கம்யூனிஸ்ட் இயக்கப் பதிப்புகள்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்தான் பொதுவுடைமை இயக்கம் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியவர். இவருடைய புத்தகங்-களை முதன் முதலில் தமிழ் நாட்டில் பதிப்பித்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர். அவர்களின் ‘குடியரசு’ இதழில் அவரது கட்டுரைகள் வந்தன.

கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு அறிமுகமானது 1945_46இல்தான். அதற்கு முன்பே பொதுவுடைமை கருத்துகளும் சோவியத் யூனியன் பற்றிய செய்திகளையும் ‘குடியரசு’, ‘விடுதலை’ ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. 1948ஆம் ஆண்டில் அப்போது குடியரசில் நான் இரண்டு வாரம் தர்க்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்று இரண்டு கட்டுரைகளை எழுதினேன். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்-பட்டது. நவம்பரில் ரிசர்வ் வங்கியில் வேலைக்குச் சேரச் சொல்லி எனக்குக் கடிதம் வந்திருந்தது.
குடியரசில் வெளியான கட்டுரைகளுடன் சி.ஐ.டி. என் வீட்டுக்கு வந்தார். அவரை அறிமுகம் செய்து கொள்ளாமல் என் கட்டுரைகளுக்கு விளக்கம் கேட்க வந்ததாகச் சொன்னார். விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த போது, எதிர்வீட்டில் குடியிருந்தவர் வெளியே வந்தார். அவருக்கு என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரை அடையாளம் தெரிந்திருந்ததால் வந்திருந்தவர் சி.ஐ.டி. எனத் தெரிந்தது. அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “இவருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை கிடைச்சிருக்கு. அதனால் இவருடைய அரசியல் சார்பு பற்றி விசாரிப்பதற்காக வந்துள்ளேன். தேசிய பாதுகாப்புச் சட்டம் நடை-முறையில் இருந்தது. நானும் சுயமரியாதைக்-காரன்தான்’’ என்றார்.
கடந்த நூற்றாண்டில் 30ஆம் ஆண்டுகளிலிருந்து ‘ஜனசக்தி’ வந்து கொண்டிருந்தது. அது 1948இல் தடை செய்யப்பட்டது. எனவே அந்தக் காலத்தில் பொதுவுடைமைக் கருத்துகளைக் ‘குடியரசு’ பரப்பியது என்பது உண்மை. குறிப்பாக முற்போக்கு சமதர்மம், சீர்திருத்தம் போன்ற கருத்துகளை சுயமரியாதை இயக்கத்தினர் பரப்பினார்கள்.
பொதுவுடைமை இயக்கத்தையும், சோவியத் யூனியன் இலக்கிய, அரசியல் பதிப்புகளையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. காரைக்குடியிலிருந்த அ.லெ. நடராஜன் என்பவர் எஸ்.ஆர்.கே. மொழிபெயர்த்த அலெக்ஸி டால்ஸ்டாய் எழுதிய ‘சக்ரவர்த்தி பீட்டர்’ என்ற நூலை வெளியிட்டார்.
அப்போது இருந்த தினமணி பிரசுராலயத்தில் சோவியத் நாடு பற்றியும், இரண்டாம் உலகப்போர் பற்றியும் சில புத்தகங்களும் வெளிவந்தன. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததால் காகிதத் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆகவே பழுப்புநிறத்தாளில் சிறு சிறு வெளியீடுகளாக ஜனசக்தி பிரசுராலயம் கொண்டு வந்தது.
அந்தப் புத்தகம் டியுலெட் ஜான்சன் என்ற பாதிரியார் எழுதியது. கிறிஸ்துவ மதம் கம்யூனிசத்திற்கு எதிரானது என்ற கருத்துப் பரப்பப்பட்டாலும் காண்டம்பரரி பாதிரியார் கம்யூனிசத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார். அவர் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் முதலில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு பைபிள் கருத்துகள் பற்றிய பிரசங்கம் செய்வாராம். அவருக்கு மார்க்சிய பாதிரியார் என்ற ஒரு பெயரும் உண்டு. உலகம் முழுவதும் முதலாளித்துவம் இருக்கிறது. உலகத்தில் உள்ள ஆறு பகுதிகளில் ஒரு பகுதி உடைந்து சோசலிச நாடாயிற்று.
மாஸ்கோவில் நிறைய வெளியீடுகள் வந்து கொண்டிருந்தாலும் கூட, பி.சி. ஜோஷி ‘இந்தியா என்பது பிரத்தியேகமான நாடு; அந்த நாட்டிற்கு ஒரு பிரசுராலயம் தேவை’ என்றார். அதன்பிறகு பி.சி. ஜோஷியும் குஜராத்தைச் சேர்ந்த தோழர் ஒருவரும் சேர்ந்து பம்பாயில் நிறுவினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மார்க்சிய முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுவதை 1936இல் பிரேம்சந்த் லக்னோவில் தொடங்கி வைத்தார்.  பத்திரிகை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வந்தது.  அதற்கு எடிட்டர் ரொமேஷ் தாப்பர். தாப்பர் குடும்பம் கம்யூனிசக் குடும்பம். சக்தி பிரசுராலயம், ஸ்டார் பிரசுராலயம் சில பொதுவுடைமை நூல்களை வெளியிட்டன. தொ.மு.சி. ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் நூல்களை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் பொதுவுடைமை நூல்களை வெளியிட்டது.
ஜமதக்னி, காந்தி ஆசிரமத்தோடு தொடர்புடையவர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் சிங்காரவேலர், ராஜாஜி, ஜமதக்னி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் இருந்தனர். ஜீவா மொழிபெயர்த்த ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற புத்தகத்தையும் சுயமரியாதை இயக்கம் தான் வெளியிட்டது.
ஆர். பார்த்தசாரதி

Leave a Reply