தோழர் சி. கோவிந்தராஜன் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் திரு. சின்னசாமி – பெரியஆயாள் ஆகியோரின் ஒரே மகனாக 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி பிறந்தார். 2008 ஜனவரி மாதம் 26ந் தேதி நெல்லிக்குப்பத்தில் மறைந்தார். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவர் பெரும்பகுதி காலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் அரும்பணியாற்றினார். தோழர் ‘சி.ஜி.’ என அழைக்கப்பட்ட சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.
தனது வாழ்நாளில் எட்டரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை, ஐந்தரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என தியாக வாழ்வை மேற்கொண்டார். 1962ம் ஆண்டு இந்திய – சீன எல்லையுத்தம் ஏற்பட்ட போது தென்னாற்காடு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பலரில் தோழர் சி.கோவிந்தராஜனும் ஒருவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இவரது தாயார் மரணமடைந்துவிட்டார். தாயாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள சிறைத்துறை அனுமதி மறுத்துவிட்டது. சிறையில் இருந்த பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் மற்றும் தோழர்கள் இவருக்கு ஆறுதல் கூறினர். தமிழக உள்துறைச் செயலாளரை தொடர்பு கொண்டு அழுத்தமாக வற்புறுத்திய பின்னரே காலங்கடந்து அவருக்கு பரோல் வழங்கப்பட்டு ஊருக்கு நள்ளிரவில் வந்தடைந்தார். ஆனால் அதற்கு முன்னரே தாயாரின் இறுதி நிகழ்வுகள் முடிந்துவிட்டன. தன்னை பெற்றெடுத்த தாயின் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை.
1946ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை நீதிமன்ற விசாரணைக்கு கடலூருக்கு அழைத்துவரும் வழியில், காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடும் ரயிலிலிருந்து உயிரையும் பொருட்படுத்தாமல் குதித்து தப்பிவிட்டார். பல மாதங்கள் தேடுதலுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இவர், தனது வாதத் திறமையால் காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பியது குற்றமல்ல என நீதிமன்றத்தை ஏற்க வைத்து விடுதலையானார்.
இன்னொருமுறை தலைமறைவு காலத்தில் ரயில்வே பாதையை கடக்கும் போது ரயில்வே சாம்பல் கொட்டும் பள்ளத்தில் விழுந்து விட்டார். குழியிலிருந்த சுடுசாம்பலால் படுகாயமடைந்து கடுமையான முயற்சிக்குப் பிறகு குழியிலிருந்து வெளியேறி ரயில்வே லைனை கடக்கும் போது அடுத்த ரயில் அவரை கடந்து சென்றது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது.
நெல்லிக்குப்பத்தில் பாரி ஆலை நிர்வாகத்தின் அடாவடிகளை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கு மேல் போராடியவர். 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, தோழர் சி.ஜி. அவர்களை தீர்த்துக் கட்ட குண்டர்களை ஏவி அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில், குடலை கையில் ஏந்திக் கொண்டு கடலூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று மரணத்திலிருந்து தப்பினார்.
இத்தகைய தியாக வாழ்வுக்கு சொந்தக்காரரான தோழர் சி. கோவிந்தராஜன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது மாணவர் இயக்கத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். படிப்பை முடித்த பின்னர் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை உதறிவிட்டு தொழிற்சங்க செயலாளராக, முழுநேர ஊழியராக பரிணமித்தார். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில் ரயில்வே தொழிற்சங்கம், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை தொழிற்சங்கம், நெய்வேலி அனல்மின்நிலையம் தொழிற்சங்கம், வடலூர் எஸ்.ஐ.எல்.என்.சி.ஆர்.எல் தொழிற்சங்கங்கள், கைத்தறி நெசவாளர் போராட்டங்கள் மற்றும் திருக்கோயிலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலம் தொழிற்சங்க இயக்கத்தையும், விவசாய இயக்கத்தையும் கட்டுவதில் மூலகர்த்தாவாக திகழ்ந்தவர்.
தமிழக தொழிற்சங்க இயக்கத்தில் தோழர் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன், கே.ரமணி, ஆர்.உமாநாத் ஆகியோரு டன் இணைந்து பணியாற்றியவர். சிஐடியு சங்க தொடக்க காலத்திலிருந்து நிர்வாகியாக இருந்தவர். மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவராகவும், பல்வேறு சங்கங்களுக்கு தலைவராகவும் திகழ்ந்தவர்.
ஒன்றுபட்ட தென்னாற்காடு-வடஆற்காடு மாவட்டத்தில் 1936ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். வி.கே. கோதண்டராமன், கே.ஆர். சுந்தரம், எஸ். நடராஜன், என்.ஆர். ராமசாமி, பி. ஜெயராமன், எஸ். புருஷோத்தமன், புதுவை வ. சுப்பையா போன்ற தலைவர்களையெல்லாம் கொண்ட ஒன்றுபட்ட மாவட்ட அமைப்புக்குழுவிற்கு செயலாளராக பணியாற்றியவர். இம்மாவட்டக்குழுவே தமிழகத்தில் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்த்த விடுதலைப்போராட்டத்திற்கும், புதுச்சேரியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப்போராட்டத்திற்கும் தலைமை தாங்கிய மாவட்டக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே போராட்டத்தில் ஈடுபட்ட போது ரயில்வே தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்த தோழர் ஷாஜாதி இவருக்கு அறிமுகமானார். ஆரம்ப காலம் முதல் ஷாஜாதி ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்திலும், விடுதலைப் போராட்டத்திலும், புதுச்சேரியில் விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். காவல்துறையின் அடக்குமுறைக்கு உள்ளாகி தலைமறைவாக இருந்து பணியாற்றினார். பொதுவாக பெண்கள் அரசியல் இயக்கங்களில் கலந்து கொள்வது அரிதான அந்த காலத்தில் தோழர் ஷாஜாதி விடுதலைப்போராட்டத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும் காவல்துறையின் அடக்குமுறைகளையும், சிறைக் கொட்டடிகளில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திய வீராங்கனையாவார்.
தோழர் சி.கோவிந்தராஜன் – ஷாஜாதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டு கட்சித் தலைவர்களின் தலைமை யில் திருமணம் நடைபெற்றது. இந்து, முஸ்லீம் என்ற மத வேறுபாடுகளைக் கடந்து இவர்களது திருமணம் சிலருடைய எதிர்ப்புகளை மீறி நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் சி.ஜி.யும், ஷாஜாதியும் கட்சியின் தலைவர்களாக, உழைப்பாளி மக்களின் போராளிகளாக திகழ்ந்தார்கள். அடக்குமுறைக்கு ஆட்பட்டு பல ஆண்டு காலம் கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போதும், நெஞ்சுறுதி குன்றாமல் பணியாற்றியவர்கள். இவர்களது ஒரே மகள் சம்கிராஜ், வழக்கறிஞராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோழர் சி. கோவிந்தராஜன் நெல்லிக்குப்பம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட போது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நானும் மற்றும் 20க்கும் மேற்பட்ட தோழர்களும் அவருக்கு தேர்தல் பணியாற்றிய காலத்திலிருந்து தோழர் சி.ஜி. அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கட்சியின் ஒரு உறுப்பினர் என்ற நிலையிலிருந்து, முழுநேர ஊழியர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் என்ற பல கட்டங்களில் நான் பணியாற்றும் போது உற்ற தோழராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தோழர் சி.ஜி. எத்தகைய சோதனைகள், அடக்குமுறைகள் வந்தபோதும் அவற்றுக்கு அடிபணியாமல் நெஞ்சுறுதியுடன் போராட வேண்டுமென்பதே தோழர் சி.ஜி.யிடம் நாங்கள் கற்றுக் கொண்ட பாலபாடமாகும். எனது திருமண ஏற்பாட்டில் மிக முக்கியமான பங்கினை வகித்தவர்கள் தோழர் ஷாஜாதியும், பாப்பா உமாநாத் அவர்களும்.
1976ஆம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் நெல்லிக்குப்பம் தொழிற்சங்க மேடையிலிருந்து தோழர்கள் சி.ஜி.யும், வி.பி.சிந்தனும் காவல்துறையின் கைது படலத்திலிருந்து தப்பித்தது அதிசயிக்கத்தக்கதாகும். கட்சி முடிவுப்படி ஓராண்டு காலம் இக்காலத்தில் தலைமறைவாக தோழர் சி.ஜி.யுடன் இருந்து பணியாற்றிய காலத்தில் தலைமறைவு வாழ்க்கை, இயக்கப் பணிகள் குறித்து நான் கற்றுக் கொண்டவை ஏராளமாகும். என்னை போன்ற எண்ணற்ற இளைஞர்களையும் தொழிற்சங்க ஊழியர்களையும் தலைவர்களாக வளர்த்தெடுப்பதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1987ம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதமான இட ஒதுக்கீடு வேண்டுமென செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒருவார கால சாலைமறியல் போராட்டம் வன்முறை போராட்டமாகவும், பட்டியலின மக்களுக்கு எதிரான போராட்டமாகவும் வழிநடத்தப்பட்டது. வடமாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு அமைதி சீர்குலைந்தது. பல்லாயிரக்கணக்கான பட்டியலின மக்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பட்டியலின மக்கள் பாதுகாப்பின்றி தவித்தனர். அரசியல் கட்சிகளின் கொடிகள் அடியோடு அப்புறப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை அதிகாரிகளே அஞ்சிய நேரம். அத்தகைய நேரத்தில் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திடவும், அவர்களுக்கு பக்க பலமாகவும் நின்ற ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். கிராமங்களில் பறந்த ஒரே கொடி செங்கொடி மட்டுமே. இந்த பதற்றமான நேரத்தில் இரவு – பகல் பாராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள் கிராமம், கிராமமாகச் சென்று ஆற்றிய பணியை வழிநடத்தியவர்கள் தோழர் சி.கோவிந்தராஜன், என்.ஆர்.ராமசாமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களே.
1992ம் ஆண்டுக்கு பின்னர் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவல் நிலையப் படுகொலைகள், மனித உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் தலையிட்டு நெஞ்சுறுதியோடு போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் நந்தகோபால் படுகொலை செய்யப்பட்டு, அவருடைய மனைவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிரான போராட்டம் தமிழகத்தையே உலுக்கியது. கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாக்கண்ணு அடித்துக் கொலை மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிரச்சனையையொட்டிய போராட்டம் மற்றும் வழக்கு, முத்தாண்டிக்குப்பத்தில் வசந்தா என்ற பெண் படுகொலை, வடலூர் காவல்நிலையத்தில் செல்வம் படுகொலை போன்ற வழக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் தமிழகத்தில் முத்திரை பதித்த போராட்டங்களாகும்.
தோழர் சி.ஜி. வாழ்க்கையில் சந்தித்த மேற்கண்ட சம்பவங்களைப் போல எண்ணற்ற சம்பவங்களை பட்டியலிட்டுக் காட்ட முடியும். அத்தனையும் சொல்வதானால் பக்கங்கள் போதாது. தோழர் சி.ஜி தலைசிறந்த கம்யூனிஸ்ட்டாக, தொழிலாளிகள் – விவசாயிகளைத் திரட்டுகிற மகத்தான தலைவராக தனது வாழ்நளை அர்ப்பணித்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர். ஒருமுறை நகர்மன்ற தலைவர் என்ற பொறுப்புகளை திறம்பட வகித்தவர். அவரது அர்ப்பணிப்புமிக்க வாழ்க்கை இளம் தோழர்களுக்கு என்றென்றும் ஆற்றல்மிகு சக்தியாக திகழும்.