“காலுக்குச் செருப்பு மில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா-என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
“பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய ழுவாள்
வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே
வீடு முச்சூடும் அழும்”
“கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத்தின் ரூபமடா”
எனும் பாடல்கள் காலத்தால் அழியாமல் ஜீவாவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் எனின் மிகையன்று.
சுதந்திரப் போராட்ட வீரராக, பொதுவுடமைப் போராளி யாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய பொதுவுடமைப் போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைத்தண்டனைகளையும் சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்கப் பற்றாளராக, இலக்கியவாதியாக பொதுவுடமை இயக்கத் தலைவராக பரிணமித்தவர்.
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம் சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்க ளால் ஈர்க்கப்பட்டார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும் எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கி யம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார். பெரும் இலக்கிய வாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார்.
குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்குப் புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைக ளையும் படைத்தவர்.
பொதுவுடமை மேடைகளில் தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் நடத்தித் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல.
இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டு வருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடு வதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கும் கிடைக்காத பேறு.
பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் ஜீவா.
மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால் அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார்.
சிறை யிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார்.
பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்க ளை கட்டி விலங்கிட்டு, திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறை யினர்.
1930 களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுக் கம்யூ னிஸ்ட் தோழர்களுடன் சிறை சென்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939 – 1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும் பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயலாற்றி னார்.
1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனை வரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களைக் கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப் பட்டனர். எதிராளியையும் பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை “சட்டப்பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.
எதிரணியில் இருந்தாலும் அனைத்துத் தலைவர்க ளுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.
இலக்கியத்தின் பால் தீராத தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதிக் காலத்தில் கலை இலக்கியப் பெரு மன்றத்தைத் துவக்கினார் . இலக்கியத்தை மையப்படுத்தி ‘தாமரை’ இலக்கிய இதழைத் தொடங்கினார். ‘ஜனசக்தி’ நாளிதழையும் தொடங்கினார். “என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்க ளுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை” என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா.
இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்க ளுக்குப் பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா.
உடல்நலம் குன்றிய நிலையில் 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது.
மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள். இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினை வாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு.
பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.
ஜீவாவின் மறைவு குறித்து கே.பி.ஜானகியம்மாள்…..
“ஜீவா அவர்கள் மறைவின்போது நானும் பொன் மலை பாப்பாவும் வேலூர் சிறையில் இருந்தோம். 19.01.1963 அன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டோம். வெளி வந்த பின்னர் தான் ஜீவாவின் மறைவுச் செய்தியைப்படித்தோம். செய்தி எங்களை திக்பிரமையடையச் செய்தது. கால்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. கண்ணீர் விட்டோம். இறுதி யாத்தி ரைக்குச் சென்றுவிடலாம் என்று துடித்தோம். இரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டாண்டிற்கும் அடைந்தோம். குறித்த நேரத்தில் போய்ச் சேரும்படியான போக்கு வரத்து கிடைக்காத காரணத்தால் ஜீவா முகத்தைக் காணக் கிடைக்கவில்லை. சென்னைக்கும் செல்ல வழியில்லை. மதுரைக்கும் வர மனமில்லை.
என்னைப் பொது வாழ்வில் பங்கேற்க வைத்த தியாகச் சுடரை இறுதி முறை யாகக் காணும் வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை. கண்கள் கலங்கினர். அவரது அரும்பெரும் சேவைகள் இதயத் திரையில் உருண்டோடி வந்தன. என்னைப் பொறுத்த வரையில் ஜீவா மறைந்தார் என்று எண்ணவில்லை. என்று எண்ணவும் மாட்டேன். அவர் என்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டு தானிருக்கிறார்”
கே.பி. ஜானகி அம்மாவின் வார்த்தைகள் அனைவருக்கும் தானே…
பெரணமல்லூர் சேகரன்