பாகூர் பகுதியில் சிபிஐ(எம்) உதயம்
குருவிநத்தம் மறைந்த தோழர் ராதா (எ) சி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர் முயற்சியால் 1972ல் குருவிநத்தத்தில் முதல் கிளை அமைக்கப்பட்டது. முதல் செயலாளராக தோழர் பி.கலியபெருமாள் பொறுப்பேற்றார். குருவிநத்தம் கிளை 1978 வரை கடலூர் தாலுகா கமிட்டியுடன் இணைந்திருந்தது. மறைந்த தோழர் ஆர். என். சுப்ரமணியம் அவர்கள் தாலுகா செயலாளராக இருந்து வழிகாட்டினார் . 1978ல் தான் குருவிநத்தம் கிளை புதுவை ஏரியா கமிட்டியுடன் இணைப்பு கண்டது.
குருவிநத்தம் தோழர்கள் மூலம் அரியாங்குப்பம், கரையாம்புத்தூர், பாகூர் கிளைகள் அமைக்கபட்டன. நெல்லிக்குப்பம் ஆசிரியர் தோழர் ஏ. கோவிந்தராசு அவர்கள் பணி செய்த கரையாம்புத்தூரிலும் குடியிருந்த கரிக்கலாம்பாக்கத்திலும் கிளைகள் அமைக்க உதவினார்.
பாகூர் பகுதி தோழர்களை நேரில் சென்று சந்தித்து மணிக்கணக்கில் கூட்டங்களை நடத்தி தரப்படுத்தியதில் மறைந்த தோழர் எஸ். வீரபத்திரன் அவர்கள் உழைப்பு மகத்தானது. பாகூர் பகுதி மக்களின் உரிமைகளை, நலன்களையும் பாதுகாப்பதிலும் விவசாயிகளின், விவசாய தொழிலாளர்களின் நலன் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. சோரியாங்குப்பம், குருவிநத்தம் கிராமங்களில் குத்தகை விவசாயிகளைப் பாதுகாத்ததில் நம் கட்சி கிளைகளின் பங்கு பாராட்டுக்குரியதாகும். கரையாம்புத்தூரிக்ல் விவசாயத் தொழிலாளர்களின் நலன் காக்க ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது தமிழ்நாடு விவசாயிகளின் சங்க தலைவரும் கரையாம்புத்தூரில் தங்கியிருந்து வழிகாட்டி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செய்து கூலி உயர்வு பெற்ற வரலாறு மறக்க முடியாத ஒன்றாகும்.
1982 அகில் இந்திய பொது வேலை நிறுத்தம் ஸ்தல கோரிக்கைகளுக்காக மட்டுமில்லாமல் அகில இந்திய இயக்கங்களிலும், பாகூர் பகுதி கிளைகள் நிறைவான பங்கினை ஆற்றியுள்ளன. 1982 ஜனவரி பொது வேலை நிறுத்தத்தில் பாகூர் பகுதி சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் ஜனதா கட்சிகள் சார்பாக நூறு சதவீத வேலை நிறுத்தம் நடைபெற்றது. குடியிருப்புப் பாளையத்தில் ஜனவரி 19ல் துப்பாக்கிச்சூடு நடைபெற்று கல்யாணி என்ற பெண் தோழர் காலில் சுடப்பட்டதும், ஜனவரி 23ஆம் தேதி நூற்றுக்கணக்கான துப்பாக்கி ஏந்திய போலீசார் குருவிநத்தம் கிராமத்தைச் சூறையாடியதும், நமது தோழர் பத்மநாபன் அவர்களின் துணைவியார் தோழர் சிவகாமி அவர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளானார் என்பதும் வரலாறு.