இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு
பத்திரிகைச் செய்தி
வணக்கம். “சிறப்பு தீவிர சீர் திருத்தம் (Special Intensive Revision – SIR)” என்ற பெயரில், ஒன்றிய அரசு கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத அரசியலைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜ் சிலை அருகில் நாளை (08.08.2025) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்திய மக்களின் ஜனநாயகத்தையும், தேசத்தின் இறையாண்மையையும் தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம், அண்மைக்காலமாக ‘சிறப்பு தீவிர சீர் திருத்தம் (SIR)’ என்ற பெயரில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து, கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பெரிய அச்சுறுத்தல். இது லட்சக்கணக்கான மக்களை உள்ளூரிலேயே அகதிகளாக்கும் ஆபத்தை உருவாக்குகிறது.
ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. தேர்தல் ஆணையமே வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஒன்றிய அரசு வழங்கிய ஆதார் அட்டை, பான் அட்டை, மாநில அரசு வழங்கிய ரேஷன் அட்டை, 100 நாள் வேலை அட்டை என எதையுமே அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறது. மாறாக, கல்விச் சான்றிதழைக் கேட்கிறது. குறிப்பாக, பீகாரில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் கல்விச் சான்றிதழுக்கு எங்கே போவார்கள்?
ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், இந்த ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தக்கூடியவர்கள் தகுதியானவர்களா? மேலும், ஏற்கெனவே புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை வழங்கிய ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் குற்றவாளிகள் இல்லையா?
இத்தகைய கேள்விகளோடு, இன்றைக்கு பிகார் நாளை புதுச்சேரி என அரங்கேற உள்ள இந்திய ஒன்றிய அரசின் சதி முறியடிக்க, எங்களது கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் 2025 ஆகஸ்ட் 8 அன்று “பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் காமராஜ் சிலை அருகில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்நிகழ்விற்குத் தங்கள் செய்தியாளரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
எஸ். ராமச்சந்திரன்,செயலாளர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநிலக்குழு.








