பிரச்சாரத்தில் இடம்பெற வேண்டியது என்ன?
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கை வெளியாகி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தலாக இது அமைந்திடவிருக்கிறது. தேர்தல் முடிவுகள், அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற-ஜனநாயக-குடியரசின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைந்திடும் என பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் விவரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் – விவசாயத்துறை, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்துத்துறைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கக்கூடிய சூழலில்தான் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, தேர்தலின்போது மக்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் தட்டிப்பறித்துள்ள பிரச்சனைகள் மீது மக்களின் கவனத்தைக் கொண்டுவருவது அவசியமாகும் என தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.
விவசாய நெருக்கடி, விவசாயிகளின் வாழ்வை மிகவும் கொடூரமான முறையில் சூறையாடியிருக்கிறது. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய விவரங்களின்படி, கடந்த 2018 (அக்டோபர்-டிசம்பர்) காலாண்டுக்கான விவசாய வருமான வளர்ச்சி என்பது கடந்த 14 ஆண்டுகளில் இருந்ததைவிட மிகவும் குறைவு என்று குறிப்பிட்டிருக்கிறது. அதேபோன்றே கிராமப்புற மக்களின் ஊதியங்கள் என்பதும் 2014க்கும் 2018க்கும் இடையிலான காலத்தில் 0.5 சதவீதம் என்ற விதத்தில் மிகவும் அற்ப அளவிற்குத்தான் உயர்ந்திருக்கிறது.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, தேசிய மாதிரி ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, (இதனை வெளியிடாமல் மோடி அரசாங்கம் மூடிமறைத்திருக்கிறது) வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் மிகவும் உச்சபட்ச நிலைக்குச் சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறது. சிஎம்ஐஇ எனப்படும் இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் (ஊஆஐநு-ஊநவேசந கடிச ஆடிnவைடிசiபே வாந ஐனேயைn நுஉடிnடிஅல) அறிக்கையின்படி, வேலையின்மை விகிதம் 2018 பிப்ரவரியில் 5.9 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் 7.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம் என்னும் மோடி அரசாங்கத்தின் கேடுகெட்ட நடவடிக்கை காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் ஏற்பட்ட நாசகரமான விளைவுகளை மக்களிடம் அம்பலப்படுத்திட வேண்டும்.
மோடி ஆட்சியில் கூட்டுக்களவாணி முதலாளித்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் கள்ளக் கூட்டாளியாக அமர்த்தப்பட்டு மிகப்பெரிய ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதிலிருந்தே இதைப் பார்க்க முடிகிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் உட்பட நாட்டின் ஆறு விமான நிலையங்களை அதானி நிறுவனத்திடம் தாரை வார்த்திட மத்திய மோடி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் படிப்படியாகக் கைகழுவிவிட மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களை மிகவும் பாதிக்கக்கூடிய விதத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட முனைந்துள்ளது.மோடி ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்றுள்ளதைப்போல, அரசமைப்புச் சட்டத்தின் நிறுவனங்கள் மற்றும்
குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீது மிகவும் மோசமானமுறையில் தாக்குதல்கள் ஏற்பட்டதை நாடு முன்னெப்போதும் பார்த்ததில்லை. அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அடிப்படைகள் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. மதச்சிறுபான்மையினர் குறிவைத்துக் கொடூரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மோடி அரசாங்கம் அனைத்துத்துறைகளிலுமே படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப்பின், மக்கள் மத்தியில் போர் வெறி உணர்வைக் கிளப்பிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ஆயுதப்படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மிகவும் இழிவானமுறையில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. இது, மோடி அரசாங்கம் ஒன்றால் மட்டுமே நாட்டைப் பாதுகாத்திட முடியும் என்றும், பாஜக அரசாங்கத்தின் கைகளில் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருந்திடும் என்றும் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தைக் கொண்டு செல்லும் முயற்சியாகும். இந்த அடிப்படையில் பாஜகவும் அதன் ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்களும் மேற்கொண்டுவரும் வெறித்தனமான பிரச்சாரம், எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேலையின்மை, விவசாயிகளின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதேச்சதிகாரத் தாக்குதல்கள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் அனைத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் படுமோசமான முறையில் படுதோல்வி அடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், பயங்கரவாதம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவை குறித்த பிரச்சாரத்தை நாம் தவிர்த்திட வேண்டும் என்று பொருள் அல்ல. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்திட, எல்லையிலிருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவ நடவடிக்கை மட்டுமே தீர்வு என மோடி அரசாங்கம் பேசிக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் துணிவுடன் கேள்விக்கு உட்படுத்திட வேண்டும். 2016 செப்டம்பரில் நடைபெற்ற ‘துல்லியத் தாக்குதல்’. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவில்லை என்பதையும், அதன்பின்னர் தற்போது புல்வாமாவில் நடைபெற்றுள்ள கொடூரமான அட்டூழியத்தை நாம் பார்த்திருக்கிறோம் என்பதையும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். பாலக்கோடு தாக்குதல் ஏதேனும் பயனை அளித்திருக்கிறதா? என்பதையும் பேச வேண்டும்.
பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தத்தை எப்படி முடித்திருக்கிறார் என்பதையும், தமது கூட்டுக்களவாணி நண்பனின் நலன்களை எப்படி மேம்படுத்தியிருக்கிறார் என்பதையும் பிரச்சாரத்தில் முன்னெடுத்துச் செல்லும் அதே சமயத்தில், இது கூட எந்த அளவிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு கேடு பயக்கும் செயல் என்பதையும் விளக்கிட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, காஷ்மீர் பிரச்சனையை அரசியல்ரீதியாக எதிர்கொள்வதில் மோடி அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதையும், அதன் செயல்பாடுகள் காஷ்மீர் பிரச்சனையை மேலும் மோசமாக்கி இருக்கிறது என்பதையும் பிரச்சாரத்தின்போது அம்பலப்படுத்திட வேண்டும்.
மோடி அரசாங்கத்தின் வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் படுபிற்போக்குத்தனமான சமூகக் கண்ணோட்டத்திற்கு ஓர் உண்மையான மாற்று என்பது, எவ்விதமான சமரசத்திற்கும் இடமின்றி ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்திடக்கூடிய விதத்தில் ஒரு மாற்று மேடை முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.
ஒரு மாற்று மேடையின் அவசியத்தையும், அதனைச் சுற்றி அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வேண்டியதையும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளிடமும் எடுத்துச் சென்று, சரியான புரிதலை உருவாக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் உயர்த்திப்பிடித்திட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி