நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள நரிகுறவர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், காந்திசிலை கடற்கரை சாலையில் நரிக்குறவர் பெண்களிடம் கீழ்த்தரமாக அத்துமீறி அவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்திய நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இதில் வலியுறுத்தப்பட்டது. புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி தலைவர் என்.கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சரவணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் உமா, செங்குலத்தான், சுரேந்தர், குப்புசாமி, அந்தோணி உட்பட திரளான குறவர் பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து நியாயம் வழங்ககோரி முழக்கமிட்டனர்.
வில்லியனூர் சம்வத்தில் தவறு செய்தவர்களை கைது செய்து சட்ட பூர்வமான நட வடிக்கை எடுக்காமல், நரிகுறவர் மக்கள் அனைவரையும் குற்றவாளிகளாக சித்தரித்து பெண்கள்,குழந்தைகள் என்றும் பாராமல் காட்டு மிராண்டித்தனமாக தாக்கி உடல் உபாதை ஏற்படுத்தி உள்ள புதுச்சேரி வனத் துறை மற்றும் வில்லியனூர் காவல்துறை துறையை சேர்ந்தவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியினர் குற வர் மக்களிடமிருந்து சட்ட விரோதமாக பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் திருப்பி வழங்க வேண்டும். காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்க ளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இச்சம்பவம் குறித்து உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
துணை ஆட்சியர் உறுதி
ஆர்ப்பாட்டத்தின் இறுதி யில் புதுச்சேரி துணை ஆட்சியர் வினையராஜ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து ஆட்சியரிடம் பேசி உரிய நட வடிக்கை எடுப்பதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களிடம் அவர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.