மகத்தான தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றினும் மேலெழுந்து மார்க்சியத்தின்பால் திரும்பியவர். கூடவே தமிழ் இலக்கியத்தைக் கற்றக் கரை தேர்ந்து, அதை அரசியல் மொழியாகப் பயன்படுத்தியவர். 1948-51 காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே அன்றைய சென்னை மாகாணத்திலும் கம்யூனிஸ்டு இயக்கம் கொடூரமான அடக்குமுறையைச் சந்தித்தது. புதிதாக அதிகார ருசியை அனுபவித்த காங்கிரஸ் தொழிலாளி வர்க்கத் தலைவர்களின் ரத்தத்தை ருசி பார்த்த அக்கிரமம் நடந்தது. இதற்குதானா சுதந்திரம் கேட்டார்கள்? என அதிர்ந்து போன மக்கள் 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு ஒர் அடி கொடுத்தார்கள். சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆசை வார்த்தைகள் காட்டி உதிரிக் கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சி அமைத்தார் ராஜாஜி.
காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்தது கம்யூனிஸ்ட் கட்சியே. எதிர்க் கட்சித் தலைவராக பி. ராமமூர்த்தியும், துணைத் தலைவராக எம். கல்யாணசுந்தரமும் அவையில் வீற்றிருந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து ஜெயித்து அவைக்கு சென்றிருந்தார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிப்பெற முடியவில்லை. 1963 இல் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். ஆம். ஒரேயொரு முறைதான் ஜீவா எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
ஒருமுறையே ஆனாலும் திருமுறையே ஒரு முறையே என்றாலும் அவரின் பேச்சு திருமுறையே எனலாம் – அதாவது, கம்யூனிச சிந்தனைகளை அழகுற எடுத்துரைத்த பாங்கு எனலாம். சிங்கத்தின் கர்ஜனைகளை மட்டுமல்ல, குயிலின் பாட்டையும் சட்டமன்றம் கேட்டது. அவரின் பேச்சுக்களில் ஆவேசமும் இருந்தது, இலக்கிய நயமும் வெளிப்பட்டது. மிகவும் நாசூக்கான நையாண்டியும் ஆங்காங்கே புகுந்து வந்தது.
சட்டப் பேரவையில் ஜீவா என்கிற தலைப்பில் அவரின் ஐந்தாண்டு பேச்சுக்களைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கிறார் கே. ஜீவபாரதி. அவற்றைப் படித்தே இந்த அனுபவத்தைப் பெற்றேன். கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் என்றால் பொருளாதார விஷயங்களையே பேசுவார்கள், அவற்றையும் கரடு முரடாகப் பேசுவார்கள் என்கிற தப்பான அபிப்பிராயம் ஆழமாகப் பரவியிருக்கிறது தமிழகத்தில். அவர்கள் எல்லாம் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். தொகுக்கும் பணியை மட்டும் செய்துள்ள ஆசிரியர் எத்தகைய வியாக்கியானமும் செய்யவில்லை. ஜீவாவின் உரைகள் அவற்றின் சுயம் அழியாமல் அப்படியே நம் கண் முன்னால் நிற்கின்றன. ஒரு கம்யூனிஸ்ட்டு, வாழ்வின் சகல முகங்களையும் தரிசித்து வரும் காட்சியை இவற்றில் நாம் சந்திக்கலாம்.
மதுவிலக்கு பற்றி காபி கூட குடிக்காதவர்!
1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக் கூடாது என்று காந்திஜி கூறினார் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார். நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற குறளைக் கையாண்டார். அதே நேரத்தில், பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் அலசினார். பல நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். இவ்வளவு காலமாக முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும் முடிந்து விடுமா என்றார். முடியவில்லை என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார். மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக் காட்டினார். இதற்கெல்லாம் உச்சமென ஒரு காட்சியை சித்தரித்தார். நோக்குங்கள் அதை – சமீபத்தில் 2-ந் தேதி தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு இரவு 1.30 மணிக்குப் போனேன். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியனாதன் அவர்கள் குடித்திருந்தார். ஹெட் கான்ஸ்டபிள் ஆதிகேசவனும் குடிபோதையில் உருண்டு கிடந்தார்
முதலாளித்துவக் கட்சிகளில் எம்.எல்.ஏ. என்றால் தேர்தலில் விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க, அதற்கு மேலும் சம்பாதிக்க இரவு பகலாகப் பாடுபடுகிறவர் என்று பொருளாகிப் போனது. ஆனால் கம்யூனிஸ்டு ஜீவா இரவு பகலாகப் பாடுபட்டார். நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து பார்த்தார் – வேலி வேலியாக இருக்கிறதா அல்லது அதுவே பயிரை மேய்கிறதா என்று கண்காணிக்க. மதுவிலக்குச் சட்டம் இருந்த காலத்தில் போலீஸ்காரர்களே மது அருந்தியிருந்தார்கள்! அதுவும் போலீஸ் ஸ்டேசனிலேயே! அதைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏது? அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்பது ஜீவாவுக்கு எப்படித் தெரிந்தது? கேட்டால் அந்தப் போலீஸ்காரர்கள் சொல்லியிருப்பார்களா? சபையோருக்குச் சந்தேகம் வந்திருக்கும் என்று அடுத்துச் சொன்னார்.
கனம் ராஜாஜி அவர்கள் காபி குடிப்பார். நான் இன்றும் காபி கூட குடிப்பதில்லை. அதே மாதிரியாக போதை தரும் வஸ்துக்கள் எதையும் நான் தொடுவதில்லை. வெளியில் யாரிடம் என்னைப் பற்றிக் கேட்டாலும் தெரியும். போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்த போது அன்று அவர்கள் குடித்திருந்ததினால் ஏற்பட்ட நாற்றம் என் குடலைப் பிடுங்கி எடுத்தது. அவர்கள் குடிபோதையில் மயங்கிக் கிடந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது.
ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு ஆனந்தம் மக்கள் சேவையில் கிடைக்குமே தவிர, போதை வஸ்துக்களால் அல்ல. தன்னளவில் மது அருந்தாத அந்தத் தலைவர், மதுவிலக்கை சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியுமா என்கிற வாழ்வியல் நோக்கிலிருந்து பிரச்சனையை அலசினார். சட்டம் இல்லாத காலத்தில் ஊருக்கு ஒரு மதுக்கடை இருந்தது, இப்போதோ தெருவுக்கு ஒரு கடை – கள்ளச் சாராயக் கடை – வந்திருக்கிறது என்றார். புதுப்புது இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகப் பொது ஜனங்கள் பேசிக் கொள்வதை நான் டிராமில் போகும் போதும் வரும் போதும் தினமும் கேட்கின்றேன் என்றார்.
அந்த காலத்தில் சென்னையில் டிராம் இருந்தது. அந்த வெகுஜன வாகனத்தில் தான் இந்த எம்.எல்.ஏ.வும் பயணம் செய்தார். மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் காது கொடுத்துக் கேட்டார். இத்தகைய மெய்யான மக்கள் பிரநிதியாக ஜீவா வாழ்ந்திருக்கிறார் என்கிற செய்தியும் பக்கம் பக்கமாகக் கிடைத்து விடுகிறது.
தமிழ்நாடு உதயமாகும்:
1956 டிசம்பரில் அவர் பேசிய பேச்சும் இந்த நூலில் உள்ளது. இதுவே சபையில் அவர் பேசிய கடைசிப் பேச்சாக இருக்கக் கூடும். அது பட்ஜெட் மீது நடந்த பொது விவாதத்தில் அவர் பங்கேற்றது. அதன் ஆரம்பமே கிளர்ந்தெழுந்த தமிழ் உணர்வாய் உள்ளது- சென்ற கூட்டத்தில் தமிழில் அச்சேற்றிய வரவு செலவுத் திட்டம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழிலேயே படிக்கப்பட்டது. இது குறிப்பிடத் தகுந்த ஒரு முன்னேற்றம். இது வரவேற்கத் தக்கதாகும். தமிழன் தனது வரவு செலவு திட்டத்தை அப்போது தான் தமிழில் போட்டிருக்கிறான். அது கண்டு குதித்துக் கும்மாளமிட்டது ஜீவாவின் உள்ளம்.
அடுத்த ஓரிரு மாதங்களில் வரவிருக்கிற தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் தமிழை சென்னை மாகாணத்தின் ஆட்சி மொழியாக்கினாலும் தமிழக பாட்டாளி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது என்று கொண்டாடி வரவேற்றது கம்யூனிஸ்ட் கட்சி. அதே நேரத்தில், நமது மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்றும் போராடியது கட்சி.
ஜீவா முழங்கினார்:-
இன்று தமிழ்மொழி ஆட்சி மொழியாகியிருப்பது உந்தித் தள்ளும் நம்மை, தமிழ்நாடு என்று திருப்பெயர் பெறுவதற்கு… வரப்போகும் சட்டசபையில் யார் என்ன நினைத்தாலும் சரி, நம் நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் நிச்சயமாக வரும். 1957 தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி வாகை சூடியிருந்தால் அப்போதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைத்திருக்கும். வென்ற காங்கிரஸ் அதைச் செய்யவில்லை. அதைச் செய்யவும் ஒரு ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. 1967ல் காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகே இது நடந்தது. ஆனால், இதற்காக சட்டமன்றத்தில் அன்றே குரல் கொடுத்தவர் ஜீவா என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. சென்னைப் பல்கலைக்கழகம் என்கிற அழகான தமிழ்ப் பெயரைக் கூட மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்று ஆங்கிலத்தில் மாற்றப் பார்க்கிற ஆட்சியாளர்கள் இருக்கிற காலமிது. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று குரல் கொடுத்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்த இரு பேச்சுக்களுக்கும் இடையே எத்தனையோ விசயங்கள் குறித்து முழங்கியிருக்கிறார் ஜீவா.
பிச்சைக்காரர்கள் பற்றி வள்ளுவர்
ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பிச்சைக்காரர்கள் பெருகிப் போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில் பிச்சைக்காரர்களே இல்லையோ என்று கேலியாகக் கேட்டார். அதற்கு ஜீவா நறுக் கென்று பதிலடி கொடுத்தார். –
ராஜாஜியின் ஆட்சிக்கு முன்பும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். திருவள்ளுவர் காலத்திலிருந்து பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அதற்கு முன்பிருந்தும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். ஆனால், திருவள்ளுவர் காலத்தில் இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்று கவனிக்க வேண்டும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவர் சொன்னதை ராஜாஜி அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
பிச்சைக்காரர்கள் இருப்பது ஒரு விஷயம் என்றால், அதைப் பற்றிய ஆட்சியாளர்களின் மனோநிலை அதைவிட முக்கியமான விஷயம். அவர்களின் இருப்பை இயல்பானதாகக் கொண்டிருந்தார் ராஜாஜி. கம்யூனிஸ்டு இயக்கமோ அதை வேதனைமிக்க சமுதாயக் கேடாக நோக்கியது. பிச்சையெடுத்துத்தான் ஒருவன் பிழைக்க வேண்டும் என்றால் இறைவன் (அரசன்) ஒழிந்து போகட்டும் என வள்ளுவன் கொண்ட ஆவேசம் ஜீவாவிடம் குடி கொண்டிருந்தது.
ஒழியட்டும் குலக் கல்வி:
ராஜாஜி ஆட்சி என்றால் குலக் கல்வித் திட்டம் உடனே நினைவுக்கு வரும். பள்ளிப் பிள்ளைகள் பாதி நேரம் படித்துவிட்டு, மீதி நேரம் தொழில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரின் திட்டம். தொழில் கல்வி என்றால் ஏதோ இந்தக் காலத்து பாலிடெக்னிக் கல்வி அல்லது பொறியியல் கல்வி என்று நினைத்துவிட வேண்டாம். அதற்கான சிறப்பு ஏற்பாடு ஏதுமில்லை. அவரவர் வீட்டிலேயே அப்பன் தொழிலைப் பிள்ளை கற்க வேண்டுமென்கிற ஏற்பாடு. அதனால் தான் இதற்கு குலக் கல்வி எனும் பட்டப் பெயர் கிடைத்தது. ஜீவா பேசினார் – 22 வயதிலிருந்து 11 வயதிற்குள் இருக்கின்ற இளம் மாணவனுக்கு எந்தத் தொழில் கல்வியைக் கற்றுக் கொள்ள வசதி ஏற்படும் என்று தான் நான் கேட்கிறேன். சின்னஞ் சிறு குழந்தைகள் தொழில் கற்றுக் கொள்ள முடியுமா?
பள்ளிப் படிப்பைக் கெடுத்து தந்தை செய்யும் வேலைக்கு சிறுவர்களை எடுபிடிகளாக்கும் இந்த மோசமான கல்வித் திட்டத்தை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக எதிர்த்தது. ஜீவா தனது பேச்சை இப்படி முடித்தார் – கனம் ராஜகோபாலாச்சாரியார் ஜனநாயகத்திற்கு புறம்பாக இதைக் கொண்டு வந்து அமல் நடத்துவது ரொம்பவும் அநீதியானது, அக்கிரமமானது. ஆகவே, இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
தொகுதி இல்லை! அந்தக் கண்ணோட்டமும் இல்லை!
சர்வாதிகாரமாக, தானடித்த மூப்பாக நடந்து கொள்வதில் ராஜாஜி மிகவும் பிரபலமானவர். அதனாலேயே மக்களின் ஆதரவை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆதரவை இழந்தார். தனது குணப் போக்கிற்கு பொது மக்களைச் சந்திக்கும் தேர்தல் முறை பொருந்தி வராது என்று புரிந்து கொண்டவர். அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திற்கு மேலவை இருந்தது. அதன் மூலமாகத்தான் அவர் முதலமைச்சர் ஆனார். இதனால் புறக்கடை வழியாக வந்தவர் என்கிற அவப் பெயருக்கு ஆளானவர். இது தொடர்பாக சபையில் ஒரு சுவையான விவாதம் நடந்தது.
கீழவை உறுப்பினர்கள் பலரும் தத்தம் தொகுதி மக்கள் பிரச்சனைகளை அவையில் எடுத்துச் சொல்லி வந்தார்கள். இதைக் கேட்ட ராஜாஜி மிகுந்த வருத்தத்தோடு உறுப்பினர்களுக்கு தொகுதி கண்ணோட்டம் தான் இருக்கிறது, மாகாணக் கண்ணோட்டம் இல்லை என்றார். அடுத்துப் பேசிய ஜீவா சிரித்துக் கொண்டே கூறினார். – கனம் ராஜாஜி அவர்கள் மாகாண நலனையே முழுவதுமாய்ப் பார்க்கும் பண்பு படைத்தவர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. எந்தத் தொகுதிக் கண்ணோட்டமும் அவர் பேச்சில் காண முடியாது. அதற்கு காரணம், அவர் எந்தத் தொகுதியிலும் தேர்தலுக்கு நின்று மக்களின் வோட்டுக்களைப் பெற்று வரவில்லை சபை கலகலவென்று சிரித்திருக்கும் என நம்பலாம். இத்தகைய சமயோசித சொல்லாடல்களும் ஜீவாவின் பேச்சில் நிரவியுள்ளன.
எம்.ஆர். ராதாவுக்கு எதிராக மசோதா:
குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது, இன்றைக்கும் நெஞ்சில் ஏந்தத் தக்கது.
கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு) காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன். இதுவொரு வரலாற்று முரண். சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கலைச் சுதந்திரத்தில் கை வைத்தது. அவர்களின் முரட்டுக் கையைத் தட்டிவிட்டு கலைஞர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை வாங்கித் தரப் போராடியவர் ஜீவா.
முண்டாசுக் கவிஞனைக் காப்பாற்ற…
1955 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் மீது ஜீவா பேசிய பேச்சிலிருந்து ஓர் இலக்கிய செய்தி கிடைக்கிறது. ஆங்கிலேயே ஏகாதிபத்திய ஆட்சியில் தான் பாரதியின் பாட்டுக்களுக்கு கத்தரிக்கோல் போடப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியிலும் அது நடந்திருக்கிறது. ஜீவா சொல்லியிருக்கிறார் – எட்டையபுரத்தில் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது பாரதியார் பாட்டின் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற அடி மட்டும் எடுக்கப்பட்டிருந்தது. பாரதியாரின் மறவன் பாட்டு கல்வி அமைச்சருக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். அதில் பல அடிகளில் டேஷ் போடப் பட்டிருக்கிறது. இப்போது இன்னும் அதிகப்படியாகப் போடப்பட்டிருக்கும்.
ஆக, காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பாரதியார் பாடலுக்கு டேஷ் – வார்த்தைகளுக்குப் பதிலாக வெறும் கோடு போட்டிருக் கிறார்கள். அதை எதிர்த்தும் போராடியிருக்கிறார் ஜீவா. அந்த முண்டாசுக் கவிஞனைக் காப்பாற்ற இந்த மீசைக்காரப் பேச்சாளி தேவைப்பட்டார்.
ஜீவாவின் 98வது பிறந்த நாள் சிறப்பு வெளியீடாக இந்த நூல் வந்திருக்கிறது. 21-8-1907ல் ஜீவா பிறந்தார். இன்னும் ஓராண்டில் அவரின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. அதற்குக் கட்டியம் கூறுவது போல் இந்தத் தொகுப்பு நூல் அமைந்து விட்டது. அவரின் நினைவைப் போற்றுவது கம்யூனிச இயக்கத்தை, அதன் வரலாற்றை, அதன் சமத்துவச் சிந்தனையை, அதன் கலை – இலக்கியப் பங்களிப்பை, அதன் தமிழ் தாகத்தை நமக்கு நாமே மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வதாகும். புதிய தலைமுறையையும் அது உத்வேகப்படுத்தும்.