சமூக ஏற்றத்தாழ்வு ஒழியட்டும் சமத்துவ புதுச்சேரி மலரட்டும் – வெ. பெருமாள்

V.Perumal

வி.பெருமாள்இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியில் தான் பாஜக- என்ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் தொடர்கிறது. ஒன்றிய பாஜக அரசின் அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அதிகாரத்துக்கு வந்த பின் மாநில வளர்ச்சி கடுமையான பின்னடைவை சந்தித்து வருகிறது. மாநில மக்கள் பல துன்ப துயரங்களுக்கு உள்ளாகி சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் விரி வடைந்து வருகின்றன.

குறுக்கு வழியில் ஆட்சி 

2011-2016ல் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றிய காங்கிரஸ் அரசு நியமன சட்டமன்ற உறுப்பி னர்களை அனுமதிக்கவில்லை.  2014இல் ஒன்றிய பாஜக ஆட்சியில் ஒரு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாஜகவிற்கு விட்டுக் கொடுத்து என்ஆர் காங்கிரஸ் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.  அடுத்து வந்த காங்கிரஸ் – திமுக கூட்டணியில் ஆட்சியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக, மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி களை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது. 2021ல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி கலைக் கப்பட்டது.  குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்து தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பொறுப்புகளில் தங்களுக்கு சாதகமானவர்களை நியமித்தது.  என்ஆர் காங்கிரசை நிர்ப்பந்தம் செய்து கூட்டணி அமைத்து தற்போதைய கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது.  2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து  ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாஜக மாநிலத்தில் காலூன்றுவதற்கு என் ஆர் காங்கிரஸ் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக்கூடமான புதுச்சேரி 

மாநில அரசு, வடிவத்தில் என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியாக இருந்த போதிலும் நடை முறையில் பாஜகவே மாநிலத்தை ஆட்சி செய்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ள போதிலும் ஒன்றிய அரசின் அனைத்து கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களை பரிசோதிக்கும் ஆய்வுக் கூடமாக புதுச்சேரி பிரதேசம் மாற்றப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளை மூடி பொருளுக்கு பதிலாக பணம் வழங்கு வது (DBT), பணத்தை செலுத்தி மின்சாரம் பெறுவது (Prepaid scheme), அரசு நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும்  பணமாக்கல் திட்டம் போன்ற வற்றை செயல்படுத்த முயற்சிக்கிறது.

மாநில வளர்ச்சியில் பின்னடைவு

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் கூடுதல் நிதி கிடைக்கும், மாநிலத்தின் வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் இருக்கும், முன்னே றும் – என்ற ஆட்சியாளர்களின் கூற்று பொய் என்பதை  மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் (FRBM) வரவுக்கு ஏற்ப செலவீடு என்கிறது. சமூகப் பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஏழ்மையும் நீடிக்கிற போது வரவு-செலவுக்கு ஏற்ப திட்டம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகும். புதுச்சேரியின் தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (SGDP) ரூ.49,642 கோடி. மூன்று துறைகளில் நடைபெறும் உற்பத்தி மதிப்பு மற்றும் வழங்கப்பட்ட சேவை மதிப்பை இது அடிப்படையாகக் கொண்டது. இதில் 45 சதவீத மக்கள் சார்ந்துள்ள முதன்மை ஆதாரத்துறையான விவசாயம், கால்நடை, பால், தேன், மீன்பிடி ஆகியவற்றின் ஜிடிபி மதிப்பு 5.6சதவீதம்.   இதன் மூலம் கணிசமான மக்கள் பகுதியினர்  மிக மோசமான சமூக பொருளாதார வாழ்நிலையில் உள்ளதை அறிய முடியும்.  மாநில அரசு, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை  அளிக்கவில்லை. மாறாக சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மது வணிகத்தை ஊக்கப்படுத்துகிறது.   2024 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்  முதல்வர்  என். ரங்கசாமி, மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப  மதுக்கடைகள் விரிவுபடுத் தப்படும் என மன உறுத்தல் ஏதுமின்றி அறிவிப்பு வெளியிட்டார்.  கட்டுப்பாடற்ற சுற்றுலாக் கொள்கை பல்வேறு சமூகச் சீரழிவுகளைக் கொண்டு வந்துள் ளது. சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள், கணவனை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்கிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத மற்றும் நாசகார பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வலுவான மக்கள் போராட்டங்களை இக்காலத்தில் முன்னெடுத்து வந்துள்ளது. சில போராட்டங்களில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் பெற்றுள்ளது.

உணவு உரிமை மீட்பு

மோடி அரசு புதுச்சேரி, என் ஆர் காங்கிரஸ் ஆட்சி யில் 2015 செப்டம்பர் முதல் ரேஷன் பொருட்களுக்கு பதிலாக நேரடி பணம் மாற்றுத்திட்டத்தை செயல் படுத்த உத்தரவிட்டது. மாநில அரசு சொந்த செலவில் வழங்கி வந்த இலவச அரிசி திட்டமும் நிறுத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டது. காங்கிரஸ்-திமுக கூட்டணி (2016-2021) ஆட்சியி லும் பணம் மட்டுமே வழங்கப்பட்டது.  ரேஷனில் பொருள் வழங்குவது என்று அமைச்சரவை முடிவு செய்தது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஆட்சே பணையுடன் அமைச்சரவை முடிவை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தார். ஒன்றிய அரசு 20.12.2019 தேதியிட்ட உத்தரவில் நேரடி பணப் பரிமாற்றம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.  மாநில அரசின் பிரதிநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்படி ஆளுநர் மற்றும் ஒன்றிய உள்துறையும் பொருளுக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியிலும் இதே நிலைமை நீடித்தது. அடுத்து ஆளுநராக வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மோடி அரசின் பண பரிமாற்றத் திட்டத்தால் மக்களை நாங்கள் கௌரவ மாக நடத்துகிறோம் என, ரேஷன் கடை மூடலை நியாயப்படுத்தி வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்து மக்களின் வருவாய் ஆதரவுத் திட்டமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்திட போராடி வந்தது.  கடந்த மூன்று ஆண்டுகளில் ரேஷன் கடையை திறக்கவும், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கவும் சக்தி மிக்க போராட்டங்களை நடத்தியது.  கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி னார். உணவு தொடர்பான பிரச்சனை என்பதால் போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.   2024 நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலித் தது.  பாஜக தோல்விக்கு ரேஷன் கடை மூடல் முக்கிய பிரச்சனையாக அமைந்தது. ஒன்றிய பாஜக அரசு மக்கள் எழுச்சிக்கு பணிந்து 29.10.2024இல் ரேஷனில் பொருட்கள் வழங்கிட உத்தரவிட்டது. இது மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மாநில அந்தஸ்து

மாநில உரிமை மற்றும் அதிகாரங்கள் கோரி பல தலையீடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தனித்தும், கூட்டாகவும் மேற்கொள்ளப் பட்டன. 13.11.2022ல் மாநில உரிமைக்கான சிறப்பு மாநாடு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. கட்சி யின் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.  மக்கள் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாநில உரிமை, மற்றும் கூட்டாட்சி கோட்பாடு குறித்த தலைவர்களின் அரசியல் உரைகள் அரசியல் அழுத் தத்தை உருவாக்கின. என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பனிப்போர், மாநில அந்தஸ்து பேசு பொருளான சூழல் என்பதால் மக்களின் கவனத்தினை ஈர்த்தது.  அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண் டன. முதல்வர்  என். ரங்கசாமி அவர்கள் மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் மாநிலம் முன்னேறும் என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்தப் பின்னணியில் 31.03.2023 சட்டப் பேரவையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டன. 2024 ஆகஸ்டில் 15 வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் ஒன்றிய பாஜக அரசு மாநில அந்தஸ்து வழங்கிட மறுத்து வருகிறது. புதுச்சேரியின் தனித்த  விடுதலைப் போராட்டம், மற்றும் தேசிய இயக்கங்க ளின் வரலாற்றுப் போக்கிலிருந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது மக்களின் அரசியல் கடமை யாகும்.

மின்துறை தனியார்மயம்

மின்துறையை நவீனப்படுத்தி தனியார்மயமாக்க, ஒன்றிய அரசு முடிவெடுத்தது. மாநில என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு தனியார்மய நடவ டிக்கையை மேற்கொண்டது. இதை எதிர்த்து 2022 பிப்ரவரி 1 முதல் மின்துறை ஊழியர்கள், பொறி யாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சி தனித்தும், இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அகில இந்திய அளவிலான மின் ஊழியர்கள் போராட்டக் குழு புதுச்சேரிக்கு வந்து ஆதரவு தெரிவித்தது.  முதல்வர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை யைத் தொடர்ந்து 100 சதவீதம் தனியார்மயத் திட்டம் கைவிடப்பட்டது. 49:51 என்ற விகிதத்தில் தனியார் மயம், அரசு ஊழியர் அந்தஸ்து பாதுகாக்கப்படும் என்ற சமரசத் திட்டத்தை அரசு முன்வைத்தது. மேலும் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர் கள் போராட்டக்குழு தொடர்ந்த வழக்கும் நிலுவை யில் உள்ளது. 2023 டிசம்பரில் மாநில அரசு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தி, முன்பணம் செலுத்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்தது. வீடுகள் மற்றும் விவசாய பம்ப் செட் ஆகியவற்றிற்கு நவீன மின் மீட்டர் பொறுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் மக்களைச் சந்தித்து தனித்தனி மனுக்கள் பெறப்பட்டன.  முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்க ளிடம் மனுக்கள் பெறப்பட்டன. 40,000 மனுக்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முதல்வரிடம் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. நவீன மின் மீட்டர் பொறுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்டில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொட ரில் மின்சாரம் அரசுப் பொறுப்பில் தொடரும் என உறுதியளித்தார். நடப்பாண்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பில் இந்தியா கூட்டணி சார்பாக மாநில பந்த் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக 200 யூனிட் வரை உயர்த்தப்பட்ட மின் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

கோவில் நிலம் மீட்பு

என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் கோவில் நிலங்கள், சொத்துக்கள் அபகரிப்பது தீவிரப் பிரச்சனையாக மாறியுள்ளது. காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலங்கள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்  குமார், ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் பின்புலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டன. கோயில் அறங்காவலர் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  கோவில் நிலங்களை மீட்கவும், சட்டமன்ற உறுப்பி னர்கள் உட்பட தொடர்புடைய அனைவரையும் கைது செய்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். “கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கிறது பாஜக. ஆனால் என் ஆர் காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள போதே கோவில் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது; தனியார் பொறுப்பில் இருந்தால் கோவில் சொத்துக்கள் நிலை என்னவாகும்” என்று  ஜி. ராமகிருஷ்ணன் எழுப்பிய அரசியல் விமர்சனம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. போராட்டத்தைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று துவங்கும் மாநாடு

இவ்வாறு புதுச்சேரி மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க தலையீட்டை செய்துள்ளது. இது, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற உதவியுள்ளது என்றாலும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த விலை வாசி உயர்வு, வேலையின்மை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான தலையீடு, வகுப்புவாதத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றின் மீதும் விரிவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.  மது வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், வேளாண் தொழிலைப் பாதுகாப்பது, பஞ்சாலைத் தொழிலை சீரமைப்பது ஆகியவற்றின் மீதும் உரிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழல் மலிந்த, மக்கள் விரோத என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது நமது முன்னுரிமை அரசியல் கடமையாகும். இத்தகைய சாதனைகளோடும் இலக்கோடும் 2024 நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடை பெறும் கட்சியின் புதுச்சேரி மாநில 24 வது அமைப்புக்குழு மாநாடு பொருத்தமான அரசியல் ஸ்தாபன கடமைகளை வகுத்திடும்.

Leave a Reply