புதுச்சேரி அதிமுக அன்பழகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் !
புதுச்சேரி (ஜூலை 21, 2025):
வணக்கம். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், பாஜக தங்களது உள்கட்சிப் பூசல்களைத் தீர்க்கும் நோக்கில், அமைச்சரவையில் மாற்றங்களையும், புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனங்களையும் மேற்கொண்டுள்ளது. இதனால் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தலித் சமூகப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து. இதன் மூலம், சமூக நீதியை பாஜக பலிகொடுத்துள்ளது. மேலும் கோயில் நில கோசடி வழக்கில் தொடர்புடைய நபருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிவருகிறது. இதே கருத்தை ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக, புதுச்சேரி பாஜகவின் ‘வாயாக’ செயல்படும் அதிமுக அமைப்பாளர் அன்பழகன், மேற்கண்ட விமர்சனங்களை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2019 தமிழக பாராளுமன்ற தேர்தலில் திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கொடை பெற்றதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பை மீறியதாகவும் குற்றம்சாட்டி, அக்கட்சி உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம், அரசியல் கட்சிகள் செலவு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பது குறித்து நீண்ட காலம் ஒரு கட்சியின் மாநில அமைப்பாளராகவும், சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இருந்த அன்பழகனுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமளிக்கவில்லை. யாரையோ திருப்திப்படுத்த அன்பழகன் ஒரு ‘ஊதுகுழலாக’ மாறி, வாங்கிய பணத்திற்காக ‘ஊதிக்கொண்டிருக்கிறார்’.
இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையத்திடமும், வருமானவரித் துறையிடமும் நேர்மையாகக் கணக்குகளை ஒப்படைப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி நேர்மையான முறையில், உழைக்கும் மக்களிடம் நிதிதிரட்டி, முறையான கணக்குகளைப் பராமரித்து வருகிறது.
பகலில் பத்திரிக்கை அறிக்கைகள், இரவில் திரைமறைவில் பணப்பெட்டிகள் பரிமாற்றம் என அரசியல் நடத்தும் அன்பழகனுக்கு இவை புரியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கும் முதலியார்பேட்டை தொகுதியில் தன் சகோதரருக்கு சீட் பெறுவதற்காக பாஜக மற்றும் ஜான்குமாரை திருப்படுத்திட ‘அட்வான்ஸ்’ ஆக இந்த அவதூறு அறிக்கையை அன்பழகன் வெளியிட்டுள்ளது வெட்ட வெளிச்சம் ஆகிய உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் சமூக விரோத இந்துத்துவா சக்திகள் அதிகாரத்தில் காலூன்றக் கூடாது என்பதற்காக திமுகவுடன் அரசியல் கூட்டணியில் பங்கேற்றுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் உரிகைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதில் ஒருபோதும் தயங்குவதில்லை. தோழமைக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் யாருக்காகவும் ‘வாயாக’ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் விரோதச் செயல்பாடுகளில் சமரசமும் இல்லை. கொள்கை வழி நின்று அரசியல் இயக்கம் நடத்துபவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க அன்பழகன் அவர்களுக்கு தகுதியில்லை. இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்திய ஜூலை 9 பொது வேலைநிறுத்தம் குறித்த அவரது அறிக்கை சுயநலமிக்கது, தொழிலாளர்களுக்கு எதிரானது. அன்பழகன் சுயநல சக்திகளின் ‘வாயாகவும்’ இந்துத்துவா சக்திகளின் அரசியல் ஏஜெண்டாகவும் செயல்படுவது அவரது சொத்துக்களை விரிவுபடுத்தவும், பாதுகாத்துக் கொள்ளவும் உதவும். அவரது நடவடிக்கைகள் புதுச்சேரி மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது அரசியல் வாழ்க்கை புதுச்சேரி மக்களால் முடிவு கட்டப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன் அன்பழகனின் சொத்து மதிப்பு என்ன, தற்போது எவ்வளவு என்ற கேள்விகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியுள்ளது. அவரது அரசியல் நடவடிக்கைகளையும், ‘பித்தலாட்டங்களையும்’ புதுச்சேரி மக்கள் நன்கு அறிவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துப் பேசுவதற்கு அன்பழகனுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.







