தொழிற்சாலை மூடலுக்கு போராட்டம் தான் காரணமா?

தொழிற்சாலை மூடலுக்கு போராட்டம் தான் காரணமா?ஆளுநரின் பொறுப்பற்ற கூற்றும் புதுச்சேரி தொழிலாளர்களின் உரிமைகளும்!

புதுச்சேரியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குத் தொழிலாளர்களின் போராட்டங்களே காரணம் எனத் துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் தெரிவித்துள்ள கருத்து, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

2014-இல் ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின் இதுவரை புதுச்சேரிக்கு எத்தனை தொழிற்சாலைகள் அல்லது முதலீடுகள் வந்துள்ளன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டன? அதில் போராட்டங்களால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை? என்பது குறித்து துணைநிலை ஆளுநர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.மேலும், 27.03.2025 அன்று சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அவர்கள், “2021 முதல் 2025 வரையிலான காலத்தில் மாநிலத்தில் 82 தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுஉள்ளார். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. இத்தகைய போராட்டங்களால் எந்தவொரு தொழிற்சாலையும் மூடப்படவில்லை. தொழிற்சாலைகளை மூடிவிட்டால் தொழிலாளர்கள் உரிமைகளைப் பெற முடியாது என்றஉண்மையை உணர்ந்தே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உழைப்புச் சுரண்டல், நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழலை மறைப்பதற்காகத் தொழிலாளர்கள் மீது பழிபோடும் ஆட்சியாளர்களின் இந்தச் செயலை சி.ஐ.டி.யு புதுச்சேரி மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வீழ்ச்சி

புதுச்சேரியின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.எஃப்.டி., சுதேசி, பாரதி, ஸ்பின்கோ உள்ளிட்ட பஞ்சாலைகள் படிப்படியாகச் சீர்குலைக்கப்பட்டு மூடப்பட்டதால் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோனது. ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலனுக்காகத் தகுதியற்ற, சுரண்டல் பேர்வழிகளை அதிகாரிகளாகவும் தலைவர்களாகவும் நியமித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆட்சியாளர்களின்கையாலாகாத்தனத்தால்தான் லாபகரமாக இயங்கிய பல கூட்டுறவு நிறுவனங்களும் இன்று மூடுவிழா கண்டுள்ளன. கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் கூட்டுறவு நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களைத் திணித்து அமைப்புகளைச் சீர்குலைத்தனர். அரசின் அனைத்துத் துறைகளும் முடங்கி, தலைமைச் செயலகம் முதல் பல துறைகள் நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைகளுக்கு உள்ளாவதும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளினால்தானே தவிர, தொழிலாளர்களின் போராட்டங்களால் அல்ல.கானல் நீரான வாக்குறுதிகளும், காடாகும் தொழில் நிலங்களும்“புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்; புதுச்சேரி இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்தவர்கள், இன்றுவரை அப்படி ஒரு தொழிற்சாலையைக் கூடக் கொண்டுவரவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்டசேதுராப்பட்டு – கரசூர் நிலம், இன்றுவரை எந்தப் பயன்பாடும் இன்றி காடாக மாறிக் கிடக்கிறது.

கொத்தடிமைத்தனமும், குறைந்தபட்ச ஊதிய மறுப்பும்

எம்.ஆர்.எஃப். (MRF) தொழிற்சாலை (ஏரிப்பாக்கம்): 5 ஆண்டுகள் குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல், வெறும் 10,000 ரூபாய் கூலியில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியதற்காக 65 தொழிலாளர்களுக்கு ஆட்சியாளர்களின் தயவோடு இரக்கமற்ற முறையில் வேலை மறுக்கப்பட்டுள்ளது.

மயிலம் இந்தியா லிமிடெட் (சேதராப்பட்டு): தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிடக் கோரி சமரச அதிகாரிமுன்னிலையில் தொழிற்தாவா நிலுவையில் உள்ளது. அரசின் சமரச அதிகாரியின் ஆலோசனையை ஏற்க மறுத்து, 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நிர்வாகம் வெளியேநிறுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்கள்: கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் 25
ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளிக்கு இன்றும் வெறும் 8,000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகவழங்கப்படுகிறது. 9 ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும், 19 வகை தொழில்களுக்கு மட்டுமே குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத் தலையீட்டால் அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், அரசு சட்டக்கூலியைச் செயல்படுத்த மறுக்கிறது.

கமிஷன் கலாச்சாரமும் ஊழல்களும்

புதுச்சேரியில், ஒரு குறிப்பிட்ட மருந்து உற்பத்தித் தொழிற்சாலையில் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மக்கள்உயிரோடு விளையாடும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கமிஷனுக்காகக் கண்ணை மூடிக்கொண்டு, போலி மருந்துகள் தயாரிக்க அனுமதி கொடுத்தது தொழிற்சங்கங்களா அல்லது ஆட்சியாளர்களா? இதற்கு ஆளுநர் பதில் சொல்வாரா? தொழிலாளர் துறையில் நேரடி ஆணையர் இல்லை; ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள்பற்றாக்குறையும் நிலவுகிறது. உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் துறை, இன்று முதலாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் துறையாகச் சீரழிந்துவிட்டது.

வேலைவாய்ப்பின்மையும், முறைசாராத் தொழிலாளர்களின் அதிகரிப்பும்

புதுச்சேரி மாநிலத்தில் வேலையின்மை அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. வயது வரம்பு முடிந்த நிலையில், வேறு வழியின்றி இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கும் சுயதொழில்புரியவும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பஆட்சியாளர்களுக்கு மனமில்லை.கடந்த 5 ஆண்டுகளில் 1,000 ஆக இருந்த சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பின்மைகாரணமாக நகரப் பகுதியில் மட்டும் சுமார் 4,000 ஆக உயர்ந்துள்ளது.சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்தாமல், ‘அடிக்காசு’ என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வசூலித்து உழைப்பைச் சுரண்டும் அரசு, அவர்களையே ஆக்கிரமிப்பாளர்கள் எனச் சித்தரிக்கிறது.

பாதுகாப்பற்ற முறைசாராத் தொழில்: சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்வோர், தையல், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் இன்றிப் பணியாற்றுகின்றனர். நிதிநிலை அறிக்கைகளில் “தொழிலாளி” என்ற வார்த்தையையே தேட வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வாரியத்திற்கு நிதி ஒதுக்கிச் செயல்படுத்த அரசிடம் எவ்விதத் திட்டமும் இல்லை.சட்டமன்றத்திலும் வேலைவாய்ப்பு குறித்தோ, தொழிலாளர்கள் குறித்தோ எந்த விவாதமும் நடப்பதில்லை.ஆகவே, துணைநிலை ஆளுநர் தனது சித்தாந்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சிக்காமல் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டுகிறோம். மாநில அரசுடன் இணைந்து தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன், புதிய வேலைவாய்ப்பு, போதையற்ற புதுச்சேரி போன்றவற்றிக்கு முன்னுரிமை அளித்திட வேண்டுகிறோம்.

ஜி சீனிவாசன், மாநில செயலாளர்  சிஐடியூ, புதுச்சேரி

Leave a Reply