சென்னையில் பி.ஏ. வரலாறு படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தேன். எஸ்.எஃப்.ஐயில் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி எனக்கு வகுப்பெடுக்கப் பட்டது. இதன் மூலம்தான் வாசிப்பை நோக்கி நான் ஈர்க்கப்பட்டேன். வாசிப்புக்குத் தூண்டுகோலாக இருந்த இருவரைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருவர், சி.பி.எம்-மின் மாநிலத் தலைவர்களுள் ஒருவரான வி.பி. சிந்தன்; இன்னொருவர், அன்றைய இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவராக இருந்த என்.ராம்.
வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் என்னை மிகவும் பாதித்தது எமிலி பேர்ன்ஸின் ‘மார்க்ஸிஸம் என்றால் என்ன?’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம். அதுவரை நாம் வாழ்ந்துவந்த சமூகத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட பார்வையை அந்த நூல்தான் எனக்கு முதன்முதலில் அளித்தது. சமூகம் எப்படி இயங்குகிறது? ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கப்படும் வர்க்கம் என்று சமூகம் எப்படி இரண்டாகப் பிளவுற்றுக் கிடக்கிறது?…
இதுபோன்ற சிந்தனைப் போக்கை என்னுள் ஊன்றிய புத்தகம் அது. கூடவே, ஜூலியஸ் பூசிக்கின் ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ புத்தகத்தையும் சொல்ல வேண்டும். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய ‘மார்க்ஸிய மெய்ஞானம்’ புத்தகம் எனது மார்க்ஸியப் புரிதலை மேம்படுத்திய புத்தகங்களுள் ஒன்று. அதே காலகட்டத்தில் பலரைப் போலவும் எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை’. முன்னேற்றப் பதிப்பகத்தின் பல்வேறு வெளியீடுகள்தான் என்னைப் போன்றவர்களை வளர்த்தெடுத்தன.
காந்தியின் ‘சத்திய சோதனை’ நான் வாசித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. தாக்கத்தை ஏற்படுத்தும், பின்பற்றத்தக்க தனது வாழ்க்கையை அதில் காந்தி வடித்திருப்பார். ‘சத்திய சோதனை’ நூலில் புத்தக வாசிப்பு குறித்த பகுதி ஒன்றும் வரும். தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்தபோது ஜோஹன்னஸ்பர்கிலிருந்து டர்பனுக்குப் புறப்படுகிறார். அப்போது அவரது நண்பர் கொடுத்த புத்தகம்தான் ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’.
பயணம் முடிவதற்குள் அதைப் படித்து முடித்த காந்தி ‘இந்த புத்தகம் என்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது’ என்றிருக்கிறார். தமிழில், மகாகவி பாரதியின் கவிதை மட்டுமல்லாமல் அவரது உரைநடையும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதிதாசனும் பிடிக்கும். கல்லூரிக் காலத்தில் இன்குலாப், இளவேனில் ஆகியோரது கவிதைகளால் உந்துதல் பெற்றேன்.
சமீபத்தில் படித்த புத்தகங்களில் முக்கியமானது ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’. மத ஒற்றுமைக்காக அந்த மனிதர் எந்த அளவு போராடியிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் படிக்கும்போது சிலிர்க்கிறது.
– கேட்டு எழுதியவர்: ஆசை