தோழர் ரா. கிருஷ்ணையா

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் 26.2.1923ல் பிறந்தவர் கிருஷ்ணையா. பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமம் அவர் பிறந்த ஊர். இவர் பிறந்தபோதே தாயார் ராஜாமணி இந்த உலகை விட்டு நீங்கவே, தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் தாயன்பு என்னவென்று தெரியாமலே வளர்ந்தவர். தந்தையார் ராமதாஸ்  திருவாரூரில் வழக்கறிஞர் என்பதால் ஓரளவு வசதியான குடும்பச்சூழல். தன் ஒரே மகனைக் கண்ணும் கருத்துமாகவே அவர் வளர்த்தார். 

கிருஷ்ணையாவின் பள்ளிப் பருவம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் கழிந்தது. கல்லூரிக் காலம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்… கல்லூரிக் காலத்தில் அரசியல் அறிமுகமானது. அவருடைய உறவினர்களான சுப்பையா, மஅயவரம் சி. நடராஜன் போன்றோர் ஈ.வெ.ரா.பெரியாரிடம் நெருக்கமாக இருந்தவர்கள். அவர்கள் இருவரும் கிருஷ்ணையாவை பெரியார் கொள்கைகள் வசம் இழுத்துச் சென்றார்கள்.

மேற்கொண்டு இளங்கலை பட்டப் படிப்பு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முதுகலை பொருளாதாரம் பச்சையப்பன் கல்லூரியிலும் என தொடர்ந்தது. பின்னர் சட்டக் கல்லூரியில் நிலைத்தது. இயல்பாகவே மாணவர் இயக்கங்களில் பங்கு பெற்றதன் வழியாக கம்யூனிசக் கொள்கைகளின் பால் கவர்ந்து இழுக்கப்பட்டார்.  சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் 1946ல் சுதந்திரத்துக்கு முன்பாகவே  எழுத்து அவர் வசமானது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் அரசியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியதுடன், அவற்றை சொந்தமாகப் பிரசுரிக்கவும் ஆரம்பித்தார்.

நாடு விடுதலை பெற்ற பின், 1947 – 48 காலகட்டத்தில் ராகவன், ரெட்டி போன்ற வழக்குரைஞர்களிடம் ஜூனியராகப் பணியாற்றினார்.  ஆனால், அவர் வழக்குரைஞராகப் பணியாற்றியதை விட எழுத்துப் பணிகளில் ஈடுபட்டதும் தன்னை அதில் கரைத்துக் கொண்டதுமே அதிகம்.

1951 – 52 காலகட்டத்தில்  தோழர் விஜய பாஸ்கரனுடன் இணைந்து ’விடிவெள்ளி’ என்னும் வார இதழை கம்யூனிசக் கொள்கைப் பிரச்சாரப் பத்திரிகையாக நடத்தினார். 1953 – 54 காலகட்டத்தில் தோழர்கள் ஆளவந்தார், ஆர்.கே. கண்ணன் போன்றோருடன் இணைந்து ‘ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டார். இந்த நேரத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக இருந்தார் என்பது சொல்லாமலே விளங்கும். சென்னை மாகாணக் கட்சி கமிட்டியிலும் அவர் உறுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில்,  தலைமறைவாய் இருந்த தலைவர்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் கூரியராக  கிருஷ்ணையா மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

1954 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனிலிருந்து வெளியான Soviet Land இதழை  ‘சோவியத் நாடு’ என்னும் பெயரில் தமிழில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. அதில் பணிபுரிய அழைப்பு வந்ததை ஏற்று, கிருஷ்ணையா 9 ஆண்டுகள் டெல்லியில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார்.   1963 க்குப் பின் சோவியத் நாடு அலுவலகம் சென்னையில் இயங்கத் தொடங்கிய பின், சென்னையில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன் பின்னர் அடுத்தக்கட்டப் பாய்ச்சலாக சோவியத் நாட்டில் இயங்கி வந்த முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிய வேண்டி வந்த அழைப்பினை ஏற்று மாஸ்கோ சென்றார். 1968 முதல் 1978 வரையிலான பத்தாண்டு காலம் என்பது கிருஷ்ணையாவுக்கு மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்களுக்கும் கூட மொழி பெயர்ப்பின் பொற்காலம் எனச் சொல்லலாம்.  அந்தக் காலத்தில்தான் ருஷ்ய மொழியிலும் நன்கு புலமையும் தேர்ச்சியும் பெற்றார்.  ருஷ்ய இலக்கியங்களை மூல மொழியிலிருந்து பெயர்க்கும் வாய்ப்பினை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் அவருடைய மொழிபெயர்ப்பு மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்தது. இலக்கியங்களோடு மட்டும் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவரல்ல அவர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களையும் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் தமிழுக்குக் கொணர்ந்ததில் பெரும் பங்கு அவருக்கு இருந்தது.

சோவியத் நாடு, ரஷ்யா, அங்கு அவர்  ஆற்றி வந்த பணி அனைத்துமே மனதுக்கு நெருக்கமானதாய் இருந்தபோதும், அவர் தாய் நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்பதை விரும்பினார். அவர் பணியாற்றிய முன்னேற்றப் பதிப்பகத்தார் அவரை மேலும் சில ஆண்டுகள் பணியாற்றும்படி வற்புறுத்தியபோதும்  பிடிவாதமாக அதை மறுத்து சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் தமிழ் மொழி ஆளுமை இரண்டும் கலந்த அனுபவத்தின் வாயிலாக ஆங்கிலம் – தமிழ் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் முழு மூச்சாக இறங்கினார்.  இந்த நேரத்தில் காச நோய் அவரைப் பீடித்தது. இருப்பினும் அகராதிப் பணியையும் இடைவிடாமல் செய்து வந்தார்.   A முதல் I  வரை  நிறைவு செய்திருந்தார். 

அந்த நேரத்தில்,  தியாகுவின் மொழிபெயர்ப்பில் மார்க்ஸின் ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு பணி நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பாக்கம் செய்யும் பணியில் கிருஷ்ணையா ஈடுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் அவரை அழைத்தன. நோயுற்றிருந்த நிலையிலும் இப்பணியை முதன்மையாக ஏற்று ஐந்தாண்டு காலம் மூலதனம் மொழிபெயர்ப்பின் பதிப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1992ல் மூலதனம் பதிப்புப் பணி முடிந்தது.  அதன் பின்னர், அவர் வேறு எந்தப் பணியையும் ஏற்கவில்லை. அவரது உடல் நிலையும் சீர் கெடத் தொடங்கியது. தீவிரமான காச நோயின் பாதிப்பால், மாரடைப்பு ஏற்பட்டு 23.03.1996 அன்று பகத்சிங் நினைவு நாளில் கிருஷ்ணையாவின் உயிர் பிரிந்தது.

தன் வாழ்நாள் முழுவதையும் அவர், தான் நம்பிய மார்க்ஸியம் சார்ந்தே  வாழ்ந்தார்; மறைந்தார். அவரது மொழியாக்கப் பணிகள் வழியாக நினைவு கூரப்படுகிறார்.

பா. ஜீவசுந்தரி

தோழர் ரா.கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள்:
———————————————————-
1.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை –         மார்க்ஸ் – எங்கெல்ஸ்
2. என் நினைவுகளில் லெனின் –   கிளாரா ஜெட்கின்
3. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீட்
4. தீச்சுடர்கள் (குழந்தைகளுக்கு லெனின்  வாழ்க்கைச்
   சித்திரங்கள்)
5. கற்பனாவாத சோஷலிசமும்  விஞ்ஞான சோஷலிசமும் –    எங்கெல்ஸ்
6. புத்துயிர்ப்பு – லேவ் தல்ஸ்தோய்
7. வெண்ணிற இரவுகள் – தாஸ்தாயேவ்ஸ்கி
8. அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்
9. கலையும் சமுதாய வாழ்க்கையும் – பிளெஹானவ்
10. நவரத்தினமலை – சோவியத் நாட்டுக் கதைகள்)
11. கண் தெரியாத இசைஞன் – வி.கொரெலென்கோ
12. தொழிலாளர் குடும்பம் – வி.கோத்செத்தேவ்
13. மருமகன் – வி.தெந்திரியாக்கோவ்
14. புவியகத்தின் புரியாப் புதிர்கள் – அ.மலாஹவ்
15. நமக்குள்ளிருக்கும் சைபர் நெத்தியம் – யெலெனா  சபரினா
16. விளையாட்டுக் கணிதம் – யா.பெரெல்மான்
17. குல்சாரி – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
18. மூலதனம் – மார்க்ஸ் (பதிப்பாசிரியர்) – ரா.கிருஷ்ணையா

Leave a Reply