புதுவை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவரும் ஒய்வறியா போராளியுமான தோழர் சி.எச். பாலமோகனன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல் தெரிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தை உருவாக்கியவரும், புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு இயக்க தலைவரும், ஜிப்மர் பாதுகாப்பு இயக்க தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவருமான தோழர் சி.எச். பாலாமோகனன் (74), மே 8 அன்று மாராடைப்பால் மாஹே அரசு மருத்துவமனையில் காலமானார்.
வீரம்மிக்க பிரஞ்சு-இந்திய விடுதலை போராட்டத்திற்கு போராடிய விடுதலை வீரரின் மகனான சி.எச். பாலமோகனன் மாஹே பகுதியில் மாணவர் பருவம் முதல் அநீதிக்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். அங்கிருந்து புதுச்சேரிக்கு வந்தபிறகு தொடர்ந்து தனது இறுதி மூச்சுவரை போராட்டகளத்தில் இருந்தார்.
குறிப்பாக 1975ஆம் ஆண்டு அவசரகால அடக்குமுறைக்கு எதிராக காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகி சிறைவாழ்க்கையும் அனுபவித்த தலைவர்.
1982 ஆம் ஆண்டு அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்தி வேலை நீக்கம் செய்யப்பட்டு இன்றைக்கு புதுச்சேரி அரசு ஊழியர்கள் அனுபவிக்கும் பல்வேறு உரிமைகளுக்கு காரணமானவர்.
அரசு ஊழியர்களின் பொது மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக பலமுறை கைது செய்யப்பட்டவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி இன்று தனித்த அடையாளத்தோடு இருப்பதற்கும், அதன் மாநில உரிமைக்கும், சுற்றுச்சூழல், புதுச்சேரி வளர்ச்சி, அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலா ளர்கள் என ஒட்டுமொத்த உழைப்பாளிகளின் நலன்களுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் ஓய்வில்லாமல் உழைத்த புதுச்சேரி போராட்ட கள நாயகர் தோழர் சி.எச். பாலாமோகனன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.
இன்று இறுதிநிகழ்ச்சி
புதுச்சேரிக்கு கொண்டு வரப்படும் தோழர் சி.எச்.பாலமோகனன் உடல் முல்லை நகரிலுள்ள அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கட்டிடத்தில் திங்கள்கிழமை (மே 9)காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று மாலை 4 மணிக்கு கருவடிகுப்பம் தகனமையத்தில் எரியூட்டபடுகிறது. சி.எச்.பாலமோகனின் மறைவிற்கு புதுச்சேரி அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.