புதுச்சேரி அரசியல் நிகழ்வுகள்:    06.07.2017

 

புதுச்சேரியில் திமுக ஆதரவோடு ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரிய வழங்கியது. ஆட்சிக்கு வந்தபின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவோ, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றியோ, கவலை படாமல் தனியார்மயமாக்கும் செயல்களை தீவிரபடுத்தி வருவதோடு, மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் வெற்று அறிவிப்புகளை கூறிவருகிறது.

மக்கள் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு வலுவான முறையில் வர்க்க, வெகுஜென அமைப்புகளின் சார்பாக போராட்டங்களை நடத்துவது, அதன்மூலம் நமது கட்சியின் பலத்தை அதிகரிப்பது, இதர இடதுசாரிகட்சிகளோடு இணைந்து பலப் போராட்டங்களை முன்னெடுப்பது, சிலப்பிரச்சனைகளில் விசிக கட்சியோடு இணைந்து செயல்படுவது என்று 2016 செப்ட்டம்பர், 2017 ஜனவரியில் நடந்த பிரதேசக்குழுக்களில் புதுச்சேரி அரசியல்நிலை சம்பந்தமாக விவாதித்து முடிவு செய்தோம்.

புதுச்சேரி அரசிற்கு எதிராக செயல்படும் ஆளுநர்:

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் துணைநிலை ஆளுநராக திருமதி கிரண்பேடி அவர்களை மத்திய பாஜக அரசு நியமித்தது. இவர் ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன்பே அவசரஅவசரமாக உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியது முதற்கொண்டு தற்போது வரையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கூட்டாட்சி

அமைப்புக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

பாஜக அரசின் செல்வாக்கை அதிகரிக்கவும், இந்துத்துவா வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை அதீதமாக செயல்படுத்துதல், ஈஷா யோகா ஜக்கி வாசுதேவை வரவழைத்து கவர்னர் அலுவலகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது, இந்து முன்னணி அமைப்பிற்கு நேரடியாக தலையீட்டு மசூதிக்கு அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது, என சமூகநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளன.

புதுச்சேரி சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது வேறு எங்கு நடைபெறாத நிகழ்வாகும். இந்த விமர்சனத்திற்கு பிறகு அரசுக்கும், ஆளுநருக்குமான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.

நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மாநில உரிமைக்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது.  இந்தப் பின்னணியில் துணைநிலை ஆளுநரின் அதிகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கு என்னை மிஞ்சிய கூடுதல் அதிகாரம் ஏதும் கிடையாது என்று நேரடியாகவே கூறி வருகிறார். தற்போது தன்னிச்சையாக நியமன உறுப்பினர்கள் விஷயத்தில் செயல்பட்டு உள்ளார்.

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதலால் ரேஷன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குதல், முதியோர், விதவைகளுக்கான பென்ஷன் வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடனை ரத்து செய்தல், சிறப்புக்கூறு நிதியில் இருந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விகடன் வழங்குதல் போன்ற மக்கள் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டன. மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராகவும், தேரந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும் செயல்படும் ஆளுநரின் அதிகாரபோக்கை நாம் தொடர்ந்து எதிர்க்க வேண்டி உள்ளது.

புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசு:

மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளை, மக்களை கடுமையாக பாதிக்கும் திட்டங்களை முதலில் செயல்படுத்தும் பரிசோதனைக் களமாக புதுச்சேரியை மத்திய அரசு கருதுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்ணென்னைக்கு பதிலாக பணம் வழங்குதல், பெட்ரோல், டீசலுக்கு அன்றாட சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தல் போன்ற முடிவுகள் புதுச்சேரியில் அமலாக்கப்பட்டுள்ளது. வார்தா புயல்சேதம், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரணம் வழங்குவதற்கு நிதி வழங்க மறுத்தல், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள புதுச்சேரிக்கு போதிய நிதி வழங்காமல் இருத்தல் போன்ற மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள்.

புதுச்சேரியில் தொழில்நெருக்கடி:

கடந்த காலத்தில் மாநிலத்தில் தொழில்துவங்குவதற்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டதனால் பெரும் தொழில் நிறுவனங்களான கே.சி.பி., சுஸ்லான், ஓ.பி.எல், சுமங்களா ஸ்டீல், போன்ற கேந்திரமான தொழிற்சாலைகள் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஐந்தாண்டு வரிவிடுமுறை சலுகைகளை அனுபவித்த பெரும் தொழில்நிறுவனங்கள் வரிவிடுமுறை முடிந்ததும் படிப்படியாக செயல்பாட்டை குறைத்து கொண்டு வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. சமச்சீர்வரி அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, 190 நடுத்தர தொழிற்சாலைகளும், 7792 சிறுகுறு தொழிற்சாலைகளும்  சீர்குலைவை சந்தித்து வருகின்றன. தற்போது இவற்றில் 60 சதவீதமான  தொழிற்சாலைகள் தான் உள்ளன. இவைகளும் பல நெருக்கடிகளோடு இயங்கி வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தின் விவசாய நிலை:

கடந்த பத்தாண்டுளுக்கு முன்பு சுமார் 31ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்கள் இருந்தன. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் தற்போது கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஹெக்டெர் விளை நிலங்கள் குறைந்து, 21ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்கள் மட்டுமே உள்ளன. நீர்வளம் என்றும் குறையாமல் இருக்க 84 ஏரிகளும், 600 குளங்களும் இருந்தன. அவை சரியாக பராமரிக்கபடாததாலும், சுயநல ஆக்கிரப்பாளார்களாலும் பாழடைந்து மறைந்து வருகின்றன. விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை அரசு வழங்காத காரணத்தால் விவசாயம் மிக வேகமாக அழிவை   நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கிராமப்புற வறுமையும், வேலையின்மையும் அதிகரித்து வருகிறது.

வேலையின்மை பிரச்சனை:

சுமார் 10 கோடி மக்கள் வாழுகின்ற தமிழகத்தில் 81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைகேட்டு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்தொகையே 12.5 இலட்சம். வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ள எண்ணிக்கை 2,24,000 தமிழகத்தை விட வேலையின்மை சதவீதம் மிகவும் அதிகம்.  18% என்பது பிரச்சனையின் கடுமையை விளக்குவதாக உள்ளது. இதன் காரணமாக வறுமை தான்டவமாடுவதும், தற்கொலைகள் அதிகம் நிகழ்வதும் நடைபெற்று வருகின்றன.  தற்கொலை சதவீதத்தில் இந்தியாவிலேயே  முதல் இடத்தில் புதுவை  உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தால் சமூக குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

ஏமாற்றம் அளிக்கும்  அரசின் செயல்பாடுகள்:

ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த பின்னும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதை காரணம் காட்டி காங்கிரஸ் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமாளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஓர் இரு திட்டங்கள் கூட அமல்படுத்தபடவில்லை. தற்போதைய சட்டமன்ற தொடரில் 1.4.2017 முதல் அமலாக்க முயற்சிபோம் என்று கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் 20கிலோ இலவச அரிசி திட்டம் சில மாதங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது. தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்தவித உதவி திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைத்திட்டத்தை வெட்டி சுறுக்கி ஆண்டுக்கு பத்துநாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது, தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பது, தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது, போன்ற தன்மையில் தான் காங்கிரஸ் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.

கொலை, கொள்ளைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு நாளுக்குநாள் சீரழிந்து வருகிறது. மக்களின் எதிர்ப்புகளை மீறி மது கடைகளுக்கு அனுமதி அளிப்பது, மது விற்பனை மூலமாக வருவாயை அதிகரிக்க திட்டமிடுவது, தொழில்பேட்டைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு விற்க ஆர்வம் காட்டுவது போன்ற மக்கள் விரோத செயல்களிலேயே புதுச்சேரி அரசு ஈடுபடுகிறது. வகுப்புவாத  சக்திகளின் நடவடிக்கையை  எதிர்க்கும் வகையில் சில தலையிடுகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இதை தவிர பொதுவாக மக்களின் நலனில் அக்கறை இல்லாத அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுவருகிறது.

நமது சுயேட்சையான செயல்பாடுகள்:

மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் மாற்று அரசியலை முன்வைத்தும், நமது வெகுஜென அமைப்புகளை இணைத்து கொண்டு இயக்கங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக ரேஷன் அரிசி திட்டம் தடையின்றி அமுல்படுத்த வலியுறுத்தி மார்ச்-7 ல் சட்டமன்றம் முன்பு பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தி, அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த சமயத்தில் பல மாதங்களாக வழங்கப்படாமல் இருந்த ரேஷன் அரிசி நமது தலையீட்டின் காரணமாக விநியோகிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் நமது போராட்டத்தின் காரணமாக சில இட்ங்களில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வறட்சி நிவாரண கோரிக்கைகளை முன்வைத்தும் முறைச்சார தொழிலாளர்களுக்கான நலவாரியத்தை அமலாக்ககோரியும், நெசவாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தவும் இயக்கங்களை நாம் மேற்கொண்டோம்.

மேலும் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த கோருதல், நீட் தேர்வை எதிர்த்தல், மாநில உரிமைக்கான மாநாடு, பாஜக வின் வன்முறை செயலை எதிர்த்து இயக்கம், மதுகடைகளை மக்கள்வாழ் இடங்களில் இருந்து அகற்ற கோருதல் போன்ற வகையில் பல போராட்டங்களை கட்சி  நடத்தியுள்ளது. இவற்றின் மூலமாக மக்களின் நலன்களுக்காக போராடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற நற்பெயரை தக்கவைத்துள்ளோம். வரும் காலங்களில் சுயேட்சையான மக்கள் போராட்டங்களை நடத்திடவும், இடதுசாரி கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்தவும், வகுப்புவாத, ஜாதிய சக்திகளின் வளர்ச்சியினை தடுக்கவும், விரிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

என்.ஆர்.காங்கிரஸ்:

சட்டமன்றத்திலும், வெளியிலும் அமைதியாக இருந்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் சமீபகாலங்களில் அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிடுவது, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக கொள்கை முழக்கம் செய்து வெளிநடப்பு செய்வது என்ற முறையில் செயல்பட்டு வருகிறது. ஆளுநரின் நடவடிக்கையை ஆதரிக்கும் வகையிலும், மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை ஏற்று கொள்ளும் வகையிலும் இதன் செயல்பாடு அமைந்துள்ளது. எதிர்காலத்தில் பாஜக வோடு நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பட்டு வந்தார். தற்போது பாஜகவின் ஜனாதிபதி வேட்பாரளரை ஆதரிப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

அ.தி.மு.க:

மத்திய பாஜக அரசால் புதுச்சேரியில் அமலாக்கப்படும் மக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கின்ற தன்மையில் இக்கட்சி உள்ளது. சில நேரங்களில் மட்டும் முதலமைச்சரை எதிர்த்தும், ஆளுநரின்  போக்கை விமர்சித்தும் இக்கட்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.  மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனையிலும் அவர்கள் எவ்வித தலையீடும் செய்வதில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஒம்சக்தி சேகர்  பிரிந்து சென்று ஓபிஎஸ் ஆதரவு அணியாக செயல்பட்டுவருகிறார்.

திமுக:

மாநில அரசுக்கு ஆதரவாக செயல்படும் போக்கையே தொடர்ந்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் போன்றவற்றில் தமிழக தலைமையின் முடிவுக்கு ஏற்ப அவர்கள் செயல்படுகினறனர்.

 சிபிஐ:

         நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவான நிலையை எடுத்த இக்கட்சி தற்போது பொதுமேடைகளில் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோடு ஒரு நல்ல உறவை பராமரித்து வருகிறது.

பாஜக:

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு புதுச்சேரியில் பாஜக உற்சாகம் அடைந்துள்ளது. தற்போது கவர்னரின் அனைத்து நடவடிக்கையும், ஆதரிக்கும் வகையில் இதன் செயல்பாடு உள்ளது. காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையை எதிர்த்து அறிக்கைகளை வெளியிடுவது, போராட்டங்களை நடத்துவது என்ற முறையில் செயல்படுகிறது. பத்திரிக்கை, தொலைக்காட்சி அமைப்புகளை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருகின்றது. கிராமப்புரங்களில் தங்கள் செல்வாக்கை ஏற்படுத்த தீவிரம் காட்டுகின்றனர். வசதிபடைத்தவர்கள், நில உடமையாளர்களை திட்டமிட்டு ஆதரவாளர்களாக சேர்த்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர்களையும் கட்சியில் சேர்த்து பதவிகள் அளித்துள்ளனர்.

 விசிக:

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை பொதுவாக ஆதரிப்பது என்ற தன்மை உள்ளது. தலித் மக்கள் கோரிக்கைகள், சிறப்புக்கூறு நிதி போன்ற சில கோரிக்கைகளில் மட்டும் அரசை விமர்சனம் செய்வது என்ற தன்மையில் தான் இக்கட்சி உள்ளது. மத்திய அரசின் இந்துத்வா கொள்கைகளை எதிர்ப்பதிலும், நாம்நடத்தும் போராட்டங்களிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பாட்டாளி மக்கள் கடசி:

கடந்த காலத்தில் செயல்படாமல் இக்கட்சி தற்போது கிராமப்புறங்களில் வன்னியர் சங்கம் என்ற பெயரில் தங்களது தளங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வன்னியர் சங்கத்தின் மாநில மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது என்பது ஜாதிய திரட்டலை புதுச்சேரியில் உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். இந்த மாநாட்டில்  பெரும் அளவில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

நமது எதிர்கால வேலைத்திட்டம்:

* மத்திய அரசின் மக்கள் விரோத  பொருளாதாரக்கொள்கைகளை எதிர்ப்பதோடு புதுச்சேரி மக்கள் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து நாம் சுயேட்சையாகவும், கூட்டாகவும் இயக்ககங்கள் நடத்த வேண்டும்.

* பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி அமைப்புகளின் மதவெறி அரசியலுக்கு எதிராக இடதுசாரி ஜனநாய சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்கம், வகுப்புவாத எதிர்ப்பு போன்ற வற்றை வலியுறுத்தும் வகையில் பரந்த மேடையை மக்கள் மத்தியில் உருவாக்கி சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.

* தலித் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல், வன்முறைகளை எதிர்த்து இயக்கங்களை நடத்த வேண்டும். கூட்டு போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

*  இந்தி திணிப்பை எதிர்த்து மாநாடு, கருத்தரங்கம் நடத்த வேண்டும்.

* தீக்கதிரில் புதுச்சேரி செய்திகளுக்காக ஒரு முழுபக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டுரைகள், செய்திகள் , அளிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். தீக்கதிர் எண்ணிக்கையை 600ஆக உயர்த்த வேண்டும்.

* தனியார் பள்ளி மற்றும் மருத்துவ கல்லூரிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்தல், அரசுப்பள்ளிகளை பாதுகாத்தல், தனியார்பள்ளி ஆசிரியர்கள், ஊழியரின் நலன்களை பாதுகாக்க அமைப்புகளை ஏற்படுத்தல், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கத்தை உருவாக்குதல்.

நீர்வளத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் இவைகளுக்காக செயல்படும் பாதுகாப்பு குழுக்களோடு இணைந்து செயல்படுதல்.

* மூன்று பஞ்சாலைகளை மீண்டும் செயல்படுத்தவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வேலை வாய்ப்பு கோரிக்கையை முன்வைத்தும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

  • சிறுவணிகர்கள், தொழில் முனைவோர்கள், மீனவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் அவர்கள் மத்தியில் செயல்படுவதற்கான திட்டங்களையும் நாம் உருவாக்க வேண்டும்.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகள பாதுகாக்கவும், மாநில உரிமைக்கான சட்ட திருத்தம் கொண்டு வரவும் ஜனநாயக அமைப்புகளோடு போராட வேண்டும்.

***********************************************************************************************

Leave a Reply