ஸ்ரீ ஷாம்ராவ் விஷ்ணு பருலேகர் கர்நாடக மாநிலம் பிஜபூரைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை மாவட்ட நீதிபதியுமாவார். தந்தை அவரை இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அதை மறுத்த ஷாம்ராவ் பம்பாயில் சட்டம் பயின்றார். பிறகு முழுநேர ஊழியராக இந்திய சமூக சேவர்கர்கள் அமைப்பில் இணைந்து விட்டார். அவரது தந்தை எந்த சொத்தும் தரமாட்டேன் என்று மிரட்ட, தானே தனது சொத்துக்களை வேண்டாமென்று கூறி ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பிவிட்டார் ஷாம்ராவ்.
ஷாம்ராவ் முதலில் மும்பையில் ஜவுளித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்களிடையே பணி செய்தார். 1934-38 களில் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார் ஷாம்ராவ். அப்போது அவர் அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் ( AITUC ) இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937-39 காலகட்டத்தில் தவறான எடை, அதிக வாரம் போன்ற நிலப்பிரபுக்களின் கொடுமைகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வென்றது. ஷாம்ராவ் தலைமையில் ஷேத்காரி சங்கம் உருவானது.
விம்கோ தொழிற்சாலை போராட்டத்தில் ஷாம்ராவ் பேசியதால் கொதித்துப் போன உள்ளூர் தலைவர்கள் மகாத்மா காந்தியிடமே குற்றச்சாட்டை எழுதினர். அவரும் என்.எம்.ஜோஷியிடம் விளக்கம் கேட்க, அவர் ஷாம்ராவ் பேசியது சரியே என்று உறுதியாக பதில் கொடுத்து விட்டார்.
1930களின் மத்தியில் அவர் அண்ணல் அம்பேத்காரின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அது அவரை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. பின்னர் அவர் வர்க்கப் போராட்டத்தில் குதித்து கம்யூனிஸ்ட் ஆகிவிட்டாலும், அண்ணலுக்கும், அவருக்கும் இடையேயான பிணைப்பு இறுதி வரை நீடித்தது. அம்பேத்கார் கட்சியின் சார்பில் அவர் பம்பாய் சட்டசபைக்கு 1937இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோட்டி ( ஊதியம் இல்லாத உழைப்பு) ஷாம்ராவ் 10,000 விவசாயிகளை ரத்னகிரியிலிருந்து திரட்டி சட்டசபைக்கு முன் பெரும் பேரணியை நடத்தினார். அது பின்னர் சட்டமாகி அந்த முறையை சட்டபூர்வமாக ஒழித்தது. பம்பாய் சட்டசபையில் அண்ணல் அம்பேத்கார் கோட்டி (வெட்டி உழைப்பு) முறையை ஒழிக்குமாறு சட்ட முன்வடிவை சமர்ப்பித்தார்.
இங்கு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், அப்போராட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்கள் ஆர்.பி.மோரே, நாராயண் நாகு பாடில் ஆவர். அவர்களும் பின்னர் அம்பேத்கரின் கட்சியிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் ஆனவர்கள். மோரேதான் அண்ணலை மகத சத்யாகிரகிரகத்துக்கும், சவுதார் சத்யாகிரகத்துக்கும் அழைத்துச் சென்றவர். சிபிஐ(எம்)மின் வார ஏடான ஜீவன் மார்க்கை தொடங்கியவரும் அவரே. இறுதி வரை இவர்களுக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும் இடையே சிறந்த உறவு நிலவியது.
மே 24, 1939இல் கோதாவரியை மணந்தார் ஷாம்ராவ் பருலேகர் . போராட்டங்கள், இயக்கங்கள் கொடுத்த ஏராளமான அனுபவங்களின் மூலமாக, அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டனர். பிற இயக்கங்களுக்கு வரம்புகள் உள்ளேயே இருப்பதை உணர்ந்ததால் அவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இரண்டாம் உலகப் போர் தொடங்கியது இந்திய சேவகர்கள் அமைப்புக்கு முடிவு கட்டியது.
பிரிட்டிஷின் போர் முயற்சியை கோதாவரியும், ஷாம்ராவும் கடுமையாக எதிர்த்தனர். போர் எதிர்ப்புப் போராட்டத்தில் களம் கண்டனர். விரைவில் அதற்காக ஷாம்ராவ் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் நடந்த ஜவுளித் தொழிலாளர் போராட்டத்தை கோதாவரியும், மற்ற தலைவர்களும் சேர்ந்து 40 நாட்கள் உறுதியாக நடத்தினர். சற்று காலத்தில் கோதாவரியும் போர் எதிர்ப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1940இலிருந்து 42 வரை அவர்கள் மற்ற கம்யூனிஸ்டுகளுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1942இல் விடுதலை செய்யப்பட்டதும், இருவரும் விவசாயிகளை அணிதிரட்ட முழுமையாக ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். உயிர் வாழ்ந்த வரை அதில் ஈடுபட்டனர். இந்நாட்டில் 70 சதம் விவசாயம் சார்ந்து மக்கள் இருப்பதால் அவர்களை கிசான் சபா, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். சீனாவில் மாவோ அப்படித்தான் செய்தார். விவசாயிகளை அரசியல் விழிப்புணர்வு பெறச் செய்யாவிட்டால் புரட்சி சாத்தியமல்ல என்பது அவர்களது வாதம்.
அகில இந்திய கிசான் சபா ஷாம்ராவை மகாராஷ்டிர மாநில கன்வீனராக நியமித்திருந்தது. 1942இல் ஷாம்ராவும், கோதாவரியும் பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகளின் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டினர்.
அகில இந்திய கிசான் சபாவின் ஏழாவது மாநாட்டில் ஷாம்ராவ் மத்திய கவுன்சிலுக்குத் தேர்வானார். எட்டாவது மாநாட்டில் பொருளாளராகத் தேர்வானார். பிறகு இணைச்செயலாளர் அல்லது துணைத் தலைவராக இறுதிவரை செயல்பட்டார். கோதாவரியும், ஷாம்ராவும் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா போன்ற தலைவர்களைச் சந்தித்து தமது வாழ்வில் இறுதிவரை நெருக்கமான உறவைப் பேணினர்.
ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160 கூட்டங்களில் உரையாற்றினார். 1945 ஜனவரி 7 அன்று டிட்டிவாலாவில் நடந்த மாநாட்டில் 7000 பேர் கூடினர்.
அங்குதான் முதன்முதலாக ஒர்லி பழங்குடியினர் செங்கொடியுடன் இணைந்தனர். விவசாயச் சங்கத் தொண்டர்கள் அவர்களது கிராமத்துக்குச் சென்றிருந்த போது சந்தித்த பிரச்சனைகளை அவர்கள் எடுத்துரைத்தனர். நிலப்பிரபுக்களுக்கு இலவசமாக உழைக்க வேண்டும். சாட்டையடி போன்ற கடும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும். திருமணம் செய்த பெண்ணை முதலில் நிலப்பிரபுவிடம் சில நாள்கள் அனுப்ப வேண்டும், அதன்பிறகுதான் அவள் கணவனிடம் அனுப்பப்படுவாள். அது மட்டுமல்ல, அவன் பெற்ற கடனுக்குப் பெண்ணையும் குடும்பத்தையும் அடிமையாக்கவேண்டும்.
ஒருமுறை தண்டனையாக ஒரு ஓர்லி மனிதரை மாட்டுக்குப் பதில் ஏரில் கட்டி இழுக்க, அவர் அங்கேயே மரணமடைந்தார். இன்னொரு முறை ஓர் ஓர்லியை எரியும் நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொன்றனர். கேட்க நாதியில்லை. இப்படி எண்ணற்றவர்கள் மனிதாபிமானமற்ற நிலையில் நடத்தப்பட்டனர். அவர்களைச் செங்கொடித் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்தனர்.
மாநாட்டில் பேசிய ஓர் ஒர்லி, தமது நிலையை உடைந்த குரலில் எடுத்துரைக்க, மாநாடே அதிர்ந்துபோனது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், எதிர்த்துப் போராடுங்கள் என்று மாநாடு உரத்துக் குரல் கொடுத்தது. ஓர்லிக்கள் அங்கிருந்த சில செங்கொடிகளை எடுத்துக் கொண்டு கம்பீரமாக, உறுதியுடன், துணிவுடன் திரும்பினர். மாநாடு கொடுத்த துணிவில் அனைவரும் ஒன்றிணைய நிலப்பிரபுக்கள் நடுநடுங்கினர்.
இந்தப் போராட்டத்தை வழிநடத்தவும், புதிய பழங்குடித் தலைவர்களை உருவாக்கவும், கோதாவரியும், ஷாம்ராவும் களத்தில் இறங்கி வேலை செய்தனர். அது மேலும் மேலும் உத்வேகமூட்டியது. அதிர்ந்த அரசு அவர்களை அந்த மாவட்டத்துக்குள்ளேயே நுழையத் தடை விதித்தது.
எனினும், அதற்குள் பழங்குடித் தலைவர்கள் தமது தலைவியின் வழிகாட்டுதலில் தாமே தலைவர்களாக உருவெடுத்து விட்டனர். அதுதான் தலைமையின் பண்பு. அரசு ராணுவத்தையும் போலீசையும் அனுப்பி ஒடுக்க முயன்றது. அப்போதும் மக்கள் தயங்கவில்லை. அரசும் நிலப்பிரபுக்களும் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையில் இதுவரை 60 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். எனினும் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அவர்களது உறுதி தொடர்கிறது.
1953இல் ஷாம்ராவும் கோதாவரியும் மீண்டும் அங்கு சென்றனர். ஆயிரக்கணக்கான ஓர்லிக்கள் அவர்களை வரவேற்க மும்பை மகாலக்ஷ்மியில் கூடினர். ஷாம்ராவ் நெகிழ்ந்து போய் அமைதியாய் உட்கார்ந்துவிட்டார். ‘எழுச்சியுடன் கூடியிருக்கும் இந்த மக்கள் முன்னால் நீயும் நானும் எவ்வளவு சிறியவர்கள்!’ இதுதான் அவர்களது எளிமை. எல்லாவற்றுக்கும் நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்ளவில்லை.
கோதாவரியும் ஷாம்ராவும் பழங்குடியினருக்குக் கல்வியும், அரசியல் கல்வியும் ஊட்ட கவனம் செலுத்தினர். மார்க்சியத்தைக் கற்றுக் கொடுத்தனர்.
1954 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 3 வரை தாத்ரா, நாகர்ஹவேலியை போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை களத்தில் இறங்கியது. இந்தப் போராட்டத்துக்கு கோதாவரியும் ஷாம்ராவும் நேரடியாகத் தலைமை தாங்கினர். அவர்களது அழைப்பில் ஏராளமான ஒர்லிக்களும் விடுதலைப் போரில் பங்கேற்றனர்.
தஹானு மாவட்டத்தில் கிசான் சபாவின் 13வது மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினர் பருலேகர்கள். அதில் மாபெரும் தலைவர்கள் பங்கேற்றனர். பெரும் பேரணியைக் கண்டு அனைவரும் உற்சாகமடைந்தனர்.
அதன்பிறகு சம்யுக்த மகாராஷ்டிரம் உருவாவதற்காக 1956இலிருந்து 1960 வரை ஒரு பெரும் எழுச்சி நடந்தது. இந்தப் போராட்டத்தில் 1200 பழங்குடி மக்கள் கொடும் சித்ரவதையை அனுபவித்தனர்.
1957இல் ஷாம்ராவ் தாணா மாவட்டத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்வானார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரது துணிவுமிக்க குரல் அங்கு ஒலித்தது.
1958இல் நிலத்துக்கான போராட்டம் மிகப்பெரிய அளவில் மகாராஷ்டிராவில் நடந்தது. அதில் அண்ணல் அம்பேத்கரின் உண்மையான தொண்டர்கள் நீல வண்ணக் கொடியுடன் ஷாம்ராவ், கோதாவரி, நானா பாடில், ஆர்.பி.மோரே போன்ற செங்கொடித் தலைவர்களின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் பலத்தைக் கண்டு அரசு பணிந்துபோனது.
1960இல் பருலேகர்கள் வன நிலங்களை பழங்குடியினருக்கு பட்டா போட்டுத் தர வேண்டுமென்ற கோரிக்கையுடன் களம் கண்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்யும் பழங்குடியினருக்கு நிலம் சொந்தமில்லை. இன்றுவரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.
பிறகு நடந்த உட்கட்சிப் பிரச்சனையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பருலேகர்களின் தலைமையில் தாணா மாவட்டக் கட்சி முழுவதும் சிபிஎம் கட்சியைத் தழுவியது.
கட்சி பிரிந்த நிலையில் ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷாம்ராவ் மும்பை ஆர்தர் ரோட் சிறையில் 1964 ஆகஸ்ட் 3 அன்று பெரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஒரு குழல் நிரந்தரமாக ஓய்வுக்குச் சென்றுவிட்டது. உடைந்து போனார் கோதாவரி.
சிபிஐஎம் பொதுச்செயலாளர் பி.சுந்தரய்யாவும், அவரது மனைவி லீலாவதியும் நேரடியாக மும்பை சென்று கோதாவரியுடன் ஒருவாரம் தங்கியிருந்து, ஆறுதல் கூறினர். மகாராஷ்டிரா கட்சிக்கு அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், தமது வாழ்க்கையை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பழங்குடியினரின் விடுதலைக்கும் அர்ப்பணித்த ஷாம்ராவும், கோதாவரியும், தமக்குக் குழந்தை தேவையில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.
அதன் பிறகு ஷாம்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோதாவரி சிறையிலிருந்தே ஒர்லி பழங்குடி இனத்தவரின் போராட்டத்தை விளக்கி ‘மனிதர்கள் விழிப்படையும் போது’ என்ற பெரும் காவியத்தை இயற்றினார். அந்தப் புத்தகத்துக்குப் பின்னர் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இன்று படித்தாலும் நெகிழ்ச்சியும் கோபமும் கண்ணீரும் பொங்கும் உன்னதமான படைப்பு அது.
1966 ஏப்ரல் 30 அன்று விடுதலையான கோதாவரி கட்சிப் பணியிலும் கிசான் சபா பணியிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 25 ஆண்டுகளுக்குச் சோர்வின்றிப் பணியாற்றியவர், வயது மூப்பு காரணமாக 1992இல் சென்னையில் நடந்த 14வது கட்சி மாநாட்டில் பொறுப்புக்களைத் துறந்தார்.
1995இல் தாணா மாவட்டத்தில் சிபிஐஎம்-ன் 15 வது மாநாட்டை ஒட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது. இது ஒர்லி பழங்குடி மக்கள் போராட்டத்தின் 50வது ஆண்டு நிறைவாகவும் அமைந்தது. 88 வயதான கோதாவரி அதில் தமது பழங்குடி மக்களுடன் பங்கேற்றார். அவருக்கு சிபிஐஎம்மின் பொதுச்செயலாளர் சுர்ஜீத் புகழ்மாலை சூட்டினார்.
பதினைந்தாவது மாநாட்டில் கோதாவரி கலந்து கொள்ளவில்லை. தமது உயிலைத் தயாரித்த கோதாவரி தமக்கும் ஷாம்ராவுக்கும் கட்சிதான் உயிர் என்றும் அதுதான் தமது வாரிசு என்றும் கூறித் தமது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு எழுதி வைத்தார். சிபிஐஎம் மட்டுமே உழைக்கும் மக்களை விடுவிக்கும் என்று உறுதியாக எழுதினார்.
1996 அக்டோபர் 8 அன்று அந்த மாபெரும் போராளி மரணத்தைத் தழுவினார். ஐம்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் எந்த இடத்தில் பழங்குடிப் போராட்டத்தில் ஐந்து பழங்குடியினர் தமது உயிரை ஈந்தனரோ அதே அக்டோபர் 10 அன்று அதே இடத்தில் கோதவரியின் புகழுடல் எரியூட்டப்பட்டது.