இயங்கியல் கோட்பாடுகளை –
இயற்கைக்குப் பொருத்திப் பார்ப்பது, டார்வீனியம். சிந்தனைக்குப் பொருத்திப் பார்ப்பது, மார்க்ஸியம். இங்கு நாம் மார்க்ஸியம் பற்றி பேசுவதால் அதைப்பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.
மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா? அதன் திசை வழியை அறிய முடியுமா? முடியும் என்கிறது மார்க்ஸியம்.
இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் முதலாளித்துவ சமூகம் நிலவுகிறது. ஆனால், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் மன்னராட்சிதான் நடைபெற்றது. எப்படி இது மாறியது?
தனிப்பட்ட மனிதர்களது வீரதீர செயலாலா? உயர்ந்த தத்துவங்களாலா?
இல்லவே இல்லை. இவற்றுக்கு எல்லாம் முன்பு மனிதன் என்பவனுக்கு உண்ண உணவு வேண்டும். உடுக்க உடை வேண்டும். இருக்க இடம் வேண்டும். இவற்றுக்காக உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
ஆக, உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது இல்லையா? இதைத்தான் மார்க்ஸியம் அழுத்தம்திருத்தமாக சொல்கிறது.
ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்வதன் வழியாக அந்த சமூகத்தின் வடிவத்தைப் புரிந்துகொள்ளலாம் என்கிறது. அந்தவகையில் இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்குப் பொருத்திப் பார்ப்பதுதான், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் எனப்படும்.
இதற்கு மார்க்ஸ் எடுத்துக்கொண்ட சமூக வரலாறு:
* ஆதி பொதுவுடைமை சமூகம்.
* அடிமைச் சமூகம்.
* நிலப்பிரபுத்துவ சமூகம்.
* முதலாளித்துவ சமூகம்.
இந்த நான்கு சமூகமும் இயக்க விதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்.
எப்படி? ஒவ்வொரு சமூகமும் அதன் உள்முரண்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன. அதில் ஏற்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன. படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்திலிருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன (இயக்கவியலின் மூன்றாம் விதி).
மனிதன் தோன்றியபோது –
மனிதனுக்கு மனிதன் சுரண்டல் இல்லை. வர்க்கம் இல்லை. அரசு இல்லை. போலீஸ் இல்லை. ராணுவம் இல்லை. குடும்ப அமைப்பு இல்லை. அவ்வளவு ஏன், பொதுவுடைமையும் சிந்தனையும் இல்லை. ஆனாலும் அன்று நம்மால் விரும்பப்படுகிற, வருங்காலத்தில் வர இருக்கிற, ஏற்கனவே ரஷ்யாவில் சோதித்தறியப்பட்ட, பொதுவுடைமை சமுதாயம் நிலவியது என்றால் எப்படி?
அதன் உற்பத்தி முறைதான் காரணம். அதாவது, ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல். சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல் எறிந்துதான் கொல்ல வேண்டும். ஒருவர் மட்டும் கல் எறிந்து சிங்கத்தைக் கொல்ல முடியாது. எனவே உயிர் வாழ்தல் பொருட்டு, மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆக, கூட்டமாக வேட்டையாடுவது. அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதி பொதுவுடைமை சமூகத்தின் நிலை. இதற்கு காரணம் உற்பத்தி சக்திகளும் (வெறும் கல்தான்), உற்பத்தி உறவுகளும்தான் (கல் அனைவருக்கும் சொந்தம். உனது கல் எனது கல் என்று யாரும் சண்டையிடவில்லை).
சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது?
இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்குப்பயன்படுகின்றன. முதல் விதி: முரண்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்). ஆதிபொதுவுடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரண்பாடு. உயிர் வாழ்வதற்காக மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான்.
விளைவு: உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடைந்தன. அதாவது கல், கோடரியாக மாறியது. கோடரி ஈட்டியாக வளர்ந்தது. ஈட்டி, வில் – அம்பாக வடிவம் பெற்றது. உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான் (இரண்டாவது விதி: அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றம்) அமைகிறது. வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது.
அடிமைச் சமூகம்
இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரண்பாடான ஆண்டைகளும் அடிமைகளும்தான். இயக்கவியலின் முதல் விதி இதுவே.
அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்துக்கு) வழிவகுக்கிறது. அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பிலிருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம் என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர். இது, இயக்கவியலின் மூன்றாவது விதி, நிலைமறுப்பின் நிலைமறுப்பு.
சாக்ரடீஸ் மிக சிறந்த சிந்தனையாளர்தான். ஆனால் – அவர் அடிமை சமூகத்தை ஆதரித்தவர், ‘அடிமைகள் இல்லாமல் சமூகம் எப்படி இயங்கும்’ என்று கேட்டவர். அந்த சூழல் அவரை அதற்கு மேல் சிந்திக்க விட வில்லை என்பதே உண்மை. பொருளில் இருந்துதான் சிந்தனை வருகிறது என்பதை இங்கு நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான். அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தம். ஆனால் – அடிமைக்கு எதுவும் சொந்தமில்லை. அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.
நிலப்பிரபுத்துவ சமூகம்
இங்கு பண்ணையடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும். மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதாவது, விளைவதில் பாதி தனக்கு. மீதி நிலப்பிரபுவுக்கு. இங்கு பண்ணை அடிமை என்பவன் நிலத்தோடு பிணைக்கப்பட்டவன். நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது. ஆனால், அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்! எனவே பண்ணையடிமையை அரை அடிமை என்று சொல்லலாம்.
இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.
18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது. நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் – சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள் – உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துணைக்கு பண்ணையடிமைகளையும் அழைத்துக்கொண்டனர்.
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்போதுதான். அது முதலாளி வர்க்கம்.
முதலாளித்துவ சமூகம்
அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம். நிலத்தில் கலப்பையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும்.
பண்ணை அடிமைகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சுப் புரட்சி. இப்போது பண்ணையடிமை என்பவன் ஒரு சுதந்திரத் தொழிலாளி. ஆனால் – இந்த தொழிலாளி இரண்டு வகையில்தான் சுதந்திரம் உள்ளவன்.
* ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம். இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு. அடிமையோ, பண்ணையடிமையோ உழைத்தே ஆக வேண்டும்.
* ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம். இந்த சுதந்திரமும் அவனுக்கு உண்டு. அடிமையோ, பண்ணை அடிமையோ முதலாளியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.
எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம் – உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > கற்போம் கம்யூனிசம் > வரலாற்று பொருள்முதல்வாதம்
வரலாற்று பொருள்முதல்வாதம்
posted on








