ஒருபுறம் செல்வக் குவிப்பு  மறுபுறம் துயரக் குவிப்பு- தோழர் டி கே ஆர்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வானளாவ உயர்ந்திருக்கிறது. 2024 ஜனவரியில் ஒரு அவுன்ஸ்(31 கிராம்) தங்கத்தின் விலை 2,063 டாலர் (₹1.72 லட்சம்) இருந்தது. 2025 அக்டோபரில் இது 4,000 டாலர் (₹3.35 லட்சம்) தாண்டியது. இது 94% உயர்வு! வெள்ளி 45 ஆண்டுகளின் உச்சமான 53.60 டாலர்  (₹4,487) அவுன்ஸ்-ஐ எட்டியது. இது இந்தியாவில் தற்போது  10 கிராம் தங்கத்தின் விலை ₹1,32,770. ஒரு பவுன் (8 கிராம்) ₹97,360 (அக்டோபர் 18 நிலவரம்) ஆகும். இது வெறும் சந்தை ஏற்ற இறக்கம் அல்ல. முதலாளித்து வக் கட்டமைப்பின் ஆழமான நெருக்கடியின் அறிகுறி. டாலர் ஆதிக்கம் குலைவது, கற்பனை மூலதனத்தின் (அதாவது, பொருள் உற்பத்தியில் ஈடுபடாத, காகிதத்தில் இருக்கிற, ஆனாலும் லாபத்தைக் குவிக்கிற மூலதனம்) விரி வாக்கம், சர்வதேச நிதி மூலதனத்தால் இயக்கப்படுகிற ஏகாதிபத்தியத்தின் கீழ் வர்க்க சமத்துவமின்மை அதிகரிப்பு – இவை யனைத்தும் இணைந்த விளைவு. மார்க்சிய அரசியல் பொருளாதாரப் பார்வையில், உற்பத்தி மூலதனத்தில் குவிப்பு தடைபடும்போது, மூலதனம் ஊக சொத்துக்களை நோக்கிச் செல்கிறது – அதே நேரம் உழைக்கும் வர்க்கத்தின் மீது சுமை கூடுகிறது. தங்கத்தில் நடப்பது இதுதான்.

தங்கத்தின் இரட்டை முகம் மார்க்சின் ‘பண்ட மயக்கம்’ (Commodity Fetishism) பற்றிய பகுப்பாய்வு இன்றைய தங்கத்தின் முரண்பாட்டு பாத்திரத்தை விளக்குகிறது. தங்கம் பணமாகவும், பண்டமாக வும் செயல்படுகிறது. மற்ற அனைத்து பண்டங்களும் தங்கள் மதிப்பை வெளிப்படுத்தும் உலகளாவிய சமானப்பொருள் என்ற மதிப்பும் தங்கத்திற்கு உண்டு. 1971இல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் டாலர்-தங்க மாற்றத்தை கைவிட்டதி லிருந்து, தங்கம் ஒரு வினோதமான இரட்டை நிலையில் உள்ளது: அதிகாரப்பூர்வமாக பணமல்ல, ஆனால் அரசுப் பணத்தின் மீது நம்பிக்கை குறையும்போது இறுதி மதிப்புச் சேமிப்பாக தங்கம் செயல்படுகிறது. 2022-2024 காலத்தில் உலகின் பல நாடுகளது மத்திய வங்கிகள் ஆண்டுக்கு 1,000 டன்னுக்கு மேல் தங்கம்  வாங்கின.  சீன மக்கள் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, போலந்து  தேசிய வங்கி ஆகியவை 2024இல் மட்டும் முறையே 44, 73, 90 டன் தங்கம் குவித்தன. 95% மத்திய வங்கிகள் உலகள வில் தங்க இருப்பு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கின்றன.

ஆனால் தங்கத்தின் பணச் செயல்பாடு இன்று முக்கியமாக ‘கற்பனை மூலதனம் (fictitious capital)’ என்ற நிலையில் இயங்குகிறது. இது மார்க்ஸ் சுட்டிக்காட்டியது – பொருள் உற்பத்தியில் ஈடுபடாமல்; உழைப்பின் உபரி மதிப்பால் லாபம் குவிக்காமல், வெறும் ஊகத்தில் – மதிப்பு உயரும்; உற்பத்தியில் ஈடபடாத மூலதனக் குவிப்பு என்று பொருள். ஏகாதிபத்தியமும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதலும் உலக இருப்பு நாணயமாக டாலரின் பங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முக்கியமானது. உலகம் முழுவதும் பணவீக்கத்தை ஏற்றுமதி செய்யவும் (அதாவது, அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்தவும்) தடைகளை அமல்படுத்தவும் இது உதவுகிறது.  ஆனால் முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. டாலரில் வர்த்தகம் செய்தாக வேண்டும் என்ற நிலைமையை அமெரிக்கா கடுமையாக பிரயோகிக்க முனையும் நிலையில், அதனால் பாதிக்கப்படும் நாடுகள், மாற்று வழியாக  தங்கத்தின் இருப்பை அதிகரிக்க முனைகின்றன. அப்படித்தான் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் இப்போது 6,000 டன்னுக்கும் மேல் தங்கத்தை வைத்திருக்கின்றன (இது உலக மத்திய வங்கி தங்க வைப்புகளில் 20-22% ஆகும்).  இதற்கிடையில், நிதிமூலதன மயமாக்கல் – அதாவது, உற்பத்தி மூலதனத்தின் மீது நிதி மூலதனத்தின் வளர்ந்து வரும் ஆதிக்கம் – தங்கத்தை மேலும் ஒரு செல்வ பிரித்தெடுப்பு வாகனமாக மாற்றுகிறது. 97% தங்கம் தொடர்பான முதலீட்டு சொத்துகளை கட்டுப்படுத்தும் ஹெட்ஜ் நிதிகள் (பெரும் பணக்காரர்கள் முற்றிலும் ஊக வணிக முறையில் கொள்ளை  லாபம் குவிக்க வகைசெய்யும் முதலீட்டு நிறுவனங்கள்)  பணக்காரர்களால் மட்டும் அணுகக்கூடிய பணவீக்க பாது காப்புக் கருவியாக   தங்கத்தை வைத்திருக்கின்றன.

2024இல் இத்தகைய முதலீட்டு தேவை 1,180 டன்னை எட்டியது (25% உயர்வு). இப்படி பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள் தங்கத்தைக் குவிப்பதால் கிராக்கி அதிகரித்து, விலை தாறு மாறாக ஏறுகிறது. இதன் விளைவைத்தான் தொழிலாளர் வர்க்கம் சந்தையில் சந்திக்கிறது: நகை விலை உயர்வு: 2024-2025இல் மொத்தம்  30% விலை உயர வாய்ப்பு. திருமணங்கள், விழாக்களுக்கு அவசியம் என்ற நிலையில், தங்கத்தை வாங்கும் சக்தியில் இருந்து தொழிலாளர்கள் விலக்கப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையில்: ஆண்டுக்கு 326 டன் தங்கம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக்ஸ்  துறை 2-15% செலவு உயர்வை சந்திக்கிறது, இறுதியில் அது நுகர்வோர் தலையில் ஏற்றப்படுகிறது. வாங்கும் சக்தி அரிப்பு: 1933 முதல் அமெரிக்க டாலர் அதன் வாங்கும் சக்தியில் படிப்படியாக 95% இழந்துள்ளது. இந்நிலையில் பணக்கார முதலீட்டாளர்கள் தங்கத்தை வைத்திருப்பதால் செல்வத்தை பாதுகாக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்கள், குறைந்துகொண்டே வரும் நாணயத்தின் மதிப்பில் அற்பமான ஊதியம் மட்டுமே கையில் வைத்திருக்கிறார்கள் – வாழ்க்கைத் தரம் சுருங்குகிறது. அவர்களிடம் தங்க குவிப்பு – தங்க சேமிப்பு இல்லை.இதுதான் உலக அளவிலான பொது நிலைமை.

இந்திய நிலைமை என்ன? இந்திய குடும்பங்கள் தற்போதைய விபரங்களின்படி, மொத்தம் 25,000 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன – இதன் மதிப்பு 1.5 முதல் 2.5 டிரில்லியன் டாலர் (₹1,26,00,000  முதல் ₹2,09,00,000 கோடி) – தோராயமாக நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40%. இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவற்றின் மத்திய வங்கிகளில் குவிந்துள்ள தங்கத்தை விட அதிகம்! பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் ஆய்வக (PWC) அறிக்கையின்படி இந்த அபார தங்க குவியல், இந்திய சமூகத்தின் சாதிய -வர்க்க உயர் அடுக்கில் உள்ளவர்களிடம்  குவிந்துள்ளது; ஒரே நேரத்தில் மகத்தான தனியார் செல்வமாகவும் பெரிய உற்பத்தியற்ற பதுக்கலாகவும் உள்ளது. வெறும் 5.6% மட்டுமே முறையான கடன் மூலம் பணமாக்கப்படுகிறது; 94% க்கும் மேல் பொருளாதார ரீதியாக செயலற்றுள்ளது. இது சார்ந்த தரவுகள், இந்திய நிலப்பிரபுத்துவ எச்சங்களை அம்பலப்படுத்துகின்றன: இந்து ஆதிக்க சாதிகள்: இந்தியாவின் தங்கத்தில் 31.3% மற்றும் மொத்த செல்வத்தில் 41% வைத்திருக்கின்றனர். சராசரி குடும்ப செல்வம் ₹27.73 லட்சம். இந்து இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள செல்வந்தர்கள் : 39.1% தங்கம் வைத்திருக்கின்றனர், சராசரி செல்வம் ₹12.96 லட்சம். பட்டியலின – பழங்குடியின சமூகங்கள்: பெரிய மக்கள் தொகை பங்கை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், குறைந்த தங்கத்தையே வைத்திருக்கின்றனர், சராசரி குடும்ப செல்வம் வெறும் ₹6.12-6.13 லட்சம் – அதாவது ஆதிக்க சாதியினர் வைத்துள்ளதில்  நான்கில் ஒரு பங்கு மட்டுமே. இந்த விநியோகம், பொருள் மற்றும் செல்வக் குவிப்பு மூலம் சாதியப் படிநிலையை பிரதிபலிக்கிறது; அவர்களின் செல்வத்தைப் பெருக்க மேலும் உதவுகிறது. வரதட்சணை அமைப்பின் விஷம் இந்திய சமூகத்தில் மிகவும் வெளிப்படையானது – வரதட்சணையில் தங்கத்தின் பங்கு. இது 1961 முதல் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தாலும் வலுவாக நீடிக்கும் அரை-நிலப்பிரபுத்துவ நடைமுறை. • 70-90% இந்திய குடும்பங்கள் வரதட்சணை கொடுக்கின்றன, இதில்  95% தங்கம் உள்ளடக்கியது. • திருமணங்கள் இந்தியாவின் ஆண்டு தங்க தேவையில் 50% ஆகும். • நகை சந்தையில் மணப்பெண் நகைகள் மட்டுமே சரிபாதியளவு ஆகும்.  இது தன்னார்வமான கலாச்சார வெளிப்பாடு அல்ல, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் கட்டாயம். நடுத்தர வர்க்க மற்றும் ஏழை குடும்பங்கள் பெண் பிறந்த நேரத்திலிருந்து திருமணத்திற்கு திட்டமிட ஆரம்பிக்கின்றனர்; பெரும்பாலும் சொத்துகளை அடமானம் வைக்கின்றனர்; அவர்களால் முடிந்தவரை தனிநபர் கடன்களை வாங்குகின்றனர்; வரதட்சணை  எதிர்பார்ப்புகளை சந்திக்க இதுதான் அவர்களுக்கு வழி.  2024-2025 விலை உயர்வு இந்த சுமையை மேலும் தீவிரமாக்குகிறது.  ஒரு பவுன் ₹97,300. இதனால் ஏழை குடும்பங்கள் பல பத்தாண்டுகளுக்கான கடனாளியாக மாறுகின்றன. ஆனால், செல்வந்த வர்க்கங்கள் ஏற்கனவே உள்ள வைப்புகளிலிருந்து பெரும் ஆதாயங்களை குவிக்கின்றன – ஒரு வருடத்தில் விலை உயர்விலிருந்து மட்டும் செல்வந்த குடும்பங்கள் மொத்தமாக 750 பில்லியன் டாலர் (₹62,78,000 கோடி) குடும்ப செல்வத்தை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  கூர்மையடையும் வர்க்க முரண்பாடு இந்திய ரிசர்வ் வங்கியானது 2024இல் 73 டன் தங்கம் குவிந்துள்ளது.

இதன் மூலம், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 876-880 டன்னை எட்டியது (அந்நிய செலாவணி இருப்பில் 11.7%),  டாலர் சொத்துக்களிலிருந்து  சற்று கூடுதலாகவே விலகி, தங்க இருப்பை அதிகரிப்பது, டாலர் ஸ்திரத்தன்மை யில் குறைந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஆனால், தங்கக் குவிப்பு எனும் இந்த செயலற்ற செல்வத்தை உற்பத்தி முதலீட்டிற்கு அரசால் திருப்பி விட  முடியாது.  குவிந்துள்ள இந்த தங்கத்தால் புதிய தொழிற்சாலையோ, வேலைவய்ப்போ உருவாகாது. ஆனால் இதன் மூலம் அதிகரிக்கும் தங்க விலை உயர்வு, வர்க்க முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துகிறது. இதன் பொருள் என்ன? செல்வந்த வர்க்கங்கள் நகை வாங்குவதிலிருந்து முதலீட்டு தங்கத்திற்கு மாறுகின்றன – விலை உயர்வில் லாபம் சம்பாதிக்க. ஏழை மற்றும் நடுத்தர  வர்க்கங்கள் முற்றிலும் சந்தையிலிருந்து வெளியேற்றப்படு கின்றன – திருமண நகைகள் கூட வாங்க முடியாத நிலை.

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி மேற்கூறிய நிலைமைகள் அனைத்தும் முதலாளித்துவத் தின் ஆழமடைந்துவரும் முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றன: உற்பத்தி  தேக்கமானது, மூலதனத்தை ஊக சொத்து களுக்குள் தள்ளுகிறது. ஏகாதிபத்திய நாணய ஒழுங்கு டாலரின் ஆதிக்க அழுத்தங்களின் கீழ் பிளவுபடுகிறது. தினந் தோறும் அதிகரிக்கும் பணவீக்கம், நாணய மதிப்புகளை அரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதி மூலதனமானது, கற்பனை கருவிகள் மூலம் (அதாவது, உற்பத்தி அல்லாத வழிகளில்) பொருளின் மதிப்பை பிரித்தெடுக்கும்போது, ஏற்கெனவே செல்வம் குவித்தோர் ஆதாயம் பெறுகின்றனர்; செல்வக் குவிப்பு தீவிரமடைகிறது. இதற்கான ஒரே பொருள் – ஒரே ஆயுதம் – தங்கம்தான். முதலாளித்துவ அமைப்பானது, தினசரி 226 பில்லியன் டாலர் (₹18,93,000 கோடி) பெறுமான  2.7 கோடி அவுன்ஸ் தங்கத்தை  ஊக அடிப்படையில் வர்த்தகம் செய்கிறது.      மத்திய வங்கிகள் புவிசார் அரசியல் பாதுகாப்பாக ஆயிரக் கணக்கான டன் தங்கத்தைப் பதுக்குகின்றன, அதே நேரத்தில் இந்திய ஏழைக் குடும்பங்கள் திருமண தங்கத்திற் காக எதிர்காலத்தை அடமானம் வைக்கின்றன.    

‘கற்பனை மூலதனம்’ (உற்பத்தி அல்லாத – லாபம் குவிக்கும் மூலதனம்) அதிவேகமாக பெருகுகிறது, அதே நேரத்தில் உண்மையான ஊதியங்கள் தேக்கமடைகின்றன. இதற்கான விலையை உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் செலுத்துகிறது. இதுதான்  முதலாளித்துவத்தின் அடிப்படை விதி: ஒரு துருவத்தில் செல்வக் குவிப்பு; மறு துருவத்தில் துயரக் குவிப்பு. உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கங்கள் இந்த பகுத்தறிவற்ற, கொடிய  சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறியும் வரை,  முதலாளித்துவத்தின் நெருக்கடியின் அறிகுறியாகவும், உழைப்பிலிருந்து மூலதனத்திற்கு செல்வ மாற்றத்தின் வழிமுறையாகவும் தங்கம் அதன் இரட்டைப் பாத்திரத்தை தொடர்ந்து வகிக்கும்.

Leave a Reply