ஆணாதிக்கத்திற்கு ஐயப்பனை துணைக்கு அழைக்கும் அவலம் ?

ஆண்மை என்றால் வீரம், பெண்மை என்றால் அச்சம். ஆண்மை என்றால் துணிச்சல், பெண்மை என்றால் நாணம். ஆண்மை என்றால் அறிவு, பெண்மை என்றால் மடம். ஆண்மை என்றால் தோள் வலி, பெண்மை என்றால் எதையும் தாங்க இயலாத இடை வலி என்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க கட்டமைப்பை இன்றும் நிலைநிறுத்துவதற்கான முயற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

1948 காலகட்டங்களில் பெண்கள் பள்ளியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது மகாராஷ்டிராவில் மகாத்மா ஜோதி ராவ் பூலேயின் முன் முயற்சியில் தடை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து நொறுக்கப்பட்டது. அதே போன்று இன்று அதே மகாராஷ்டிராவில் பெண்கள் கோவிலுக்குள் நுழைய பல இடங்களில் தடை விதிக்கப்பட்டிருகிறது. அந்த தடைகளும் திருப்பதி தேசாய் போன்ற பெண் விடுதலை போராளிகளின் முன் முயற்சியில் தகர்த்தெறியும் பணி தொடர்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஜோதிராவ் பூலே மற்றும் அவரது மனைவி சாவித்திரிபூலேயின் பணி நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் இருந்திருக்கிறது.

பெண்களுக்கு கல்வி கற்பிக்க முயன்ற போது கொலை மிரட்டல். அதையும் மீறித்தான் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை 1848 ல் புனே நகருக்கு அருகில் பீடேவாடா என்ற இடத்தில் ஜோதிராவ் பூலே நிறுவினார். ஆனால் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க ஒரு ஆசிரியர் கூட வரவில்லை அனைவரும் மறுத்து விட்டனர். அப்போதும் முயற்சியை பூலே கைவிடவில்லை. தனது மனைவி சாவித்திரிபாய் பூலேவிற்கு கல்வியை கற்றுக்கொடுத்து ஆசிரியராக்கினார். அதன் பின்னர் அதே பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுக்க செய்தார். அப்போதும் ஆணாதிக்க சமூகம் அனுமதிக்கவில்லை. மீண்டும் கொலை மிரட்டல், கடும் நெருக்கடி. ஒரு கட்டத்தில் தன் மனைவி சாவித்திரிபாய் பூலேவை தலைமறைவாக வைத்திருக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் உயிருக்கு அஞ்சாமல் மீண்டும் இருவரும் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை துவக்கினர்.

அப்போது நாட்டின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரிபாய்பூலே தான் பள்ளிக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழியில் என் மீது சாணி மற்றும் சேற்றை வாரி இறைக்கின்றனர் என்று தனது கணவர் ஜோதிராவ் பூலேவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு பதில் எழுதிய ஜோதிராவ் பூலே பள்ளிக்கு செல்லும் போது பழைய புடவையை உடுத்திக்கொள். பள்ளிக்கு சென்ற பின் உடையை மாற்றிக்கொள். அதேபோல் வரும் போது அதே பழைய புடவையை உடுத்திக்கொள், பெண் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணி தடை படக்கூடாது என பல தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி ஊக்குவித்திருக்கிறார். இந்த தனி மனித போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஆதரவு பெற்று வெற்றி கண்டது.

அதே மகாராஷ்டிராவில் இன்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போர் தொடர்கிறது. ஜோதிராவ் பூலே விட்டுச்சென்ற பணியை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் தொடர்ந்தனர். அவ்வளவு எளிதாக விட்டுவிடுவார்களா? மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தும் இந்து மதவெறி கும்பலால் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த தியாகத்தின் விருட்சமாக இன்று அங்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதே போன்று நரேந்திர தபோல்கர் 400 ஆண்டு பழமையான சனிபகவான் கோயிலுக்குச் பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என போராடி வந்தார். அவருடன் இணைந்து போராடிய திருப்தி தேசாயின் தொடர் போராட்டம் தொய்வில்லாமல் தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக பல சட்டப்போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தீவிர போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக பெண்கள் சனி கோயிலின் கருவறையில் தற்காலிகமாக நுழைய முடிந்திருக்கிறது. இது நிரந்தரமாகிவிடக்கூடாது என்று சிலர் பதறுவதற்கு காரணம் ஆணாதிக்கம் மட்டுமல்ல, வர்ணகட்டமைப்பிற்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதேயாகும். மகாராஷ்டிராவின் சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் சென்றால் நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று சாமியார் ஸ்வரூபானந்தா சரஸ்வதி அருள்வாக்கு கொடுத்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருப்தி தேசாய் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசேனா தலைவர்களில் ஒருவரான காஜி அராபத் தர்காவிற்குள் நுழைந்தால் செருப்படி விழும் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இந்த மிரட்டலின் பின்னணியில் மதபேதமில்லாமல் உரிமைக்காக போராடும் பெண்களை பொது எதிரியாக்கும் முயற்சியும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற எண்ணற்ற மிரட்டல்களைதக் கடந்துதான் மகாராஷ்டிராவில் பெண்கள் கருவறைக்குள் நுழைந்து வெற்றியடைந்திருக்கின்றனர்.

படித்தவர்கள் அதிகமுள்ள மாநிலமான கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறது. ஆனாலும் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை அனுமதிக்க இயலாது என்று கோயில் நிர்வாகம் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்தின் முதல்வர் உம்மன்சாண்டியோ மத நம்பிக்கையில் ”அரசு தலையிடாது” என மறைமுகமாக ”பெண்களின் உரிமையை மறுக்கிறார்”. இதற்கு கோவில் நிர்வாகத்தின் ஆணவ போக்கை ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தம்.

அந்த ஆதரவை கோவில் நிர்வாகம் தனக்கு சாதகமாக்கி மேலும் ஒரு படி மேலேபோய் நிற்கிறது. அதுதான் நீதிமன்றத்தில் ” 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்திற்கு பங்கம் வந்து விடும் . அதனால்தான் ஐயப்பன் வனப்பகுதியில் மலையின் மேல் அமர்ந்துள்ளார் ” என திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார். பெண்கள் கோயிலுக்குள் சென்றால் ஐயப்பனே ‘ சலனம் ‘ அடைவார் என்ற வாதம் யாரை கேவலப்படுத்தும் முயற்சி? பெண்களையா அல்லது சுவாமி ஐயப்பனையா ?

திருவாங்கூர் தேவஸ்தானத்தின் வாதம் சரி என்றால் 11 வயது சிறுமியையும், 49 வயது முதியவரையும் கண்டாலே சலனம் அடையும் ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?  அதற்கு வேறு பெயரல்லவா இருக்கிறது.  தங்கள்தான் ஒட்டுமொத்த இந்து கடவுள்களின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்துத்துவா குழுவினர் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை.  இதற்கு என்ன அர்த்தம்? பெண்கள் எப்போதும் ஆண்களின் போகப்பொருளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க உள்நோக்கத்துடன் கூடிய வர்ண கட்டமைப்பை நிலைநிறுத்தும் நோக்கமாகத்தானே இருக்க முடியும்.

மகாராஷ்டிரா ஒரு வகையில் பராவாயில்லை. அங்கு பெண்கள் கருவறைக்குள் நுழையும் நிலை தற்போது உருவாகி உள்ளது. ஆனால் பழம் பெருமை பேசும் தமிழகத்தில், பெரியாரின் வழித்தோன்றல்களாக தங்களை வடிவமைத்துக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மாறி மாறி அதிகாரத்தில் இருக்கும் தமிழகத்தில் அனைத்து ஆண்களும் கோவில் கருவறைக்குள் நுழையமுடிவதில்லையே! வர்ண அடுக்கில் மேல்தட்டில் இருக்கும் ஆண்களுக்கு மட்மே கருவறை அனுமதி அது ஏன்? ஆனால் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் ஆணை கோவிலின் அர்ச்சனை தட்டிற்கு கூட வரவில்லையே. பின் எப்படி கருவறைக்குள் செல்லும்?

ஒருபுறம் பெண்ணுரிமை பேசிக்கொண்டே, மறுபுறம் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த கடவுளின் கையைப்பிடித்து நீதிமன்றத்திற்கு இழுக்கும் அவலம் தொடர்கிறது. ‘ சூத்திரர்கள், சண்டாளர்கள், பெண்கள் மற்றும் நாய்கள் சம அந்தஸ்துடையவர்கள்’ என்கிறது ”மனுநீதி”. அந்த மனுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டிருக்கிறது. பல நீதிமன்றங்களில் மனுக்களே நீதிபதிகளாக இருக்கின்றனர். ஆக இந்த மனுக்களையெல்லாம் மீறிதான் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல. ஆண்பெண் பாகுபாடின்றி முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும ஒன்றிணைந்து வர்ணகட்டமைப்பை உடைத்து கருவறை பிரவேசம் செய்தால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும்.

எம்.பாண்டீஸ்வரி

Leave a Reply