கம்யூனிஸ்ட்  அறிக்கை

ரஷ்யப் புரட்சிக்கு மட்டுமல்ல… அதனைத் தொடர்ந்து நடந்த – நடக்கும் – நடைபெறப் போகும் அனைத்துப் புரட்சிகளுக்கும் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’யே அடிப்படை ஆயுதமாகத் திகழ்ந்தது; திகழ்கிறது; திகழும்.

ஏனெனில் கம்யூனிசத்தின் ஆதார வழிகாட்டியாக இந்த அறிக்கையையே விளங்குகிறது.

1848ம் ஆண்டு காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் இணைந்து எழுதிய இந்த அறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது?


ஐரோப்பாவை கம்யூனிசம் என்னும் பேய் பிடித்து ஆட்டுகிறது. இதனை விரட்டவே பழைய சக்திகள் எல்லாம் புனிதக் கூட்டு அமைத்துள்ளன. இதன் வழியாகத் தங்களையும் அறியாமல் கம்யூனிசம் தனிப் பெரும் சக்தியாக வளர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று வரை எழுதப்பட்ட சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் சரித்திரமே. சுதந்திரமானவர்களும் அடிமைகளும்; உயர்குல பிரபுக்களும் சாதாரண மக்களும்; கைவினை சங்க உரிமையாளர்களும் பணியாளர்களும் –
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் தொடர்ந்து போராடி வந்தார்கள். சில சமயம் மறைவாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் இவை நடந்தன.

இதன் முடிவு சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றுவதிலோ அல்லது போராடிய வர்க்கங்களின் அழிவிலோ முடிந்தன.

இந்தப் போக்கில்தான் முதலாளி வர்க்கம் தோன்றியது. மத்திய காலத்தைச் சேர்ந்த பண்ணை அடிமைகளில் இருந்து ஆதி நகரங்களின் சுதந்திர நகரத்தார் உருவானார்கள். இவர்களிடம் இருந்துதான் முதலாளி வர்க்கத்தின் ஆரம்பக் கூறுகள் தோன்றின.

இந்தச் சூழ்நிலையில்தான் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பியர்கள் அங்கு குடியேறினார்கள். அங்கும் இந்தியா, சீனா மற்றும் குடியேற்ற நாடுகளிலும் வணிகம் செய்ய பெரும் வாய்ப்பு உருவானது. சரக்குகளுக்கான தேவை அதிகரித்தது.
இதை நிறைவு செய்ய பழைய கைவினை சங்க உற்பத்தி முறையால் முடியவில்லை. இந்த இடத்தை பட்டறைத் தொழில் ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்தில் இதுவும் போதவில்லை.
இதற்கிடையில் நீராவியால் இயங்கும் கருவிகளும் நவீன சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. உற்பத்தியும் பெருகியது. இதன் உடைமையாளர்களாக நவீன முதலாளி வர்க்கம் உருவானது.
தொழிற்துறை, வணிகம், தரை – கடல் வழி போக்குவரத்து, உலகச்சந்தை ஆகியவை ஒன்றுக்கொன்று உதவி செய்து பிரம்மாண்டமாக வளர்ந்தன. மூலதனம் பெருகியது. முதலாளி வர்க்கம் முன்னுக்கு வந்தது.

இப்படி பொருளாதாரத்தில் வளர வளர முதலாளி வர்க்கத்தில் அரசியல் முன்னேற்றமும் ஏற்பட்டது. பிரபுத்துவ சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் நவீன சமூகத்தில் அரசியல் ஆதிக்கம் பெற்றார்கள். எனவே இன்றைய அரசின் செயலகம் என்பது முதலாளி வர்க்கத்தின் விவகாரங்களை நிர்வாகம் செய்யும் குழுவே.

பழைய பிரபுத்துவ உறவுகளுக்கு முடிவு கட்டிய முதலாளித்துவம், தன்னலத்தை – உணர்ச்சி இல்லாத ரொக்க பட்டுவாடாவை முதன்மைப்படுத்தியது.
அதாவது, மத – அரசியல் திரையால் மூடி மறைக்கப்பட்ட சுரண்டலுக்கு பதிலாகப் பகிரங்கமான சுரண்டலை முன் வைத்திருக்கிறது.

புனிதமான சேவைகள் கூலி உழைப்பாக மாற்றப்பட்டுள்ளன. குடும்ப உறவுகள் வெறும் பண உறவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
உற்பத்தியை புரட்சிகரமாக மாற்றியபடியே சமூக நிலைமைகளைக் குலைத்து –
எப்போதும் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மையை வளர்ப்பதுதான் முதலாளித்துவ சகாப்தத்தின் தனித்தன்மை.
இதற்கு முன் இருந்த எந்த சமூக அமைப்பும் இப்படி இருந்ததில்லை.

Leave a Reply