பிகாஜி ருஸ்டோ காமா பறக்கவிட்ட கொடி

பீகாஜி ருஸ்தம் காமா  (24 செப்டம்பர் 1861 – 13 ஆகத்து 1936)  வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத் தொடங்கிய காலத்தில் வளர்ந்தார். பிகாஜி விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபட அவரது கணவர் ரஸ்தம்ஜி காமாவோ பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தார். இந்தக் கொள்கை வேறுபாட்டால் மணவாழ்க்கை கசந்தது. பிளேக் நோயால் உடல் நலிவுற்ற பிகாஜி லண்டனில் 1902இல் குடியேறினார்.

ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்கை யைத் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த தாதாபாய் நௌரோஜியின் அறிமுகம் பிகாஜிக்குக் கிடைத்தது. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். .

மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டுமென்றால், ‘இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்’ என்று கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு வலியுறுத்தியது. அதை ஏற்க மறுத்த பிகாஜி, பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட வந்தே மாதரம் உள்ளிட்ட புரட்சிப் பாடல்களை அச்சிட்டு விநியோகித்தார்.

ஆகஸ்ட் 2, 1907 அன்று,   ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற உலக சோஷலிஸ்ட் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் ஐரோப்பா, அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகள் பங்கேற்றன. அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட, ​​46 வயதான பிகாஜி காமா, பச்சை, காவி, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட இந்தியக் கொடியை அதில் அறிமுகப்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி என்று அவர் பறக்கவிட்ட அந்த மூவண்ணக் கொடியை பிகாஜியும் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவும் இணைந்து உருவாக்கினர்.

நாடு விடுதலை பெறுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனி மாநாட்டில் கொடியைப் பறக்கவிட்ட பிகாஜி காமா, “சுதந்திர இந்தியாவின் கொடி பிறந்துவிட்டது. நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்தியர்களால் இந்தக் கொடி புனிதமடைந்தவிட்டது” என்றார். அந்நிய மண்ணில் பிகாஜி காமா பறக்கவிட்ட இந்த மூவண்ணக் கொடியின் அடிப்படையில்தான் தற்போதைய தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். இவரது நடவடிக்கைகளால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு இவரைக் கொல்லத் திட்டம் தீட்டியது. அதை அறிந்த இவர், பிரான்சுக்குத் தப்பிச் சென்றார். இவரது பாரீஸ் உறைவிடம் ஏராளமான புரட்சி வீரர்களுக்குப் புகலிடமாக அமைந்தது.1935-ல் உடல்நிலை மோசமடைந்ததால் பம்பாய் வந்து சேர்ந்தார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பீகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பீகாஜி காமா 1936-ல் 74-வது வயதில் காலமானார்.

Leave a Reply