அகில இந்திய விவசாய சங்கத்தின் தோற்றமும், ஆரம்பகால வளர்ச்சியும்

இந்தியாவின் பலபகுதிகளில் பதினெட்டாவது நூற்றாண்டின் (1700-1800) முடிவிலும் பத்தொன்பதாம் (1800 1900) நூற்றாண்டிலும் கிழக்கு இந்தியக் கம்பெனி பிரதிநிதித் துவப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மூன்று முக்கிய விவசாய முறைகளைத் தினித்தனர்; ஜமீன்தாரி, ரயத்வாரி, மஹல்வாரி ஆகிய இம் மூன்று முறைகளும் ஏறக்குறைய அரை – நிலப்பிரபுத்துவ தன்மைகளைக் கொண்டவைகள். இந்த விவசாயமுறைகள் பல்வேறுவிதமான நிலப்பிரபுத்துவ வடிவங்களை பழக்கத்திற்குக் கொண்டுவந்து விவசாயிகளின் உரிமைகளைப் பறித்ததோடு, படிப்படியாக சுரண்டலின் தீவிரமான ஒடுக்குமுறை அமைப்பாகவும் உருவானது; கிழக்கு இந்திய கம்பெனி உருவாக்கிய தன்னிச்சையான சட்டங்களும், விதிகளும் இதற்கு பின்துணையாக நின்றன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம்வரை இந்திய மக்கட்பகுதிகளின் பொருளாதார, சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் இத்தகைய நிலமுறைகள் பெருமளவு காரணமாயிருந்தன.

விவசாயிகள் மீதான சுரண்டலும் அதைப்போன்றே அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறை தொடர்ந்து அதிகரித்து வந்ததும், காலப்போக்கில் ஒரு முறையாக வளர்ந்தது; இது நாட்டில் அன்று நிலவிவந்த சமூக வாழ்க்கையின் ஒரு அம்சமாக விளங்கியது. சட்டபூர்வமாகவும், சட்டவிரோத மாகவும் நடைபெற்ற கட்டாய வசூல்கள், கடுமையான குத்தகைகள் கீழ்மானியம், நிலவுடமை துண்டாக்கப்பட்டது, கடன், அதிகரித்து வந்த வரிகள், பாதகமான சந்தை மோசடிகள் அதிகரித்து வந்தது, விவசாயத் தொழிலாளிகளின் உண்மையான ஊதியம் வீழ்ச்சியடைந்தது, விவசாயிகள் படிப்படியாக வறுமையில் ஆழ்த்தப்பட்டு ஓட்டாண்டி களாக்கப்பட்டது – ஆகிய அனைத்தும் இந்தியாவில் ஒரு மிகவும் ஆபத்தான, ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலைமையை ஏற்படுத்தின.

முதலாம் உலகப்போர் (1914-18) காலம்

கொடிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவ முறையிலான சுரண்டல் ஆகியவற்றால் இருபதாம் நூற்றாண்டின் தேசீயப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப்பகுதியான விவசாயப் பொருளாதாரம் தொடர்ந்து சீரழிந்து வந்ததிலிருந்தே இந்தியாவின் பொதுவான பொருளாதார நிலைமை சீரழிந்து வந்தது விளங்கும். இந்த உலகயுத்தமானது, பொருளாதாரம் முழுவதற்கும், அதைப்போன்றே இந்திய மக்களின் அரசியல் சிந்தனைக்கும் ஒரு பலத்த குலுக்கலைக் கொடுத்தது. அந்தச் சிந்தனையின் மீதான மகத்தான முத்திரை குறிப்பாக விவரம் தெரிந்திருந்த மக்களிடையே – உலகம் முழுவதின் அரசியல் சிந்தனையை உலுக்கிய ரஷ்யாவின் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சியினால் ஏற்படுத்தப்பட்டது.

விவசாயி எழுச்சிகள்

அன்று நிலவிய விவசாயப் பிரச்னையைப் பற்றியும், சமூகவாழ்க்கையில் அதன் விளைவுகளைப்பற்றியும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவ்வித முறையான பரிசீலனையும் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும், கிராம உழைக்கும் மக்களைப் பாதிக்கும் சில உடனடிப் பிரச்னைகள் விவசாயிகளின் அமைதியான வாழ்வை மிகவும் பாதித்து தன்னிச்சையான திடீர் போராட்டங்களில் முடிந்தது; இவைகள் பெரும் பாலும் ஸ்தலமட்டத்திலும், தற்காலிக முறையிலும் வெடித்தன. நிலப்பிரபுத்துவ ரவுடித்தனத்தினாலும் விவசாயிகளை வலுக்கட்டாயமாகப் பணியச் செய்வதற்காக அதிகாரிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களின் விளைவாக சில நேரங்களில் அந்த மோதுதல்கள் பலாத்காரமானதாகவும், பரந்தளவிலும் இருந்தது. அதன்பிறகு, நிலைமையை சில காலம் அமைதியாக வைத்திருக்கும்பொருட்டு, சில கடுமைத் தணிவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மலபாரின் மாப்ளா எழுச்சிகள், தக்காண கலவரங்கள், சந்தால் எழுச்சி, வங்காளத்து இண்டிகோ புரட்சி ஆகிய வைகள், இத்தகைய எழுச்சிகளில் பல. சந்தேகத்திற்குரிய அரசியல் குணாம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும் வட இந்தியாவில் வகாபி இயக்கம், வங்காளத்து சன்யாசி புரட்சி, பரெய்ஸி இயக்கம் ஆகியவைகள் சந்தேகத்திற்கிடமின்றி விவசாயி நலன்களினால் உந்தப் பட்டவைகளாகும். இந்த இயக்கங்கள் ஏறக்குறைய நன்றாக உருவாக்கப்பட்டவைகள்; ஆனால் இவைகள் நீண்டகாலம் நிலைத்திருந்தவைகளல்ல, சிலநாட்கள் மட்டுமே நீடித்திருந்தன என்பதோடு உடனடியாக நேரடியான ஆதாயங்கள் என்றளவில் எப்பொழுதும் வெற்றி அளிக்கவில்லை.

இத்தகைய பல இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தோன்றின. முதல் உலகயுத்தமும், ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சியும், அதைத்தொடர்ந்து காங்கிரசாலும், கிலாபத் கமிட்டியாலும் தலைமை தாங்கப்பட்ட 1920-22-ம் வருடங்களின் ஒத்துழையாமை இயக்கம் என்ற வடிவத்தில் எழுந்த தேசிய எழுச்சியும் – இது பலமடைந்து கொண்டிருந்தபொழுது தன்னிச்சையாக காந்திஜியால் நிறுத்தப்பட்டது என்றபோதிலும் – விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

1920-ம் வருடங்களில் பல மாகாணங்களில் விவசாயப் பிரச்னையைப்பற்றி முறையான, ஆனால் முழுமையற்றதான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன; அத்தோடு நிரந்தரமான விவசாய ஸ்தாபனங்களை உருவாக்கவும், மாகாண அல்லது ஸ்தல அளவிலான விவசாயிகளின் பல்வேறு வகையான அவசரப்பிரச்னைகள் மீது இயக்கங்கள் நடத்தவும் உடனடியாக நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. பஞ்சாப், மலபார், ஆந்திரா, வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் இத்தகைய இயக்கங்களும், ஸ்தாபனங்களும் காணப்பட்டன. ஆனால், பலமாகாணங்களிலிருந்த விவசாயிகள் ஸ்தாபனங்களிடையே எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லை.

தீவிரமாறுதலுக்கு அறைகூவல்

1929-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முதலாளித்துவ உலகம் முழுவதையும் சூழ்ந்திருந்த உலக பொருளாதார மந்தத்தின் நாசத்திலிருந்து இந்தியா தப்பவில்லை என்பதோடு விவசாய விளை அதனால் பாதிக்கப்பட்ட மக்கட் பகுதிகளில், மிகவும் பாதிப் புக்குள்ளானவர்கள் விவசாய மக்களே. பொருட்களுக்கான சந்தை சுருங்கி, தானியங்களின் விலைகள் நிலைகுலைந்து, தடுமாறி, அவற்றின் விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், நிலவிவந்த நில வாடகை (குத்தகை), வரிகள், வட்டிக்காரர்களின் வட்டி வீதத்தில் எவ்விதக்குறைப்பும் இல்லை. எல்லா இடங்களிலும், ஏராளமான விவசாயிகள் இந்தப்பளுவை தாங்கமுடியாமல், நிலத்தை இழந்து, ஏற்கனவே பெருகியிருந்த நிலமில்லாத வர்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கினர். கிராம கைவினைஞர்கள் தங்களுடைய தொழில்களை இழந்து,நில மில்லாதவர்கள் பட்டாளத்தில் சேர்ந்தனர். நாசமும், இருண்ட எதிர்காலமும்தான் கிராமப்புற உழைப்பாளிகளின் முகங்களில் தாண்டவமாடியது.

இவ்வாறாக, முப்பதாம் வருடங்களின் ஆரம்பக்காலங் களில் கிராமப்புறங்களிலிருந்த பொருளாதார நிலைமையானது வறுமையின் அவலநிலைமை, வேலையில்லாத்திண்டாட்டம், எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியானது, துயரம், பட்டினி, முழுச்சோர்வு ஆகியவற்றையே வெளிப்படுத்தியது.

இந்த காலகட்டத்தில்தான், நாட்டுப்புறங்களிலிருந்து துயருற்றிருக்கும் லட்சோப லட்சக்கணக்கான மக்களுக்கு உடனடியாக சில நிவாரணம் கிடைக்கச் செய்யவேண்டு மென்ற அவசரத்தன்மைக்கு தேசிய இயக்கத்திலிருந்த இடதுசாரி பகுதிகள் கிளர்ந்தெளச் செய்யப்பட்டனர். இது, குறிப்பாக 1930-34-ம் வருட காலங்களில் தேசிய காங்கிரஸ் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்தின் துன்பமான முடிவுக்குப் பின், அவர்களின் பெரும்பாலோர் தலைமைமீது நம்பிக்கை இழந்தபின் ஏற்பட்டது. ஆனால் இடதுசாரி பகுதியினருக்கு அது ஒரு உடனடி நிவாரணம் என்றளவில் மட்டுமல்ல; இந்திய விவசாய நிலைமையில் ஒரு தீவிரமாற்றத்தைக் கொண்டுவரவேண்டு மென்ற எண்ணம் ஏறத்தாழ அவர்களனைவரையும் ஆகர்ஷித்தது; இதுவே அந்த நிலைமையில் தொக்கிநின்றது.

லக்னோ மாநாடு

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலத் தில் உள்ள மீரட் நகரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் (சி.எஸ்.பி.) தேசிய மாநாடு நடைபெற்றது. அச்சமயத் தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சிலமுக்கிய ஊழியர்கள் உட்பட ஒரேமாதிரியான கருத்துக்களைக் கொண் டிருந்த இடதுசாரி மனோபாவங்கொண்ட அரசியல் ஊழியர் கள், விவசாயிகள் பிரச்னைபற்றியும், பெரும் பொருளாதார மந்த நிலைமையினால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பயங்கர நிலைமையையும் குறித்து விவாதிப்பதற்காக ஜனவரி 15-ந் தேதி கூடினர் அவர்கள், ஒரு அகில இந்திய கிசான் காங்கிரசை உருவாக்கும் பொருட்டு ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கி அதற்கு N. G. ரங்காவையும், ஜெயப்பிரகாஷ் நாராயனையும் இணை அமைப்பாளர்களாக ஆக்க முடிவு செய்தனர்.

இப்பணி உற்சாகத்தோடு நடைபெற்று, 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லக்னோவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டையொட்டி, ஏப்ரல் 11-ந்தேதி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த விவசாயிகள் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் முடிவுற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், நாட்டின் பல பகுதிகளில் ஒன்றோடொன்று சம்பந்தமில்லா மல் சுயேச்சையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த விவசாயி கள் ஸ்தாபனங்களையோ, நாட்டின் பல மாகாணங்களில், மாவட்டங்களில் இங்குமங்குமாகத் தோன்றியிருந்த விவசாயி கள் ஸ்தாபனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களா கவோ அல்லது அவற்றோடு தொடர்புள்ளவர்களாகவோ விளங்கினர்.

இவ்வாறுக, அகில இந்திய விவசாயிகள் சங்கம் உரு வாக்கப்பட்டது. பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாடு விவசாய சங்கத்தின் முதல் கூட்டம் அல்லது முதல் அகில இந்திய மாநாடு என்று பதிவு செய்தது. இந்த ஸ்தாபனம் முதலில் அகில இந்திய விவசாயி காங்கிரஸ் (கிசான் காங்கிரஸ்) என்று அழைக்கப்பட்டது. சிலர் இதை “அகில இந்திய கிசான் சங்” என்றழைத்தனர். பின்னாட்களில் இப்பெயர் மாற்றப்பட்டது.

பீகாரைச் சேர்ந்த காலஞ்சென்ற சுவாமி சகஜானந்தி சரஸ்வதி, என்.ஜி.ரங்கா (ஆந்திரா) காலஞ்சென்ற இந்துலால் யக்னிக் (குஜராத்) மோகன்லால் கௌதம் (உ.பி.) காலஞ்சென்ற கே.எம். அஷ்ரப் (உ.பி. சோகன் சிங் ஜோஷ், அகமது தின் (பஞ்சாப்), கமல் சர்க்கார், சுதின் பிரமாணிக் வங்காளம்), ஜெயப்பிரகாஷ் நாராயன், காலஞ்சென்ற டாக்டர் ராம்மனோஹர் லோகியா (காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் சிலர்.

முக்கியப் பிரச்னை : நிலமும் விவசாயியும்.

தேசியக் காங்கிரசின் தலைவரான ஜவஹர்லால் நேரு இம்மாநாட்டில் நேரில் கலந்துகொண்டு, வாழ்த்தினார். கிசான் காங்கிரஸ் உருவானதை வரவேற்பதாகக் கூறிய நேரு, விவசாயிகள் இயக்கத்திற்கு தன் நேச உணர்வைத் தெரிவித்தார். இந்திய மக்களில் மிகவும் சுரண்டலுக்குள் ளானவர்கள் விவசாயிகளே என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் இன்றைய முக்கியப் பிரச்னை விவசாயி களைக் குறித்தே – யார் நிலங்களின் உரிமையாளர்களாக ஆவது, விவசாயிகளின் அந்தஸ்து என்ன என்பதே ஆகும் – என்று நேரு குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உறுதுணையாக காங்கிரஸ் இருக்கும் என்று, அங்கே கூடியிருந்த பிரதிநிதிகளுக்கு அவர் உறுதியளித்தார். சீர்திருத் தங்கள் வந்திருக்கின்றன (1995-ம் ஆண்டைய இந்திய அரசாங்க சட்டத்தைக் குறிப்பிட்டு) இதரவைகளும் வரும். அவர் கருத்துப்படி, விவசாயிகளின் முக்கியப் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை அளிக்கப்போகிறது என்பதை வைத்தே இந்த சீர்திருத்தங்களைப் பரிசோதிக்க வேண்டும். தேசிய காங்கிரசோடு கூட்டு இணைப்பு ஏற்படுத்திக்கொள்வதென்ற கிசான் காங்கிரஸ் திட்டத்தை, நேரு ஆதரித்தார்.

ஆனால் இந்த பொது விதி சம்பந்தமான – தேசிய காங்கிரசோடு கூட்டு இணைப்பு ஏற்படுத்திக்கொள்வதென்ற விவாதம் முறைப்படி விவாதிக்கப்பட்ட பொழுது கிசான் காங்கிரஸ் அதை நிராகரித்தது. வரவேற்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் மோகன்லால் கெளதம், பிரதிநிதிகளை வரவேற்றார்.

தலைவர் உரை.

சுவாமி சகஜானந்த், மாநாட்டிற்குத் தலைமை வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய தலைமை உரையில், கொடுமையான நில முறையையும், அதன்கீழ் விவசாயிகள் அழுத்தப்பட்டுக் கிடப்பதையும் விவரித்தார். அன்று நிலவிய நில வருவாய் அமைப்பையும் (ரெவின்யூ முறை) கடுமையாக விமர்சித்தார். ஜமீன்தார்கள் வசமிருக்கும் நிலங்களை எடுப்பதைத் தவிர விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமிடையே எவ்வித சமரசமும் சாத்தியமில்லை என்று அவர் திட்டவட்ட மாகக் கூறினார்.

நிலப்பிரபுத்துவ முறையிலிருந்த தாறுமாறான போக்கு களை அவர் விளக்கினார். உணவுப் பொருட்களை விளைவிப் பவர்கள் விவசாயிகள், ஆனால் அவர்கள் விளைவிப்பதெல் லாம், அவர்களுடைய எஜமானர்களால் எடுத்துச் செல்லப்பட்டு விடுகிறது விவசாயிகளுக்கு ஒன்றும் விடப்படவில்லை. ஆக, எல்லாவகையான தகராறுகளுக்கும் முறையே காரணம், அதனுடன் சமரசம் செய்து கொள்ள தயாராயில்லையென்று கூறினார் சுவாமி சகஜானந்த்.

விவசாயிகள் அனைத்தையும் அளிக்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு உண்ண உணவோ, உடுத்த உடையோ இல்லை இந்த நிலைமையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாதென்று அவர் கருதினார். தங்களுடைய உரிமைகளுக்காக விவசாயிகள் போராட வேண்டிய காலம் திட்டவட்டமாக வந்துவிட்டது என்றுகூறிய சுவாமி சகஜானந்த், அப்போராட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

அம்மாநாட்டில் ராம்மனோஹர் லோகியா பேசுகையில், காந்திஜி, நிலவரியிலிருந்து நிவாரணம் வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துக்கொண்டிருப்பதாக வும், ஆனால் ஜமீன்தார்களிடமிருந்து விவசாயி களுக்கு நிவாரணம் வேண்டுமென்ற பிரச்னையை எடுத்துக்கொள்ள சம்மதிக்கவில்லையென்றும் தெரிவித்தார். உதாரணமாக, வங்காளத்தில் விவசாயிகளிடமிருந்து பதினெட்டு கோடி ரூபாய்களை ஜமீன்தார்கள் பெறுகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து 3 கோடி ரூபாய்களை எடுத்துக்கொள்கிறது. இது, ஜமீன் தாரி முறையை ஒழிப்பதன் மூலமாகவே, விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமென்பதோடு இந்த நோக்கத்திற்காகவே கிசான் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

ஜமீன்தாரி முறையை ஒழிக்கவேண்டுமென்று விவசாயி கோரும்பொழுதே அந்த, ஜமீன்தாரி முறையை பாதுகாக்கும் ஏகாதிபத்தியத்திடமிருந்து முதலில் விடுபட்டாக வேண்டுமென்று, சோகன் சிங் ஜோஷ் தெளிவுபடுத்தினார்.

தீர்மானங்கள்:
கீழ்க்கண்ட முக்கியத் தீர்மானங்களை மாநாடு நிறைவேற்றியது.
(1) அகில இந்திய கிசான் காங்கிரசின் லட்சியமானது, விவசாயிகளுக்கு, பொருளாதாரச் சுரண்டலிலிருந்து முழுமையாக விடுதலை கிடைக்கச் செய்வதும், விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் இதர சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு முழுமையான பொருளாதார, அரசியல் அதிகாரம் பெற்றுத் தருவதுமாகும்.

கிசான் காங்கிரசின் முக்கியக் கடமையானது, விவசாயிகளை ஸ்தாபன ரீதியாகத் திரட்டி, அவர்களுடைய உடனடி அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடச் செய்து, எல்லாவிதச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலைபெற அவர்களைத் தயார் செய்வது என்பதே.

தேசியப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்து இந்தியா விற்கு முழு விடுதலை கிடைக்கச் செய்து, உழைக்கும் மக்கள் இறுதியான அரசியல், பொருளாதார அதிகாரம் பெறச் செய்வது என்பதில் கிசான் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.

(2) ஆனால், தற்பொழுதுள்ள முறைகளான, ஜமீன்தாரி (ஒரிஸ்ஸா, வங்காளம், சென்னை, அஸ்ஸாமில் இருப்பது) தாலுக்தாரி (உ.பி.யிலும், குஜராத்திலும்) மல்குசாரி (மத்திய மாகாணங்களில் எஸ்டெமார்தாரி (ஆஜ்மீர்) கோத்தே (தக்காணம்) ஜென்மி (மலபார்) இனாம்தாரி (ஏராளமான நிலங்களை வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து வரும் ஏராளமான வாடகை வருமானத்தை வசூல் செய்வது) ஆகிய, இந்தியாவிலிருந்த ஆங்கிலேய அரசாங்கம் உருவாக்கி, ஆதரவு கொடுத்து வந்த அமைப்புகள் அனைத் தும் விவசாயிகளுக்கு கொடுமையானவைகள், அநீதியான வைகள், சுமையானவைகள், ஒடுக்குமுறையானவைகள்.

அதேநேரத்தில் கோடிக்கணக்கான குத்தகையாளர்களை, அடக்கி ஒடுக்கும் ஜமீன்தார்களும், இதரர்களும் நீர்ப் பாசன வசதிகளை சீர்படுத்தாமல் உதாசீனம் செய்கிறார்கள். இத்தகைய நிலப்பிரபுத்துவ முறைகள் அனைத்தும் முற்றாக ஒழிக்கப்பட்டு உழுபவனுக்கே நில உரிமை என்றாக்கப்பட்ட வேண்டும்.

(3) தற்பொழுது ரயத்வாரி பகுதிகளில் அரசாங்கம் தினித்திருக்கும் நிலவருவாய் முறையும், சீரமைத்தல் முறையும் மிகமிக ஒடுக்குமுறையானது. வெறுப்பூட்டுவது; விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவது; இத்தகைய நிலவரு வாய் முறைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, ரூபாய் ஐநாறும் அதற்குமேலும் உள்ள நிகர வருமானத்திற்கு படிப்படியான நிலவரிமுறை ஏற்படுத்தப்படவேண்டும். (இதையே வரி விசாரணைக் குழுவும் சிபாரிசு செய்துள்ளது)

ஸ்தாபனத் தீர்மானங்கள்.

இம் மாநாடு அகில இந்திய கிசான் கமிட்டியையும், அதன் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்ததோடு அந்தக்கமிட் யின் நிர்வாகக் குழுவாக மத்திய கிசான் கவுன்சிலையும் தேர்ந்தெடுத்தது. சுவாமிஜி தலைவராகவும், என். ஜி. ரங்கா பொதுக்காரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்வரும் மாகாணங்களிலிருந்து பிரதிநிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்: மலபார் (தற்பொழுது கேரளத்தின் பகுதி) ஆந்திரா, தமிழ் நாடு, ஒரிஸ்ஸா, மத்திய மாகாணங் கள் (இதன் ஒருபகுதி தற்பொழுது மத்தியப்பிரதேசத்திலும் மற்றொரு பகுதி மகாராஷ்டிராவிலும் இருக்கிறது), மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் (தற்பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதி), ஐக்கிய மாகாணம் (தற்பொழுது உ. பி.), பீகார், வங்காளம் (இதன் இந்தியப்பகுதி தற்பொழுது மேற்கு வங்காளம், பாக்கிப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாக மாறி இப்பொழுது வங்காளதேசமாகியுள்ளது), டெல்லி. ஒரு “அகில இந்திய விவசாயிகள் பிரகடனம் “வெளியிடும் பொருட்டு, அதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயங்களை இம்மாநாடு வரையறுத்தது. இதைத்தொடர்ந்து 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாயில் கூடிய அகில இந்திய கிசான் கமிட்டி, இந்த விவசாயிகள் பிரகடனத்தை இறுதியாகத் தயாரித்து ஏற்றுக்கொண்டது. மேலும், கிசான் காங்கிரசிற்கு சட்ட திட்டங்களை உருவாக்குவதற்காக இம் மாநாடு ஒரு சட்ட உபகுழுவை நியமித்தது அதோடு, இந்துலால் யக்னிக்கை ஆசிரியராகக்கொண்டு, அவ்வப் பொழுது ஒரு செய்தி அறிக்கையை (புல்லடீன்) வெளியிட வும் இம்மாநாடு முடிவு செய்தது.

அகில இந்திய கிசான் கமிட்டியின் பம்பாய் அறிக்கை யானது, இதரபல விஷயங்களோடு, நிலப்பிரச்னை சம்பந்த மாக கிசான் காங்கிரஸ் எடுத்திருந்த முடிவுகளை விவரித் திருந்தது. 1937-ம் வருட பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்திய தேசியக் காங்கிரஸ், அதனுடைய தேர்தல் அறிக்கையில் நிலப்பிரச்னை சம்பந்தமான அதன் திட்டங்களை வரை யறுக்கும் முன்பே, அகில இந்திய கிசான் கமிட்டியின் அறிக்கை, இந்திய தேசியக் காங்கிரசின் காரியக்கமிட்டிக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த 1937-ம் ஆண்டுத் தேர்தலானது, 1919-ம் வருடத்திய மாண்டேகு – செம்ஸ் சீர்திருத்தத்தின்கீழ் மத்திய சட்டசபைக்கு பொதுத் தேர்தலும், 1935-ம் வருடத்திய இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கியதையும் குறிப்பதாகும்.

அகில இந்திய கிசான் கமிட்டியின் பிரகடனம், தேசியக் காங்கிரசின் விவசாய உப-கமிட்டியை ஆகர்ஷித்தது; அதன் விளைவாக, 1336-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்ஸ்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்த பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு,. தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்டது லக்னோ கிசான் மாநாடு, மகாணங்களிலிருந்து வந்து அதில் கலந்து கொண்டு சில பிரதிநிதிகளுக்கு அவர்களுடைய மகாணங்களில் இந்த அகில இந்திய ஸ்தாபனத்தின் கிளைகளை உருவாக்கும்படி பணித்தது.

கிசான் தினம்.

அகில இந்திய கிசான் கமிட்டியின் தலைவரான சுவாமிஜி, 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ல் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையொன்றில், லக்னோ மாநாட்டுத் தீர்மானப்படி நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதியை “அகில இந்திய கிசான் தினமாக” அனுஷ்டிக்கும்படி விவசாய சங்க ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

“நமது விவசாயிகளின் ஒன்று திரட்டப்பட்ட பலத்தை வெளிக்காட்டவும், குறைந்த பட்சக் கோரிக்கைகன் அடையவும். அவர்களுடைய இறுதியான லட்சியத்தை நோக்கிச் செல்லும் உறுதியான நடவடிக்கைகளை வெளிப்படுத்த, கிராமப்புறங்களில் அன்றைய தினம் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படவேண்டும்”

இக்கூட்டங்கள் அனைத்திலும், லக்னோ மாநாடு நிறைவேற்றி, பம்பாய் மாநாடு விரைவில் சில பகுதிகளைச் சேர்த்து, இறுதிவடிவம் கொடுக்கவிருக்கும் கோரிக்கைகள், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டு. அன்றைய தினக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்.

அகில இந்திய விவசாய சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரும், முதுபெருந் தோழர்களில் ஒருவருமான தோழர் எம்.அப்துல்லா ரசூல் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள “அகில இந்திய விவசாய சங்கத்தின் வரலாறு என்ற நூலின் முதல் அத்தியாயமான “தோற்றமும் ஆரம்பகால வளர்ச்சியும்” என்ற பகுதி மட்டும் உள்ளடங்கியது இந்த வெளியீடு.

தமிழாக்கம்: ரகு

வெளியீடு  ஆண்டு  பிப்ரவரி 1979

Leave a Reply