வெறும் இருநூறு… பதினொரு லட்சம் ஆன வரலாறு

No photo description available.
மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்)

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கழுகுக் கண்கள் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது 1934இல் தடை விதித்தபோது, 200 பேர்தான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் !

சட்டரீதியாக இச்சவாலை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்து தடையைத் தகர்த்து வெற்றிபெற்றபோது 5000 ஆனது உறுப்பினர் பதிவு! இத்தனைக்கும் தடை விலகினாலும், கடும் அடக்குமுறைகள் தொடர்ந்தன.

அதன் பின்னும், இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் கம்யூனிச லட்சியத்திற்கு எப்படி வென்றெடுக்க முடிந்தது ? கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக அவர்களை மாற்றுவது எப்படி சாத்தியமானது? கோழிக்கோடு அகில இந்திய கட்சி மாநாட்டில் சிபிஎம் உறுப்பினர் எண்ணிக்கை 10,44,833 என்பது பிரம்மாண்டம் அல்லவா!

உலக நாகரிகம் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன வரலாற்றில் 1917 தொடங்கி மகத்தான சோவியத் புரட்சி 75 ஆண்டுகளில் மனிதநேய கலாச்சாரத்தையே புரட்டிப் போட்டு சாதனை படைத்தது! மகத்தான ரஷ்யப் புரட்சியின் விளைவாக பூமியின் கால்பங்கு செம்மையானது!

மக்கள் சீனமும் வீரவியட்நாமும் புதிய பாதையைக் காட்டின. இன்றைய உலகமயமாக்கல் காலகட்டம் சோஷலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவை ஊதிஊதிப் பெரிதாக்கி சோஷலிசம்-கம்யூனிசம் புதைக்கப்பட்டுவிட்டது என்று இளைஞர்களிடையே பிரச்சாரம் செய்கிறது. சோஷலிச லட்சியம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களும், அதன் கீழ் இயங்கும் ஊடகங்களும் 24 மணி நேரமும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது இப்படி இருக்கையில் கம்யூனிஸ்ட் கட்சி, இயக்க வரலாறுகளை போப்பாண்டவர் உள்ளிட்ட மதகுருமார்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் படிக்கத் தலைப்பட்ட விந்தையையும் புதுயுகம் காண்கிற நகைமுரணான நிகழ்காலத்தில் நாம் வாழ்கிறோம்!

உண்மையிலேயே கம்யூனிஸ்ட் லட்சியம் காலாவதியாகிப் போய்விட்டதா? இது உண்மையா? வரலாறு என்ன சொல்கிறது?…

ஒரு நிமிடம், வரலாற்றுப்பாடமே தேவை இல்லை என்னும் விதத்தில் கூட உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்லப்படுகிறது! வரலாறு என்பது உண்மையிலேயே பயனுள்ளதா? அரசர்கள் ஆண்ட காலம்தான் வரலாறா? சமூகவரலாற்றிற்கு இதில் தொடர்பில்லையா? கடந்துவந்த பாதை கடினமானது என்பதை அறிய வரலாறு அவசியம்.

அதுவும் கம்யூனிச இயக்கம் தோன்றிய வரலாறு அறிவது மிக மிக அவசியம். உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றம் அவ்வளவு எளிதானதல்ல. கடும் அடக்குமுறைக்கு எதிராக, முதலாளித்துவம் அத்தனை அடக்குமுறை எந்திரங்களையும் அவிழ்த்துவிடும்.

இந்தியாவிலும் அப்படித்தான், எப்படி இது சாத்தியம்? இந்திய தேசிய காங்கிரசிற்குள் இருந்துகொண்டே சோஷலிச லட்சியங்களை தீவிரமாக கொண்டு செல்ல இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்ற தலைவர்கள் செயல்பட்டது உண்டு. மிக பகிரங்கமாக அறிவிக்காமலேயே உள்ளிருந்து செயல்பட்டதன் விளைவு?

ஜோடிக்கப்பட்ட சதிவழக்குகளில் கைதான காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்து புடம்போட்டு எடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களாக வெளிவந்தனர். தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி புத்தகங்களையும் பிரசுரிக்கப்பட்ட ஆவணங்களையும் ரகசியமாக நாட்டுக்குள் கொண்டுவந்து விநியோகித்து படிக்கச் செய்வது எவ்வளவு கடினமான காரியம்! இந்தியாவின் முதல் தொழிற்சங்க இயக்கம் கட்டியது, விவசாய இயக்கம் கட்டி சவுக்கடியும், சாணிப்பாலும் திணித்த சமூக அநீதிக்கு எதிராக சாட்டை சொடுக்கி, இடுப்பில் கட்டிய துண்டை பெருமிதமாக அவர்கள் தோளில் போடச் செய்த கதை எத்தனை பெரும் வரலாறு!

மதவாதம் மூலம் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அம்பலப்பட்டு இளிக்கும் அவலத்தைப் பட்டவர்த்தனமாகக் காணும் நாம் உண்மையில் தேச ஒற்றுமை காக்க கம்யூனிஸ்ட்டுகள் செய்த தியாகத்தை அறியவேண்டாமா?

தொழிற்சங்கம் வளர்த்ததோடு, தமிழகம் தொழில் வளர்ச்சியில் கணிசமாக பங்கு வகிக்க பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் செய்த அளப்பரிய பணிகள் என்னென்ன?

தமிழக, புதுச்சேரி சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பணி எவை எவை?

தமிழ் ஆட்சிமொழியாக இடம்பெற பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா வ.சுப்பையா உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன?

கலை-இலக்கிய- பண்பாட்டு வளர்ச்சியில் ப.ஜீவானந்தம், கே.முத்தையா உள்ளிட்டோர் ஆற்றிய பணிகள் எவை?

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் எவ்வாறு முக்கிய பங்கு ஆற்ற முடிந்திருக்கிறது!
  • ஊழல்கறை படியாத கம்யூனிஸ்ட்டுகள், எளிமையான எம்.எல்.ஏ.க்கள் என புதிய வார்ப்புகள் பொதுவுடைமை முகாமிலிருந்துதானே வந்தனர்!
  • மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா இடதுசாரி முன்னணி அரசுகளின் சாதனைகள் என்னென்ன? மார்க்சிஸ்ட் கட்சித்தலைமையில் 35 ஆண்டுகாலம் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் தொடர்ந்தது இமாலய சாதனை அல்லவா!

தன்னடக்கம் கருதி தனது சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டாம் என்று எளிய தலைவர்கள் இத்தனை காலம் சொல்லாததை, பலவீனமாக நினைத்து முதலாளித்துவ ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ய முயலும்போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்கிற உணர்வு எழுவது நியாயம்தானே!…

மொத்த தியாகத்தையும் எழுதத் துவங்கினால்  இமயமலை தொடங்கி கன்னியாகுமரி வரை நீண்டுவிடக்கூடும்!…

Leave a Reply