1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவிதமான சமரசம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காற்று வாக்கில் செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்த ஆவணத்தின் மூலம், பகத்சிங், எந்த சமயத்தில் சமரசத்தை அனுமதிக்கலாம், எப்போது அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினார். அவர் மேலும், காங்கிரஸ் இயக்கத்தை நடத்திய விதம், அப்படிப்பட்டதோர் சமரசத்தில் முடிவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதினார். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை – விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிடும்படியும், கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திடும்படியும் அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் போட்டோ நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.)
பெறுநர்
இளம் அரசியல் ஊழியர்கள்.
அன்புத் தோழர்களே,
நமது இயக்கம், தற்சமயம் மிக முக்கியமானதொரு கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு கால கடும் போராட்டத்திற்குப் பின்னர், வட்ட மேசை மாநாட்டின் மூலம் அரசியலமைப்புச் சட்டத் சீர்திருத்தங்கள் தொடர்பாக சில தெளிவான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்கள் இயக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இதற்கு ஆதரவாக முடிவெடுக்கிறார்களா அல்லது எதிராக முடிவெடுக்கிறார்களா என்பது நமக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஏதோ ஒரு வழியில் சமரசத்தில் தான்முடியும். கட்டாயம் ஏதாவது ஒரு சமயத்தில் சமரசம் செய்து கொள்ளப்படலாம். சமரசம் என்பது பொதுவாக நாம் நினைப்பது போல் பழிப்பிற்கும் பரிதாபத்திற்கும் உரியது அல்ல. இன்னும் சரியாகச் சொன்னால், அரசியல் போர்த்தந்திர நடவடிக்கைகளில் சமரசம் என்பது தவிர்க்க முடியாத காரணியாகும்.
எந்தத் தேசத்திலும் அடக்கு முறையாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இயக்கங்கள் ஆரம்பத்தில் தோல்வியுறும், மத்திய காலங்களில் சமரசங்களின் மூலம் சிறிதளவு சீர்திருத்தங்களைப் பெறும்.
ரஷ்யாவில் 1905ம் ஆண்டில் புரட்சி இயக்கம் வெடித்தது. எல்லாத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாய் இருந்த லெனின் நாடு திரும்பினார். அவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மக்கள் அவரிடம் வந்து, பன்னிரண்டு நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்த அவர்களது மாளிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் லெனின் அப்போது அவர்களிடம், ‘திரும்பிச் செல்லுங்கள், 1200 நிலப்பிரபுக்களைக் கொல்லுங்கள், அவர்களது அரண்மனைகளையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கொளுத்துங்கள்’ என்றார்.அவரது மதிப்பீட்டில், ஒரு வேளை புரட்சி தோல்வியடைந்தாலும் அது ஏதோனுமொரு விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாகும்.ரஷ்ய பாராளுமன்றமான டூமா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நின்றார். 1907ல் இது நடந்தது. ஆனால் 1906ல் அவர் முதல் டூமாவில் பங்கெடுப்பதை எதிர்த்தார். காரணம், அப்போது அப்போது அதன் உரிமைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தன.
- எதற்காக அவர்களது தியாகங்களை கோருகின்றீர்களோ அப்புரட்சியின் மூலம் அவர்கள் அடையப் போகும் பலன் என்ன?
- இந்திய அரசாங்கத்தின் ஆட்சித் தலைவராக ரீடிங் பிரபு இருந்தாலும் சர்.புருஷோதம் தாஸ் தாகூர் தாஸ் இருந்தாலும் அவர்களிடத்தில் என்ன மாற்றத்தை இது ஏற்படுத்தும்?
- ஒருவேளை இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரூ வைக்கப் படுவாராயின் ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்?
இத்தலைப்பில் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு நான் ஒரு பயங்கரவாதியைப் போல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. இங்கே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற மிக நீண்டதொரு செயற்திட்டம் பற்றிய திட்டவட்டமான கொள்கைகளைக் கொண்ட புரட்சியாளன் நான், தண்டனைக் கைதிகளின் அறையில் ஏதோவொரு வகை பிற்போக்கிற்கு ஆளானதாக- அது உண்மையல்ல என்றாலும். “ஆயுதம் தாங்கியிருக்கும்’’ என் தோழர்கள், ராம் பிரசாத் பிஸ்மில்லை போல் என்னை குற்றம் சாட்டியிருக்கலாம். வெளியில் இருக்கும் போது வழக்கமாக நான் கொண்டிருந்ததைப் போன்றே, ஒருவேளை இன்னும் சொல்லப்போனால், சந்தேகத்திடமின்றி அதனினும் மேம்பட்ட நிலையில்- அதே கொள்கைகள், அதே உறுதியான பற்று, அதே விருப்பம் மற்றும் அதே உணர்வை நான் இப்போதும் கொண்டுள்ளேன்.
ஒரு வருடத்தில் சுயராஜ்யம் என்ற காந்தியின் கற்பனாவாதர வாக்குறுதியைப் போன்றே, பத்து ஆண்டுகளுக்குள் ஒரு புரட்சி என்ற உங்களின் இளமைக்குரிய கனவுகளையும் உதறித் தள்ளுங்கள். புரட்சி, உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம், துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது. முதலில் உங்களது தன்னலத்தை அழித்து விடுங்கள். தனிப்பட்ட சுகபோகங்கள் பற்றிய கனவுகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன்செல்ல வேண்டும். இதற்கு துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனவுறுதியும்வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்களது தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. எந்தத் தோல்வியும் துரோகங்களும் உங்களை மனம் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும் உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை கொன்று விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றிகரமான மீண்டு வரவேண்டும். தனிநபர்கள் அடையும் இந்த வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்.
புரட்சி நீடூழி வாழ்க!
-பகத்சிங்- 2 பிப்ரவரி 1931. தமிழில்: ச.வீரமணி