கி வேலை அளிப்பது, மூடியஆலைகளை திறப்பது, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்ற தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த பட்ஜெட்டில் எந்த முகாந்திரமும் இல்லை.தனியார் தொழிற்சாலைகள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது, உள்ளூர் தொழிலாளிகளுக்கு வேலை அளித்திட மறுப்பது, சமூக விரோதிகள், காவல்துறையினரின் ஒத்துழைப்போடு ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது போன்ற கொடுமைகள் பரவலாக நடைபெறுகிறது.மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள்கொல்லைப்புற வழியாக பணம் பெற்றுக்கொண்டு தேவைக்கும் அதிகமாக பணி நியமனங்களை செய்கிறது. இத்தகைய நடவடிக்கையால் பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் பல மாதங்கள் சம்பளம் வழங்கப்படாத நிலைக்கு நட்டத்தில் தள்ளப்படுகின்றன. மறுபுறத்தில் ஆட்சி மாறும்போது பலர்வேலையிலிருந்து நீக்கப்படுவதும், வேலைக்காக கொடுத்தப் பணம் கிடைக்காமல் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளன.

கிராமப்புற வேலைத்திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100நாள் வேலை அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இத்திட்டம் முந்தைய காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் 65 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அனைத்து குடும்பங்களுக்கும் 100 நாள் வேலை வீதம் 65 லட்சம்மனித வேலை நாட்கள் உருவாக்கப்படுவதில்லை. கடந்த 2012-2013ல் 8.54 லட்சம், 2013-2014ல் 12.16 லட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டன. நடப்பு பட்ஜெட்டில் அதிகவேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு, மனித வேலை நாட்கள் குறித்தும திட்டவட்டமான அறிவிப்பு ஏதும் இல்லை. கிராமப்புற மக்களின் வறுமை ஒழிப்பு குறித்தும் அரசு கவலைப்படவில்லை.

தொழிலாளர் பிரச்சனை

உழைப்பு சக்தியில் 85 சதவீதம் தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளர்கள். மாநில பொருளாதாரத்தில் முறைசாராத் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். இவர்களின் நலன்களை பாதுகாக்க முறைசாராத் தொழிலாளர் சமூகபாதுகாப்பு சட்டம் 2009-ஐ முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. மத்திய சட்டத்தை பின்பற்றி நலவாரியம் அமைக்க முந்தைய காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் அரசுகள் முயற்சிக்கவில்லை. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசும் பட்ஜெட்டில் நலவாரியம் அமைப்பது குறித்து குறிப்பிடவில்லை. முறைசாராத் தொழிலாளர் நலத்திற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஆதிதிராவிடர் நலன்

ஆதிதிராவிட நலவழித்துறைக்கு ரூ.155 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும்வாழ்க்கை தரம் உயர்வதற்கும் ஏற்ற பொருத்தமான திட்டங்களை செயல்படுவதில்லை. இதனால் சிறப்பு கூறு நிதி தேவையற்ற செலவினமாக மத்திய தணிக்கை குழு சுட்டிக்காட்டுவதும், வேறு துறைகளுக்கு மடைமாற்றம் செய்வதும் தொடர்கதையாகிறது.

உள்ளாட்சித் தேர்தலும்

அதிகாரப் பரவலாக்கமும்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி பட்ஜெட் உரையிலும், சட்டப்பேரவை கூட்டத்திலும் இடம்பெறவில்லை. 1968க்குப் பிறகு நடைபெறாமலிருந்த தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 2011 ஜூலையில் நடைபெற வேண்டியஉள்ளாட்சித் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் தவிர்த்தது. மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டால் உச்சநீதிமன்றம் 14.12.2012ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை 2 மாதத்தில் பெறுவது, 2 மாதத்தில் தொகுதிமறுசீரமைப்பை முடிப்பது. 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது என்ற தீர்ப்பை அந்த அரசு அமலாக்கவில்லை. மொத்தத்தில் காங்கிரஸ் அரசின் நடப்பு பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத, ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது. நிதிமுறைகேடு, ஊழல், ஊதாரித்தனம், கொல்லைப்புற பணி திணிப்பு ஆகியவற்றில் பாதித்துள்ள மாநிலத்தின் வளர்ச்சியை மீட்டெடுக்க எந்த திட்டமும் இல்லை. மக்கள் விரோதக் கொள்கைகளால் என்.ஆர். காங்கிரசும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே உள்ளன.

கட்டுரையாளர்: சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர். புதுச்சேரி

Leave a Reply