இன்று வேலைக்கு வா, நாளை வேலையை விட்டுப் போ… முதலாளித்துவ பயங்கரவாதம்

இப்படித்தான் மத்திய அரசு தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிக வேலைவாய்ப்பை (fixed-terms temp employment) அனுமதிக்க வேலைவாய்ப்பு ஸ்டாண்டிங் ஆர்டர் விதிகளில் 20 மார்ச் 2018 அன்று மோடி அரசு மேற்கொண்டிருக்கும் சமீபத்திய திருத்தத்தின் பொருள் இதுதான்.

இந்தியாவில் தொழிலாளர்களுக்குக் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்த வேலை பாதுகாப்பு உரிமைகளையும் ஒழித்துக்கட்டி அவர்களை எடுபிடிகள் நிலைக்குத் தள்ளுகிறது இத்திருத்தம்.

இது 1947 முதலே இந்தியாவில் 70 ஆண்டுகளாக நிலவிவந்த தொழிலுறவு பாணியைத் தலைகீழாகப் புரட்டிப் போடுமளவுக்குப் பாரதூரமான மாற்றம். இப்படிப்பட்ட ஒரு திருத்தத்தைச் சில மாதங்கள் முன்னரே அறிவித்து தொழிற்சங்கங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதை விவாதித்துச் சட்டமாக இயற்றியிருக்க வேண்டும். அதற்குத் துணிவில்லாமல் இரவோடு இரவாகச் சந்தடியின்றி, நிர்வாகத் துறை உத்தரவு மூலமாக நிறைவேற்றியிருப்பது இந்த அரசு ஜனநாயகப் பாரம்பரியத்தை மதிக்கவில்லையோ என்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் மோடி அரசாங்கத்தின் அரசியல் நாணயத்தையே இந்த நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தொழிற்சங்கங்கள் மத்தியில் கொடுத்த வாக்கை இது மீறியுள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வார்த்தை தவறிய மோடி அரசு

ஆரம்பத்தில் மோடி அரசாங்கம் தொழிலுறவு சம்பந்தப்பட்ட மூன்று சட்டங்களைத் திருத்தி ஒன்றிணைத்து தொழிலுறவு சட்டத் தொகுப்பு (Industrial Relations Code) ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற எத்தனித்திருந்தது. இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் 1947, தொழிற்சங்கங்கள் சட்டம் 1926 மற்றும் தொழில் துறை வேலைவாய்ப்பு (ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ்) சட்டம் 1946 ஆகிய மூன்று சட்டங்கள் அவை. ஆட்சிக்கு வந்தவுடன் 2014லேயே இத்திட்டத்தை அறிவித்தது.

இந்தத் தொழில் தகராறு சட்டத் தொகுப்பு மசோதா முன்வரைவில் இருந்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், 100 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் கம்பெனிகள் அரசாங்க முன்னனுமதியின்றித் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யலாம் என்பது இப்போது இருக்கும் நிலை. இனி, 300 தொழிலாளர் வரை வேலை செய்யும் கம்பெனிகள் அரசாங்க முன் அனுமதியின்றித் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்ய இது அனுமதிக்கிறது.

இதை எதிர்த்து மூன்று நாள்கள் அகில இந்தியத் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்தன. தொழிலாளர் அதிகம் உள்ள மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவால் இந்த விஷயத்தில் பின்வாங்க மோடி அரசாங்கம் முடிவு செய்தது. அகில இந்தியத் தொழிற்சங்கங்களுடன் நடத்திய கூட்டத்தில் இதைக் கைவிடுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017, நவம்பர் 30 அன்று அறிவித்தார்.

இதுபோல 10% தொழிலாளர் உறுப்பினராக இருந்தால் மட்டுமே தொழிற்சங்கம் பதிவுசெய்யப்படும், 51% தொழிலாளர் உறுப்பினராக இருந்தால் மட்டுமே ஒரு சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாகக் கருதப்படும். மற்றும் வெளியிலிருந்து எவரும் தொழிற்சங்கப் பொறுப்பாளர் ஆகக் கூடாது என்ற வகையில் தொழிற்சங்கங்கள் சட்டம் 1926 என்ற சட்டத்தையும்கூடத் திருத்துவதற்கான முயற்சியை ஆர்எஸ்எஸ்ஸின் தொழிற்சங்கமான BMS கூட எதிர்த்தது. இதனால் BMS தலைவர்கள் அனைவருமே வேலையிழப்பர்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கே தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தத் தொழில் துறை வேலைவாய்ப்பு (ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ்) சட்டம் 1946 என்ற சட்டத்தைத் திருத்துவதற்கும் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இது பேசித் தீர்க்கப்படும் எனத் தொழிலாளர் துறை அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா வாக்களித்தார் (http://www.moneycontrol.com/news/business/economy/labour-ministry-sets-out-to-table-9-billswinter-session-1482617.html?utmsource=refarticle). ஆனால் வாக்களித்தபடி இது குறித்துப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் நாடாளுமன்றத்தில் விவாதித்துத் திருத்துவதற்குப் பதிலாக ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ் விதிகளை (Rules) அரசாணையின் மூலமாகத் திருத்தியிருப்பது நம்பிக்கைத் துரோகம் என்று தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.

அது மட்டுமின்றி தொழில்களின் கூட்டமைப்புகள் இதை எதிர்த்துக் குரலெழுப்பத் தொடங்கியபோது நிதியமைச்சர் ஜேட்லி, 18 நவம்பர் 2017 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளேடு நடத்திய இந்திய வளர்ச்சி விவாதத்தில் (India Development Debate) பங்கெடுத்துக்கொண்டு பேசுகையில், முதலாளிகளைச் செல்லமாகக் கடிந்துகொண்டார்: “நாங்கள் தொழிலாளர் சட்டங்கள் சிலவற்றைத் திருத்திவந்தாலும் தொழிலாளர் சட்டங்களும் நிலம் கையகப்படுத்தல் பிரச்சினையும் பெரும் பிரச்சினைகளாக மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. சீர்திருத்தங்களைக் கைவிடாமல் இவற்றுக்கும் தீர்வுகாண மாற்று வழி உள்ளது” என்றார் ஜேட்லி (ET Now, 18 November 2017). இதர பாஜக தலைவர்களும் 2019 தேர்தலுக்கு முன்னர் தொழிலாளர் சீர்திருத்தங்கள் இல்லை என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினர்.

ஆனால், சரியாக ஒரு மாதத்துக்குப் பிறகு குஜராத் தேர்தல் முடிவுகள் வந்த பின் தொழிலாளர் சீர்திருத்தங்களின் கதி என்ன என்று எகனாமிக் டைம்ஸ் நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், “இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் முடியும் வரை பொறுத்திருங்கள்” என இதே ஜேட்லி சூசகமாகத் தெரிவித்தார் (Economic Times, 19 December 2017). இது இப்போது உண்மையாகியுள்ளது. தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து அகில இந்தியத் தொழிற்சங்கத் தலைமைகள் 2 ஏப்ரல் அன்று எதிர்ப்பு நாள் என்று அறிவித்தாலும் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், கேரளத்தில் மட்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து மாநில அளவில் பந்த் நடத்தின. ஏன் இந்த வேறுபாடு என்பது புரியாத புதிர்.

முறைசாரா தொழிலாளர் பங்கு அதிகரிப்பு

‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்க’ (Make in India) என்ற மோடியின் திட்டத்துக்கேற்ப அந்நிய முதலீடுகளுக்கு ஏதுவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்தாலும் இந்தியத் தொழிலாளர் சக்தியை முறைசாராத் தொழிலாளர்களாக இவை மாற்றுகின்றன. தொழிலாளர் உரிமைகள் ஏதுமின்றி, சட்டப் பாதுகாப்பின்றி, வேலைப் பாதுகாப்பு உத்தரவாதமின்றி, சுமாரான ஊதியம்கூட இல்லாமல் இருப்பவர்கள் முறைசாராத் தொழிலாளர்கள் (informal workers).

எடுத்துக்காட்டாக, சிறு தொழிற்சாலைக்கான வரையறையை மாற்றி, தற்போது இருப்பதுபோல் 10 தொழிலாளர்கள் இல்லாமல் 40 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகளை அனைத்துத் தொழிலாளர் சட்டங்களின் வரம்பிலிருந்தும் நீக்குவது என்ற (Small Factories (Regulation of Employment and Conditions of Services) Bill) மசோதா 75% தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பை மறுக்கும்.

300 தொழிலாளர் வரை உள்ள கம்பெனிகளில் தொழிலாளரை அரசு அனுமதியின்றி வீட்டுக்கு அனுப்பலாம் என்ற சட்டத் திருத்தம் 80% இந்தியத் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பைப் பறிக்கும்.

தற்காலிகத் தொழிலாளர்களை அனுமதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தைத் தளர்த்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது முதலாளிகள் மற்றும் ஆட்சியாளர்களின் வாதம். ஏற்றுமதியை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் துறையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கான தற்காலிகத் தொழிலாளர்களை அனுமதிக்கத் தொழில் துறை வேலைவாய்ப்பு (ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ்) சட்டம் 1946 அக்டோபர் 2016இலேயே திருத்தப்பட்டது. ஆனால், அதன் பிறகு 60 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர் என ஏற்றுமதியாளர்களே ஒப்புக்கொள்கின்றனர் (https://www.bloombergquint.com/gst/2017/11/29/apparel-exporters-say-six-million-people-may-lose-jobs).

முறைசாரா தொழிலாளர் அதிகரிப்பது, தொழிலாளர் வருமானத்தையும் குறைக்கிறது. ஒரே வகையான பணியை மேற்கொண்டாலும் கட்டமைக்கப்பட்ட முறையான தொழிலாளர் ஊதியம் முறைசாரா தொழிலாளர் ஊதியத்தைவிட இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகமாக உள்ளது.

விவசாயம் கைத்தொழில்கள் போன்றவற்றில் மட்டுமே முறைசாராத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்பது தவறு. முறைசார் தொழில் துறையின் (organised sector) ஒரு பெரும்பகுதியே முறைசாராப் பிரிவாக மாறி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்த தகவல் தொடர்பு (IT) தொழில்களிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் ‘தற்காலிகம்’தான்.

நவதாராளமயமாதல் காலகட்டத்தில் முறைசாராத் தன்மை பெருகுகிறது. இந்திய பொருள் உற்பத்தித் துறையில் 1993-94இல் மொத்தத் தொழிலாளர்களில் 13.24% ஆக இருந்த ஒப்பந்தத் தொழிலாளர் பங்கு 2006-07 வாக்கில் 30% ஆக அதிகரித்தது (ஆதாரம்: இவ்விரண்டு ஆண்டுகளுக்குமான ASI மற்றும் CSO புள்ளிவிவரங்கள்). ஆனால் 2014 வாக்கில் இந்தியத் தொழில் முதலாளிகள் அமைப்பான ASSOCHAM நடத்திய ஆய்வில் இந்தியத் தொழில் துறையில் ஒப்பந்தத் தொழிலாளர் பங்கு 39% ஆக உயர்ந்துள்ளது எனக் காட்டியது (The Hindu Business Line, 5 February 2014).

இந்த ஆய்வின்படி, நிரந்தரத் தொழிலாளர் பங்கு 25% மட்டுமே. எஞ்சியோர் (நிலையற்ற) நிர்வாக ஊழியர்கள் அல்லது பயிற்சித் தொழிலாளர், நிர்ணயித்த காலத்துக்கான தற்காலிகத் தொழிலாளர்கள் அல்லது அவ்வப்போதைய பணிக்கான தொழிலாளர் ஆகியோர். உற்பத்தித் துறையை மட்டுமே எடுத்துக்கொண்டால் ஒப்பந்தத் தொழிலாளர் சதவிகிதம் 52%. எஞ்சிய ‘தற்காலிகங்களையும்’ சேர்த்துப் பார்த்தால் முறைசாராத் தொழிலாளர் 60 – 70% வரை இருக்கக்கூடும் (http://www.thehindubusinessline.com/economy/39-rise-in-number-of-contract-workers-last-year-assocham/article5656643.ece).

இப்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் நிர்ணயிக்கப்பட்ட கால தற்காலிகத் தொழிலாளர் மற்றும் முறைசாராத் தொழிலாளர் பங்கை 70இலிருந்து 80% வரை அதிகரிக்கலாம். இந்தியாவில் அந்நிய முதலீடு பெருகுகிறதோ, இல்லையோ இந்தியத் தொழிலாளர் வர்க்கம் பணிப் பாதுகாப்பு அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

நல்ல நாள் பிறக்கும் என்று மோடி வாக்களித்தார். நல்ல நாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யாருக்கு என்பதே கேள்வி.


கட்டுரையாளர் -பா.சிவராமன்

Leave a Reply