இறுதி வரைப் போராடு – பகத்சிங்

சுகதேவுக்குக் கடிதம் (வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. தீர்ப்பு எந்நாளிலும் எதிர்பார்க்கப்படலாம். சுகதேவ், தனக்கு நாடு கடத்தல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறையில் இருபதாண்டுகளுக்கும் மேல் இருக்க வேண்டும் என்கிற நினைப்பே மிகவும் வெறுப்பூட்டியது. ஒருக்கால் தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால். தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக பகத்சிங்கிற்கு சுகதேவ் கடிதம் எழுதினார். ஒன்று விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையெனில் தூக்கிலிடப்பட வேண்டும். இரண்டுக்கும் இடையில் நடுவழி என்று எதுவும் இல்லை.சுகதேவ் கடிதத்தைக் கண்ணுற்றதும் பகத்சிங் மிகவும் வெகுண்டெழுந்தார். “சேவை செய், இன்னல்களை ஏற்றுக்கொள், இறுதி வரைப் போராடு.” இதுவே, பகத்சிங் நிலையாகும். “துன்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்வது கோழைத்தனம்” என்று பகத்சிங் கூறினார். இந்தக் கடிதத்தின் மூலமாக, தியாகி பகத்சிங்கின் மனவோட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு.)அன்புள்ள சகோதரனே,
உன்னுடைய கடிதத்தை மிகுந்த கவனத்துடன் பல முறை படித்துவிட்டேன். மாறிய சூழ்நிலை நம்மை வெவ்வேறு விதத்தில் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். வெளியே இருக்கும் போது நீ வெறுத்து ஒதுக்கிய அம்சங்கள் இப்பொழுது உனக்கு அவசியமானவையாக மாறிவிட்டன. அதே போன்று, நான் கடுமையாக ஆதரித்த அம்சங்கள் எனக்கு இனிமேல் எவ்வித முக்கியத்துவமும்
அற்றவையாக ஆகிவிட்டன. உதாரணமாக, தனிப்பட்ட காதலில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அது என் உள்ளத்திலோ அல்லது உணர்விலோ குறிப்பிட்டதொரு பாத்திரத்தை வகிக்கவில்லை. நாம் வெளியில் இருந்தபோது, இதனை நீ கடுமையாக எதிர்த்தாய். ஆனால் இப்போது அதனைப் பற்றிய உனது கருத்தில் தலைகீழான மாற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது.
மனிதனின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அதனை நீ இப்போது கருதுகிறாய். அவ்வாறு கருதுவதில் ஒருவிதமான மகிழ்ச்சியையும் நீ கொள்கிறாய். ஒரு நாள் தற்கொலை குறித்து நம் இருவர் இடையே நடைபெற்ற விவாதம் இப்போதும் உனக்கு நினைவிருக்கும், அப்போது நான், சில சூழ்நிலைகளில் தற்கொலையைக் கூட நியாயப்படுத்திடலாம் என்றேன். ஆனால் அப்போது நீ அதனைக் கடுமையாக எதிர்த்தாய். நாம் பேசிக் கொண்டிருந்த இடமும் நேரமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஷாகன்ஷாஹி குடியாவில் ஒரு மாலைப்பொழுதில் இதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அத்தகையதொரு கோழைத்தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று நீ இகழ்ந்து கூறினாய். இது போன்ற செயல்கள் கோரமானவை என்றும் கொடுமையானவை என்றும் கூறினாய். ஆனால், இவ்விஷயத்தில் இப்போது உன்னிடம் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். இப்பொழுது, சில சூழ்நிலைகளில் தற்கொலை முறையானது மட்டுமல்ல, அவசியமானது, முக்கியமானது என்று கூட கருதுகிறாய். முன்பு நீ என்ன கருத்து வைத்திருந்தாயோ அதுவே இன்று என்னுடையது. அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம். அது முழுக்க முழுக்க ஒரு கோழைத்தனமான செயல். புரட்சியாளர்களை விட்டுவிடுங்கள், எந்தவொரு தனிமனிதனும்கூட அத்தகைய செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எப்படி இன்னல்களை ஏற்றுக்கொள்ளுதல் மட்டுமே நாட்டிற்குச் சேவை செய்ய முடியும் என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்று நீ கூறுகிறாய்.
உன் போன்ற ஒருவரிடமிருந்து இவ்வாறு கேள்வி எழுவது உண்மையிலேயே என்னை திகைப்படையச் செய்கிறது. ஏனெனில் “மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, தியாகம் செய்” என்கிற நவஜவான் பாரத் சபையின் குறிக்கோளில் எந்த அளவிற்கு நாம் பற்றுக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு நீ சேவை செய்துவிட்டாய் என்று நான் நம்புகிறேன். இப்போது நீ செய்த சேவைகளுக்காக இன்னல்களை ஏற்றுக்கொண்டிருக்கிறாய். நாட்டு மக்களை முழுமையாக தலைமை தாங்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் தருணம் இது என்பதும் மற்றொரு முக்கிய அம்சமாகும். நாம் பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியபோது நம் செயல்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தது போல், செயல்பாட்டின் நியாயத்தன்மை நிச்சயமாகத் தெரியும்போது அதன்வழி நடப்பவனே மனிதன். அவ்வாறு நடவடிக்கையில் இறங்கிய பின்பு, அதனால் ஏற்பட்ட விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் வேண்டும்.
தண்டனையைத் தவிர்ப்பதற்காக கருணைக்காட்டுமாறு முயற்சித் திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும் என்று நீ நினைக்கிறாயா? கூடாது, அப்படி நாம் செய்திருந்தோமானால், அது மக்கள் மத்தியில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். இப்பொழுது நம் முயற்சியில் நாம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம். நாம் சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில், நமது கட்சியைச் சேர்ந்த அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதனை மேம்படுத்த நாம் முயற்சித்தோம். நாம் செத்துவிடுவோம் என்றே அப்போது நான் உன்னிடம் உண்மையிலேயே கூறினேன். அந்த சமயத்தில் நம்மை வலுக்கட்டாயப்படுத்தி உணவு உட்கொள்ளச் செய்திட்ட உத்திகள் குறித்து நமக்குத் தெரியவில்லை. அத்தகைய விஷயங்களை அப்போது நாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சாகத் தயாராக இருந்தோம். இதனால் நாம் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருந்தோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படிக் கூற முடியாது. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக ஒருவர் தன்னை வருத்திக்கொண்டு, தியாகப்படுத்திக் கொள்வதென்பதை தற்கொலை என்று எக்காலத்திலும் கருதிவிட முடியாது. தோழர் யதிந்திரநாத் தாஸின் மரணம் குறித்து நாம் பொறாமைப் படுகிறோம். அதனை நீ தற்கொலை என்று கூறுவாயா? இறுதியாக நாம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்தது. நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன. நம்முடைய நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோம். இதுபோன்ற போராட்டங்களின்போது மரணம் ஏற்படின் அது ஓர் உன்னதமான மரணமாகும்.இது தவிர, நம்தோழர்களில் சிலர் தங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என்று நம்புகிறார்கள். என்றைக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் என்றைய தினம் தூக்கிலிடப்படுவோம் என்றும் தெரியாமல் அந்த நாட்களுக்காக மிகவும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சாவும் மிகவும் அழகானதுதான். ஆனால், தற்கொலை செய்துகொள்வதென்பது – துன்பங்களைத் தவிர்ப்பதற்காக வாழ்க்கையை முடித்துக்கொள்வதென்பது – கோழைத்தனமானது.
தடைக்கற்களே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றுகிறது என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நீயோ அல்லது நானோ, ஏன், நம்மில் எவருமே, இதுவரை எவ்விதமான துன்பத்தையும் உண்மையில் அனுபவித்ததே இல்லை. வாழ்க்கையின் அப்பகுதி இப்போதுதான் தொடங்க ஆரம்பித்திருக்கிறது. நம்முடைய இலக்கியத்தில் காணப்படாத ஆனால் ரஷ்ய இலக்கியத்தில் காணப்படும் யதார்த்த வாதம் பற்றி நாம் பலமுறை பேசியதை நினைத்துப்பார். அவர்களது கதைகளில் வரும் கடும் துன்பநிலைமைகளை நாம் சரியானமுறையில் மதிப்பிட்டு வெகுவாக பாராட்டினோம். ஆனால் அத்துன்பநிலைமைகள் நமக்கு ஏற்பட்டால் நாம் எப்படி இருப்போம் என்று அப்போது நாம் நினைத்துப் பார்க்கவில்லை.
அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங்களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்தோம். ஆனால் அதன் காரணத்தைக் கண்டறிய ஒருபோதும் நாம் கவலைப் பட்டதில்லை. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்திலும் அவர்களது கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்திலும் அசாதாரணமான உயர்வையும் ஆழத்தையும் கொடுத்தது என்றே நான் சொல்வேன். இயற்கையின் பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, கடவுள் நம்பிக்கையை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாக மாறி விடுகிறோம். எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் நாம் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம்.மிகப் பெரும் சமூகப் பண்புகளாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.
இவற்றின் மீதும் சில இலக்கியங்களை நான் படித்தேன். இத்தகைய தலைப்புகள் பற்றி சுய ஆய்வு செய்து கொள்வதற்கு ஏற்ற இடம் சிறைச்சாலையே. ஒருவரது சுய ஆய்வின் மிகச் சிறந்த பகுதி என்பது அவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வதுதான். ரஷ்யச் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பங்களே, ஜாரின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர் சிறை நிர்வாகத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் அங்கு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்பது உனக்குத் தெரியும். இந்தியாவிற்கும் அது போல சிறைகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி முழுமையாக அறிந்த, அவற்றில் நேரடியான அனுபவம் பெற்றவர்கள் தேவையில்லையா? வேறு யாரேனும் ஒருவர் அதனைச் செய்வார்கள் என்றோ, அதனைச் செய்வதற்கு வேறு பலர் இருக்கின்றார்கள் என்றோ கூறுவது சரியாக இருக்குமா? நிச்சயமாய் இருக்காது. புரட்சியின் பொறுப்புக்களை அடுத்தவர்கள் தோள் மீது சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது என்றும் வெறுக்கத்தக்கது என்றும் கருதுபவர்கள், தற்போதிருக்கும் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை முழு ஈடுபாட்டுடன் துவக்க வேண்டும்.
இந்தச் சட்ட வரம்புகளை அவர்கள் மீற வேண்டும். ஆனால் செயலின் நடைமுறைப் பொருத்தத்தையும் அவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவசியமற்ற, தவறான முயற்சிகள் எப்போதும் நியாயமானவையாக கருதப்படுவதில்லை. அத்தகைய கிளர்ச்சிகள் புரட்சியின் இயல்பான வளர்ச்சியை வெட்டிக் குறுக்கவே செய்யும்.இந்த இயக்கங்களில் இருந்து உன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக நீ கூறும் வாதங்கள் அனைத்தும் என்னால் புரிந்து கொள்ள முடியாதவையாகவே உள்ளன. நமது நண்பர்களில் சிலர் அப்பாவிகளாகவோ அல்லது முட்டாள்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் உன்னுடைய நடத்தையை வழக்கத்திற்கு விரோதமானதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் கருதுகிறார்கள். (நீ, அவர்களின் புரிந்து கொள்ளும் உணர்வு மட்டத்தைவிட மிக உயரமான இடத்தில் இருப்பதால்தான் தங்களால் உன்னை உன் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லையோ என்று அவர்கள் தங்களுக்குத்தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்).
சிறை வாழ்க்கை உண்மையிலேயே சுயமரியாதைக்கு இழுக்கேற்படுத்துவதாக இருக்கிறது என்று நீ கருதினால், போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் அந்த நிலையை மேம்படுத்துவதற்கு நீ ஏன் முயற்சிக்கக் கூடாது?
ஒருவேளை, இந்தப் போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம். ஆனால் இத்தகைய வாதம், ஒவ்வொரு இயக்கத்திலும் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக, பலவீனமானவர்களால் கூறப்படும் நொண்டிச் சமாதானம்தான். புரட்சிகர இயக்கங்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் இவ்வாறு அடிக்கடி கூறுவதை நாமும் கேட்டிருக்கிறோம். அதேமாதிரி வாதத்தை இப்போது உன்னிடமிருந்தே நான் கேட்பதா? நமது கட்சியின் மாபெரும் குறிக்கோளோடும் கொள்கைகளோடும் ஒப்பிடும்போது, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் என்ன செய்துவிட முடியும் என்று கருதுகிறாயா?
அப்படியானால், நாம் நம் வேலையைத் துவக்கியதன் மூலம் மாபெரும் தவறு செய்துவிட்டோம் என்று நாம் கருதலாமா? கூடாது, இவ்வாறு கருதுவது முறையல்ல. இது போன்று ஒருவன் சிந்தித்தால் அது அவனது உள்மன பலவீனத்தையே காட்டுவதாக இருக்கும்.“ஒருவர், பதினான்கு ஆண்டுகள் சிறையில் துன்பங்களை அனுபவித்த பின்னரும் சிறை செல்வதற்கு முன்னர் தான் கொண்டிருந்த அதே சிந்தனையையே கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், சிறைவாழ்க்கை அவரது கொள்கைகள் அனைத்தையும் அழித்துவிடும்’’ என்று மேலும் நீ எழுதியிருந்தாய். சிறைக்கு வெளியே உள்ள நிலைமை, நமது கொள்கைகளுக்கு கொஞ்சம் கூடுதலாக சாதகமாக இருக்கிறதா என்று கூறமுடியுமா?
அப்படியிருந்தும் நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று நமது கொள்கைகளை கைவிட்டோமா? அல்லது, நாம் களத்தில் இறங்காமல் இருந்திருந்தால், இந்த நாட்டில் புரட்சிகர வேலைகளே நடந்திருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
அவ்வாறு ஏதேனும் சிந்தனையோட்டம் உன்னிடம் இருந்தால் நீ தவறு செய்கிறாய். நாட்டின் சமூக நிலைமையை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாமும் உதவிகரமாக இருந்திருக்கிறோம் என்பது உண்மை என்றாலும், நாம் களத்தில் இறங்காவிட்டால் ஒன்றுமே நடந்திருக்காது என்று நினைப்பது சரியல்ல. காலத்தின் தேவைக்கேற்ப வார்த்தெடுக்கப்பட்டவர்களே நாம்.  கம்யூனிசத்தின் தந்தை, காரல்மார்க்ஸ் கூட, இந்த தத்துவத்தின் மூலவர் அல்ல என்றுகூட நான் கூறுவேன். ஐரோப்பாவில் நடைபெற்ற தொழிற்புரட்சிதான் இத்தகையவர்களை வார்த்தெடுத்தது. மார்க்ஸ் அவர்களில் ஒருவர். உண்மை, ஒருகுறிப்பிட்ட பாதையில் காலச் சக்கரத்தை முடுக்கிவிட்டதில் மார்க்சுக்கு ஒரு கணிசமானதொரு பாத்திரம் உண்டு.
நமது நாட்டில் சோசலிசம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை நானோ (அல்லது நீயோ) தோற்றுவிக்கவில்லை. நாம் வாழும் காலத்தின் கட்டாயம் மற்றும் சூழலின் பாதிப்புகள் நம்மை அச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு மாற்றியிருக்கின்றன. இச்சிந்தனைகளைப் பரப்புவதற்கு நாமும் கொஞ்சம் பங்களிப்பினைச் செய்திருக்கிறோம் என்பது உண்மை. நாம் கடினமான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தே பயணத்தை நாம் தொடங்கினோம். இதனை மேலும் தொடர்வதே சரியாக இருக்கும். இன்னல்களிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்கொலைகள் புரிவதன் மூலம் மக்களை வழிநடத்தக்கூடாது. மாறாக, அவ்வாறு நாம் செய்தோமாயின், அது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையேயாகும்.ஏமாற்றங்களும், நிர்ப்பந்தங்களும், சிறை விதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நிறைந்த சோதனையான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நாம் நமது பணிகளைத் தொடர்ந்தோம். நாம் செயலாற்றிய வேளையில் பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்கானோம். மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்மைத்தாமே பீற்றிக் கொண்டவர்கள் கூட நம்மை கைவிட்டுவிட்டு ஓடியே போய்விட்டார்கள். இந்த நிலைமைகள் உச்சபட்சமாக நம்மை சோதிக்கவில்லையா?
அதன் பின்னரும் நமது போராட்டங்களையும், முயற்சிகளையும் தொடர்ந்ததற்கான காரண காரியங்கள் தான் என்ன?இத்தகைய சாதாரண வாதமே நமது சிந்தனைகளின்பால் நமக்குக் கூடுதல் பற்றையும் பலத்தையும் தரவில்லையா?
மேலும், தாம் பற்றுக்கொண்ட சிந்தனைகளுக்காக, சிறைகளில் தண்டனைகளை அனுபவித்துத் திரும்பிய பின்னரும், இன்னமும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது புரட்சிகரத் தோழர்களின் உதாரணங்கள் நம்மிடம் இல்லையா?
பகுனின் உன்னைப்போல் வாதம் செய்திருந்தாரானால், ஆரம்பத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பார். தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்வதற்காக தமது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த பல புரட்சியாளர்கள் இன்று ரஷ்ய அரசின் பொறுப்பு மிக்க முக்கிய பதவிகளில் அமர்ந்திருப்பதை பார்க்கிறோம். மனிதன், தான் ஏற்றுக்கொண்ட சிந்தனைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. நமது வெடிகுண்டு தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட, வீரியம் மிக்க நச்சுப்பொருள்கள் வைத்திருக்க வேண்டும் என்று நாம் விவாதித்துக் கொண்டிருந்தது, உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
அப்போது அதனை நீ ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்தாய். அந்த யோசனையே உனக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால், இப்போது உனக்கு என்ன வந்து விட்டது?
அப்படியன்றும் நமக்கு இங்கே கடினமான, சிக்கலான நிலைமைகள் கூட இல்லை. இதுகுறித்து விவாதிப்பதே எனக்குச் சங்கடமாக இருப்பதை உணர்கிறேன். தற்கொலையை அனுமதிக்கும் எண்ணத்தையே நீ அடியோடு அப்போது வெறுத்தாய். நீ கைது செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே தற்போதிருக்கும் இந்த எண்ணப்படி நீ செயல்பட்டிருந்தால் (அதாவது, விஷம் அருந்தி நீ தற்கொலை செய்து கொண்டிருந்தால்) புரட்சியின் நோக்கத்திற்கு நீ உதவியிருப்பாய் என்று கருதுகிறேன். இப்படிக் கூறுவதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடு. இதுபோன்று நினைத்துப் பார்ப்பதுகூட நமது லட்சியங்களுக்குக் கேடு விளைவித்து விடும்.
நான் உனது கவனத்திற்கு கொண்டுவர விரும்பும் விஷயம் இன்னும் ஒன்று உள்ளது. கடவுள், சொர்க்கம் – நரகம், பூர்வஜென்ம காரியங்களுக்கு இந்த ஜன்மத்தில் தண்டனை – வெகுமதி என்பனவற்றில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அதாவது ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதிலோ ‘அவன் அப்போதே எழுதி வைத்துவிட்டான், அதை நாம் மாற்றமுடியாது’ என்பதிலோ நமக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆகவே, பொருள் முதல்வாதத்தின் அடிப்படையிலேயே, நாம் நம் வாழ்வையும் சாவையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.நான் டெல்லியிலிருந்து இங்கு அடையாளம் காட்டப்படுவது தொடர்பாக அழைத்து வரப்பட்டபோது, சில புலனாய்வு அதிகாரிகள், இந்தப் பொருள்பற்றி என் தந்தையின் முன்னிலையில் என்னிடம் பேசினார்கள். ரகசியங்களை மறைப்பதன்மூலம் என்னுடைய வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள நான் முயற்சிக்காததால், என்னுடைய வாழ்க்கையில் சொல்லொணா துயரம் ஏற்படும் என்று பயமுறுத்தினார்கள். இதுபோன்று மரணத்தைத் தேடிக்கொள்வது தற்கொலைக்கொப்பாகும் என்று அவர்கள் வாதிட்டார்கள். என்னைப் போன்ற கடவுள் நம்பிக்கையற்றவர்கள், சிந்தனாவாதிகள், உபயோகமற்ற முறையில் சாவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று அப்போது அவர்களிடம், எங்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு மதிப்பிடற்கரிய முறையில் வாழ முடியுமோ அவ்வாறு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம் என்றேன். மனிதசமுதாயத்திற்கு எந்த அளவுக்குத் தொண்டாற்ற முடியுமோ அந்த அளவிற்குத் தொண்டாற்றுவதையே நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் வாழ்க்கை எந்தக்காலத்திலும் வருந்தத்தக்கதாகவோ அல்லது எவ்விதக் குறிக்கோளுமில்லாமல் அற்பர்களாக வாழ்ந்தோம் என்று கவலைப்படத்தக்கதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. எனவே எங்களைப் போன்றவர்கள், தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது இருக்கட்டும், அதைக் குறித்து நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம் என்று கூறினேன். அதையே இப்போது உனக்கும் நான் கூற விரும்புகிறேன்.நான் என்னைப்பற்றி என்ன நினைக்கிறேன் என்று உனக்குக் கூற அனுமதிப்பாய் என்று நம்புகிறேன். எனக்கு உயர்ந்தபட்ச தண்டனை -மரண தண்டனை – கிடைக்கும் என்பது நிச்சயம். இதில் எவ்வித தயவுதாட்சண்யமோ அல்லது மன்னிப்போ கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை மன்னிப்பு கிடைத்தாலும், அனைவருக்குமாக அது இருக்காது. மற்ற ஒரு சிலருக்கு வேண்டுமானால் மன்னிப்பு கிடைக்கலாம், நம் எல்லோருக்கும் கிடைக்காது. அவ்வாறு மன்னிப்பு அளிக்கப்பட்டாலும் பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் கிடைத்திடலாம். நம்மைப் பொறுத்தவரை மன்னிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது, அவ்வாறு நடக்கப்போவதுமில்லை. அப்போதும் கூட, நம்மை விடுவிக்க வேண்டும் என்கிற அறைகூவல்கள் உலக அளவில் ஒட்டுமொத்தமாக விடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அத்துடன், அப்போராட்டம் அதன் உச்சகட்டத்தை அடையும்போது நாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். இதுவே என் அவா. அத்துடன், நம் சுயமரியாதைக்குப் பங்கம் வராத அளவில் நியாயமான சமரசம் எதுவும் சாத்தியமானால், நம் வழக்கு போன்ற பிரச்சனைகள் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே என் விருப்பம்.
நாட்டின் விதி தீர்மானிக்கப்படும் சமயத்தில், தனிநபர்களின் விதி மறக்கப்பட வேண்டும். புரட்சியாளர்கள் என்ற முறையில், கடந்த கால அனுபவங்கள் முழுமையாக நமக்குத் தெரியும். எனவே, ஆட்சியாளர்களின் – குறிப்பாக வெள்ளையர்களின் – அணுகுமுறையில் திடீரென்று மாற்றம் வந்துவிடும் என்ற நப்பாசை எதுவும் நமக்கு இல்லை. புரட்சி ஏற்படாமல் அத்தகைய அதிர்ச்சிதரத்தக்க மாற்றம் சாத்தியமே இல்லை. புரட்சி என்பது, கடும் போராட்டங்கள் – இன்னல்கள் – தியாகங்கள் மூலமாக மட்டுமே அடைந்திட முடியும், அவ்வாறு அடையத்தான் போகிறோம்.எனது அணுகுமுறையைப் பொறுத்தவரை, அனைவருக்கும் வசதிகள் மற்றும் மன்னிப்பு நிரந்தரமானதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். அடுத்து, நாம் தூக்கிலிடப்படுவதன் மூலம், மக்கள் மத்தியில் என்றைக்கும் அழியாத அளவிற்கு நாம் முத்திரைபதிக்க வேண்டும். இதுவே என் விருப்பம், இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
உன்
பகத்சிங்.
April 5, 1929

Leave a Reply