இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-புதுச்சேரி
அகில இந்திய வானொலி புதுவை தொலைக்காட்சி தேர்தல் பிரச்சார உரை:
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 16ல் 2016 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்முதலாக வாக்களிக்க கூடிய புதிய இளம் வாக்காளர்களையும், இதர வாக்காளா ப் பெருமக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய வானொலி, புதுவை தொலைக்காட்சி மூலம் நடைபெறும். தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். வணக்கம்
இந்திய அரசியல் வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற உயிர் பலிகளை தந்த தியாகம் நிரம்பிய தலைவர்களால் வழிநடத்தப்படுகின்ற கட்சிதான் மார்க்சிஸ்ட் கட்சி. விடுதலைக்கு பின்னரும் ஆட்சியிலிருந்த மாநிலங்களில் எவ்விதமான ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத கட்சி மார்க்சிஸ்ட் கட்சி எளிமையும், அர்ப்;பணிப்பும் கொண்ட ஊழியர்கள் நிரம்பிய கட்சி.
33 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணிக்கு தலைமை வகித்து கூட்டணி ஆட்சிக்கு முன் உதாரணமாய் இருந்த கட்சி. கேரளா, திரிபுரா மாநிலங்களில் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்து இந்திய நாட்டிற்கு பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக மாநிலத்தை வழிநடத்திய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. ஆடம்பரமற்ற அரசியல் வாழ்க்கைக்கு சொந்தகாரகளாகவும் அனைத்து பகுதி மக்களும் அணுகக்கூடிய மக்கள் தலைவர்களையும் கொண்ட கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. இந்திய அரசியல் வானில் ஊழலற்ற, அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல் இயக்கமாய் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
இத்தகைய பின்புலத்தோடு புதுச்சேரி மாநிலத்தில் வரகூடிய சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இக்கூட்டணி வரக்கூடிய புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி இத்தேர்தலில் களம் காண்கிறது.
இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தே.மு.தி.க, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருகின்றன.
தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது என்பது வழக்கமான நடைமுறையாகும். மக்கள் நலனை முன்னிறுத்தி குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அரசியல் அணிச்சேர்க்கை உருவாகியிருப்பது புதுச்சேரியில் ஆரோக்கியமானதாகும். கடந்த கால வரலாற்று பின்புலத்திலிருந்து மக்கள் நல கூட்டணி புதிய நம்பிக்கையான மாற்றாக உருவாகி வருகிறது.
புதுச்சேரி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் நீண்ட காலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. மாநிலத்தின் வளமும், தொழிலாளர் உழைப்பும் சுரண்டப்பட்டன. இதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியரின் தலைமையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நேரம், கூலி உயர் ஆகியவற்றிக்காக போராடினார்கள். போராடியத் தொழிலாளர்கள் மீது பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் களப் பலியானார்கள். பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்.
தொழிலாளர் வர்க்கத்தின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக புதுச்சேரிக்கு மட்டுமின்றி ஆசியாக்கண்டம் முழுமைக்கும் 8 மணி நேர வேலை உரிமை கிடைக்கப் பெற்றது என்பது யாராலும் மறைக்க முடியாக வரலாற்று உண்மையாகும்.
இந்த பின்னணியோடு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திற்கும், உழைக்கும் மக்களின் பேராட்டத்திற்கு தலைமையேற்ற கம்யூனிஸ்கட்சியின் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி புதுச்சேரியில் இத்தேர்தலை சந்திக்கிறது. கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளும், ஆளுகின்ற கட்சிகளும் சட்டமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியிருகின்றது. அதற்கு நல்ல உதராணம் சமிபத்தில் நடந்த ஓரே ஒரு உறுப்பினர்க்கான நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல். ஆளும் என்.ஆர் காங்கிரஸ்க்கு மெஜாரிட்டி இருந்தும் தன்னுடைய சொந்தகட்சி உறுப்பினர்களை நம்பாமல் 5 உறுப்பினர்களை கொண்ட மற்றொரு கட்சியிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தன்கட்சி ஆதாரவாளராய் இருந்தவர் 10 மணிக்கு அந்த கட்சியில் சேருகிறார் 12 மணிக்கு அக்கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர்ராகிறார் பின்னர் நாளுடமன்ற உறுப்பினாராகிறார். இரண்டே உறுப்பினர்களை கொண்ட கட்சி சார்பிலும் போட்டிக்கான முயற்சிகளும் பணப்பெட்டிகளுடன் நடந்தேரின. பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ்சும் இக்கேளிக்கூத்தில் பங்கேற்றது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுடைய நலம், விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில், சில்லறை வர்த்தகம், பெருவர்த்தகம் என புதுச்சேரியில் அனைத்து பிரிவு மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களைத்தான் புதுச்சேரி சந்தித்திருக்கிறது.
அன்றாடம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுக, திமுக, விலை உயர்வு, பொருளாதார சீரழிவுக்குக் காரணமான கொள்கைகளைக் கடைபிடிக்கும் காங்கிரஸ், வகுப்புவாத பி.ஜே.பி., துணை போகும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் சாதியத்தைக் தாங்கிப் பிடிக்கும் பா.ம.க. ஆகிய கட்சிகளைத் தோற்கடிப்போம். 14 வது சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மாற்றாட்சியை உருவாக்கிடுவோம். கொள்கை அடிப்படையில் நேர்மையான, வெளிப்படையான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மக்கள் நல கூட்டணி தேமுதிக, தாமாக சார்பில் இத்தேர்தலை சந்திக்கிறது.
அரசியலில் நேர்மையும், தூய்மையும் காப்பாற்றப்படுவதன் மூலம் சமூகத்திலும் ஆரோக்கியமான அரசியல் சிந்தனைகள் உறுதி செய்யப்படும். தனி நபர் ஆதிக்கத்திலிருந்து ஆட்சி அதிகாரம் மீட்டெடுக்கப்பட்டு கூட்டு செய்லபாட்டை உருவாக்குவோம். சட்டமன்ற ஜனநாயக மாண்புகள் காக்கவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவும் வழிவகை காணப்படும்.
அரசு நிர்வாகத்தில் ஊழலைக் களைந்து வெளிப்படையான, திறமை மிக்க நிர்வாகத்தினை உருவாக்குவோம். அதிகாரத்தைப்பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம். ஆட்சியில் இருந்தவாக்ளின் ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். முதல் அமைச்சர் உட்பட அனைத்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான உயர்மட்ட ஊழல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
இந்திய நாட்டில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான உலகமயம், தாராளமயம் மற்றும் புதிய தனியார் மயக்கொள்கைகள், ஏழை மற்றும் பணக்காரர்களிடையே மிகப்பெரிய இடைவெளியை அதிகரித்துள்ளன. இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பா.ஜ.க.அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக்கூட்டணி முன்னெடுத்துச் செல்லும். மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை உறுதியாக எதிர்ப்போம்.
இந்திய மக்களின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை உடைப்பதே மதவெறி சக்திகளின் நோக்கமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் நாட்டின் பாரம்பரிய பன்முகத்தன்மைக்கு விரோதமாக மதவெறி கருத்துக்களைப் பரப்பி கலவரங்களை உருவாக்கி வருகின்றன. மத்திய அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி இந்துத்துவ கொள்கை சார்ந்த நடவடிக்கைகளைத் தீவரப்படுத்தியுள்ளதோடு, வரலாற்றைப் பின்னோக்கி இழுத்திடும் முயற்சியைச் செய்து வருகிறது. இக்கட்சிகளுக்கு எதிராக மக்கள் நலக்கூட்டணி புதுச்சேரி அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இணைந்து வாழும் மாநிலமாக திகழச்செய்யும், முற்போக்கு பகுத்தறிவுக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன், கருத்து சுதந்திரத்தையும், படைப்பாளிகளையும் பாதுகாக்கும். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யும்.
சாதி வெறி சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக மோதல்களைத் திட்டமிட்டு நடத்தி வருவதோடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்திட முயற்சித்து வருகின்றன. சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்குப் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. சாதிய அரசியலை உருவாக்கி சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துவருகின்றன. இவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் முழுமாநில அந்தஸ்து பெறுவோம் என்றனர். ஆனால் அது வெறும் வாய்பந்தலாகவே இருக்கிறது. மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அதிகாரமற்ற, ஜனநாயகமற்ற அமைப்பாக உள்ளது. பட்ஜெட், திட்டம், சட்டம், கடன் உதவி பெறுதல் உட்பட அனைத்திற்கும் மத்திய அரசின் உள்துறையின் அனுமதி பெற வேண்டியுள்ளது. அரசு உயர் பதிவிகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க பணி நியமனத் தேர்வாணையம் அமைக்க இயலாக நிலைத் தொடர்கிறது. மாநில வருவாய் மத்திய அரசுக்கு செல்கிறது ஆனால் மாநிலத்திற்கான பங்கு வழங்கப்படவில்லை.
ஆகவே. மக்களுக்கான அதிகாரம் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் சார்ந்த கோரிக்கையாக மட்டும் உள்ள முழு மாநில அந்தஸ்து என்பதை மக்களின் கோரிக்கையாக கொண்டு சென்ற மத்திய அரசை வலியுறுத்தி முழு மாநில அந்தஸ்து பெற உறுதியாய் போராடுவோம். பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சியுள்ள அதிகாரங்களை மாநிலத்திற்கு வழங்கிட வலியுறுத்தப்படும்.
புதுச்சேரியின் அனைத்து பிரச்சனைகளுள் முதன்மையானது கடன் நிலுவை மற்றும் நிதி நெருக்கடியே ஆகும். மத்திய, மாநில அரசுகளின் கொள்கை, செயல்பாடு, நிதி நிர்வாகமே கடனில் சிக்கியுள்ளதற்கு மூலக்காரணமாகும். ரூ.6300 கோடி கடனுக்கு நாளொன்றுக்கு 1 கோடியே 50 லட்சம் வட்டி செலுத்துவது என்ற நிதிச்சுமை நெருக்கடியாக அதிகரித்துள்ளது. இதனால் அரசின் செயல்பாடுகளில் முடக்கம், வளர்ச்சியில் தேக்கமும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சிந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக, மத்திய அரசு மாநிலத்திற்கான நிதி உதவியைக் குறைத்துவிட்டது. இக்குறைகளை களையவும் நிலுவை கடன் மற்றும் வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புதுச்சேரியில் சட்டம், ஒழங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, திருட்டு, வழிப்பறி, சிறையில் இருந்து மிரட்டுவது போன்றவைகள் அதிகரித்துள்ளன. மாத ஊதியம் பெற்றுக்கொண்டு கடமையைச் செய்வதற்கே லஞ்சம் பெறுவது, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு லாட்டரிக்குத் துணைப் போவது, சிறுமிகள் பாலியியல் என்று காவல் துறை சீரழிந்துள்ளது. ஒருசில அரசியல்வாதிகள்- காவல்துறையினர்- ரவுடிகள் இடையே கூட்டு உருவாகி அரசியலும், காவல் துறையும் குற்றமயமாகி வருகிறது. இத்தகைய நிலைகளுக்கு எதிராக எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காவலர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும், 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும், சமூக விரோதக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் வீடு, மனை, நிலம் அபகரிப்பதைத் தடுக்க பத்திரப் பதிவு துறையில் நவீன மின்னணு தொழில் நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும்.
இடஒதுக்கீட்டு கொள்கையை ரத்து செய்யத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளின் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து சமூக நீதி வலுப்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படும். அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தெய்வ வழிப்பாட்டுத் தளங்களிலும் சாதி வேறுபாடின்றி வழிபடும் உரிமை நிலை நாட்டப்படும். பாரம்பரிய கிராமப்புற கலைகள் மீண்டும் புத்துயிர் பெறவும் மற்றும் கலைஞர்களின் நலனும் பாதுகாக்கப்படும். திருநங்கைகளுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் சிறப்புக் கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட தனிச்சட்டம் கொண்டு வரப்படும். சுயமரியாதையோடு வாழ்வதற்கு அவர்களின் தேவையறிந்து, ஆலோசித்து முன்னுரிமை அடிப்படையில் செயல்திட்டங்கள் வகுக்கப்படும். சிறப்புக்கூறு நிதிமடைமாற்றம் செய்வது தடுக்கப்படும். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒதுக்கீடுகளில் தலித் மக்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் தொழில் தொடங்கிட கடனுதவி வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்காக சச்சார் குழு மற்றம் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மை மக்கள் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது வினியோகத்திட்டம் அனைவருக்கும் விரிவுப்படுத்தப்பபடும். வெளிச்சந்தை விலை உயர்வைக் கட்டுப்படுத்திட சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மானிய விலையில் தரமாக தங்கு தடையின்றி வழங்கப்படும். குடும்ப அட்டைதார்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் மாதம் 30 கிலோ தரமான விலையில்லா அரிசி வழங்கப்படும். அனைத்து மட்டங்களிலும் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும். பொருட்களுக்குப் பதில் பணம் வழங்கி சந்தை விலைக்கு மக்களைத் தள்ளிவிடும் மத்திய அரசின் நாசகரத்திட்டத்தை உறுதியாக மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம்;.
அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைத்திட மாநில பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் முன் காப்போம் திட்டங்களின் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன் கூட்டியே மேற்கொள்ளப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உரிய ஊட்டச்சத்தும், மருத்துவ சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
தனியார் மருத்துவ மனைகளில் 25 சதவீதம் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படும். உயர்மட்ட கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக்குழு அமைக்கப்படும். காரைக்காலில் உயர்தர மருத்துவமனை அமைக்கப்படும். இந்திய மருத்துவ முறைகள் பிரபலமாக்கப்படும். லாபநோக்கு இல்லாமல் அரசே மருந்தகங்களை அமைத்து விற்பனை மேற்கொள்ளப்படும்.
ஆரம்பக் கல்வி முதல் மருத்துவக்கல்வி வரை தனியார் மயமாக்கப்பட்டு வியாபாரப் பொருளாகியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகி வருவதைக் கட்டுப்படுத்தப்படும். பட்ஜெட்டில் கூடுதல் நிதி கல்விக்கு ஒதுக்கப்படும். அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள். போதுமான ஆசிரியர்கள் நியமனம் ஆகியவை செய்து மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்.
தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்கள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடங்களிலும் 25 சதவீத ஒதுக்கீடு. ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மற்றும் சார்பு படிப்புகளிலும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். புதுச்சேரி மாநில வரலாற்றை உள்ளடக்கிய தாய்மொழி வழியிலான மத்தியக் கல்வி வாரியப்பாடத்திட்டம் அமுலாக்கப்படும். உயர்க்கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்.
தேக்க முற்றிருக்கும் நிலச்சீர்திருத்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உபரி நிலங்களைப் பொது தேவைக்குப் பயன்படுத்த நில வங்கியாக அறிவித்திட சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். புதுச்சேரி மாநிலத்தைக் கூறுபோட்டு அண்டை மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்திட தடைவிதிக்கவும், ரியல் எஸ்டேட்டை நெறிமுறைப்படுத்தவும் சட்டம் இயற்றப்படும்.
காரைக்காலுக்கு 6 வுஆஊ நீரைப் பெறவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் முயற்சிக்கப்படும். விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழை, நடுத்தர விவசாயிகளின் நகைக்கடன் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் அளிக்கப்படும். ஏழை நடுத்தர விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைகள் மற்றும் இடுபொருட்கள் 50 சதவீதம் மானிய விலையில் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்.
விவசாயிக் கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலை உத்திரவாதம் மற்றும் ஊதியம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் மற்றும் கிராமப்புற கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். விவசாய கூலித் தொழிலாளர்களுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கால்நடை வளர்ப்புத்திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த விவசாயத் தொழிலாளர் நலச் சங்கம் நல வாரியமாக மாறுதல் செய்யப்படும்.
அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ள பாலின பாகுபாடு கூடாது என்பது உறுதி செய்யப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடைச்சட்டம், பெண்களை இழிவபடுத்துவதற்கு எதிரானச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் உறுதியாக அமுலாக்கப்படும். சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திட சுயத்தொழில் பயிற்சியும், கடனுதவியும் வழங்கப்படும். முடக்கப்பட்டுள்ள மகளிர் மேம்பாட்டுக் கழகம் செயலூக்கம் பெறச் செய்து பெண்களுக்குக் கடனுதவி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் ஆணையம் செயலூக்கப்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். நாடாளுமன்றம் – சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுவோம்.
அரசுத் துறைகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரப் பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவது தடுக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் உருவாக்கப்பட்டு. கூட்டுப் பேர உரிமை நிலைநாட்டப்படும். புலம் பெயர் தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் கடை நிறுவன ஊழியர்கள் நலன் சட்டம் உருவாக்கப்படும். ஆட்டோ, சுமைப்பணி, கைத்தறி, சலவை மற்றும் விட்டு வேலை உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களைப் பாதுகாக்க முறை சாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மத்திய சட்டம் 2009ன் படி நல வாரியம் அமைக்கப்படும். தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15000 மற்றும் பென்ஷன் ரூ.3000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை முறைப்படுத்தி மேம்படுத்தப்படும். குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை முறை முழுமையாக ஒழிக்கப்படும்.
மீனவருக்குத் தனி அமைச்சகம் அமைக்க முயற்சிக்கப்படும். கடல் சார் படிப்பு, கடற்கரை வாழ்விடங்களில் உருவாகும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். காரைக்கால் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாவதைத் தடுக்க மத்திய அரசை நிர்ப்பந்தப்பபடுத்தப்படும். மீனவர் ஆயுள் காப்பீடுத் திட்டம் கொண்டு வந்து சந்தா தொகையை அரசே செலுத்தும்.
அரசு ஊழியர்களின் குறைகளைக் களைந்திட கூட்டு ஆலோசனைக்குழு அமைக்கப்படும். 6-வது. 7-வது சம்பளக்குழு பரிந்துரைகளின் முரண்பாடுகள் நீக்கப்படும். பழைய பென்ஷன் திட்டம் தொடர மத்திய அரசை வலியுறுத்தப்படும். அனைத்துத் துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய, பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அரசு பொதுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவன ஊழியர்களின் சம்பளப்பாக்கிகளை உடனடியாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்துப் பொதுத்துறை மற்றம் கூட்டுறவு துறைகளின் செயல்பாடுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்திட தொழில் நுட்ப உயர்மட்டக்குழு அமைத்து அறிக்கை பெற்று மேம்படுத்தப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து கூட்டுறவுத்துறை பலப்படுத்தப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி அதிகாரங்கள் பரவலாக்குவதை மாநில என்.ஆர். அரசு விரும்பவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், உச்சிநீதி மன்றம் வலியுறுத்தியும் தேர்தல் நடத்தாமல் ஏமாற்றி வருகிறது. இதனைக் களைந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட்டு அதிகாரம் பகிர்தளிக்கப்படும். மத்திய நிதி ஆணையம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைத்திட அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வலியுறுத்தப்படும். பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
நவீன தாராயமயக் கொள்கையின் விளைவாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. இதனால் வேலை வாய்ப்பின்மையும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன. சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத அதிக வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்னுரிமையும் உகந்த சூழலும் உருவாக்கப்படும். புதுச்சேரியில் பாரம்பரிய தொழிலான பஞ்சாலைகள் நூற்பாலைகள், கைத்தறித் தொழில்கள் நவீன மயமாக்கி பாதுகாக்கப்படும். பஞ்சாலைகளின் வியாபார பெருக்கத்தைக் கவனத்தில் கொண்டு, இலவச திட்டங்கள், சீருடைகளுக்குத் தேவையான துணி வகைகள் அவைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் தனியாரிடம் வாங்குவது ரத்து செய்யப்படும்.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அரசு மற்றும் தனியார் கட்டிடம், வீடுகளில் மடைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து ஏரி, குளங்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். படுகை அணைகள் மூலம் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். காரைக்காலில் புதியதாக ஏரிகள் வெட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையான சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்படும். உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பொது இடங்களில் இவர்கள் தடையின்றி புழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய நான்கு பிரதேசங்களுக்கிடையில் பண்பாடு, கலாச்சாரம் ரீதியிலான ஒற்றுமை பலப்படுத்தப்படும். நான்கு பிரதேசங்களின் சமச்சீரான வளர்ச்சிக்குத் திட்டமிடப்படும். அது முனைப்புடன் செயல்படுத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தின் உரிமை மற்றும் சுய சார்பை உயர்த்திப் பிடிப்பதோடு. முத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகளுடன் சமூக உறவு காக்கப்படும்.
தேர்தலில் பணபலம், கருப்புப் பணப்புழகத்தைத் தடுத்திட வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்றிடவும், முழுமைப் பெற்ற ஜனநாயகப் பங்களிப்பை உறுதி செய்திட எதிர்காலத்தில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டு வரவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மேற்கண்ட திட்டங்களும் ஆலோசனைகளும் செயல்வடிவம் பெற வருகின்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியிலிருந்து ஆனந்து அவர்களுக்கும், திருபுவனை தொகுதியிலிருந்து டு.கலிவரதன் அவர்களும், பாகூர் தொகுதியிலிருந்து ப. சிவகாமி அவர்களுக்கும், காரைக்கால் வுசுபட்டினம் தொகுதியிலிருந்து முகமது தம்மீம் அன்சாரி அவர்களுக்கும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், இதர கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்தில் முத்திரையிட்டு புதுச்சேரியில் மாற்றத்திற்கான அரசியலை தொடங்குவோம் ஊழலற்ற நேர்மையான சமச்சீரான வளர்ச்சிக்கு வித்திடுவோம். வெற்றி நமதே.