செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி

ஞாபகங்கள் தீ மூட்டும்

படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த பண்ணை அடிமைச் சமூகத்தில் அல்லவா, நமது முந்தைய தலைவர்கள் பயணித்து, பண்ணையடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டுள்ளார்கள்! பண்ணை அடிமைகளின் விடுதலைக்கு மட்டுமா? அவர்களின் வீரம் செறிந்த போராட்டம் தேச விடுதலைக்கே வழிவகுத்தது. இந்தியநாடு முழுவதும் கம்யூனிஸ்ட்களின் தலைமையில் பொங்கி எழுந்த விவசாயிகளின் எழுச்சியின் ஒரு பகுதியாக தஞ்சை தரணியும் காட்சியளித்தது. தேச விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்ற காந்தி நமது போராட்டம் பண்ணையாரை எதிர்த்து அல்ல பரங்கியரை எதிர்த்து என்று பறைசாற்றினார்.

ஆனால் அன்றைய கம்யூனிஸ்ட்கள் பரங்கியரின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், அதற்கு முட்டுக்கொடுக்கும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் விவசாயிகளை அணிதிரட்டினார். இந்த விவசாயிகளின் எழுச்சியை கண்டுதான் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு பாராளுமன்றத்தில் இப்படி அலறினார். “இந்தியாவில் விவசாயிகள் கம்யூனிஸ்ட்கள் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

இது நமது நலனுக்கு உகந்தது அல்ல என்றார்” அதிகாரம் பறிபோவதற்கு முன்னாள் கைமாற்றிட விரும்பினார்.அவரது விருப்பத்தையும், இந்திய அளும் வர்க்கவிருப்பத்தையும் காந்தி நிறைவேற்றினார். எனவே, தேசம் விடுதலை பெற்றது. கம்யூனிட்கள் புதிய எஜமான்களின் கீழ் செயல்பட்ட அனைவருக்கும் எதிரான போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் படிப்படியாக வளர்ந்தது. 1967-ல் பிரதேச முதலாளிகளின் நலன் காக்கும் திமுக ஆட்சியிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்த யுத்தக் களத்தினூடேதான் இங்கே காண உள்ள போராளியின் பயணம் நடந்தேறியுள்ளது.

முகம் காணாத கதிரவன்

சூரியக் கதிர்கள் எழுமுன் பண்ணையடிமைகளின் கால்கள் வயலில் இறங்க வேண்டும். ஆண்டையின் அடியாட்கள் தூரத்தில் இருப்பார்கள். இருளில் பணி துவங்கினார்களா? இல்லையா? என்பது தெரியாது. பணியில் இறங்கி விட்டோம் என்பதை தெரிவிக்க பண்ணைக்கூலிகள் “காலேரிப்பாட்டு” என்ற ஒலியை எழுப்புவார்கள்.  சூரிய கதிர்கள் படர்ந்த பிறகு, பெண்கள் ஒருகையில் கஞ்சிக்களயமும், இடுப்பிலே குழந்தைகளுடன் வயல் வெளி வந்து, மரத்தின் தொட்டிலில் குழந்தைகளை இறக்கிபோட்டு, வரப்புகளில் கஞ்சிக் களயத்தை புதைத்துவிட்டு, பணிகளில் இறங்கி விடுவார்கள்.

சூரியக் கதிர்களை எந்த பண்ணையடிமையின் முகமும் பார்க்காது, முதுகு மட்டுமே பார்க்கும். நடவு, களை எடுத்தல், உழுதல், அறுத்தல் என அனைத்தும் தலைகுனிந்தே நடக்கும். நிமிர்ந்தால் ஆண்டையின் ஆட்கள் அரட்டுவார்கள். கதிரவன் மறைந்து இருள் படர்ந்த பிறகும், கூலிகள் மேலேறி வீட்டிற்கு செல்ல முடியாது. ஆண்டையின் வீட்டிற்கு சென்று, கைகட்டி, தலைகுனிந்து “நெல்”லை கூலியாக பெற்று, அதை அரிசியாக மாற்றி இரவு 11 மணிக்கு கஞ்சியை குடிப்பார்கள் அடுத்த நாள் உயிர்வாழ, உழைத்திட படுத்துக் கொள்வார்கள். நிமிர்ந்து இருந்த நேரங்களைவிட, குனிந்தே இருந்த நேரங்கள்தான் வாழ்க்கையாக இருந்தது.

கிராமங்களில் இரவுகளில்தான் கூத்து, நாடகம் நடக்கும். முன்வரிசையில் ஆண்டைகள், அதற்கு பின்னால் இதர உயர் சாதிகள், அதிலிருந்து பல அடி தூரம் தள்ளி வைக்கோல் பிரிகட்டி, அதற்கு பின்னால் பண்ணையடிமைகள். தவறி கூட எழுந்து பார்க்ககூடாது. காலை 3 மணிக்கு மேல் கூத்து நடந்தாலும் இவர்கள் பணிக்கு சென்றுவிட வேண்டும்.

பண்ணையடிமைகளுக்கு நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வர். அவருக்கு தெரிந்த நோய் இரண்டு. ஒன்று அய்யனார் சேட்டை. மற்றது முனி பயமுறுத்தல். இரண்டுக்கும் ஒரே மருந்து ‘விபூதி’ – ஒரு கைப்பிடி விபூதியை கொடுப்பார். அப்படியே முழுங்கிட வேண்டும். அதற்கு விலையாக ஒரு “மரக்கால்” நெல் கொடுக்க வேண்டும். ஆண்டையின் அனுமதியு டன் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக ஆண்டை வீட்டிலிருந்து ஒரு மூட்டை நெல் தரப்படும். இலவசமாக அல்ல. கடன் பத்திரம் எழுதி வாங்கிய பிறகு. “பெண் பார்த்தல்” – மாப்பிள்ளை பார்த்தலில் ஆண்டையின் ஆள் ஒருவர் வருவார்.

இவருடன் பெற்றோர்கள் மட்டும் ஈடுபட வேண்டும். மற்ற உறவினர்கள் வரக்கூடாது. வேலை பாதிக்கும். விருந்துக்கு மட்டும் மாலையில் அனுமதி உண்டு.பிறக்கும் குழந்தைகளும் பண்ணையிலேதான் இருக்க வேண்டும் என்பது நியதி.சொல்படி கேட்கவில்லை, வேலைக்கு தாமதம், எதிர்த்து பேசுதல் அனைத்துக்கும் ஆண்டையின் வீட்டு முன்னால் சாட்டையடிதான் தண்டனை.

ஐந்து பிரி சாட்டையின் நுணியில் கூறான கூழாங்கற்கள் கட்டியிருக்கும். அடித்து இழுக்கும் போது சதை பிய்த்துக் கொண்டுவிடும். ரத்தம் சொரியும். வாயில் துணி இருக்கும் கத்தக்கூடாது என்பதற்காக அல்ல, அடிப்பவனை துப்பிவிடக்கூடாது, எதிர்த்து பேசிவிடக்கூடாது என்பதற்காக. இப்படித்தான் 1940-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் பண்ணை அடிமைச் சமூகம் பயணித்துக் கொண்டிருந்தது.

எதிர்ப்பேதான் பிறப்பு

கொடி சுத்தி பிறந்தவர்கள் உண்டு! குறைமாதத்தில் பிறந்தவர்கள் உண்டு! ஆனால் பிறப்பே எதிர்ப்பின் அடையாளமாக இருப்பதை கண்டதுண்டா? இதோ இருக்கிறதே!

பண்ணையடிமையான சாத்தன் பர்மாவிற்குச் சென்றான். அங்கு பக்கவாதத்தால் படுத்துவிட்டான். மனைவி அமிர்தம் கர்ப்பம் தரித்து இருந்தார். சாத்தனின் சகோதரிகள் இந்த கருதான் சாத்தனின் நோய்க்கு காரணம் என முடிவெடுத்து, கருஞ்சீரகத்தை கரைத்து கொடுத்தார்கள். கணவனின் நலன் கருதி குடித்தாள் அமிர்தம். கரு கலையவில்லை. கண்ணாடியை தூள்களாக்கி வெல்லத்தில் சேர்த்து கொடுத்தார்கள். அதையும் உண்டாள் அமிர்தம். கரு கலையவில்லை. கருஞ்சீரகத்தையும், கண்ணாடித்துகளையும் வென்று 1926 புரட்டாசி 27 அன்று வெளியே வந்தான் தனிக்கொடி.

விட்டார்களா அத்தைமார்கள்! தாய் பாலுக்கு பதிலாக இஞ்சித் தண்ணீரை கொடுத்தனர். வீட்டிற்கு வெளியே குப்பைக் கூளங்களில் போட்டார்கள். ஊரில் கள் இறக்கும் நாடார் இறக்கப்பட்டு மரத்துப்பால் என்கிற தென்னங்கள்ளை கொடுத்தனர். சத்து கிடைத்தது தனிக்கொடிக்கு. தாய்பாலை விட மரத்துப்பாலில்தான் வளர்ந்தான். வீட்டில் இருந்ததைவிட வெளியில் கிடந்த நாட்கள் அதிகம். தந்தை சாத்தன் குணமாகி வந்து குழந்தையை எடுத்து பாதுகாக்க ஆரம்பித்தான். பிறப்பும், குழந்தை பருவ வளர்ப்பும் எதிர்ப்புடன் கூடியதாகவே அமைந்தது தனிக்கொடிக்கு. இந்த தனிக்கொடி என்ற பெயரே தனுஷ்கோடியாக மாறியது.

அடங்க மறுத்த மோதல்கள்.

விளத்தூரில் தனுஷ்கோடியின் தந்தை சாத்தனுக்கும், ஆண்டையின் உறவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதால், இரவோடு இரவாக குடும்பத்தை காலி செய்து பாங்கல் கிராமத்திற்கு குடியேறினர். அங்குள்ள பண்ணையில் பணிபுரிந்தனர். இதுவே சொந்த ஊராக மாறியது. பாங்கல் கிராமத்தில் பர்மாவிலிருந்து திரும்பியவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அங்கு இரண்டாவது வரை படித்திருந்தனர். இரவு நேரத்தில் காடாவிளக்கை வைத்து மணல் பரப்பில் சிறுவர்களுக்கு அ, ஆ, எழுத கற்றுக் கொடுத்தனர். இதை படித்த தனுஷ்கோடி பகல் நேரத்தில் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

பண்ணை வீட்டுக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்டையின் காதுகளுக்கு செய்தி போய், சாத்தன் வீடு பூட்டப்பட்டு, குடும்பமே பண்ணை வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. சாத்தனின் உடம்பை சவுக்கடிகள் பதம் பார்த்தன. பண்ணையடிமைக்கு படிப்பு எதற்கு? என்ற சட்டம் மீண்டும் ஒரு முறை நிலைநாட்டப்பட்டது. தனுஷ்கோடி பண்ணை வீட்டு மாடு மேய்க்க அனுப்பப்பட்டான். மாடுகளை மேய்கும் போது முரட்டு மாடுகளை தனுஷ்கோடி அடித்தான். ஒருமாடு படுத்துவிட்டது! தனுஷ்கோடியும், சாத்தனும் பண்ணை வீட்டின் முன் நிறுத்தப்பட்டனர். சவுக்கடிகள் இருவர் உடலை பதம்பார்த்தது. மாட்டுக்கான பணம் சாத்தனிடம் பெறப்பட்டது. தனுஷ்கோடி மாடு மேய்க்கும் பணியிலிருந்து பண்ணை வேலைக்கு அனுப்பப்பட்டான். அடங்க மறுப்பது அவனது குணமாக இருந்தது. அடிமை வேலையில் வெறுப்பு.

பக்கத்தில் உள்ள விளாங்கல் கிராமத்தில் அத்தையின் ஊருக்குச் சென்றான். அங்குள்ள குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்தான். எதிரே தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கோனார் எதிர்ப்புத் தெரிவித்து அடித்தார். மோதல் முற்றியது. மீண்டும் பாங்கல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டான். வீட்டில் சாமிக்கு படையல் வைத்து சாமி சாப்பிட சில மணிகள் கதவை மூடி வைப்பது வழக்கம். தனுஷ்கோடிக்கு, பலமுறை அடிபடும் போது சாமி, சாமி என்று கத்தியும் வராத சாமி இருக்கிறதா என்று சந்தேகம். எனவே, வீட்டினுள் ஒளிந்து கொண்டு பார்த்தான். சாமி சாப்பிட வரவில்லை. தானே சாப்பிட்டுவிட்டு மறைந்து கொண்டான். கதவை திறந்த அம்மாவிற்கு சாமி சாப்பிட்டுவிட்ட மகிழ்ச்சி. சாத்தனுக்கு சந்தேகம். மறைந்திருந்த தனுஷ்கோடியை கண்டுவிட்டார். அவரின் கைவிரல்கள் தனுஷ்கோடியின் உடலில் பதிந்தது.

நம்பிக்கை ஒளியும்-விரக்தியின் வெளிப்பாடும்.

காலச்சக்கரம் சுழன்றோட, தனுஷ்கோடிக்கு வயதும், எதிர்ப்புணர்வும் இணைந்தே வளர்ந்தது. கோவணத்திற்கு மேலே முட்டிவரை சுற்றிய துணியை –- இதுதான் அனைவருக்குமான உடை என்பதை–- மாற்றி நுணிக்கால்வரை வேட்டியும் முண்டா பனியனும், தோளில் துண்டும் போட்டு மிடுக்காக நடந்தான்.

பார்த்தவர்கள் சிலர் பரவசமடைந்தனர். பலர், என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர். இப்போது தனுஷ்கோடிக்கு திருத்துரை பூண்டியில் ஆசிரியராக பணிபுரிந்த அய்யாசாமி பிள்ளையின் தொடர்பு கிடைத்தது.  அதன்மூலம் “ஆதிதிராவிடர் வாலிபர் சங்கம் ” என்ற அமைப்பை தொடங்கினார். கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியில் ஈடுபட்டனர். திருத்துறை பூண்டிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கிடையாது. குளிக்க குளமும் கிடையாது. எனவே, இச்சங்கத்தின் மூலம் கிராமத்திற்கு 20 பேர்கள் வரவழைத்து காட்டை அழித்து, குளமும், தங்கிட பெரிய இடமும் அமைத்தனர். பணி முடிந்த பிறகு, படையாச்சி சாதியினை சார்ந்தவர்கள் இவர்களை அடித்து துரத்திவிட்டு, இடத்தை அபகரித்தனர். சங்கம் முடங்கியது. வேறு வழியின்றி விழிபிதுங்கி நின்றார் தனுஷ்கோடி.

திருத்துறை பூண்டியை சேர்ந்த செங்கமலத்தம்மாள் என்ற காங்கிரஸ் ஊழியர், மூவர்ண கொடியுடன் பாங்கல் கிராமத்திற்கு வந்தார். கொண்டு வந்திருந்த காகிதக் கொடிகளை குழந்தைகளிடம் கொடுத்தார். கூட்டம் சேர்ந்தது. தனுஷ்கோடியும் இணைந்தான். ஊர்வலம் கிராமம் கிராமமாக சென்றது. தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தனுஷ்கோடி தலைமையில் உயர்சாதி வீடுகளின் திண்ணையில் உட்கார்ந்தனர். கதவுகளை தொட்டுப்பார்த்தனர். வீட்டை சுற்றி ஓடினர். அருகில் இருந்து பார்க்க முடியாத, தொட முடியாத புனித சின்னமாக சித்தரிக்கப்பட்ட வீடுகள் அதாவது ஆதிக்க சாதிய அடையாள சின்னங்களில் ஓட்டைகள் விழுந்தது. சிறுவர்களின் சிரிப்பும், ஸ்பரிசமும் அவர்களுக்கு இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியது. ஊர்வலம் முடிந்தது. இரவும் நகர்ந்தது. விடிந்ததும் விளைவுகளை அறிந்திட தனுஷ்கோடி விளார்தூருக்கு சென்றான். வந்தவனை கட்டிவைத்து நையப்புடைத்து, குற்றுயிரும், கொலை உயிருமாய் அனுப்பி வைத்தனர். நேராக காங்கிரஸ் தலைவர் ராமுபடையாச்சியிடம் சென்றான். அநியாயத்தை சொன்னான். ஆறுதல் வார்த்தையை எதிர் பார்த்தான். நேற்று நீ செய்த காரியத்திற்கு உன்னை வெட்டி புதைத்திருக்க வேண்டும் என்றார். அவனின் விழிகள் மங்கியது. விடியலின் ஒளியாய் நினைத்தது இருண்டது. அவனது சிந்தனை வேறு வழியை தேடியது.

1938ம் ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிரியர் பெத்தபெருமாள் மூலம் பெரியார், அம்பேத்காரை பற்றி கேள்விபட ஆரம்பித்தான். திருத்துறைப்பூண்டியில் பெரியார் பங்கேற்ற கூட்டத்திற்கு சென்றார் தனுஷ்கோடி. வேஷ்டி, பனியன், துண்டு சகிதமாக கிராப் வெட்டி, தன்னை பெரியாரின் தொண்டனாக வரித்துக்கொண்டார். கூட்டம் முடிந்து திரும்புகிற வழியில் சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை டீ கடையின் உள்ளே சென்று டீ குடிக்க உட்கார்ந்தார். டீக்கடைகாரர் பெரியாரின் கட்சி. அவரும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கருப்பு சட்டை சகிதமாக காட்சி அளித்தனர். உள்ளே இருந்த தனுஷ்கோடி தாழ்த்தப்பட்டவன் என்று கண்டு கொண்டு அவனை தரதரவென இழுத்து புரட்டி எடுத்தனர். நான் பெரியார் கட்சி என்றான். என்னடா பெரியார் கட்சி என்று கூடி இருந்தவர்களும் சேர்ந்து உதைத்தனர். டீக்கடையானாலும் கள்ளுக்கடையானாலும், தாழ்த்தப்பட்டவன் நுழையக்கூடாது என்ற சட்டம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. வண்ணங்கள்தான் மாறியது. “வர்ணாசிரமத்தை” அனைவரும் கடை பிடித்தனர். அடிவாங்கவா? அரசியல் கட்சியில் சேர்ந்தோம் என்ற விரக்தியில் இருந்தான் தனுஷ்கோடி.

1942 டிசம்பரில் “ஜனசக்தி” என்ற பத்திரிக்கையை பார்த்தார். அதனுடன் சில நபர்களை சந்தித்தார். சீனிவாசராவ் பற்றி கேள்விப்பட்டார். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் அவர்கள் சாப்பிடும் தட்டில் சாப்பிடுகிறார். பாய் இல்லாவிட்டால் தரையில் படுத்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டார். களப்பால் கிராமத்திற்கு சீனிவாசராவ் வருகிறார் என்பதை அறிந்து 10 பேர்களுடன் தனுஷ்கோடி சென்றார். சாதிய அடக்குமுறைக்குள் இருக்கிற வர்க்கச்சுரண்டலை வெளிக்கொணர்ந்தார். கருத்துக்கள் புதிது, பார்வைகளும் புதிது. பாதைகளும் புதிது. புதிய மனிதனாக புறப்பட்டான் தனுஷ்கோடி. கிராமங்கள்தோறும் விவசாய சங்கம் உருவாக்கினான். செங்கொடி ஏற்றினான். கலத்திற்கு 2 மரக்கால் கூலி கேட்டு கோரிக்கை வைத்தான். இதுவரை கோரிக்கை வைத்து பழக்கப்படாதவர்கள். அவர்களிடம் அச்சமும், துணிச்சலும் கலந்த எழுச்சி ஏற்பட்டது. தனுஷ்கோடி நம்பிக்கை ஊட்டினார்.

கருமாதிக்கு பின் வந்த கடிதம்

விவசாய சங்கங்கள் வளர்த்தது. கூடவே மோதலும் ஏற்பட்டது. பாங்கல், வளத்தூர், உத்தரங்குடி, சூரமங்கலம், பரமத்தூர், அம்மனூர் என சங்க கிளைகள் அமைத்தார். பண்ணையார்கள் கொலை செய்ய அடியாட்களை ஏவிவிட்டனர். தாயையும், தந்தையையும் அழைத்து தனுஷ்கோடி எங்களது மகன் இல்லை என்று அடித்து கையெழுத்து போடச் செய்தனர். வேலை கொடுக்க மறுப்பு, வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இரவில் மட்டும் சங்க வேலை. எனவே, வேறு வழியின்றி 1945 –ல் இராணுவத்தில் யாருக்கும் தெரியாமல் சேர்ந்து விட்டார். மகனைக் காணவில்லை என பல மாதங்கள் தேடி, ஆண்டைகள் கொலை செய்திருப்பார்கள் என்ற முடிவிற்கு வந்து தனுஷ்கோடிக்கு “கருமாதி”யை முடித்துவிட்டனர் பெற்றோர்கள். இதன்பிறகு சில மாதங்கள் கழித்து இலங்கையிலிருந்து தாயின் பெயருக்கு மணியார்டரும், கடிதமும், தான் இராணுவத்தில் இருப்பது பற்றிய தகவலும் கிடைத்தது. பெற்றோர் பூரிப்படைந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாங்கல் வந்தார். சீனிவாசராவை சந்தித்து சங்க வேலையை தொடர்ந்தார்.

1946 கிடையில் தமிழகத்தில் பஞ்சம். பண்ணையார்கள் உணவு பொருட்களை பதுக்கினர். அதிகார வர்க்கம் துணை நின்றது. ஆட்சியரும், தாசில்தாரும் திணறினர். விவசாய சங்கத்தின் உதவியை நாடினர். அன்றைய முதல்வர் ஓமந்தூரார் பி.எஸ்.ஆரிடம் நேரிடையாக சங்கத்தின் உதவியை கேட்டார். தஞ்சையில் சங்கம் களம் இறங்கியது. பதுக்கல் பொருட்கள் வெளிக்கொணரப்பட்டு பங்கிடப்பட்டது.

1946–ல் உழனி கிராமத்தில் தனுஷ்கோடி தலைமையில் பண்ணையாரின் அடியாட்களுடன் மோதல். கழனிவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்கத் தடை. தனுஷ்கோடி சென்றார். விவசாயிகளை திரட்டி குளத்தில் இறங்கி தண்ணீர் எடுத்தார். தடை உடைபட்டது. ஆலத்தூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த தெருவிற்கு முன் வேலி போட்டனர். தனுஷ்கோடி சென்றார் வேலி அகற்றப்பட்டது. இப்படி எண்ணற்ற தடைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் வயலில் நண்டு, நத்தைகள் பிடிக்கக்கூடாது என்றனர். அனைத்து தடைகளையும் சங்கம் மீறியது. தனுஷ்கோடி திருமணம் செய்ய மறுத்தார். நிர்பந்தம் அதிகமாகவே, புதுஜவுளி, நகை, தாலி, மேளம் எதுவும் கூடாது என்ற நிபந்தனை விதித்தார். அனைவரும் ஏற்றனர். 1947 பிப்ரவரி 2ம் தேதி மனோன்மணியை திருமணம் செய்தார்.

குருதியின் வழியே குடிநீர்

1948 -ம் ஆண்டு ஜூன் மாதம், பண்ணையார்களின் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு 3 1/2ஆண்டுகள் திருச்சி சிறையில் கொடுமைகளுக்கிடையில் உயிர் வாழ்ந்தார். புதுச்சட்டிக்கும், வேட்டிக்கும், மருத்துவ வசதிக்கும் உண்ணாவிரதம் இருந்தார். மோதலும், தடியடியுமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருந்தது. குடிக்க நல்ல குடிநீர் கேட்டதற்காக தனுஷ்கோடியை அடித்து கூழாங்கற்கள் பரப்பி உதிரம் கொட்ட கொட்ட இழுத்துச் சென்றனர். தனுஷ்கோடி உறுதிகுலையாமல் இருந்தார். குருதி கொட்டியபிறகுதான் சிறைச்சாலையில் நல்ல குடிநீர் கிடைத்தது.

அடுத்த கோரிக்கைக்கு ஆரம்பித்தனர் உண்ணாவிரதத்தை. இருபத்தோரு நாட்கள் தொடர்ந்தது. அனைவருக்கும் தினசரி அடி உதை. தனுஷ்கோடியை நிர்வாணமாக்கி அடித்தனர். அடித்த இடத்தில் மஞ்சள் தடவினர். சிறை அதிகாரிகள் அலறல் வரும் என நினைத்தனர். ஆனால் போராளிகளின் குரல்களிலிருந்து கோஷங்கள் பீறிட்டது. உடலிலிருந்து உதிரம் பீறிட்டது. 22 -ம் நாள் உறவினர் பார்க்க அனுமதி, பத்திரிக்கை அனுமதி, வீட்டிலிருந்து வேட்டி பெற அனுமதி, ரிமாண்ட் கைதிகளுக்கு குவளை, தட்டு, பெட்சீட் கிடைக்க ஏற்பாடு, வாரம் ஒரு நாள் குளியல் என்ற சட்டம் மாறி தினசரி குளிக்க தண்ணீர் கிடைக்க ஏற்பாடு, என பல கோரிக்கைகள் நிறைவேறியது. சிறைச்சாலையில் வர்க்கப் போராளிகள், வெளியே செனறவுடன் பண்ணையாருக்கு முன்னால் படிக்க வேண்டும் என்பதற்காக படிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டது. தனுஷ்கோடி தாய் மற்றும் வால்கா முதல் கங்கை வரை நாவல்களை படிக்கும் அளவிற்கு முன்னேறினார். தனுஷ்கோடி மீது மட்டும் 57 வழக்குகள் இருந்தது.

சிறைச்சாலைக்குள்ளே கோரிக்கை உருவாக்க முடியும், போராட முடியும், வெற்றிபெற முடியும் என்பதை நிருபித்தனர். போவது உயிர், உதிரம், உடைமையாக இருந்தாலும், பெறுவது பாட்டாளிவர்க்க உரிமையாக இருக்க வேண்டும் என்பதால் உறுதியாக இருந்தனர். 1951–ல் விடுதலையாகி மீண்டும் விவசாய சங்கப்பணிகளில் ஈடுபட்டார். தலைவர்கள் சிறையில். எனவே, பண்ணையார்களின் வெறியாட்டம் வெளியில். அச்சத்தில் ஆட்பட்ட மக்களை மீண்டும் திரட்டி போராட வந்தனர் தனுஷ்கோடியும், இதர தலைவர்களும். இக்காலத்தில் குடிமனை பாதுகாப்புச் சட்டம், நிலவெளியேற்ற தடுப்புச்சட்டம், வேலை கொடுப்பதற்கான உத்தரவு என பல உரிமைகளை பெற முடிந்தது.

1961–ல் நிலச்சீர்திருத்தத்திற்காக போராடிய போது தனுஷ்கோடி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேல் சிறைவாசம். அப்போது தோழர் பி.சீனிவாசராவ் மரணம், தனுஷ்கோடியை நிலைகுலையச் செய்தது. அடுத்து தாயாரின் மரணம் மேலும் அதிர்ச்சி. தனயன் சிறையில், தாய் சிதையில் என்ற சோக காட்சிகளை காலம் நிறைவேற்றிக் கொண்டிருந்தது. மனச்சோர்வுகளை மாற்றிக் கொண்டு விடுதலையாகி மீண்டும் பணிகளில் ஈடுபட்டார். வறுமை அவரை மட்டும் விட்டு வைத்ததா என்ன? ஆறு நாட்கள் வரை உணவு கிடைக்காமல் மனைவியும், மகளும் மயங்கி விழும் அளவிற்கு வறுமை ஆட்சி செய்தது. அக்கம் பக்கத்தினர் உதவிட அஞ்சினர். எத்தனை இன்னல்கள் வந்தாலும் எதிர்த்தே நின்றார் தனுஷ்கோடி. 1964–ல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருளும், சிறையும், வறுமையும் வாழ்வாக இருந்தாலும், சங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. 1958-ல் பாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர்.பி.எஸ்.தனுஷ்கோடி தொடர்ந்து 30ஆண்டுகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 -ம் ஆண்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1970-ல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றார். பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டினார். பண்ணையார்கள் ஆக்கிரமித்த அனைத்து குளங்களையும் மீட்டார். எண்ணற்ற பணிகள் பறைசாற்றப்படுகிறது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக, விவசாய சங்க மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். 19.8.1997 –ல் சென்னை மருத்துவமனையில் உயிர் நீத்தார்.

தனுஷ்கோடியின் வாழ்க்கைப் பயணம், சாதிய கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்த பயணம். பிறப்பு முதல் இறப்பு வரை எதிர்ப்பும், உறுதியும் கொள்கை பிடிப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். போராளிகளும், புரட்சியாளர்களும் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள் என்ற வரைபடம் நமக்கு நினைவு இருக்கிறது. ஆனால், கருத்த உடலும், வெள்ளை உடையும், தடித்த கண்ணாடியும், நரைத்த முடியும், உருக்கு போன்ற உறுதியுடைய போராளி, புரட்சியாளனின் பயணத்தை இதயத்தில் பதிப்போம். புரட்சிகர பாதையில் நடப்போம்!

கட்டுரைாயளர் தோழர்  ஏ.பாக்கியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Leave a Reply